அண்மை

ஞானத்தைத் தேடி 10 - அறிவுரையே முடிவுரை

10.அறிவுரையே முடிவுரை



உண்மையான மனதோடு ஒருவர் உதவ முன் வருகிறார். ஆனால் அவர் செய்த அந்த உதவி எள்ளளவு கூட நமக்கு பயன்தரவில்லை. சொல்லப்போனால் தேவையே இல்லை. ஆனால் உதவியவர் தாம் உதவிவிட்டதாக எண்ணி திருப்தியோடு செல்கிறார். இப்போது நாம் அவருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோமா?


இது வாசகர் ஒருவரின் அற்புதமான கேள்வி. உங்களுக்கு இந்த கேள்விக்கான விரிவான விடைத் தெரிய வேண்டுமானால் கீதையிலுள்ள கர்மயோகத்தைப் படிக்கவும்.


இருந்தாலும் நான் சுருக்கமாக சொல்ல முயல்கிறேன்.


அர்ஜூனன் கிருஷ்ணனிடம் கேட்கிறார்.


கிருஷ்ணா இந்தப் போர் எதற்கென்று எனக்கு புரியவில்லை. இவ்வளவு நாள் வனாந்திரங்களில் வாழத் தெரிந்த எங்களுக்கு, எங்களின் ஆயுள் முடியும் வரை அங்கேயே வாழத் தெரியாதா என்ன?


சகோதரர்களையும் தந்தைப் போன்ற குருமார்களையும் உறவினர்களையும் கொன்று இந்த அஸ்தினாபுரியை அபகரித்தே ஆக வேண்டுமா?


ஏன் எங்களை இம்மாதிரியான பாவத் தொழிலில் ஈடுபட வைக்கிறாய். ஆசையை ஒதுக்கு என்று போதிக்கும் நீயே இப்போது மண்ணாசைக்காக எங்களைத் தூண்டுகிறாயே. உன் தத்துவங்கள் என்னைக் குழப்புகிறது. உன் சிந்தனையே தவறு. பதில் சொல்?


அர்ஜூனனின் இந்த சொற்களை படிக்கும் நமக்கு, இவர் கேட்பதில் எந்த வித தவறும் இல்லையே. இன்னொருவனுக்கு பாவஞ்செய்யக் கூடாது என்று நினைப்பது தவறா என்ன? என்றே தோன்றும்.


ஆனால் இந்த சிக்கலான கேள்விக்கு பகவானின் பதிலே 'கர்ம யோகம்'


கிருஷ்ணன் பேசத் தொடங்குவார்.


பாவமே அறியாத அர்ஜூனா பற்றில்லாமல் செய்யும் தொழில்களைத் தவிர மற்ற அனைத்துத் தொழில்களுமே மனிதனுக்கு நோய் போல. அதனால் எந்த தொழிலைச் செய்தாலும் அதன் பலனை எதிர்ப்பார்க்காமல் அனைத்துமே ஈஸ்வரக் கடமை என்று நினை.


தனக்காக மட்டுமே உணவு சமைத்து சாப்பிடுபவர்கள், அந்த உணவை உண்ணவில்லை. பாவத்தையே உண்கிறார்கள்.


வலிய வரும் கடமைகளை எவன் தவறாது செய்கிறானோ, அவனது செய்கையில் லாப நஷ்டம் இல்லை. பாவம் புண்ணியம் இல்லை.


ஆதலால் பாரதச் செல்வனே, வலிய வரும் இந்த கடமையை விட்டுவிடாதே. மனங்கலங்காது போர் செய்.


இதன் மூலம் பாவமோ புண்ணியமோ எது விளைந்தாலும் அதை நானே மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.


என்று கண்ணன் கர்ம யோகத்தை முடிப்பார்.


( மேலே கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு சொன்னதாக கொடுக்கப்பட்ட அனைத்தும் கீதையில் கர்மயோகத்திலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கமே )


தர்மம் என்பது பலன் எதிர்பார்க்காமல் செய்யும் உதவி.


கருமம் என்பது பலன் எதிர்பார்க்காமல் செய்யும் கடமை.


பாண்டவர்களுக்கு வலிய வரும் அந்தப் போரினால் எவ்வித பலனும் இல்லை.


