அண்மை

ஞானத்தைத் தேடி 9 - கடன்

9.கடன்




கடன் எனும் வார்த்தையே பணத்தை மட்டும் குறிப்பதல்ல, கடமை என்பதையும் குறிக்கிறது.


நகுல சகாதேவனின் மாமனான சல்லியன் குருக்ஷேத்திரத்தில் போர்த் தொடங்குவதற்கு முன் பாண்டவர்களின் உதவிக்காக ஒன்பது மைல் தூரம் நீண்டிருக்கும் தன்னுடைய மாபெரும் படையினை அழைத்து வருகிறான்.


கடல் போன்ற சைனியத்தை சல்லியன் அழைத்து வருகிறான் எனும் செய்தியை தெரிந்து கொண்ட உடனே 'அவர்களுக்கு பலத்த வரவேற்பு கொடுங்கள், ஓய்வு தணிக்க மண்டபம் அமையுங்கள், எவ்வித குறைவும் இன்றி உணவையும் நீரையும் அவர்களுக்கு வழங்குங்கள்' என துரியோதனன் உத்தரவிடுகிறான்.


கண்ணனுக்கு ஒப்பான அந்த மகாரதன் சல்லியனோ தான் யாரால் கௌரவிக்கப் படுகிறோம் என்பதை அறியாமல் சகல மரியாதைகளையும் ஏற்கிறான்.


ஒருமுறை அந்த சேவகர்களை அழைத்து 'இந்த ஏற்பாட்டை செய்தவரை அழைத்து வாருங்கள் அவர் என்ன கேட்டாலும் தருவேன்' என்று வாக்கும் கொடுத்து விடுகிறான்.


இப்படியெல்லாம் நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்த துரியோதனன் சல்லியனிடம் வந்து, 'நீயும் உன் பதினாராயிர வீரர்களும் குதிரைகளும் யானைகளும் ரதங்களும் எங்களோடு இணைந்து பாண்டவர்களை எதிர்க்க வேண்டும்' என்று தனது வரத்தைக் கேட்கிறான்.


இத்தனை நாள் துரியோதன சேவகர்கள் செய்த சேவைகளை நன்கு அனுபவித்த சல்லியனோ தான் இவர்களுக்கு கடன் பட்டிருப்பதை உணர்ந்து வேறு வழியின்றி துரியோதனின் வேண்டுகோளுக்கு சம்மதமளிக்கிறான்.


பாண்டவர்களின் உவிக்காக வந்தவன் கௌரவர்களோடு இணைந்து பாண்டர்களையே எதிர்க்கிறான்.


காரணம், கடன்.


மகாபாரத கதைக்களமே ஒருவன் இன்னொருவனுக்கு கடன் படுவதாலே நகரும்.


எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம், சொல்லைக் கொட்டினால் பொறுக்க முடியுமா? என்பார்கள்.


சாந்தனு மகாராஜா 'நீ என்ன செய்தாலும் பொறுத்துக்கொள்வேன்' என்று கங்கையிடம் வாக்கு கொடுக்கிறார்.


பீஷ்மர் நான் அரச பதவிக்கு ஆசைப்பட மாட்டேன், திருமணஞ் செய்து கொள்ள மாட்டேன் என்று மீனவ தலைவனுக்கு வாக்கு கொடுக்கிறார்.


துரியோதனன் கர்ணனுக்கு அங்க தேசத்தை கொடுத்த கணமே 'என்னுயிர் இருக்கும் வரை உன்னுயிரைக் காப்பேன்' என்று வாக்கு கொடுக்கிறார்.


பாஞ்சால தேசத்திலிருந்து என்ன பரிசு கிடைத்தாலும் அது எங்கள் ஐவருக்கும் சொந்தமென அன்னைக் குந்தியிடம் பாண்டவர்கள் வாக்களிக்கிறார்கள்.


போரில் ஆயுதம் ஏந்த மாட்டேன் எனப் பார்த்தனுக்கு பரந்தாமன் வாக்களிக்கிறார்.


