அண்மை

படித்தால் மட்டும் போதுமா.? - சிறுகதை

படித்தால் மட்டும் போதுமா.? - குகன்

படித்தால் மட்டும் போதுமா.? - சிறுகதை


சூரியனின் காதல் பார்வை பூமியில் விழ அதன் பொருள் புல்லின் மேல் உள்ள பனித் துளிகள் தன் ஆன்மாவை வெளியேற்றிக் கொண்டிருந்தது. சாலையில்  பல வண்டிகள் செல்ல அனைவரும் தங்கள் பணியை செய்ய புறப்பட்டனர் என்பது அப்பட்டமாக தெரிந்தது. 


"இந்த வருசம் பப்ளிக் பரிச்சை ஸ்கூலுக்கு  சீக்கிரமா போறது முக்கியமில்லை ஒழுங்கா படிக்கனும்" அவன் அம்மா சொல்லிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தபடியே சிறப்பு வகுப்புக்கு ‌விரைவாக சென்ற முகமது ' டென்த் ஏ ' எனக்குறிப்பிடப்பட்ட வகுப்பறையில் நுழைந்தான். 

 

வகுப்பறையில் அமைக்கப்பட்டிருந்த மூன்றாவதாக உள்ள 'ஸ்டீல்  பென்ஜ் அவனது சிம்மாசனம். சில நிமிடங்கள் செல்ல ஒவ்வொரு மாணவர்களாக வகுப்பறையின் உள்ளே நுழைந்தனர்.ஆசிரியரும் வந்தார்.


"வணக்கம்...ஐயா..."

 

"வணக்கம்... மாணாக்கர்களே..."

 

"எல்லாரும் உக்காருங்க! "என்று கூறி ஆசிரியரும் அமர்ந்தார்.

 

"இன்னக்கி என்ன பாடம் நடத்தனும்...?"

 

" திருக்குறள் நடத்தனும் ஐயா....."

 

என்று வகுப்பறையில் முக்கால் பங்கு மாணவர்கள் ஒருங்கே கூற கால் பங்கு மாணவர்கள் வாயே திறக்காமல் இருந்தனர். அதில் ‌முகமதுவும் ஒருவன். 

 

"இன்னக்கி நம்ம திருக்குறள்ள 'ஒழுக்கமுடைமை' அதிகாரம் நடத்தனும் சரியா ..?"

 

"ஆமா ஐயா"

 

என்று மாணவர்கள் கூற தமிழாசிரியரும் ஒழுக்கமுடைமை அதிகாரத்தை அமுத தமிழில் அழகுற நடத்தினார். 

 

"யாருக்காவது இதுல ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க?"என்று ‌ஆசிரியர்‌ கேட்க 

 

"ஐயா, ஒழுக்கம்னா என்னங்க ஐயா...?" என தன் பெருந்த சந்தேகத்தை முகமது இவ்வாறு கேட்க  அனைவரும் ‌சிரித்தனர். 

 

சிறிது குறுநகைப்புடன் ஆசிரியரும்‌ "உனக்கு  புரியுற மாதிரி சுருக்கமா சொல்லனும்னா நீ நடந்துக்குற விதம் நீ பேசுற பேச்சு உன்னையும் பாதிக்காம மத்தவுங்களையும் பாதிக்காம இருந்தா அது ஒழுக்கம்‌னு சொல்லலாம். "என்று கூறி முகமதை அமர சொன்னார். 

 

ஆசிரியர் வருகைப் பதிவேடு எடுத்துக்கொண்டிருக்கும் போது "ஐயா.. உள்ளே  வரலாமா??"என்ற குரல் கேட்டது. "என்னப்பா ராசு‌ சிறப்பு வகுப்புக்கு விரைவா வரதில்லையா? ஏன் இவ்வளவு தாமதம்..?? சரி சரி உள்ள வா.." என ஆசிரியர் கூற பள்ளியின் மணியும் அதிர்ந்தது. 

 

" இந்த அதிகாரம் மட்டும் இல்ல நீங்க எந்த அதிகாரத்தோட திருக்குறள படிச்சாலும்  அது படிச்சதோடு  மட்டும் இல்லாம அத வாழ்கையில பயன்படுத்தனும். சரிப்பா! வர வகுப்புல சந்திப்போம்" என ஆசிரியர் வகுப்பறையில் இருந்து வெளியேறினார்.

 

மாணவர்களும் பள்ளி  பிராத்தனை கூடத்திற்கு வருசையாக சென்று பள்ளி வளாகத்தில் உள்ள கொடிமரத்தின் கீழ் வருசையாக நின்றனர்.பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் சூழ பிராத்தனை நடைபெறத் தொடங்கியது . 

