அண்மை

ஞானத்தைத் தேடி 6 - கேள்வி பதில்

                                   6.கேள்வி பதில்


    
                          

அறிவியலில் ஒரு நிகழ்வு உண்டு ஒரு அணு எலக்ட்ரானை இழந்து நேர்மின்சுமை பெறும் என்பர். அதுபோல ஆன்மீகத்தில் நாம் செய்யும் தான தருமங்களால் ( பொருள் இழப்பு ) புண்ணியம் பெறுகிறோம். இங்கு உண்மையில் உயிரைத்தவிர இழப்பதற்கு ஒன்றுமில்லாவிடில் நமக்கு சொந்தமில்லாத பொருட்களை இழப்பதால் ( தானம் ) எவ்வாறு புண்ணியம் உண்டாகும்? 


இது வாசகர் ஒருவரின் கேள்வி


 

உண்மையில் தானத்தை இழப்பென்று நீங்கள் நினைத்தால் நிச்சயம் உங்களுக்கு புண்ணியம் உண்டாகாது. 


மனது வருந்தி, 'இவருக்கு உதவவேண்டும்' எனும் எண்ணமே புண்ணியத்திடம் உங்களை அழைத்துச் செல்கிறது. 


இதை நான் சொல்லவில்லை, தமிழ் இலக்கியங்கள் சொல்கிறது. 


தானம் செய்ய வசதிப் படைக்காதவர்கள் எப்படி புண்ணியம் பெறுவது என்ற கேள்விக்கு புலவர் சொன்ன பதில் இது. 


உங்கள் கேள்விக்கே வருகிறேன். 


உயிரைத் தவிர இழப்பதற்கு ஒன்றுமில்லாவிடில் நமக்கு சொந்தமில்லாத பொருட்களை இழப்பதால் எப்படி புண்ணியம் அடைவோம்? 


கீதைச் சொல்கிறது, "எது இன்று உன்னுடையதோ, நாளை அது வேறு ஒருவருடையது" 


கையை வெட்டிக் கொள்வதற்கும், தலையை வெட்டிக் கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. 


தட்டிலிட்ட தானத்தை மீண்டும் வாங்கிவிடலாம். கொடுத்த உயிரை மீண்டும் வாங்க முடியுமா? 


இழப்பு என்பதே மீண்டும் அடைய முடியாததாகும். 


போனது எவையெல்லாம் போனவையாகவே இருக்கிறதோ அவையே இழப்பு. 


நான் பணத்தை இழந்து விட்டேன், மீண்டும் சம்பாதித்து விடலாம். 


போன மரியாதை திரும்ப வருமா ? என்பார்கள். 


தன் மகன் பீமனுக்கு துரியோதனன் விஷம் கொடுத்து ஆற்றில் தள்ளிவிட்ட செய்தியைக் கேட்டவுடனே குந்தி தேவியாருக்கு துரியோதனன் மீதிருந்த மதிப்பும் மரியாதையும் பற்றும் போயிற்று. 


ஆனால் கர்ணன் ஒருமுறை, 'நான் விளையாட்டின் ஆர்வ மிகுதியால் துரியோதனின் மனைவி இடையினில் கை வைத்து விட்டேன், அவள் மேகலையிலிருந்த ரத்தினங்களெல்லாம் சிந்திவிட்டது. இதை கண்ட என் நண்பன் துரியோதனன் அந்த மணிகளையெல்லாம் எடுத்து பொறுக்கவோ, கோற்கவோ எனக் கேட்டானம்மா' என குந்திதேவியாரிடம் சொன்னபோது


துரியோதனின் மீதிருந்த துவேஷமெல்லாம் போய் அளவு கடந்த மரியாதை வருகிறது குந்திக்கு 


அதனால் மரியாதையும் இழப்பாகாது. 


நிம்மதி இழந்தோம் என்பார்கள் இழப்பதற்கென்று ஒரு பொருள் இருக்கும் வரை நிம்மதி இருக்காது. 


உயிர் நம்மோடு இருக்கும் வரை நிம்மதியும் இருப்பதில்லை. 


எவனொருவன் இந்த உயிர் நமக்கு சொந்தமில்லை என்பதை உணருகிறானோ அவன் வாழ்வையே வெல்கிறான். 


இதை என் ஞான குரு நாதர் கண்ணதாசன் அவர்கள் ரத்தின சுருக்கமாக சொல்லி இருப்பார்கள்.


"உயிர் கடவுள் கொடுத்த கடன், உடல் கடவுள் கொடுத்த பரிசு" 


கடனைத் திரும்பிக் கொடுக்க வேண்டும். பரிசை கொடுத்தவரே திருப்பிக் கேட்கமாட்டார். 


உடலாகிய நம்மிடையே உயிரைத் தவிர இழப்தற்கு வேறொன்றும் இல்லை. 


கவலை இல்லாத அந்த சிறுவன் என்னிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை எனக் கூறினான். 