எந்த சூழ்நிலையிலும் கௌரவர் பக்கமே இருப்பேன் என்று திருதராஷ்டிரனுக்கு துரோணர் வாக்கு கொடுக்கிறார்.


கௌரவர்கள் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்வோம் என வியாசரிடம் தருமன் வாக்கு கொடுக்கிறார்.


உன் மானத்தைக் கெடுத்த துச்சாதனனின் கைகளை பிய்த்தெரிவேன் என பீமன் திரௌபதிக்கு வாக்கு கொடுக்கிறான்.


அர்ஜூனனைத் தவிர வேறு எந்த தம்பியையும் கொல்ல மாட்டேன் என்று கர்ணன் குந்திக்கு வாக்கு கொடுக்கிறான்.


யோசிக்காமல் சிந்திய சொல் அனைத்துமே இங்கு அழிவுக்கு அழைத்துச் சென்றது.


வழியறியமுடியாத அடர்ந்தக் காட்டில் மாட்டிக் கொண்ட அரிச்சந்திரன், 'இந்தக் காட்டிலிருந்து என்னை வெளியே அழைத்துச் சென்றால், நீ கேட்பதை தருவேன்' என்று வழிப்போக்கன் ஒருவனுக்கு வாக்கு கொடுக்கிறான்.


வெளியே அழைத்துப்போன அவனோ நாட்டையே கேட்கிறான்.


நாட்டை இழந்த அரிச்சந்திரன் விசுவாமித்திரரிடம் கொண்ட கடனினால் மனைவியை விற்கிறான் மகனை விற்கிறான் இறுதியில் தன்னையே விற்று அக்கடனை அடைக்கிறான்.


உண்மை மட்டுமல்ல, கடனும் எவ்வளவு கஷ்டம் தரும் என்பதை அரிச்சந்திர கதை வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.


உதவிக்கு உதவி என்பதே பண்பாடு.

'செய்யாமல் செய்த உதவி' அனைத்தைக் காட்டிலும் மேன்மையானது.


ஜப்பானிய சிறுவர்களுக்கு சொல்லப்படும் கதைகள் பெரும்பாலும் 'உதவிக்கு பதிலுதவி' எனும் தத்துவத்தையே உணர்த்துகிறது.


வேடனொருவனால் காயப்பட்ட அன்னப் பறவைக்கு ஒருவன் உதவி செய்கிறான்.


அந்த அன்னப் பறவை தன் மாய சக்தியால் பெண் உருவங்கொண்டு அவனது வீட்டிற்கு வந்து ஒரு நாள் இரவு மட்டும் அடைக்கலங் கேட்கிறது.


அவனும் அவளுக்கொரு அறையைக் கொடுக்கிறான். அறைக்குள் சென்ற அந்த பெண் அங்கிருந்த தறியையும் நூலையும் கொண்டு குளிரைத் தாங்கும் நேர்த்தியான உடை ஒன்றை நெய்கிறாள்.


சத்தம் பொறுக்காத அவன் திடீரென்று அக்கதவை திறந்து பார்க்கிறான். ஆடை நெய்து கொண்டிருந்த அப்பெண் சட்டென்று அன்னமாய் மாறி 'வரவிருக்கும் குளிர்காலத்திற்கு உதவுமென உனக்கு இதை நெய்தேன்' என கூறி பறந்து செல்கிறது.


'உதவி செய்தால் உதவி பெறுவாய்' என்பதை உணர்த்துகிறது இந்த ஜப்பானிய குறுங்கதை.


'மொமொடாரு' 'உராஷிமாடாரு' போன்ற கதைகளும் உதவியின் மகிமையை உணர்த்தும் ஜப்பானிய கதைகளே.


உதவி வேறு கடன் வேறு இல்லை. உதவி கடன் இரண்டுமே திருப்பி செலுத்த வேண்டியவைகளே.


கடனை கட்டாயம் திருப்பி செலுத்த வேண்டும், உதவியை திருப்பி செலுத்த வேண்டுமென்று பலர் நினைப்பதில்லை.


