5.அந்த ரகசியம்
பாவம் கோபம் தொடரில் சொன்ன 'அந்த ரகசியம்' பற்றிய தெளிவினைத் தரச் சொல்லி வாசகர் ஒருவர் கேட்டுக்கொண்டார்.
உலகத்தார் யாரும் அறியாத ஒரு செய்தி ஒருவருக்கு மட்டுந்தெரிந்தால் அது ரகசியமாகாது, கண்டுபிடிப்பாகிவிடும்.
குறைந்தபட்சம் இருவருக்காவது தெரிந்திருக்க வேண்டும்.
ஆனால் அந்த ரகசியமே வியக்கும் வண்ணம் பலர் பலவாறு தங்களது கருத்துக்களை முன் வைக்கின்றனர்.
என்னை பொறுத்த வகையில் படைப்பின் காரணமே ரகசியமாகிறது.
சூரியனின் படைப்பின் காரணத்தை என்னவென்று சொல்லலாம்?
ஒளி கொடுக்க
உயிர்களை உண்டாக்க
அந்த உயிர்களுக்கே உணவளிக்க
எங்கள் வீட்டின் துணிகளை காயவைக்க
மின்சாரம் உற்பத்தி செய்ய
ஏன் இப்படி இருக்க கூடாது?
நெருப்பால் வாட்ட
வளர்ந்து வளர்ந்து எல்லா கோள்களையும் எரித்து சாம்பலாக்க
மனிதர்களை கொல்ல
இப்படி நன்மை - தீமைகளை வகைப்படுத்தி கொண்டே போகலாம்.
ஆனால் இப்போதும் படைப்பின் காரணம் என்னவென்று தெரியவில்லையே
முன் சொன்னது போல் படைப்பின் காரணம் இருவருக்குத்தான் தெரிகிறது.
ஒன்று படைத்தவனுக்கு
இரண்டாவது அந்த படைப்புக்கு
'என் படைப்பின் காரணம் எனக்கு தெரியவில்லையே? என நீங்கள் கேட்கலாம்.
ஒரு முனிவர் அவரது மகன் பிறந்ததிலிருந்து காட்டிலே வைத்து வளர்த்தாராம்
அவன் தன் தந்தையைத் தவிர இன்னொரு மனிதனைப் பார்த்ததே இல்லையாம்.
ஒரு நாள் இவன் தந்தை ஸ்நானம் செய்ய சென்றிருந்த போது அந்த வழியே வந்த ஒரு அழகிய இளங்கன்னி இவனது குடிலுக்குள் புகுந்து விட்டாளாம்.
அவன் தான் உலகமறியாதவன் ஆயிற்றே.
ஆண் பெண் பேதம் கூட அவனுக்கு தெரியவில்லை அவளையும் அவனைப் போன்றவன்( வள் ) தான் என அவன் நினைத்து அவனது( ளது ) கரங்களைப் பிடித்து இழுக்கிறான்.
யார் நீ?
இதுவரை இவ்வளவு அழகான ஒருவனை நான் கண்டதே இல்லையே?
ஆமாம் ஏன் நீ தலையில் பூ வைத்துள்ளாய்?
பூணூல் போடாது மேலே என்ன போர்த்தி இருக்கிறாய்?
ஆகா உன் கரங்கள் என்ன இத்தனை மென்மையாக இருக்கிறது?
சொல் யார் நீ?
எனக் கேள்வி மேல் கேள்வியாய அடுக்கி கொண்டே போகிறான்.
பின் அவள் மேலே ஆசை வயப்பட்டு அவளோடே அந்த இடத்தை விட்டு ஓடிப்போய் உலகத்தை பார்க்கிறான்.
பெண் என்றால் என்ன?
நம்மோடு வந்திருப்பது ஒரு பெண்னோ என்பதை எல்லாம் அறிந்து கொண்டு இவளை விடவும் அழகான வேறொரு பெண்ணை மணக்கிறான்.
