உலகில் வாழும் காதலர்களே இந்த ஒரு சொல் கேளீர்.
தாய் தந்தைக்கு தெரியாமல் தனக்கென்றே பிறந்தவளை அழைத்து வந்து அழகு பார்க்கும் ஆடவர்களே இந்த ஒரு சொல் கேளீர்.
கட்டுடல் கொண்டு கதகதப்பை கொடுக்கும் காதலனை, உன் வருங்காலக் கணவனை கணநேரம் பிரியாது அணைத்தே இருக்கும் பெண்டீரே இந்த ஒரு சொல் கேளீர்.
பாதைகளைப் பற்றி கவலையில்லாமல் வளர்ந்த காட்டு மரங்களே இந்த ஒரு சொல் கேளீர்.
அளவு கடந்த நீரையும் அள்ளித்தர மறுக்கும் ஆகாய மேகங்களே இந்த ஒரு சொல் கேளீர்.
குடும்ப வாழ்வை மறக்காமல் கூட்டங்கூட்டமாய் சிறகடித்து பறக்கும் புள்ளினமே இந்த ஒரு சொல் கேளீர்.
உருவத்தால் குறைந்திருந்து உழைப்பால் உயர்ந்து இருக்கும் எறும்புகளே இந்த ஒரு சொல் கேளீர்.
"தென்றல் பிறந்தது"
ஆம், மீண்டும் தென்றல் பிறந்தது. அது தினமும் தீண்ட வந்தது. அந்த குளிரால் மேனிச் சிலிர்க்கும். இரத்தம் துடிக்கும். தமிழ்ப் பிடிக்கும். அறிவுத் துளிர்க்கும்.
இரவு நேரப் பயணத்திலும் வெளிச்சம் தரும் தென்றல்.
சிக்கலான வேளையிலும் தீர்வு தரும் தென்றல்.
சொல்ல துடிக்கும் சொல்லை எல்லாம் அள்ளி தரும் தென்றல்.
கதைச் சொல்லி தூக்கத்தையே விரட்டி அடிக்கும் தென்றல்.
கவிதைகளால் கன்னிகளை காதலிக்கும் தென்றல்.
கட்டுரையால் இவ்வுலகைக் கட்டிபோடும் தென்றல்.
கொடுந்தமிழ் விரும்பா காதலர்களே.. கொஞ்சம் பொறுங்கள்,
"கனி இதழ் முத்தம், அமுதினை ஒக்கும்" சுவையறிந்த தம்பதியரே, எம் இதழும் அதற்கு சளைத்தது அல்ல.
அன்று ஒருமுறை,
சரஸ்வதியின் செல்லப் பிள்ளையை, தமிழின் தவக் குழந்தையை, காவியத் தாயின் இளைய மகனை இந்த தென்றல் தீண்டியது.
அலைமகளின் மகனாய் இருந்தால் கூண்டிலிட்டு விற்று இருப்பான்.
மலைமகளின் மகனாய் இருந்தால் பதிலுக்கு பலமாக தாக்கிருப்பான்.
இவனோ, கலைமகளின் மகனாவான் அதனால்,
பிடித்தான் - இழுத்தான் - அணைத்தான் - ரசித்தான் - எழுதினான்.
அந்த எழுத்துகள் இன்றும் சொல்கிறது "தென்றல் தான் பலரைத் தீண்டும், தென்றலையே தீண்டியது கண்ணதாசன் தான்" என்று.
அன்று அந்த தென்றல் எழுத்துகளால் சிறகடித்து ஏடுகளால் பறந்து வந்திருக்கலாம்.
இன்று இந்த தென்றலுக்கோ அத்தனை திறன் இல்லை ஆனாலும் பறக்க முயற்சி செய்து கொண்டே இருக்கும், என்றோ ஒரு நாள் நிச்சயம் பறக்கும்.
அன்று சொல்லத் துணிவதை இன்றே சொல்கிறேன்.
ஓய் பெண்ணே கேள், உன் செவ்விதழின் சிறப்பைக் காட்டிலும் எம் இலக்கிய இதழ் சிறப்பு, உன் கார்குழல்கள் சண்டையிடும் முல்லைத் தாங்கா இடையைக் காட்டிலும் எம் தமிழின் நடைச் சிறப்பு.
