அண்மை

ஞானத்தைத் தேடி 8 - உன்னுள் ஒருவன்

8.உன்னுள் ஒருவன்



வளமான நாட்டினை ஆண்டு வந்த மன்னனொருவன், பிரஜைகளின் மனநிலையை அறிய ஒரு போட்டி வைக்கிறான்.


மூன்று வேளை உணவிற்கு அல்லல் படும் ஒரு பிச்சைக்காரனும் சிறியதொரு பரிசாவது கிடைத்தால் போதுமென்று அப்போட்டியில் பங்கெடுக்கிறான்.


அரசனும் போட்டியின் விதிமுறையை அறிவிக்கத் தொடங்கினார்.


"இது ஓர் ஓட்டப்பந்தய போட்டிப் போலத் தான், கண்ணுக்கெட்டி தூரம் வரை முடிவில்லாத காணி நிலத்தில் போட்டியாளர்கள் ஓட வேண்டும், எவனொருவன் அதிக தூரம் ஓடுகிறானோ, ஓடிய வரையில் உள்ள நிலம் அவனுக்கே சொந்தம்"

இதைக் கேட்டப் பிரஜைகள் ஆர்ப்பரித்தனர். பலரும் போட்டியில் கலந்து கொள்ள முன் வந்தார்கள். பிச்சைக் காரனும் ஓடுவதற்கு தயாரானான்.


மீண்டும் மன்னன் எழுந்து, 'எவன் இடையிலே நிற்கிறானோ அவனுக்கு ஒன்றும் கிடையாது, கடைசி வரை ஓடுபவனுக்கே பரிசு' என்றார்.


நாம் நிச்சயமாக வென்றிடுவோம் என்ற எண்ணத்திலே பலர் போட்டிக்குத் தயாரானார்கள். சிலர் குடும்பத்தோடு போட்டியில் பங்கெடுத்தனர்.


புருஷன் நின்றாலும் பையன் நிற்க மாட்டான் என்ற நம்பிக்கையில் தாய்மார்கள் உற்சாகமூட்டினர்.


போட்டித் துவங்கியது, அனைவரும் ஓடத் துவங்கினர்.


அனைவரது கால்களையும் வெற்றிக் கற்பனை நகர்த்திச் சென்றது.


நீண்ட நேரத்திற்கு பிறகு நிற்காமல் மூச்சிரைத்த படியே திரும்பி பார்த்த பிச்சைக்காரனுக்கு அதிர்ச்சி.


மன்னனும் அவன் பரிவாரங்களும் கண்ணுக்கே புலப்படவில்லை.


அவ்வளவு தூரம் ஓடியும், யாருக்கும் நிற்க மனமில்லை. 


போக போக ஒருவர் பின் ஒருவராக உஸ் உஸ் என்ற சத்தத்தோடே விழத் தொடங்கினர்.


அவர்களை கவனிக்காதபடியே நகர்ந்த கூட்டமும் கொஞ்ச தூரம் ஓடி மயக்கத்தால் விழுந்தது.


இறுதியாக ஓட்டப் பாதையில் இரண்டே பேர் தான் எஞ்சினர்.


முதலில் ஓடுபவன் ஓர் இளைஞன். இரண்டாவதாக வருபவன் அந்த பிச்சைக் காரன்.


திடீரென்று முதலில் வந்தவனும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுகிறான்.


பிச்சைக்காரனுக்கோ தான் வென்றதை நினைத்து அளவு கடந்த மகிழ்ச்சி.


இருந்தாலும் அவனும் தன் ஓட்டத்தை நிறுத்தவில்லை. இப்போது நின்றாலும் இதுவரை கடந்த அதீத நிலமும் தனக்கு தான் என தெரிந்தும், 'இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்' என்றே மூச்சிரைக்க நகர்கிறான்.


பாவம் அவனும் விழுகிறான்.


பின் மன்னனும் அவன் பரிவாரங்களும் கூடவே அரண்மனை வைத்தியரும் வருகிறார்கள்.


வழியில் இருந்த ஒவ்வொரு போட்டியாளரையும் பார்த்த வைத்தியர் 'இவன் செத்தான், இவனும் செத்தான்' என்ற படியே வாய்க் கணக்கு போட்டு நகர்கிறார்.