 

"ஏப்பா என்ன டென்த் ஏ வருசையில சலசலப்பு பக்கத்துல உள்ள ஆசிரியர் என்னனு பாருங்க!!" என்று கூறி சட்டென தலைமை ஆசிரியர்  பிராத்தனை நடைபெற சைகை செய்தார்.

 

பிராத்தனைக் கூட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்ற நிலையில் உடற்கல்வி ஆசிரியர் ஒரு மாணவனை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார். "என்ன ராசு நீயா அந்த சலசலப்பு க்கு காரணம்....?'' என்று தலைமை ஆசிரியர் ராசுவிடம் கேட்டார். "சார் மன்னிசுடுங்க .... இன்னக்கி 'பெசல் கிளாஸ்ல' என்ன நடத்துனாங்கனு கேட்டேன்".

 "என்ப்பா‌ கிளாஸ்ல பஸ்ட் மார்க்கு எடுத்தா மட்டும் போதாது 'டிஸிப்லின்னும்' வேணும்"என்று திட்டி அனுப்பினார்.

 

ராசுவும் வகுப்பறையில்  நுழைந்தான் . முகமதுவின் அருகில் அமர்ந்து "இன்னக்கி ஸ்பெசல் கிளாஸ் ல ஒழுக்கமுடைமை நடத்துனாங்களா...?"

 

"ஆமா ராசு ஏன்?"

 

"இல்ல அத முன்னாடியே படிச்சி மனப்பாடம் பண்ணிட்டேன். அதான் கேட்டேன். "என்று அலட்சியம் செய்தான்.

 

பள்ளி முடிந்தது வீட்டிற்கு சென்று கை, கால்களை அலம்பிக்கொண்டு புத்தக மூட்டையை ஒரு பக்கம் வீசி எறிந்து விட்டு தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்த முகமதுவை

 

"தம்பி.. படிக்கலையா..?"என்று உள்ளிருந்து அம்மா கேட்க.

 

"அம்மா இப்பதான் வந்தேன் உடனே படிக்கனும்மா..?" என்று அலுத்துக் கொண்டே பதில் தந்தான்.

 

"சரி சரி ஒரு அரைமணி நேரம் கழிச்சி படிக்க ஆரம்பிக்கனும்"என்று அம்மா கூறிய கட்டளையால் அரை மணி நேரம் கழித்து படிக்க உட்கார்ந்தான் முகமது. 

 

காலையில் தமிழாசிரியர் நடத்திய ஒழுக்கமுடைமை பற்றி படிப்போம். இதை நம் நண்பன் ராசு நேற்றே படித்துவிட்டதாக கூறியதை நினைவு படுத்திக் கொண்டு படிக்கலானான்."என்னடா இது இன்னக்கி மழை வருபோல இருக்கே ... என்னடி நம்ம  புள்ள அதிசியமா படிக்கிறான்" என்று கேலிக்கையாக கேட்டுக்கொண்டே வீட்டிற்கு வந்தார் முகமதுவின் அப்பா.

 

 "தம்பி என்ன படிச்சிக்கிட்டு இருக்க...?

 

"திருக்குறளு...."

 

"திருக்குறள படிச்சா மட்டும் போதாது .. அது படி  வாழனும்.."என்று அவன் அப்பாவும் கூறினார். தமிழாசிரியரும் இதே சொன்னது அவன் காதில் எதிரொலித்தது.

 

"உள்ள வாங்க அவன் ட பேசிக்கிட்டே இருக்காதிங்க அவன் படிக்கட்டும் " என்று முகமதுவின் அம்மா கூற அவர் அப்பா உள்ளே சென்றார்.

 

முகம்மதுவுக்கு "எல்லாரும் இதே சொல்றாங்க காலையில சாரும் இப்புடித்தான் சொன்னாரு.. இப்ப அப்பாவும் சொல்றாங்க... அப்படி வாழ்ந்து தான் பாப்போமே" என்ற எண்ணம் தோன்றியது. 

 

ஒவ்வொரு திருக்குறள் படி நடபோம் என உறுதி மொழி ஏற்றுக் கொண்டு தினமொரு திருக்குறள் படித்து  அதன் படியே நடக்கலானான்.

 

காலம் தன் ஓட்டத்தை நிறுத்தாததால் பொது தேர்வும் முடிந்தது . முகமது பள்ளியில் முன்னுற்று எழுபத்து நான்கு மதிப்பெண் எடுத்து பள்ளியில் மூன்றாம் மாணவனாக ஆனான்.  பள்ளியின் ஆண்டு நிறைவு விழாவிற்கு பள்ளியின் சார்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் அழைத்தனர். 