வாசகரின் கேள்வியிலும் கூட, அவரது உதவி எனக்கு எள்ளளவும் பயன் தரவில்லை என்றிருந்தார்.


பலனை எதிர்ப்பார்க்காமல் பாண்டவர்கள் தங்களது கடமையினை செய்து முடித்தார்கள்.


கடமையை செய்து முடிக்க சந்தர்ப்பங்கள் தேடக்கூடாது என சென்ற தொடரிலே சொல்லியிருந்தேன்.


"உயர்ந்தவன் உதவிக்கு பதிலுதவி கேட்பதும் இல்லை, தாழ்ந்தவன் உதவிக்கு பதிலுதவி செய்வதும் இல்லை"


எவ்வித பலனையும் எதிர்பாராமல் உங்களின் சங்கடத்திற்கு உதவிய அவரின் உதவி, உங்களின் சங்கடத்தை போக்கவில்லை ஆனாலும் பலனைக் கேட்காத அவரின் உள்ளம் அவரை உயர்ந்தவராக்குகிறது.


உதவி செய்ய முன்வந்தவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோமா? என்னும் உங்களது சிந்தனை, கடமையைச் செய்ய சந்தர்ப்பத்தை தேடி தங்களையே தாழ்ந்தவனாக்குகிறது.


நன்றிக் கடன் பட்டுள்ளோமா? எனும் உங்களது கேள்விக்கு, உயர்குணம் படைத்த அனைவருமே 'கடன் பட்டுள்ளாய்' என்றே பதில் தருவார்கள்.


நான் மேலே குறிப்பிட்டுள்ள உயர்ந்தவன் தாழ்ந்தவன் எனும் சொற்கள், சாதியை வைத்து அறியப்படுவது அல்ல, குணத்தைக் கொண்டு அறிவது.


பிறப்பினாலே ஒருவன் உயர்ந்தவனாகவோ தாழ்ந்தவனாகவோ ஆகிவிட முடியாது.


நல்ல குணமான ஒருவனை 'நற்குடி பிறப்பு' என்பார்கள்.


பிறப்பினால் ஒருவன் உயர்ந்தவன் இல்லை எனில், ஏன் அதற்கு நற்குடி பிறப்பு எனப் பெயர் வந்தது என்ற கேள்வி வரும்.


நற் பண்பு கொண்ட தாய் தந்தையால் வளர்க்கப்பட்ட அவர்களது பிள்ளை நிச்சயம் நல்லப் பண்புகளை கொண்டிருப்பார்கள் என்பது நம்பிக்கை.


ஆனால் அன்றைய இந்த நம்பிக்கை இன்றைய காலத்திற்கு பொருந்தாது.


தந்தையின் மதுப் பழக்கத்தினால் தாலி இழந்த தன் தாயைக் கண்டு 'வாழ்நாள் முழுதும் மது பக்கமே செல்ல மாட்டேன்' என சபதம் எடுத்த பையன் இருக்கிறான்.


கழுத்து நிறைய ருட்த்ராட்சமும் நெற்றி நிறைய பட்டையும் போட்டுக்கொண்டு கோவில் குளமென திரியும் எவ்வித கெட்டப் பழக்கமும் இல்லாத தந்தைக்கு, வீட்டையே மறக்கும் அளவிற்கு சாராயம் குடிக்கும் பையனும் இருக்கிறான்.


அதனால் 'நற் குடி பிறப்பு' என்பது இக்காலத்தில் இல்லாத ஒன்று.


பிறப்பாலும், சாதிப் பெயராலும், செய்யும் தொழிலாலும் தான் உயர்ந்தோர் என எண்ணும் அனைவருமே இழிந்தோரே.


இதற்கு சுவாமி கிருபானந்தவாரியார் அவர்கள் ஒரு கதை சொல்வார்.


