அண்மை

ஞானத்தைத் தேடி 7 - ஜீவகாருண்யம்

7.ஜீவகாருண்யம்



ஐந்து மாதத்திற்கு முன் வரை இதுப் பற்றி பேச நான் தகுதியற்றவனே, ஆனால் இப்போது அரைகுறைத் தகுதி எனக்கும் இருப்பதாகவே கருதுகிறேன்.


பெரும்பாலான ஞானிகள் தங்களது குடும்பங்களை புறக்கணித்து தனித்து இருப்பார்கள்.


'அமைதி வாழ்வை தேடி போன அவர்களுக்கு சொந்த பந்தகளின் பாசம் புரியாது, அன்பு தெரியாது' என்று உலகம் நினைக்கும்.


ஆனால் ஞானஸ்தர்களின் நிலை வேறு, நம்முடைய நிலை வேறு.


அவர்கள் இந்த உலக உயிர்கள் அனைத்தையுமே தன் சொந்தகளாகப் பார்க்கின்றனர்.


ஒரு குறிப்பிட்ட இனக்குழுவிடம் மட்டும் ஒட்டி உறவாடுவதை அவர்கள் விரும்பவில்லை.


தெரிந்த மனிதர்களின் இறப்பிற்கு மட்டும் கண்ணீர் வடிப்பதை அவர்கள் வெறுத்தார்கள்.


இருவர் ஓர் உதவியை கேட்கும் போது இரண்டாவதாக வந்த சொந்தக்காரனுக்கு முன்னுரிமை காட்டுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.


போலியான இந்த உலகில் வாழப்பிடிக்காமல் வனாந்திரங்களில் தனியாக வாழத் தொடங்கினர்.


ஆனால் உலகமோ இவர்களுக்கு அன்பு இல்லை, கருணை இல்லை உதவி செய்யும் மனம் இல்லை என்று தூற்றும்.


இவைகளையெல்லாம் கேட்டு அவர்கள் கவலைப்பட்டதும் இல்லை.


சாதாரண மனிதர்களைக் காட்டிலும் இவர்களுக்கு கருணையும் அன்பும் அதிகமே.


'வாடியப் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' எனும் வள்ளலாரின் வார்த்தையின் மூலம் அவரின் மன வேதனையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.


பற்றற்ற வாழ்வை மேற்கொண்டிருக்கும் திருமூலர் கூட இடையன் மேய்த்து வந்த கால்நடைகள் வீடு திரும்ப வேண்டுமென்பதற்காக ஒருமுறையும், வீரசேன பாண்டியன் மனைவி குணவதிக்காக ஒருமுறையும் தன்னுடைய காயகல்ப உடலை இழந்தார் என்பதை படித்தறிய முடிகிறது.


இணையத்தில் ஒருவர் கருணையைப் பற்றி மிக அழகாக விளக்கியிருந்தார்.


"மனிதர்களுக்கு இரண்டு விதமாக கருணைத் தோன்றுகிறது, ஒன்று குட்டைப் போன்றது, இன்னொன்று கடலைப் போன்றது, குட்டைப் போன்றதன் பெயரே மனிதநேயம். கடலைப் போன்றதன் பெயரே ஜீவகாருண்யம்"


மனிதன் மனிதனிடையே மட்டும் காட்டும் கருணை மனிதநேயமாகும்.


தமிழ்நாட்டில் ஒரு கட்சி உண்டு. அதன் பெயரே மனிதநேயம் எனத் தொடங்கும்.


சமீபத்தில் அவர்கள் ஒரு போராட்டம் நடத்தினார்கள்.


எல்லா ஊரிலும் நடத்தினார்களா, குறிப்பிட்ட ஊர்களில் மட்டும் நடத்தினார்களா எனக்கு தெரியாது.


அவர்களின் போராட்டம் என்ன தெரியுமா?


அரசைக் கண்டித்து அரசு அலுவலக வாசல்களில் குப்பைக் கொட்டும் போராட்டம்.


அந்த குப்பைகளை ஒரு துப்புரவாளர் தான் சுத்தம் செய்வார், துப்புரவாளரும் ஒரு மனிதன் தான் என்பதைக் கூட அறியாத இவர்களின் கருணையே இல்லாத கொள்கையின் பெயர் மனிதநேயம்.


இன்று சேற்றில் முளைத்த செந்தாமரைப் போல் மனிதநேயமும், பாலையில் பூத்த முல்லையைப் போல் ஜீவகாருண்யமும் அரிதாகவே உள்ளது.


தாய்மையைப் போற்றும் தமிழைத் தாய்மொழியாய் கொண்ட நம்மில் பலர் இந்தியை இழிவாகப் பேசினர்.