அவசரமாக ஓர் இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். ஆட்டோவையோ டாக்ஸியையோ தேடுகிறீர்கள்; கிடைக்கவில்லை.


யாரோ முகமறியாத ஒருவரிடம் 'லிப்ட்' கேட்கிறீர்கள். அவரும் உங்களை தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு நீங்கள் நிறுத்த சொல்லும் இடத்தில் இறக்கிவிடுகிறார்.


இப்போது அவரிடம் நீங்கள் கடன் பட்டுள்ளீர்கள். அவர் செய்த உதவிக்கு பதிலுதவி நீங்கள் செய்ய வேண்டும்.


ஆனால் அத்தகைய அவசரமான நேரத்தில் உங்களால் அவருக்கு உதவி செய்ய முடியாதல்லவா?


ஆட்டோவில் வந்திருந்தால் நூறு ரூபாய் ஆகியிருக்குமென்றால், உங்களை அழைத்து வந்தவருக்கு ஐம்பது ரூபாய் தருவதில் தவறில்லையே.


உதவிக்கு உதவி செய்ய வேண்டியது உங்களுடைய கடமை, அதை அவர் வேண்டாமென மறுத்தால், அது அவருடைய மேன்மை.


எந்த வகையிலும் உதவி செய்ய முடியாத போது 'நன்றி' எனும் வார்த்தையே போதுமானது.


சூரியன் நமக்கு எவ்வளவோ உதவி செய்கிறார். நம்மால் அவருக்கு பதிலுதவி செய்ய முடியவில்லை. பொங்கல் என்னும் பண்டிகை ஒன்றை உருவாக்கி நன்றி சொல்கிறோம்.


என் நண்பர் ஒருவர் ஏழு நாளுக்குள் தந்து விடுவதாய் சொல்லி 'குறிப்பிட்ட ஒரு தொகை' என்னிடம் வாங்கிச் சென்றார்.


ஏழு நாள் கடந்தது, பத்து நாள் கடந்தது, இருபது நாள் கடந்தது, அவரைக் காணவில்லை.


முப்பதாவது நாள் நெருங்குகையில் நானே அவரை எதிர்பாரத விதமாய் சந்தித்தேன்.


'ஏழு நாளுக்குள் தருவதாக சொன்னீர்களே என்ன மறந்துவிட்டீர்களா?' என்றேன்.


அதற்கு அவர், 'உங்கள் வீட்டுப் பக்கம் வருவதற்கு எனக்கு எந்த வேலையும் இல்லை, அதான் தாமதம்' என்றார்.


எவ்வித பலனுமின்றி ஒருவர் செய்யும் உதவிக்கு பதிலுதவி செய்வதே நம் முதற்க் கடமையாக இருக்க வேண்டும், கடமையை செய்ய சந்தர்பங்கள் தேடக் கூடாது.


இந்த அவசரமான உலகத்தில் கடன் வாங்குவதில் தவறில்லை, அதை அவர் கேட்பதற்கு முன்பாகவே அடைத்துவிட வேண்டும்.


கேட்டுப் பெறுவது கொடுத்தவருக்கு சங்கடம்,

கேட்ட பின்னே கொடுப்பது வாங்கியவருக்கு சங்கடம்.


கடன் வாங்கும் போதே நம் சக்திக்கு இது தகுமா என்பதை சிந்திக்க வேண்டும். இத்தனை நாளுக்குள் அடைப்பேன் எனக் வாக்கு கொடுத்துவிட்டால் அதை தவறிவிடக் கூடாது.


வாங்கிய கடனையோ உதவியையோ மறப்பது உங்களின் மரியாதையை குலைத்துவிடும்.


அப்படி தவறவிடும் பட்சத்தில் கொடுத்தவர் கேட்பதற்கு முன்பாக 'நாளைத் தருகிறேன்' எனும் உங்களது வார்த்தை, இன்னும் இவன் நம்மிடம் கடன்பட்டிருப்பதை மறக்கவில்லை எனும் எண்ணத்தை அவருக்கு உண்டு செய்யும்.