ஆகா.. கோபம் வேண்டாம் பெண்ணே,
அந்தோ உன் காதலன் அவனிடம் கோபப்படு அந்த கோபத்தின் முடிவை நான் அறிவேன்.
உன் காற்றுபுகா கூடல் கலைய நான் காரணமாக இருக்க மாட்டேன் காரிகையே, போய் வா.
அதான் சொல்லிவிட்டேனே "காற்றுபுகா" வென்று அப்படி இருக்க ஏன் கோபம்?
சரி கொஞ்சம் இதைக் கேள்..
ஒருநாள்
கண்ணனுக்கும் ராதைக்கும்
சண்டை வந்த போது
கண்ட கண்ட இடமெல்லாம்
காதலிக்கும் அவர்கள்
கண்ணைப் பார்த்து கோபப்பட்டு
இணைந்த கையை பிரித்துவிட்டு
பிரிந்து சென்றனர்
அவர்கள் பிரிந்து சென்றனர்
அடர்ந்த காட்டுப் பகுதியிலே
மரங்கள் சூழ்ந்தப் போர்வையிலே
கண்ணன் ஒருபுறம்
மாயக் கண்ணன் ஒருபுறம்
யமுனை ஆற்றுக் கரையினிலே
சேலை மாற்றும் மறைவினிலே
ராதை ஒருபுறம்
கோதை ராதை ஒருபுறம்
இருவரையும் பார்க்க அங்கு
தென்றல் வந்தது
பாவையினை பார்த்தவுடன்
பணிந்து நின்றது
கலங்கிநின்ற ராதையிடம்
காரணம் கேட்டது
( ராதை சொல்கிறாள் )
திகட்டாத தேன்தமிழே - தினம்
தீண்ட வரும் தென்றலே…
மனம்வாடி தனித்திருக்கும் இந்த
பேதையைநீ பார்த்தாயா…
பலகோடி இரவுகளும் - எம்மை
தனியாகக் கண்டதில்லை
தினம்தேடி வரும் நீயே
என்னைத்தனியாக கண்டதுண்டோ?
மனம்கவர்ந்த கள்வன் இன்று
முகம்வாட வைத்துவிட்டான்
சோகமென்ற சொல்லை இன்று
நானறிய செய்துவிட்டான்
சட்டென்ற கோபத்தால் - பட்டெனவே
பிரிந்து விட்டான்
திக்கற்ற என்னை இனித்
தேடி அவன் வருவானோ?
( தென்றல் சொன்னது )
காதல் கசக்க
கண்கள் கசங்கும்
என்னருந் தோழி
உன் கவலை
எனக்கு புரிகிறது
என்னருந்தோழி
கோபங்களே
பிரிய வைக்கும்
என்னருந்தோழி
அந்த பிரிவுகளே
ஏங்க வைக்கும்
என்னருந்தோழி
ஏக்கங்களே
தேட வைக்கம்
என்னருந்தோழி
அந்த தேடல்களே
கூட வைக்கும்
புரிந்துகொள்
தோழி…
( ராதைக்கு ஆறுதல் சொன்ன தென்றல் மறுகணமே கண்ணனைப் பார்க்கப் புறப்பட்டது )
புல்லாங்குழல் கொடுத்த
மூங்கில்களே - எங்கள்
கண்ணனைக் கண்டீரோ
செம்மைகார்க் குழல்
கோபியரே - எங்கள்
கள்வனைக் கண்டீரோ
எனக் கூவலிட்டு சென்ற தென்றல் அடர்ந்த காட்டுப் பகுதியில் கண்ணனை கண்டுப் பேசத் துவங்கியது…
கண்ணன் : தெற்கிலே தவழும் தென்றலே வருக வருக
தென்றல் : என்ன ஒர் அதிசயம், நீ இங்கிருக்க, அவள் அங்கிருக்கிறாள்?
கண்ணன் : யார் எங்கு இருக்கிறாள்?
தென்றல் : உன் ராதை, ஆற்றங்கரையில்…
கண்ணன் : ராதையா..? யார் அவள்..?
தென்றல் : அச்சுதா.. அதுவும் சரிதான், இன்று அவள் ராதைப் போலவா இருக்கிறாள், மேனகைப் போல் அல்லவா ஜொலிக்கிறாள்…
கண்ணன் : என்ன சொல்கிறாய்..? தென்றல், கொஞ்சம் விளங்கும்படி சொல்..?