இந்தியிடம் இலக்கியமில்லை, இலக்கணமில்லை, வடிவமைப்பு இல்லை, இந்தியிடம் என்ன இருக்கிறது? எனக் குறைகூறி தனது தமிழ்ப் பற்றை உயர்வாக காட்டுவதாக நினைப்பதே இவர்களின் நிலை.


எந்த ஒரு உண்மையான தமிழ்ப் பற்றாலனும் இன்னொரு மொழியைத் தூற்ற மாட்டான்.


நமக்கு வேண்டுமானால் அது இன்னொரு மொழியாக இருக்கலாம், அவர்களைப் பொருத்தவரை இந்தி அவர்களின் தாய்.


'இன்னொருவன் தாயைப் பழிப்பவன், நல்ல தாயின் வயிற்றில் பிறந்திருக்க மாட்டான்' என்பார்கள்.


பிறரின் தாய் மொழியைத் தூற்றுவதோடு மட்டுமல்லாமல், நம்முடைய தாய்மொழிக்கும் கலங்கம் ஏற்படுத்துகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


அதுமட்டுமல்லாமல் மொழியொன்றின் குறைகளை சுட்டிக்காட்டுவது சக மனிதனின் ஊனத்தை சுட்டிக்காட்டி அவனை வேதனைக்கு உள்ளாக்குவதற்கு சமமாகும்.


அதைவிட இழிவான செயல் கிடையாது.


அன்றைய சூழ்நிலையில் 'இந்தியை எங்களிடம் திணிக்க வேண்டாம், இந்தியை நாங்கள் ஏற்க மாட்டோம்' என்பதோடு நிறுத்தியிருக்கலாம்.


இத்தனை செல்வம் பொருந்திய தமிழைத் தாய்மொழியாய்க் கொண்டதற்கு நாம் சந்தோஷமடைய வேண்டுமே தவிர, பிற மொழியின் குறைகளைக்  கூறி அவர்களை ஏக்கமடையச் செய்ய கூடாது.


கருணையுள்ளவன் அப்படி செய்ய மாட்டான்.


இதுவரை மனிதநேயத்தைப் பற்றி என் மனதில் தோன்றியதைச் சொன்னேன்.


ஜீவகாருண்யம் என்றால் என்ன? என்பதையே இங்கு பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.


'மாட்டின் கொழுப்பும், இரத்தமும் தான் நெய்யும் பாலும் அதை உண்ணலாம், ஆனால் அசைவம் உண்ணக் கூடாதா? அப்படி பார்த்தால் மாட்டின் பாலும் நெய்யும் அசைவந்தானே ஏன் அதை சாப்பிடுகிறீர்கள்?' என்ற கேள்வி எழும்


கொஞ்சம் கூடத் தெளிவு இல்லாதவர்களின் வாதம் இது.


நாம் எடுத்துக் கொள்ளும் உணவு, எந்த உயிருக்கும் பாதகம் செய்ததாக இருக்கக் கூடாது.


மாட்டின் வயிற்றை அறுத்து இங்கு யாரும் பாலும் நெய்யும் எடுக்கவில்லை.


பசுவின் மடியில் சுரக்கும் அதிகப்படியான பாலையே கறந்து எடுத்து பாலாகவும் நெய்யாகவும் வெண்ணையாகவும் தயிராகவும் படைக்கிறோம்.


சொல்லப்போனால் அந்த அதிகப்படியான பாலை கறக்காமல் விட்டால் தான் அந்த பசுவிற்கு மடி வீங்கி பிரச்சனை ஏற்படும்.


அந்த வகையில் பசுவிற்கு நன்மை செய்கிறோமே தவிர இம்சிக்க வில்லை.


ஜீவகாருண்யம் என்பதே அசைவம் உண்ணாமலிருப்பது அல்ல எந்த உயிருக்கும் துன்பம் செய்யாமல் இருப்பது.


அது நிச்சயம் உங்களை ஓர் அமைதியான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்கிறது.


எந்த ஒரு உயிரினத்தையும் இம்சிக்க கூடாதென்றால் தாவரங்களையும் துன்பப்படுத்த கூடாது அல்லவா? ஆனால் ஜீவகாருண்யத்தில் இருப்பவர்கள் தாவர உணவு தானே எடுக்கிறார்கள்? உங்கள் கொள்கைக்கே முரணாகிறதே? என்று கேள்வி வரும்.


இதற்கு என்னிடம் இரண்டு பதில் உள்ளது. முதலில் வள்ளலார் சுவாமி அவர்களின் பதிலையே தருகிறேன்.