 

அன்று மாலை மிக விறுவிறுப்பாக ராசு பரிசுகள் வாங்க தயாரானான்.மிக வேகமாக மிதிவண்டியில் சென்றான். அதனால் ஒரு மோட்டார் வண்டியில் வந்தவர் இவன் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

 

"ஏ கெழவா... கண்ணு தெரியலையா.." என்று கோபத்துடன் கூறி ராசு வேகமாக கிளம்பினான். அந்த வழியாக வந்த முகமது இதனைக் கண்டு அவரை தூக்கி அவரிடம் "ஐயா மன்னிச்சிடுங்க அவன் என் ப்ரெண்டு தான்"என்று வருத்திக் கேட்டான்.

 

"சரி பா நீ எங்க படிக்கிற.."

 "இந்த ஆண்கள் பள்ளியில தான் "

"அப்புடியா இன்னக்கி ஆண்டு விழா தான, அங்க தான போற...!?"

 

"ஆமா"

 

"சரி வா நானும் அங்க தான் போறேன் " என்று முகமதுவையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு பள்ளியிலே இறக்கி விட்டு சிரித்துக் கொண்டே பள்ளி  மேடையில் ஏறினார்.

 

சற்று ஆச்சரியமாக அவரை பார்த்தான் முகமது. பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களை முன்னாள் தலைமை ஆசிரியர் வழங்குவார் என மேடையில் அறிவிக்கப்பட்டது.

 

ராசு அச்சத்துடனே மேடை ஏறினான். அந்த முதியவர் அவனை அடையாளம் கண்டு கொண்டார் அவனுக்கு பரிசையும் வழங்கினார். அடுத்து பள்ளியின் சிறந்த மாணவனை அழைக்க அவரிடம் பெயர் கொண்ட சீட்டு வழங்கப்பட்டது அதில் ராசுவின் பெயர் எழுதப்பட்டிருந்தது.

 

அவர் "முகமது" மேடைக்கு வரவும் எனப் படித்தார்.

 

அங்குள்ள ஆசிரியர்கள் அதை சரியா படிங்க அதுல ராசுனு போட்டுருக்கு என்று அனைவரும் கேட்கும் படியே கூறினர். இல்லை முகமது தான் என அவர் சொல்ல முகமதுவும் சந்தேகத்துடனே வந்து பரிசை வாங்கி சென்றான்.

 

பிறகு ஆசிரியர்கள் "என்ன..? பெயரை மாற்றி கூறிவிட்டிர்கள்" என கேட்க அவரும் நடந்தனவற்றைக் கூறினார். இதனால் ஆசிரியர்களின் மனதில் பள்ளி முதல் மாணவன் ராசு இறுதி இடத்தை பிடித்துக் கொண்டான்.

 

தான் பெற்ற அவப்பெயரை நினைத்து வருத்தத்துடனே வந்த ராசுவிடம்  முகமது "கற்க கசடற கற்பவை கற்றப்பின் நிற்க அதற்குத் தக" என்ற குறளை கூறி "இந்த குறளோட பொருள உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல அந்த பொருள் படி நம்ம நடந்திருந்தோம்னா நம்மல அதுவே உயர்த்தும்.

 

அன்னக்கி நீ ஒழுக்கமுடைமை எல்லாம் தரவா மனப்பாடம் பண்ணிடன்னு சொன்ன ஆனா அது படி நடந்திருந்தினா இன்னக்கி இப்புடி ஆகி இருக்காது.இத 'அட்வைஸ்னு நனச்சிகாத' நண்பா..." என பேசிக்கொண்டடிருந்த போதே விழிகளில் இருந்து கண்ணீர் காலில் சொட்ட சட்டென முகமதைக் கட்டியணைத்தான் ராசு. 

 

கற்றது எவ்வளவு ஆனாலும் அது படி நடத்தலே சாலச் சிறந்தது என்ற உண்மையை உணர்த ராசு தான் பரிசாகப் பெற்ற திருக்குறள் புத்தகத்தை புரட்டிக் கொண்டே வீடு நகர்ந்தான்.



                     

5 கருத்துகள்

  1. சிறப்பான சிறுகதை 👌எழுத்தாளர் குகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்💐💐💐 சிறந்த கதையாசிரியர் ஆக வாழ்த்துக்கள்💐💐🤝

    பதிலளிநீக்கு
  2. சிறந்த படைப்பு 👌 மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பா 💐 💐 💐 💐

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை