அண்மை

ஞானத்தைத் தேடி 4 - இழப்பு

 4.இழப்பு



எவ்வித குறையும் இன்றி நாட்டினை சிறப்பாக ஆண்டு வரும் ஒரு மன்னன் , தீடீர் என்று நோய் வாய்க் காரணத்தால் படுக்கையில் வீழ்கிறான்.


அரண்மனை வைத்தியர்கள் அனைவரும் கைவிரித்து உதட்டை பிதுக்கவே


தளபதி பல ரிஷிகளையும் முனிகளையும் அழைத்து வந்து வைத்தியம் பார்க்கிறான்.


எத்தனையோ பல அரிய மூலிகையை கொண்டும் மன்னனின் பிணியைத் தீர்க்க முடியவில்லை.


ஒருநாள், ஒரு முனிவர் வந்து 'இன்னும் ஒரே வழி தான் இருக்கிறது, உங்கள் நாட்டிலேயே எந்த வித குறையும் எந்த வித கவலையும் இல்லாத ஒருவனின் சட்டையையோ அல்லது ஒருத்தியின் சேலையையோ வாங்கி வந்து மன்னரின் தலையணையின் அடியில் வையுங்கள், அவர் நோய் தீரும், என்றாராம்.


அதன்படியே அந்த தளபதியும் நாடு முழுதும் கவலையில்லாதவனைத் தேடுகிறார்.



பிரஜைகளிடம் துயரத்தை விளக்கி ஆடையை கேட்பதற்கு, அவைருமே ஒரு சோகக் கதைக்கு சொந்தகாரனாய் இருக்கின்றனர்.


தளபதிக்கு அந்த கதைகள் சாதாரணமாக தெரிந்தாலும், அவர்கள் அத்தனை துயரத்துடனே தங்களுக்கு நேர்ந்த நிகழ்வினை விவரிக்கின்றனர். 


நாடு எவ்வளவு சிறப்பாக இயங்கினாலும் மக்கள் மனதில் கவலைகள் இருந்து கொண்டேதான் உள்ளது, என்று எண்ணிக்கொண்டே வந்த தளபதி ஓடையின் அருகே ஒரு சிறுவனைக் காண்கிறான். 


சூரிய தேஜஸ் அந்த சிறுவன் முகத்தில்.


தட்டானோடு தட்டானாக விளையாடும் அவன் கவலையே இல்லாதவனாய் காணப்பட்டான்.


உடனே தளபதி அவனிடம் சென்று 'தம்பி இவ்வளவு உற்சாகமாக இருக்கிறாயே உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையா' என்று கேட்டதற்கு அவன் சொன்னான், 


எனக்கு என்ன கவலை, நானோ சிறுவன், இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் உற்சாகமாகத் தான் இருப்பேன். 


இதை கேட்ட தளபதி உடனே சரி தம்பி உன் பெற்றோர்கள் எங்கே? எனக் கேட்டார், அதற்கு அவனோ 


எனக்கு பெற்றோர்களே கிடையாது உடன் பிறந்தோர், உற்றார், உறவினர் யாருமே கிடையாது. 


எனக்கு எல்லாமே இந்த காடுதான். அதோ அந்த மரங்கள் எனக்கு உணவு தருகிறது. இந்த ஓடை நீர் தருகிறது.


அச்சச்சோ தம்பி இப்படி தனியாக இருந்து கொண்டும் எப்படியப்பா உற்சாகமாய் இருக்கிறாய்? 


ஐயா முதலில் நீங்களொன்று புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு பெறுவதற்கு வேலையில்லை, இழப்பதற்கு ஒன்றுமில்லை.


நான் ஏன் துயரப்பட வேண்டும். 


இந்த பதிலை கேட்டு அதிர்ந்து போன தளபதி தன் குரலை சற்று தளர்த்தி உன்னிடம் ஏதாவது சட்டை இருந்தால் எனக்கு கொடுக்கிறாயா? என்றார்.


ஐயா என் சட்டை என்னைத் தவிர வேறொருவருக்கு பொருந்தாது நான் இறந்த மறுகணமே நீங்கள் அதை எடுத்துச் செல்லலாம்.


சிறுவனின் பதில் பொறுக்காது கோபமடைந்த தளபதி, அத்தனை நேரமில்லை எனக்கு, சீக்கிரம் உன் சட்டையை எடுத்து வா, என்று அதட்ட 


அதற்கு அந்த சிறுவன் பொறுமையாக சொன்னான். 


அந்த சட்டையே நான் தான் என்று. 


'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழியே' எனும் வரிகள் மூலம் ஞானம் அடைந்த பட்டினத்தார் ஆகாரங்களை கிடைக்கும் இடங்களில் யாசகமாய் உண்டு வாழ்ந்தார். 


ஒரு முறை பட்டினத்தாரும் அவர் சீடர் பத்திரகிரியாரும் நேருக்கு நேர் அமர்ந்திருக்கும் போது பிச்சைக்காரன் ஒருவன் பட்டினத்தாரிடம் பிச்சை கேட்டான்.


அதற்கு பட்டினத்தார், பத்திரகிரியாரைக் காட்டி அவனிடம் போய் கேள், அவன் தான் பணக்காரன்' என அந்த யாசகனிடம் கூறவே. 


இதை கேட்டு அதிர்ந்த பத்திரகியார் ஓடி வந்து 


'குருவே நானும் உங்களைப் போலொரு துறவன் தானே, அப்படி இருக்க பணக்காரன் என்கிறீரே? என்று பணிவுடன் கேட்க, அதற்கு பட்டினத்தடிகள் சொல்கிறார்.


நாமே பிச்சைகாரர்கள் தான், ஆனால் உன்னிடமோ பிச்சை வாங்க பாத்திரம் இருக்கிறது என்னிடம் அதுகூட இல்லையேப்பா, என்று


இழக்க ஏதும் இல்லாதவர்கள் என்றும் இன்பத்துடனே இருக்கிறார்கள். 


மனிதன் அற்ப இழப்புகளுக்கு அத்தனை வருத்தப்படுகிறான். 


இறைவனிடம் ஒருவன், எனக்கு அந்த நிலம் சொந்தம், அந்த வீடு சொந்தம் என தன் சொத்துகளை யெல்லாம் காட்டி விட்டு உனக்கு என்ன சொந்தம்? எனக் கேட்டானாம், இறைவன் அவனை கைக்காட்டி, நீ எனக்கு சொந்தம் என்றாராம். 


உண்மையில் அனைவரிடமும் இழப்பதற்கு ஒன்று தான் இருக்கிறது. 


அது தான் உயிர். ( தொடரும் ) 


-தீசன்

2 கருத்துகள்

  1. அறிவியலில் ஒரு நிகழ்வு உண்டு ஒரு அணு எலக்ட்ரானை இழந்து நேர்மின்சுமை பெறும் என்பர்.அதுபோல ஆன்மீகத்தில் நாம் செய்யும் தான தருமங்களால் (பொருள் இழப்பு) புண்ணியம் பெறுகிறோம் .. இங்கு உண்மையில் உயிரைதவிர இழப்பதற்கு ஒன்றுமில்லாவிடில் நமக்கு சொந்தமில்லாத பொருள்களை இழப்பதால்(தானம்) எவ்வாறு புண்ணியம் உண்டாகும்?

    பதிலளிநீக்கு
புதியது பழையவை