"நான் எந்த உயிருக்கும் துன்பஞ்செய்ய கூடாது என்றே எண்ணுகிறேன், ஆனாலும் இந்த உடல் உணவு இல்லாமல் இயங்குவதில்லை அதனால் தாவரங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவைகளைக் கொல்லாது அவைகளின் நகமும் முடியும் போன்ற இலைகளையும், கனி காய்களையும் மட்டுமே எடுத்து சமைத்து உண்கிறேன்' என்கிறார்.


எத்தனை உயர்ந்த எண்ணம் பாருங்கள் வள்ளலாருக்கு, ஜீவகாருண்யத்தில் இருப்பவர்கள் தாவரங்களையும் கொல்வதில்லை, அவைகளே வேண்டாமென உதிர்த்து விடும் பொருட்களையே எடுக்கின்றனர்.


இன்னும் சில பிராமணக் குழுக்கள் பூண்டு, கிழங்கு போன்ற வேர்த்தாவரங்களையும் உண்பதில்லை.


ஏன் என்றால் அவைகளை பறிக்கும் போதே அவற்றின் உயிரும் பறிக்கப்படுகிறது.


அந்த கால பிராமணக் கொள்கையில் மிகச் சிறந்த ஜீவகாருண்ய கொள்கையும் இருந்தது.


இன்று அவர்கள் அசைவம் சாப்பிடக் கூடாது, பூண்டு கிழங்கு சாப்பிடக் கூடாது என்று அதை ஏதோ சாஸ்திரம் என்று நினைக்கின்றனர்.


அவர்களின் முன்னோர்கள் ஏன் இப்படியெல்லாம் சாஸ்திரம் அமைத்தார்கள் என்பது அவர்களிலே சிலருக்கு மட்டுந்தான் தெரிகிறது.


தெரிந்த சிலர் மட்டுமே அதை நெறியோடு கடைப்பிடிக்கின்றனர்.


ஆனால் ஜீவகாருண்யத்தில் பொதுவாக தாவரங்களை உண்ணலாம் என்பார்கள். அதற்கு என்னுடைய பதில் இதோ,


'உலக உயிர்கள் அனைத்துமே உணவுக்காகவோ உதவிக்காகவோ ஒன்றையொன்று சார்ந்திருக்கும்'.


இது உண்மையே.


ஆனால் அது அந்த இடத்தைப் பொறுத்தது.


பாலைவனங்களிலும் பனிப்பிரதேசங்களிலும் வாழும் மக்கள் தாவரங்களை கண்டெடுக்க கூட முடியாது.


வேறு வழியே இன்றி வயிற்றுக்காக அவர்கள் உயிர்க் கொலை செய்ய வேண்டிருந்தது.


அது தான் அவர்களின் வாழ்வாதாரமும் கூட.


ஆனால் இயற்கையே மனிதனுக்கான உணவு எது? என்பதை தெளிவாக நமக்குச் சொல்கிறது.


ஓர் ஆட்டைக் கொல்வதற்கென்று அழைத்து வரும் போது, அது அந்த கத்தியை பார்த்த உடனே 'மே...மே' என இடைவிடாது சத்தமிடுகிறது.


என்னை 'விட்டுவிடுங்கள் விட்டுவிடுங்கள்' என்று துள்ளுகிறது.


தன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றை அவிழ்க்க முடியுமா என்று இழுத்து இழுத்து ஏமாற்றமடைகிறது.


இதே போல் ஒரு கோழியை அழைத்து வரும் போது சிறகினை பட பட வென அடித்து அலறுகிறது. 


பிடிபட்டவன் கைகளிலிருந்து விடுபட வேண்டுமென்று அங்குமிங்கும் ஆட்டம் போடுகிறது.


இறுதியில் இதுவும் ஏமாற்றமடைகிறது.


தூண்டிலில் மாட்டப்பட்ட மீன்களும் என்னை தண்ணீரில் விட்டுவிடுவென துடித்து துடித்து ஏமாற்றமடைகிறது.


இவைகளனைத்தும் 'உணவிற்காக படைக்கப்பட்ட உயிர்கள்' என்றால் அமைதியாக அல்லவா இருந்திருக்க வேண்டும்.


ஏன் தான் கொல்லப்பட்டுவிட கூடாதென்று துடிக்கிறது? துள்ளுகிறது? பறக்கிறது?


ஏன் என்றால் இவைகள் எதுவும் மனிதனின் உணவிற்காக படைக்கப்பட்டது அல்ல.


மரஞ்செடிகளில் இருக்கும் கனிகளையும் காய்களையும் இலைகளையும் பறிப்பதால் அவைகள் காய்ந்து இறப்பதில்லை.


மீண்டும் துளிர்த்து உனக்கான உணவுத் தயார் என்பதைக் காட்டுகிறது.


இயற்கையின் இந்த செயல்களின் மூலமே உணரமுடிகிறது தாவரங்கள் தான் மனிதனுக்கு உணவென்று.