தென்றல் : ஆ… உங்கள் களவுமணம் எனக்கு தெரியாது என நினைத்தாயா கண்ணா.. இந்த பிருந்தாவனத்தில் எனக்கு தெரியாமல் ஒரு சறுகு கூட நொருங்காது..
கண்ணன் : களவுமணமா..? யார் சொன்னது.?
ராதை சொன்னாளா..?
தென்றல் : ராதையை "யார் அவள்" என்றாய்?
கண்ணன் : அதைவிடு… சொன்னது யார்?
தென்றல் : உன் தந்தை நந்தகோபரிடமே சொல்லி இருந்தால் கோகுலத்தில் கொண்டாட்டம் வைத்து மதுராவே மயங்கும் படி உங்களின் திருமணத்தை நடத்தி இருப்பார்.. ம்ஹூம்...என்ன சொல்வது விதியைப் பார்.. உன்னை விட வயதில் மூத்தவள், உங்கள் மணத்தை உலகம் ஏற்குமா?
கண்ணன் : போதும் இழுக்காதே தென்றல், உனக்கு இப்படி சொன்னது யார்?
தென்றல் : வேறு யார், உன்னுயிர் நண்பன் சுதாமா தான்.
கண்ணன் : சுதாமா-வா? அவனுக்கு இப்படி யார் சொன்னது?
தென்றல் : அந்தரங்க செய்திகள் அந்தரங்க நண்பர்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன? உன் வாய் தான் உலகத்தையே காட்டி விடுமே..!
மணம் முடித்த தம்பதிகள் மறைவாக வாழ வனத்துக்குள்ளே குடில் அமைக்க சுதாமா என்னை அழைத்துள்ளான், நான் வருகிறேன்..
கண்ணன் : கொஞ்சம் நில், இப்போது ராதை எங்கு இருக்கிறாள்?
தென்றல் : அதான் முன்னமே சொன்னனே யமுனையில் என்று, ஆனால் அவளுக்கு இடையூறு தராதே அவள் உங்களின் மணத்திற்காகத் தான் தன்னையே தயார்ப் படுத்தி கொண்டிருக்கிறாள்.
கண்ணன் : நீ அவளைப் பார்த்தாய் அல்லவா?
எப்படி இருக்கிறாள்? அழகாய் இருக்கிறாளா?
தென்றல் : உன்னை மட்டும் அவள் விரும்பாது சுயம்வரம் என்று சொல்லி இருந்தால், முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கோடி வந்திருப்பார்கள், அத்தனை அழகாய் இருக்கிறாள்.
கண்ணன் : நீ சொல்வதெல்லாம் கேட்க ஆசையாக இருந்தாலும், நம்பும் படியாக இல்லையே தென்றல், காலையில் தான் அவள்…..
தென்றல் : நிறுத்து உன் கதையை, இதையெல்லாம் கேட்க நேரமில்லை எனக்கு, நான் குடில் அமைத்து வருவதற்குள் தயாராகி இரு… நான் வருகிறேன்.
இதை சொன்ன தென்றல் காற்றோடு கலந்து மறைந்த உடனே கண்ணனும் ராதையைப் பார்க்கும் ஆவலோடு யமுனையை நோக்கி நகர்ந்தான்.
கண்ணன் வருவதற்கு முன்பாகவே யமுனையை வந்தடைந்த தென்றல் அகம் வாடி வீற்றிருந்த ராதை அருகே வந்தமர்ந்து பேசத் தொடங்கியது.
ஏன் ராதா இத்தனை நேரம் அழுது கொண்டே இருக்கிறாயே இதனால் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது?
உங்கள் காதல் சாத்தியமானது தானா என்பதை இதுநாள் வரையில் நீ யோசித்தது உண்டா?
இனி உன்னை எப்போதும் கண்ணன் காணாமலே இருந்துவிட்டால் என்ன செய்வாய்?
அவன் தாய் யசோதா உன்னை விட அழகான வசதியானப் பெண்ணை அவனுக்கு மணம் முடித்தால் என்ன செய்வாய்?
சரி, இதற்கு மேலும் உன்னை விட சிறியவனை நீ எப்படி திருமணஞ்செய்ய முடியும்?