அதனால் பெற்ற உதவியையோ வாங்கிய கடனையோ என்றைக்குமே மறக்காதீர்கள்.


ஞானத்தைத் தேடி போகும் நாம் ஏன் கடனைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டுமென நீங்கள் நினைக்கக் கூடும்.


ஒரு துறவிக்கு புறத்தூய்மை அவசியமாகும், அது அவனுக்கு அகத்தூய்மையை அளிக்க வல்லது.


இல்லறத்தில் இருந்து கொண்டே துறவு மேற்க்கொள்ளும் லௌகீக ஞானிக்கோ அகத்தூய்மை அவசியமாகும்.


பொய், பொறாமை, கடன் போன்ற இன்னும் பல ஞானப் பயணத்தின் வேகத்தைக் குறைக்கும் மனபாரங்கள்.


அவைகளை கழட்டிவிட வேண்டுமே தவிர அடக்கி வைக்கக் கூடாது.


கொடுத்த வாக்கு, வாங்கிய கடன், பெற்ற உதவி அனைத்தையுமே அப்போதே தீர்த்துக் கொள்வது நல்லது.


தசரதர் கைகேயிக்கு கொடுத்த வரத்தை அந்த கணமே கேட்டு நிறைவேற்றியிருந்தால், இராமன் வனவாசம் போக நேர்ந்திருக்காது.


நித்தியக் கருமங்களில் ஒன்றான 'காலைக் கடன்' எனும் வார்த்தையே புரியவைக்கிறது.


அந்த கடனை காலையிலே செலுத்த வில்லையானால், அன்றைய நாள் முழுதுமே நிம்மதி இருக்காதென்று.


பிறந்த உடனே மனிதன் பெற்றோருக்கும் பூமிக்கும் கடன் படுகிறான்.


பெற்றோர்கள் வாழ உடல் தந்தார்கள், பூமி வாழ இடம் தந்திருக்கிறது.


பிறந்த உடனே இவர்களிடம் கடன் படும் மனிதன், வாழ்க்கை முழுதும் இவர்களுக்கு மகிழ்ச்சியையும் நன்மையையும் அளித்தே தன் கடனை தீர்க்க வேண்டும்.


வாழ்வின் இடையில் வரும் சிலர், உங்களுக்கு கொடுக்கும் உதவியெனும் கடனை, 

அவர் கேட்கிறாறோ இல்லையோ, கேட்பதற்கு முன்பாகவே நீங்கள் கொடுத்துவிடுங்கள். ஏனெனில் கடன் ஞானத்தை முறிக்கும். 

( தொடரும் )


-தீசன்




2 கருத்துகள்

  1. கைமாறு கருதாத உதவி
    பயன்தூக்காமல் செய்த உதவி
    செய்யாமல் செய்த உதவி

    இவற்றை ஒருபோதும் அடைக்கமுடியாது என்பதால்தானே மழை கடல் பூமி வானம் என உவமை சொல்றார் வள்ளுவர்..

    செய்ந்நன்றி...க்கு கடன்படுதல் என்பது நாம் உதவியை பெற்றதால் வருகிறதா..
    உதவுவோம் என்று அந்நபர் எண்ணியதற்கே வருகிறதா..?

    உண்மையான மனதோடு ஒருவர் உதவ முன்வருகிறார்..ஆனால் அவர் செய்த அந்த உதவி எள்ளளவு கூட நமக்கு பயன்தரவில்லை.. சொல்லப்போனால் தேவையே இல்லை.. ஆனால் உதவியவர் தாம் உதவிவிட்டதாக எண்ணி திருப்தியோடு செல்கிறார்....
    இப்போது நாம் அவருக்கு நன்றிகடன் பட்டிருக்கோமா இல்லையா...?

    பதிலளிநீக்கு
  2. அழகான உவமைகள் அருமையான விளக்கம்

    பதிலளிநீக்கு
புதியது பழையவை