இவனது படைப்பே ஒரு சூனியமாக இருந்தது.
பெண் என்பதையே அறியாமல் முனிவர் மகன்
மாண்டிருக்கலாம்.
ஆனால் ஏதோ ஒரு சக்தி இவனை உந்திவிட்டு தன் காரியத்தை சாதித்து கொண்டது.
ஒரு பெண்ணை ஏமாற்றி இன்னொரு பெண்ணை மணப்பது தான் இவன் படைப்பின் நோக்கம் என நான் சொல்லவில்லை.
பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும் போது லோமசர் எனும் முனிவர் தருமனுக்கு சொல்லும் கதை இது.
உங்களது படைப்பின் காரணம் உங்களக்கே தெரியவில்லையானாலும் அந்த ஏதோ ஒரு ரகசியம் உங்களை வைத்து தன் காரியத்தை சாதித்து கொள்கிறது.
சிலர் மட்டுமே 'நான் யார்?' எனும் கேள்விக்கு விடை கண்டு பிடிக்கின்றனர்
பலர் தங்களது கருமம் என்னவென்பது கூட தெரியாமல் இறந்து போகின்றனர் ஆனால் செய்யாமல் இல்லை.
சூரியன் தன் கடமையாக கதிரை அனுப்பி கொண்டே இருந்திருக்கலாம்
ஆனால் அதுக்கு தெரிந்திருக்காது நமது ஒளியால் பலக்கோடி உயிரினம் உண்டாகும் என்று,
ஆனால் இப்படி உயிரினங்களை உண்டாக்குவதற்கென்றே சூரியனை படைத்த அந்த ரகசியம் சூரியனுக்கு தெரியாமலே தன் நோக்கத்தை பூர்த்தி செய்து விட்டது.
தருமன் தன் தம்பிகளோடு இந்திரபிரஸ்தத்தை அமைத்து விழா எடுத்த போது அங்கு வந்த வியாசர் ஒர் எச்சரிக்கை கொடுக்கிறார்.
தர்மா, விதி தன் வேலையை தொடங்கிவிட்டது.
உன்னால் பல லட்ச உயிர்கள் மாளப்போகிறது.
உன்னை நெஞ்சிலிட்டு வளர்த்தெடுத்த உயிரான உறவினர்களின் உன்னாலே மடியப் போகின்றனர்.
இதைக் கேட்டு சோகத்தில் ஆழ்ந்த தருமனோ வியாசரிடம் இதற்கு ஏதும் பரிகாரம் உண்டா எனக் கேட்கிறான்.
வியாசர், உன் பங்காளிகளை பகைத்துக்கொள்ளாதே என்கிறார்.
தருமனும் அவர்ச் சொல் கேட்டு துரியோதனனையும் அவன் தம்பிமார்களையும் இனி பகைக்கக் கூடாது அவர்கள் என்ன சொன்னாலும் அதை தட்டாது செய்ய வேண்டுமென தன் தம்பிகளுடன் சத்தியம் செய்கிறான்.
துரியோதனனிடமிருந்து சகுனி மூலம் தூது வருகிறது பாய்ச்சிகை ஆட.
இவர்கள் தான் சத்தியம் செய்துள்ளார்களே, அவர்களின் பேச்சை தட்டக் கூடாது என்று.
தட்டாது போனார்கள், விளையாடினார்கள், வியாசர் சொன்னபடியே விதியும் விளையாண்டது.
பாரதயுத்தம் மூண்டது.
நடந்தாகுமெனில் அது நடவாமல் இருப்பதில்லை.
இதனால் தான் சொல்கிறேன், இருவர் இதில் ஈடுபட்டுள்ளனர் என்று,
ஆனால் இரண்டாமவருக்கு அந்த தொழில் தெரியாமலே நடந்து கொண்டிருக்கிறது.
அதனால் ரகசியம் ரகசியமாகவே காக்கப்படுகிறது. ( தொடரும் )
-தீசன்