ஒரு யானை நன்றாக குளித்து விட்டு விபூதி பூசிக் கொண்டு ஆற்றின் மறுகரைக்கு செல்ல பாலத்தின் அருகே வந்து நிற்குமாம். அப்போது அந்த பாலத்தின் எதிர் முனையில் சேற்றையும் மலத்தையும் பூசியபடி அருவருக்க முடியாத கோலத்தில் ஒரு பன்றி வந்து கொண்டிருக்குமாம். பன்றியைக் கண்ட யானை 'சரி அதுவே முதலில் போகட்டும்' என்று ஓரமாக ஒதுங்கி விடுமாம். ஆனால் பன்றியோ 'நம்மைக் கண்டு யானையே பயந்து ஒதுங்கி விட்டது' என்று எண்ணுமாம்.


தாழ்ந்தோர்கள் இந்த பன்றியைப் போல தன்னைத் தானே உயர்வாக நினைத்துக் கொள்வார்கள்.


யானை நினைத்திருந்தால் அந்தப் பன்றியை ஒரே மிதியில் கொன்றிருக்க முடியும்.


ஆனால் உயர்ந்தோர் குணம் அந்த யானையைப் போல் என்றும் அமைதியையே விரும்புகிறது.


எவனொருவன் 'நான் தான், நான் தான், என்னுடைய இந்த திறமைக்கு முழு காரணமும் நான் தான்' என்று தற்பெருமை அடித்துக் கொள்கிறானோ, அவன் எப்பேர்ப்பட்ட திறமைசாலியாக இருந்தாலும் நிலைத்தப் புகழை அடைவதில்லை.


கிருஷ்ணனிடம் அர்ஜூனனும் துரியோதனனும் உதவிக் கேட்டு வந்தார்கள். அப்போது கிருஷ்ணன் உறங்கிக் கொண்டிருந்தார். துரியோதனன் கிருஷ்ணனின் தலை அருகே போய் நின்றான். அர்ஜூனன் கிருஷ்ணனின் காலுக்கருகே போய் அமர்ந்தான்.


கிருஷ்ணன் தூக்கத்திலிருந்து எழுந்தார் எதிரே இருந்த அர்ஜூனனை முதலில் கண்டார்.


தலைக்கு மேல் சென்ற ஆணவம் தோற்றது. கால்களிடம் சரண் புகுந்த அடக்கம் வென்றது.


ஆணவம் அழிவுக்கு அழைப்பு தரும் என்பதற்கு கதைகள் இன்னும் ஏராளம் உண்டு.


ஒரு மனிதன் தன் வாழ்க்கை முழுதும் அமைதியாக வாழ இரண்டு விஷயங்கள் போதுமானது என்றே நான் எண்ணுகிறேன்.


அவை, அறனும் அன்பும் ஆகும்.


வள்ளுவர் பல்வேறுபட்ட அறப்பொருளைக் கூறி இருந்தாலும், இன்னொருவனுக்கு துரோகம் செய்யாத நேர்மையான உள்ளம் அறவாழ்வையும் அமைதியாக அனுபவிக்கிறது.


எனக்கொருவரைத் தெரியும் அவர் ஒருமுறை மன்னார்க் குடிக்கு சென்றிருந்த போது ஐந்து ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கி விட்டு பத்து ரூபாய் கொடுத்திருக்கிறார். கடைகாரர் அவரோடு சிரித்துப் பேசிக் கொண்டே மீதி ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டார்.


வீட்டிற்கு வந்து எடுத்துப் போன பணத்தை எண்ணிப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.


அந்த ஐந்து ரூபாய் நோட்டு பாதி மட்டுந்தான் இருந்தது. மீதி இல்லை.


கடைக்காரர் பேசிக் கொண்டே மடித்துக் கொடுக்கும் போது, பேச்சைக் கவனித்த இவரோ பணத்தை கவனிக்க விட்டுவிட்டார்.


அந்த 'பாதி இல்லாத ஐந்து ரூபாய் நோட்டை' செலவழிக்க, எத்தனையோ கூட்டமான கடைகள் இவருக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தாலும்.


அதைக் கொண்டு யாரையும் ஏமாற்றாமல் அந்த நோட்டை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.


ஏழு வருடங்கள் கடந்து விட்டது. இன்னும் அந்த நோட்டை அவர் பத்திரமாக வைத்திருந்தார்.


'தூக்கிப் போட வேண்டியது தானே' என்றேன்.


