1.சிறைச்சாலை
ஏக போக களியாட்டங்களில் திளைத்திருக்கும் ஒருவன் மன்னிக்க முடியாத குற்றத்திலே ஈடுபடுகிறான்.
பாவத்தின் சம்பளம் அதற்கு சமமான தண்டனை என்பது அவனுக்கும் தெரியாமலில்லை.
குற்றம் புரிந்தவனுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. அவனது குடும்பங்கள் அழுகிறது, மனைவி தவிக்கிறாள், குழந்தைகள் துடிக்கிறார்கள். இவனோ, நீதி அரசரிடம் 'என்னை மன்னியுங்கள், மன்னியுங்கள்' என்று கதறிப் பார்த்தான்; காரியமாகவில்லை.
'தண்டனையையாவது குறைத்து கொள்ளுங்கள்' எனக் கெஞ்சவவே, நீதி அரசரோ 'தண்டனையை குறைக்க முடியாது ஆனால் உனக்கு சில சலுகைகள் தருகிறேன்' எனக் கூறி, இவன் சிறையில் கொஞ்சம் வசதிகளை ஏற்படுத்தி தருகிறார்.
அவனும் அந்த அற்ப இன்பங்களை அனுபவித்துக் கொண்டே சிறை வாழ்க்கை கழித்துவிடலாம் என எண்ணி ஒப்புக் கொள்கிறான்.
சிறையில் இருக்கும் ஒவ்வொரு கைதிகளுக்கும் ஒவ்வொரு கடமைகள் தரப்படுகிறது. தினமும் அவர்கள் தங்களது கடமையினை எந்த வித பலனும் இன்றி செய்து கொண்டே இருத்தல் வேண்டும்.
ஒருவனுக்கு சமைப்பது கடமையானால் இன்னொருவனுக்கு துவைப்பது கடமையாகும்.
இவன் சமைப்பதை அனைவரும் உண்டு தான் ஆக வேண்டும். இவன் துவைப்பதை அனைவரும் உடுத்தி தான் ஆக வேண்டும்.
சுக துக்கங்களை காணாது இடைவிடாமல் இப்பணியை செய்வோர்கள், தண்டனை காலம் முடிந்ததும் மகிழ்ச்சியாக வீட்டிற்கு செல்லலாம்.
தண்டனை காலத்திலும் மேலும் பல குற்றம் புரிவோர்களுக்கு, இச்சிறைவாசம் முடிந்த மறுகணமே வேறொரு சிறைகதவு திறந்துவிடப்பட்டிருக்கும்.
மறுமை நிலையிலும் தவறிழைத்தவர்கள் அவரவர்களின் தவறுகளுக்கேற்ற தண்டனையை இந்த இரண்டாம் சிறையில் அனுபவிப்பர். ஆனால், இது கொஞ்சம் கடுமையாக இருக்கும்.
நான் மேலே குறிப்பிட்ட கருத்துகள் யாவும் ஆகமம் போன்ற சூட்சமமான ஒரு லோக ரகசியமாகும்.
இதில் சிறை என்பது பூமியையும் தண்டனை என்பது வாழ்க்கையையும் சலுகை என்பது இன்பத்தையும் கடமை என்பது நோக்கத்தையும் நீதியரசர் என்பது விளக்க முடியா இயற்கை அல்லது இறைவனையும் குற்றவாளி என்பது நம்மையுமே குறிக்கும்.
இப்பிறப்பு என்பது நமக்கு கொடுக்கப்பட்ட தண்டனையே. அதனாலே தான் இங்கு ஒருவராலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
தமிழ் இலக்கியங்கள் நான்கு உறுதி பொருளைக் கொண்டுள்ளது. அவை, அறம் பொருள் இன்பம் வீடு
இதில் சொல்லப்பட்டிருப்பது என்னவெனில் அறத்தோடு வாழ்ந்தால் பொருள் கிடைக்கும், பொருள் வந்தால் இன்பமும் தானே வரும். இவை மூன்றும் அமைக்கப் பெற்றால் நீ வீடு பேற்றினை அடைவாய் அதாவது பிறவாத நிலை எய்துவாய் என்பது பொருள்.
'சுக துக்கங்களை காணாது இடைவிடாது கடமையினை செய்வோர், மகிழ்ச்சியாக வீட்டிற்கு செல்லலாம்' என்று நான் குறிப்பிட்டது பிறவாத நிலை அடைந்திடலாம் என்பதையே குறிக்கும்.