கடைசியாக பிச்சைக்காரனையும் பரிசோதித்த வைத்தியர் அனைவருமே மாரடைப்பால் இறந்த செய்தியை மன்னரிடம் சொல்கிறார்.


இத்துயர செய்தியை கேட்ட மன்னர், போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்குமே அவர்கள் விழுந்துகிடந்த அதே ஆறடி நிலத்தை ஆறுதல் பரிசாகக் கொடுத்து பரிவாரங்களுடன் ஊர்த் திரும்பினான்.


ஆசை யாரையும் விட்டுவைப்பதில்லை என்பதற்கு இக்கதை ஓர் உதாரணம்.


'சிறிய பரிசாவது கிடைத்தால் போதும்' என்ற மனநிலையில் இருந்தவனை 'இன்னும் கொஞ்சம்' என்று எண்ணவைத்தது அவனுள்ளே இருக்கும் இன்னொருவன்.


மனதை அடக்கத் தொடங்கிய பலர் அந்த இன்னொருவனை சந்தித்திருப்பார்கள்.


வேண்டுவதையெல்லாம் கனவிலும் நிஜத்திலும் வழங்கும் நண்பன் போன்ற அவன் ஞான மார்கத்தில் புகுந்த கணமே விரோதியாகிவிடுவான்.


பாரதியார் ஞானரதத்தில் சொல்லி இருப்பார், 'இந்த ஞானிகளெல்லாம் கொலைகாரர்கள், மனதைக் கொன்றல்லவா இத்தகைய மேன்மையை அடைந்துள்ளனர். ஆனால் நான் அப்படிப்பட்ட கொலைப் பாவத்தை செய்ய போவதில்லை' 


நாமும் அந்த இன்னொருவனை கொல்ல வேண்டியதில்லை.


அறிவு ஞானத்தைக் காட்டிலும் அனுபவ ஞானம் சிறந்தது.


ஜீவகாருண்ய கட்டுரையைப் படித்த ஒருவர், தவ வாழ்க்கையை சொல்லும் வள்ளுவர் தான் காம வாழ்க்கையையும் சொல்கிறார். அவரது கருத்து முரணாகத் தான் இருக்கும் என்றார்.


குறளில் எவ்வித முரணும் இல்லை, அதிகார அமைப்பில் தான் முரண்.


இன்பம் - பொருள் - அறம் என்று அமைந்திருந்தால் இவ்வித கேள்வி வந்திருக்காது.


அல்லது இக்கால மக்களுக்கு இப்படி சொன்னால் தான் புரியும் என்றே எண்ணுகிறேன்.


இன்ப வாழ்வை முழுமையாக அனுபவிக்காத எவனும் ஞான வாழ்வைத் தொடர முடியாது.


அறிவின் மூலம் ஆசையை விட்ட சிலருக்கு உடலும் மனமும் ஒன்றாது. உடல் வேண்டிய ஆசையை மனம் வேண்டாமென்றும், மனம் வேண்டிய ஆசையை உடல் வேண்டாமென்றும் எதிர்க்கத் தொடங்கும்.


விவேகானந்தர் போன்ற விதிவிலக்கும் இதில் உண்டு.


அவர்களுக்கெல்லாம் இயற்கையாகவே ஞான ஒளி கிடைத்திருப்பது அதிசயமே.


ஒன்றை கவனிக்க வேண்டும், விவேகானந்தரின் குரு பரமஹம்சருக்கு மனைவி உண்டு மக்கள் இல்லை.


உலக சுகங்களையெல்லாம் அனுபவித்த பட்டினத்தார், தன் மகனாலே ஞானம் பெற்றதாய் கதையுண்டு.


வெளி வாழ்க்கையை அறியாது குடும்ப வாழ்விலே மூழ்கிருந்த கௌதம புத்தர் இறப்பை அறிந்த பின்னரே ஞானம் பெற்றாராம்.


சித்தர்களில் முதன்மையான அகஸ்தியருக்கு மனைவியுண்டு.


ஞான வடிவான ஈசனுக்கு சக்தி என்ற மனையாளையும் குழந்தைகளையும் சித்தரிக்கிறது கதைகள்.