அதற்கு அவர் சொன்னார், 'இதை நான் கீழேப் போட்டால் என்னை அந்தக் கடைக்காரர் ஏமாற்றியது போல், இந்த பணத்தை எடுப்பவர் வேறு யாரையாவது ஏமாற்றலாம் அல்லவா. இன்னொருவரின் ஏமாற்றத்திற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது. நான் ஏமாற்றமடைந்தது என்னோடே போகட்டும், அதனால் அந்த பணம் என்னிடமே இருக்கட்டும்' என்று பர்ஸில் வைத்து மூடிக்கொண்டார்.


இன்னொருவருக்கு துரோகம் செய்யாத நேர்மையான உள்ளம், தான் மேற்க்கொண்ட அறவாழ்வை இப்போது அமைதியாக அனுபவிக்கிறது.


இரண்டாவது அன்பு.


அன்பு எல்லோரிடத்திலும் சமமானதாய் இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு அமைதி கிடைக்கும்.


ஒரு யானைக்கு அன்னாசியில் வெடி வைத்துக் கொடுத்த போதும், பெட்ரோல் கொண்டு எரித்த போதும் எழுந்த உங்களது கருணை, ஆட்டிற்கும் கோழிக்கும் வரவில்லையே.


அன்பைக் கூட மனித உள்ளம் இரு வேறுபட்ட தராசில் அளக்கிறதே.


இரண்டுமே அஃறிணை தான்.


இரண்டுமே உயிர் தான்.


இரண்டுமே கொலை தான்.


இந்த போலியான உலகில் மனிதர்களின் நடிப்பு இப்போது எனக்கு வேடிக்கையாக தெரிகிறது.


இரண்டாண்டுகளுக்கு முன்பு நானும் இப்படித்தான் இருந்தேன்.


உண்மையை உணரும் போது குற்ற உணர்ச்சியும் தானே வருகிறது.


அனைவருமே தங்களுக்கென்று ஒரு சுயதர்மத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.


கர்ணன் யார் எதைக் கேட்டாலும் மறுக்காமல் கொடுப்பேன் என்று தனக்கென சுய தர்மத்தை வகுத்திருந்தார்.


சிறுதொண்டர் அடியார்கள் உண்ட பின்பே தானும் உண்பேன் எனும் சுயதர்மத்தை மேற்க்கொண்டார். 


அடியார்களின் துணியை துவைத்த பின்பே அடுத்த துணியை துவைப்பேன் என்று திருகுறிப்புத் தொண்டர் சுய தர்மம் கொண்டிருந்தார்.


அப்பூதியடிகள், இயற்பகை நாயனார், திருநீலகண்டர் இன்னும் பலர் தங்களுக்கென்று ஒரு கொள்கையை வகுத்திருந்தனர்.


அது இன்னொருவரின் துன்பத்தை தீர்க்கும் படியாக இருந்தது.


பொதுவாக ஒரு சுய தருமத்தை சொல்கிறேன். அதை அனைவருமே மேற்க்கொள்ளலாம். தினமும் ஒரு ஜீவராசியாவது நம்மால் பசியாற வேண்டும் என்பதை எடுத்துக் கொள்ளுங்கள்.


ஒரு பிடி சோறு உங்களால் தர முடிந்தால் வானந்தெரியும் வெட்டவெளியில் வையுங்கள் பட்சிகளுக்கு உணவாகும். அவ்வளவு முடியாதென்றால், ஒரு பருக்கை சோறு போதும் அது பத்து எறும்புகளுக்காவது உணவாகும்.


இது போன்ற சின்ன சின்ன சுய தர்மங்கள் கூட மனதிற்கு அமைதியளிக்க வல்லது.


இங்கு ஏதோ ஒரு கதை நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. அக்கதையின் கதையறியாத கதாப்பாத்திரமாக இருக்கும் நமக்கு நடக்கவிருக்கும் கதை என்னவென்று தெரியப்போவதில்லை.


அதனால் எந்த துன்பத்தையும் சந்தோஷமாக ஏற்கத் தயாராகுங்கள், அந்த மனப்பக்குவம் வருவதை எல்லாம் செலவாக வேண்டியவை என்றும், செலவழிவதை எல்லாம் கிருஷ்ணார்ப்பணம் என்றும் நினைத்து நினைத்து நிம்மதி அடையும்.