பதில் சொல் ராதா?
( தென்றலின் இக்கேள்விகளே ராதையின் கண்களைக் குளமாக்க போதுமானதாய் இருந்தது )
வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே "என்னைக் கொல்லாதே" எனும் ராதையின் உருக்கமான அழுகுரலைக் கேட்டும், தென்றல் தன் கேள்விகளைத் தொடர்ந்து.
ஒருவேளை அந்த கண்ணனே உன் முன் வந்து "ராதா என்னை நீ மணப்பாயா" எனக் கேட்டால், என்னவென்று சொல்வாய்?
( இதுவரை தலைக்குனிந்தே இருந்த ராதை தென்றலின் இந்த குறும்பான கேள்வியைக் கேட்ட கணமே புன்னகை கூடிய நாணத்துடனே தென்றலைப் பார்த்தாள் )
தன் காற்றுப் போன்ற மெல்லிய விரல்களால் ராதையின் சிவந்த கன்னத்தை வருடி ஆறுதல் தந்த தென்றல், அருகிலிருந்த சேலையை விலக்கிக் கொண்டு காற்றாய்ப் போனது.
அதே நேரத்தில் அதே சேலை மறைவினிலிருந்து கண்ணனும் வந்தான்.
பிரிவினைப் பொறுக்காத ராதையோ கண்ணனைப் பார்த்த மறுகணமே எழுந்து அவன் தேகத்தினை இறுகப் பற்றி அணைத்துக் கொண்டாள்.
இந்த காற்றுப்புகா கூடலினை வானத்திலே வீற்றிருந்து கண்டிருந்த தென்றல் தன் கவிதையினை துவங்கியது.
மகிழமர நிழலினிலே
அந்திவந்த வேளையிலே
தென்றலிலே நின்றிருக்க
தேவராகம் கூடிருக்க
பாமகள் இடையினில்
கோமகன் விரலிருக்க
பூமேனியவன் தீண்டிருக்க
இதழின் நேரே
புலனிரண்டும் பார்த்திருக்க
வாய்மொழிக்கு வேலையில்லை…
( தென்றலின் முத்தமிழ்த் தூது முற்றிற்று )
கோபத்தை தாபமாக்கிய என் செயலைக் கேட்டாயா என் காரிகையே…
மேகங்களிலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் மழைத்துளி, கீழே வந்து மரஞ்செடிகளின் ஆயுளை அதிகரிக்கிறது.
சிரமப்பட்டு நீரைச் சுரந்த ஆறுகளோ கடலைத் தேடி ஓடுவதில்லை வழியைத் தான் தேடுகிறது.
பூக்களையே பார்த்து வரும் பூச்சிகளோ அதில் அமர்ந்த பிறகு உலகத்தை மறந்து இன்பத்தை உறிஞ்சும்.
பூமி என்ற தாயாலே பிரசவிக்கப்படும் மழை மேகங்கள் மின்னலென்ற பிள்ளைப் பெற்று பாட்டியையே சுடுகிறது.
இதே போன்று பருவத்தின் கடமையினை தவறாது செய்யும் காதலர்களே
உலகமே அழிந்தாலும் எழுத்துடனே படுத்திருக்கும் எனதன்பு வாசகர்களே
உங்களது இன்பத்திலும் துன்பத்திலும் நிஜத்திலும் கனவிலும் கடமையிலும் காதலிலும் உலகமே உங்களை வெறுத்து ஒதுக்கிய போதினிலும்
தோள் கொடுக்கும் தோழனாய், ஆறுதல் தரும் தோழியாய், அன்பால் அணைக்கும் அன்னையாய், தட்டி எழுப்பும் தந்தையாய், ஒழுக்கம் தரும் ஆசானாய், இம்மையிலும் பிரியாது கூடி வாழும் துணை போல இந்த தென்றல் என்றும் உங்களுடனே பயணிக்கும்.
-தீசன்
அருமையான பதிவு 👌 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐
பதிலளிநீக்குதமிழுக்கு அமுதென்று பேர் என்று பாவேந்தர் சொன்னது உண்மைதான்.தமிழ் அமுதாக இனிக்கிறது.
பதிலளிநீக்குதமிழின் இனிமையோடு கலந்தேன்❤️✨
பதிலளிநீக்கு