எல்லா விதமான ஞானக் கதைகளும் காமத்திலே தொடங்கும். உதாரணமாக ஜெயதேவரின் கீதகோவிந்தம் காமத்தின் மூலம் ஞானத்தைக் கொடுக்கும் நூலாகும்.


புத்தர் ஒருமுறைத் தன் சீடர்களுக்கு அழகிகளின் நடனக் கூத்தை ஏற்பாடு செய்திருந்தார்.


சாதாரண நடனமாக இருந்தால் பரவாஇல்லை.

அது ஒரு நிர்வாண நடனம்.


இதைக் கண்ட சீடர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


ஆடல் துவங்கியது.


கொஞ்ச நேரத்திலே சீடர்கள் பலருக்கு முகம் வியர்க்கத் துவங்கியது.


ஓரிடத்தில் உட்கார முடியாத அவர்கள், உட்கார்ந்த படியே அங்குமிங்கும் நகர்ந்தனர்.


சிலர் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு விரல் இடை விழியே நடனத்தை ரசித்தனர்.


சட்டென புத்தர் எழுந்தார். சீடர்களை நோட்டமிட்டார். இரண்டு பேரைத் தவிர மீதி அனைவரையும் 'வீட்டிற்கு சென்று எப்போதும் போல குடும்பத்தோடு சந்தோஷமாக வாழுங்கள்' என்று சொல்லி அனுப்பிவிட்டார்.


அந்த இரண்டு பேர் முகத்திலும் எவ்வித மாற்றத்தையும் புத்தரால் கண்டுபிடிக்க முடியவில்லை.


அவர்களை பொருத்தவரையில் முன்னே இருப்பது சாதாரண பெண் ஜடங்கள் அவ்வளவு தான்.


புத்தர் மீதி உள்ளவர்களை ஞான மார்கத்திற்கு தகுதி இல்லாதவர்கள் என்று எண்ணவில்லை, லௌகீக வாழ்வின் ஆழம் அறியாதவர்கள் என்றே எண்ணினார்.


அனுபவிக்காதவனின் ஆட்டம் அனுபவத்தால் அடங்கிவிடுகிறது.


அன்று என் வேதியியல் ஆசிரியர் சொன்னது நினைவுக்கு வருகிறது,


'ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிய வித்தியாசமில்லை, ஆண் பேன்ட் சட்டை போட்டிருப்பான், பெண் பாவடை தாவனி போட்டிருப்பாள்'


'உலக வாழ்க்கையை தெரிந்து கொண்ட எனக்கு இப்போது ஆண் பெண் தெரியவில்லை தோலும் எலும்புந்தான் தெரிகிறது' என்கிறார் பட்டினத்தார்.


இதை வெற்றென கேட்பதற்கும் அனுபவத்தால் உணர்வதற்கும் வித்தியாசம் உண்டு.


என் ஆசிரியரும் பட்டினத்தாரும் சொன்ன கருத்துக்கள் அனுபவத்தால் வந்ததே தவிர அறிவால் அல்ல.


அதனால் தவ வாழ்வில் இருக்கும் ஒருவர் இன்ப வாழ்வை எடுத்துரைப்பது எவ்வித முரணும் ஆகாது. திருவள்ளுவரின் கருத்துகள் சரியே, இக்கால மக்களின் பார்வையே தவறு.


தவ வாழ்வை மேற்கொள்ளும் முனிவர்கள் மட்டுந்தான் சிற்றின்ப வாழ்வின் சிக்கல்களை எடுத்துரைக்க சரியான ஆளாய் இருப்பார்கள்.


அதனால் தான் 'நதி மூலம் ரிஷி மூலம் காணாதே' என்பார்கள். அவர்கள் பலவாறான ஆசைகளில் சீரழிந்திருப்பார்கள். நான் எப்படி சீரழிந்தேன் என்பதை நாசுக்காக சொல்வதே அவர்களது ஞானத் தத்துவங்களெல்லாம்.


போகத்தில் வீழ்ந்தவன் ரோகத்தின் மூலமாக யோகத்தை அடைகிறான்.