இத்தனை நேரமும் பல்வேறுபட்ட ஞானிகளின் தத்துவங்களை நான் என் அறிவுக்கு எட்டியவாறே அறிவுரையாகத் தந்தேன்.


அறிவுரைச் சொல்வதற்கு வெற்றியோ தோல்வியோ இரண்டிலொரு தகுதி வேண்டும்.


வென்றவன் எப்படி செய்யலாம் என்றும், தோற்றவன் எப்படி செய்யக் கூடாது என்றும் சொல்ல தகுதிப்படைத்தவர்களாவர்.


உலகத்தோடு வெறும் பத்தொன்பது ஆண்டுகளே பழகிய எனக்கு அத்தகைய தகுதி இல்லையானாலும், அறிவுரை கொடுக்குமளவிற்கு தெம்பு இருப்பதாகவே நினைத்து அடக்கத்துடனே இவ்வறிவுரையை முடித்துக் கொள்கிறேன்.


நம்முடைய ஞானமார்க்க பயணத்தை முடிவு செய்ய எனக்கு மனமில்லை, ஆனாலும் தொடர்ந்து கொண்டே போக போதிய அறிவும் ஞானமும் இப்போது எனக்கில்லை என்றே எண்ணுகிறேன்.


அதற்கு என்னை தயவுசெய்து மன்னிக்கவும்.


எல்லோரும் இதை தொடங்கும் போதே குறிப்பிடுவார்கள். நமக்கு முடிவே தொடக்கமாவதால், இறுதியிலே உணரமுடிகிறது.


உலகம் சிவமயம் ( முற்றிற்று )


-தீசன்


5 கருத்துகள்

  1. சிறைச்சாலையில் சிக்கிக்கொண்டு தப்பிக்க எங்கே வழி என அல்லலுற்று தேடியவனுக்கு பாவத்தையும் கோபத்தையும் இழப்பதினால் கிட்டும் விடுதலைக்கான அந்த மேலான ரகசியத்தை.. கேள்வி பதிலாக மிக்க ஜீவகாரூண்யத்தோடு உரைத்து...என்னை உன்னுள் ஒருவனாக கருதி யான் கொண்ட கடனை கடமையை எடுத்துக்காட்டி அறிவுரை புகட்டி முடிவு தந்த ஞானிக்கு முடிவில்லா நன்றி சொல்லி பெருமை கொள்கிறோம்...!

    பதிலளிநீக்கு
  2. சிறைச்சாலையில் சிக்கிக்கொண்டு தப்பிக்க எங்கே வழி என அல்லலுற்று தேடியவனுக்கு பாவத்தையும் கோபத்தையும் இழப்பதினால் கிட்டும் விடுதலைக்கான அந்த மேலான ரகசியத்தை.. கேள்வி பதிலாக மிக்க ஜீவகாரூண்யத்தோடு உரைத்து...என்னை உன்னுள் ஒருவனாக கருதி யான் கொண்ட கடனை கடமையை எடுத்துக்காட்டி அறிவுரை புகட்டி முடிவு தந்த ஞானிக்கு முடிவில்லா நன்றி சொல்லி பெருமை கொள்கிறோம்...!

    பதிலளிநீக்கு
  3. சிறைச்சாலையில் சிக்கிக்கொண்டு தப்பிக்க எங்கே வழி என அல்லலுற்று தேடியவனுக்கு பாவத்தையும் கோபத்தையும் இழப்பதினால் கிட்டும் விடுதலைக்கான அந்த மேலான ரகசியத்தை.. கேள்வி பதிலாக மிக்க ஜீவகாரூண்யத்தோடு உரைத்து...என்னை உன்னுள் ஒருவனாக கருதி யான் கொண்ட கடனை கடமையை எடுத்துக்காட்டி அறிவுரை புகட்டி முடிவு தந்த ஞானிக்கு முடிவில்லா நன்றி சொல்லி பெருமை கொள்கிறோம்...!

    பதிலளிநீக்கு
  4. நல்ல அருமையான கருத்து வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. நல்ல அருமையான கருத்து வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
புதியது பழையவை