தளபதி அவனிடம் சட்டைக் கேட்டதற்கு 'நான் தான் அந்த சட்டை' என்று தன் உடலையே கூறுகிறான்.


இழப்பதற்கு அவனிடம் 'உயிர் அடைத்த உடல்' இருந்தாலும் அதை அவன் ஓர் இழப்பாக கருதவில்லை. 


அது அவனைக் கவலையின்றி இருக்க வைத்தது. 


நம் கைகளுக்கு வந்து போகும் மற்ற பொருள்கள் அனைத்துமே மாயை தான். 


அந்த பொருட்கள் இன்னொருவரின் பசியைத் தீர்கப்பயன்படுகிறதெனில் அதை கொடுப்பதில் ( இழப்பதில் ) தவறொன்றும் இல்லை. 


அறிவியல் ஜோதி படைத்த உங்களுக்கு அறிவியல் படியே பதில் தருகிறேன் 


'ஓர் அணு தன்னிடம் உள்ள எலக்ட்ரானை கொடுத்து நேர்மின் சுமை பெற்றால் அந்த அணு ஓர் அயனியாக மாற்றம் அடையும்' 


அதுபோலவே ஒரு மனிதன் தன்னிடம் உள்ள பொருட்களையெல்லாம் தானஞ்செய்து புனிதனாக மாற்றம் பெறுகிறான். 


நமக்கு சொந்தமில்லாத பொருட்களை இழப்பதால், புண்ணியம் உண்டாகுமா? என்ற கேள்விக்கு 'உண்டாகும்' என்பதே என் துணிபு. 


இந்த உலகத்தில் எவையுமே நமக்கு சொந்தம் கிடையாது. நமது கண்கள் மூடும் வரை, நம்மிடம் சொந்தம் போல நடிக்கும் அவ்வளவு தான். 


இறந்து புதைந்து போகிறவன் ஆறடி

நிலத்தையாவது சொந்தம் கொண்டாலாம், எரிந்து சாம்பலாகுபவன் அதற்கும் தகுதியற்றவனே. 


அது தான் சிறப்புங்கூட, உலகில் இதுவரை வாழ்ந்து இறந்த அனைவரையும் புதைத்து கல்லரை எழுப்பிருந்தால் ன, நாம் வாழ்வதற்கு இடம் ஏது? 


உங்களது கேள்வியின் மூலம் இன்னொன்றும் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். 


"ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர் வந்தார். 


சுவாமி, நீங்கள் விஷ்ணுவை வணங்குகிறீர்கள், அந்த விஷ்ணுவின் அவதாரம் தான் ராமனும், கிருஷ்ணனும் என்கிறீர்கள், 


ஏன் ஒரு கடவுளுக்கு இத்தனை வடிவம் கொடுக்க வேண்டும்? எனக் கேட்டார். 


அதற்கு பரமஹம்சர் சொன்னாராம் அப்பனே, நீ ஒருவர் தான் ஆனால் உள் மகனுக்கு தந்தை, உன் தந்தைக்கு மகன், மனைவிக்கு கணவன், மாமனாருக்கு மாப்பிள்ளை, மைத்துனனுக்கு மைத்துனன், அண்ணனுக்கு தம்பி, தம்பிக்கு அண்ணன். 


சாதாரண மனிதன் உனக்கே இத்தனை வடிவம் இருக்கும் போது உலகையே காக்கும் இறைவனுக்கு வெவ்வேறு வடிவங்கள் இல்லாமல் இருக்குமா? என்றாராம். 


பரமஹம்சர் இன்னொன்றும் சொல்கிறார், 'ஒரு குளத்திற்கு எத்தனை படித்துறைகள் இருந்தாலும், அவை அனைத்துமே குளத்திற்குள் தான் நம்மை அழைத்து செல்கிறது. அதே போலவே இறைவனும் இறை நம்பிக்கையும் எத்தனை வடிவத்தில் இருந்தாலும் அவை ஞானத்தை நோக்கியே பயணிக்கிறது. 


இதிலிருந்து நாம் ஒன்று அறிய முடிகிறது. 


விஞ்ஞானமோ மெய்ஞானமோ இரண்டுமே ஞானத்தைத்தான் எதிர்ப்பார்கின்றது. 


வேறுபாடு என்ன வென்றால் விஞ்ஞானம் ஞானத்தை கற்றுக் கொண்டிருக்கிறது. 


மெய்ஞானம் ஞானத்தை கற்பித்துக் கொண்டிருக்கிறது. ( தொடரும் )


-தீசன்

1 கருத்துகள்

  1. ஆகா அருமையான பதிவு.. என் ஐயபாட்டை நீக்கும் அற்புத கருத்துகள்...ஆழ்ந்த சொற்கள்..தீர்ந்தது சந்தேகம்..! நன்றி.. நற்பணி தொடர்க..

    பதிலளிநீக்கு
புதியது பழையவை