நெருப்பு சுடுமென்று குழந்தைக்குச் சொன்னால் புரிந்து கொள்ளாது. தொட்டு தெரிந்து கொண்டால் மீண்டும் தொடாது.


அது போலவே மனிதனும் ஆசைகளில் வீழ்ந்த பின்னே அறிவைப் பெறுகிறான்.


மனதை புரிந்து கொண்டவன் திமிராக இருப்பது பிடிவாதமாகாது.


ஆசையால் வரும் பிடிவாதத்தின் பெயரே திமிர்.


எவ்வித ஆசையுமின்றி, எவ்வித பிரதி பலனும் எதிர்பாராது ஒரு செயலில் நிலைத்திருப்பதன் பெயரே வைராக்கியம்.


வைராக்கியத்தோடு ஆசையை அடக்கும் போது அந்த இரண்டாமவன் நம் நிம்மதியை குலைக்க தயாராவான்.


ஒன்றாக இருந்த உடலையும் மனதையும் வேறுபடுத்த தொடங்குவான்.


இதற்கொரு மகாபாரத கதையுண்டு.


ஒரு முனிவரும் அவரது மனைவியும் மான் வடிவங்கொண்டு காட்டினுள் கூடிக் கொண்டிருந்தனர்


அப்போது அங்கு வேட்டையாட வந்த பாண்டு மன்னர், கூடும் மான்களை தன் கணையால் அடிக்கிறார்.


அடிபட்ட மான் சட்டென முனிவராக மாறியது. பாண்டுவிற்கு பயங்கரமான அதிர்ச்சி.


அவன் நினைத்தபடியே முனிவர் அவனுக்கொரு சாபமிடுகிறார்.


'நீ எப்போது உன் மனைவியோடு கூடுகிறாயோ அப்போதே அந்த நிலையிலே மாண்டு போவாய்' என்று


இதை கேட்டு பயந்த பாண்டுவும் பிரம்மச்சரியம் கொள்கிறான். வனத்திற்கு சென்று தன் ஆயுளை கழிக்கத் தொடங்குகிறான்.


பாண்டு மனைவி குந்தியும் மந்திரங்கள் மூலம் மக்களைப் பெறுகிறாள்.


ஏதோ ஒரு வேளையில் தன் இரண்டாவது மனைவி மாத்ரியுடன் சேர்கிறான் அந்த நிலையிலே சாகிறான்.


இறந்துவிடுவோம் என அறிந்திருந்தும் இப்படி அவன் நடந்து கொண்டதற்கு காரணம் வைராக்கியமில்லாத கட்டுப்பாடே.


ஆசை பாவத்திற்கு அழைத்துச் செல்லும் எனும் எண்ணம் தோன்றும் போதே உடலில் இரண்டுவிதமான உணர்வுகள் தோன்றி ஒன்று வேண்டாமென்றும் இன்னொன்று வேண்டுமென்றும் கூறும்.


இரண்டாமவனின் தாக்கம் அதிகமாக அதிகமாக இது போன்ற மோசம் நடந்துவிடும்.


இந்த கதை உடலின் அனைத்து ஆசைக்குமே பொருந்தும்.


ஆசைக் கொள்வதில் தவறில்லை, இன்னொருவனுக்கு பாவஞ்செய்யாத எந்தவொரு ஆசையும் பாவமாகாது.


இன்னொருவனுக்கு தீங்கிழைக்காத ஆசையினால் உயிரென்னும் ஜோதி அணையாது, உடலென்னும் விளக்கு ஒடிந்துவிடும்.


உன்னுள்ளே இருப்பவனின் ஆசையை அறிவால் அடக்கிப் பாருங்கள், அடங்கவில்லையா? 


அனுபவம் அவனை அழ வைத்துப் பார்க்கும்.


ஆடி அடங்கும் வாழ்க்கையல்லவா இது.

( தொடரும் )


-தீசன்





1 கருத்துகள்

  1. அருமையான விளக்கம், ஆசையை அடக்கிக் கொண்டு போதும் என்று இருப்பவன் எவனோ அவன் இங்கு சந்தோஷமாக வாழ்கிறான். தெளிவான கருத்து. அருமை 🙏

    பதிலளிநீக்கு
புதியது பழையவை