கேவலமான நா இச்சைக்காக ஒரு உயிரின் வாழ்க்கையையே அழிப்பது உங்களுக்கு பாவமாக இல்லையா


அந்த உயிரின் அழுகுரல் உங்களின் கருணையைத் தூண்டவே இல்லையா


சற்குருவும், மனிதன் ஓரறிவு ஜீவராசிகளான தாவரங்களை உண்டு வாழ்தலே சிறப்பு, அதுவே உலகை சமநிலையாக்கும் என்று சொல்கிறார்.


எந்த ஒரு உணவும் நாக்கு வரை தான் சுவை தரும், அதன் பின் துர்நாற்றமாகி விடும்.


சரியான பசியின் போது நான்கு வாழைப்பழத்தை எடுத்து உண்டாலே பசி அடங்கிப் போகிறது.


அதன் பின் உலகிலேயே சுவையான உணவைக் கொண்டு வந்தாலும் வயிறு வேண்டாம் என்கிறது.


'தன் சதை பெருக்கத்திற்காக பிற உயிரின் சதையை உண்பவனிடம் அணுவளவேனும் கருணை இருக்காது'


என்று வள்ளுவர் கூறுகிறார்.


வள்ளுவர் கருத்துக்களைச் சொல்லி வாழ்க்கை தத்துவம் சொல்லும் பலர் அதிகாரம் 26 புலால் மறுத்தலை போதித்திருக்கமாட்டார்கள்.


அனைவரும் படிக்க வேண்டிய அதிகாரமது.

பலரின் வாழ்வை மாற்றிய அதிகாரமது.


எத்தனையோ பல எழுத்தாளர்கள் அவர்கள் எழுதும் கருத்துகளில் 'இதை எழுதும் போது இப்படிப் பட்ட உணர்ச்சி தோன்றியது, கைகள் நடுங்கியது' என்றெல்லாம் சொல்வார்கள்.


உண்மையிலேயே இக்கட்டுரையை எழுதும் போது சோகத்திலே மூழ்கியிருந்தேன்.


மூளையிலிருந்து விரலுக்கு வரும் எழுத்துகள் இன்று இதயத்திலிருந்து வந்ததாகவே நினைக்கிறேன்.


இதுவரை இக்கட்டுரை சொன்ன கருத்துக்களைப் புரிந்து கொண்ட ஒருவரேனும் புலாலை விட்டீர்களானால், என் பிறவிப் பலனை அடைந்ததாகவே கருதுவேன்.


ஜீவகாருண்யம் என்பது மோட்ச வீட்டின் திறவுகோல் என்கிறார் வள்ளலார் அவர்கள்.


ஞானப்பாதையின் படிகட்டும் இதுதான்.


'இரக்கமென்பதை அறியாதார் அரக்கர்' என்கிறார் கம்பர்.


மனிதன் இயற்கையாகவே விலங்கு குணம் படைத்தவன்.


ஒழுக்கத்தினாலும், இரக்கத்தினாலும் உயர்ந்தவனை தேவர்களாகவும், ஒழுக்கமும் இரக்கமும் இல்லாதவனை அரக்கர்களாகவும் புராணங்கள் சித்தரிக்கிறது.


ஒழுக்கமில்லாத தேவர்களையும் இரக்கமுள்ள அரக்கர்களையும் சில சமயம் கதைகளில் காணமுடிகிறது.


விலங்கு குணம் படைத்த மனிதனும் நிச்சயம் கருணை உள்ளம் கொண்டவனாக முடியும்.


கண்ணதாசன் சொல்கிறார்


"ஆசை கோபம் களவு கொண்டவன்

பேச தெரிந்த மிருகம்

அன்பு நன்றி கருணைக் கொண்டவன்

மனித வடிவில் தெய்வம்"


புலாலை விட்டேன் என்றால், உடல் மெலிந்து விடுமே, மார் கட்டிவிடுமே, கண்களில் குழி விழுகுமே, தேக பலம் இறங்குமே, சத்து குறைந்து நோய் கூட வருமே என்று கேட்கிறீர்களா…


பாஞ்சாலி உன்னிடத்தில்

சேலைக் கேட்டாள்

அந்த பார்த்தனவன் உன்னிடத்தில்

கீதைக் கேட்டான்

நானிருக்கும் நிலையில் உன்னை 

என்ன கேட்பேன்

இன்னும்

நன்மை செய்து துன்பம் வாங்கும்

உள்ளம் கேட்பேன்


"நன்மை செய்து, துன்பம் வாங்கும்,

உள்ளம் கேட்பேன்"  ( தொடரும் )


-தீசன்




கருத்துரையிடுக

புதியது பழையவை