சிலப்பதிகாரத்தில் கோவலன் செய்யாத தர்மங்களே இல்லை, வள்ளல் பட்டியலில் சேர்க்கப் பட வேண்டியவன் கோவலன்.
ஆனால் அவன் இத்தனை இன்னல்களை அனுபவிக்க வேண்டிய காரணம் என்ன?
இந்த கேள்விக்கு சிலப்பதிகாரமே நமக்கு விடை தருகிறது. இளங்கோவடிகள், இதுவரை இச்சை மேல் இச்சை வைக்கும் ஒரு பாத்திரமாகவே கோவலனைக் காட்டி, அடைக்கலக்காதையில் நம் மனநிலையையே மாற்றுகிறார்.
கோவலன் மீது அளவுகடந்த மரியாதை வருமளவிற்கு அவன் செய்யும் தர்ம காரியங்களை மாடல மறையோன் வாயிலாக நமக்கு தெரியப்படுத்துகிறார்.
இத்தனை நன்மை செய்தும் நீ இவ்வளவு இன்னல்களை சந்திக்க காரணம் உன் முன் வினைப் பயனே என்கிறார்.
தும்பியைப் பிடித்து விளையாடும் சிறுவர்களிடம் பெரியவர்கள் சொல்வார்கள் 'தும்பியைப் பிடிக்காதே மறு ஜென்மத்தில் நீ தும்பியாகவும் இந்த தும்பி மனிதனாகவும் பிறந்து உன்னை அது பிடித்து விளையாடும்' என்று
இக்கால பிள்ளைகள் புத்திசாலிகள் 'போன முறை அது என்னை பிடித்து விளையாண்டதற்கு தான் இப்போது நான் அதை பிடித்து விளையாடுகிறேன்' என்கிறார்கள்.
இந்த விடை சிரிப்பாக இருந்தாலும் சிந்திக்க வேண்டியது. துன்பங்கள் நீயாக தேடிப் போவதற்கும் தானாக தேடிவருவதற்கும் வித்தியாசம் உண்டு.
உணவில் விசத்தை கலந்து நீயே உண்பதற்கும் நண்பன் உணவை அவனுக்கு தெரியாமல் எடுத்து உண்டபின் அதில் விசம் கலக்கப் பட்டிருப்பது தெரியவருதற்கும் நிறைய வித்தியாசம் உண்டல்லவா.
இதுவே பூர்ம கர்ம வினை பயன்கள் ஆகும். இதுதான் பாவத்திற்கு தகுந்த தண்டனையையும் புண்ணியத்திற்கு தகுந்த சலுகையினையும் வகுக்கிறது.
இந்த புவியில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு படைப்பின் நோக்கமுள்ளது அதுவே கடமையாகிறது.
கடமையும் தண்டனையும் முடிவடையும் போது சிறைச்சாலையிலிருந்து கைதியும் வெளியேற்றப்படுகிறான். அதாவது, நோக்கமும் வாழ்க்கையும் முடிவடையும் போது உடல் அல்லது உலகத்திலிருந்து மனிதனானவன் வெளியேற்றப்படுகிறான்.
குர்ஆன், கீதை, திருக்குறள் போன்றவற்றிலிருந்து என்னால் உறுதியாக அறிய முடிந்தது, 'பிறப்பு தான் தண்டனை, இறப்பு தான் விடுதலை' என்பதே ஆகும்.
'பிறப்பு பெற்றோரின் படைப்பு, இறப்பு இறைவனின் அழைப்பு, இடையில் கொஞ்சம் நடிப்பு' என்கிறார் குரு கண்ணதாசன் அவர்கள்.
அப்படியிருக்க இந்த சொர்கம் நரகம் என்றால் என்ன? என்ற கேள்வி வரும்
சொர்கம் எங்கிருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால், எவ்வழியே சென்றால் அதை அடையலாம் என்பது எனக்கு தெரியும். (தொடரும்)
-தீசன்
அருமை
பதிலளிநீக்குபிறப்பு பெற்றோரின் படைப்பு இறப்பு இறைவனின் அழைப்பு இடையில் கொஞ்சம் நடிப்பு
பதிலளிநீக்கு