அண்மை

கிரகபிரவேசம் - சிறுகதை

கிரகபிரவேசம் - ஜெ.மாரிமுத்து

கிரகபிரவேசம் - சிறுகதை


பூங்குளம் கிராமம் , ஏழைகள் நடுத்தர மக்கள் இருநூறு குடும்பகளாவது வாழும் கிராமம் . ஆயிரம் பேராவது வசிப்பார்கள் அந்த கிராமத்தில் சின்ன சின்ன பெட்டிக்கடைகள் தெருவுக்கு ஒன்று இருந்தாலும் பெரிய மளிகை கடை என்றால் அது இரண்டு தான் . அதில் ஒன்று ' சுந்தரமூர்த்தி மளிகை ' போர்டில் தான் இந்த பெயர் இருக்கும் நடத்துபவன் சீனு , வயது முப்பது இருக்கும் பத்து வயதில் அந்த கடையை நடத்தி கொண்டிருந்த சுந்தரமூர்த்தி செட்டியாரிடம் வேலைக்கு வந்தான் . எல்லா வேலையையும் அவனை வைத்துதான் செய்வார். கடை மாறாமல் விஸ்வாசமாக வேலை செய்து வியாபார நெளிவு களிவுகளை கற்றுக் கொண்டான் . 



ஐந்து வருடங்களுக்கு முன் , வயோதிகத்தால் சுந்தரமூர்த்தி செட்டியார் கடைக்கு வராத போது சீனுவை அழைத்து , ' எனக்கு முடியல . உனக்கும் இருபத்தெஞ்சு வயசாயிட்டு இனி கடையை நீயே நடத்திக்க ' கடையில் உள்ள எந்த பொருளுக்கும் நான் விலை போடல . அதனால் தினமும் முன்னூறு ரூபாய் என் வீட்டில் கொடுத்துடு . என் உயிர் போன பின்னும் இதை நீ செய்யனும் என்றார் . 



கடைக்கு முதலாளி ஆக போகிறோம் என்ற மகிழ்ச்சியிலும் , முன்னூறு ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பது எல்லாம் இனி நமக்குதான் என்ற மகிழ்ச்சியிலும் கண்களில் நீர் ததும்ப சம்மதித்தான் சீனு , சந்தரமூர்த்தி செட்டியார் வீட்டில் இருந்தாலும் சீனுவுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்க்க வேண்டும் என நண்பர்கள் மூலம் பெண் தேட ஆரம்பித்தார் . சீனு வேறு சமூகத்தை சேர்ந்தவன் . பீடி சிகரெட் புகையிலை விற்பானே தவிர அவனுக்கு எந்த கெட்ட பழக்கமுமில்லை . வீட்டை விட்டால் கடை கடையை விட்டால் வீடு கடையில் வருமானம் கொட்டியது சீனுவுக்கு படிப்பு அவ்வளவு இல்லாவிட்டாலும் கணக்கு அவனை போல் யாராலும் போட முடியாது . போன மாதம் பாக்கி வைத்த பத்து ரூபாயைக் கூட இந்த மாதம் நினைவு வைத்து வாடிக்கையாளருக்கே தெரியாமல் அவர் கணக்கில் சேர்த்துவிடுவான் . விடியல் கலையிலேயே எழுந்து 15 கிலோமீட்டர் தூரம் உள்ள டவுனுக்கு போய் எல்லா சாமான்களும் வாங்கி வந்துவிடுவான். டி வி எஸ் 50 தான் வைத்து இருந்தான் அந்த காலத்தில் ஆயிரம் கிலோ எடையைத் தாங்கும் உங்க ஊரு வண்டி என காட்டி 10 பேரை ஏற்றி விளம்பரம் செய்வார்கள் . அது உண்மைதான் போலிருக்கிறது அரிசி மூட்டை, மிளகாய் மூட்டை, பருப்பு மூட்டை, வாழை இலை, தக்காளி பெட்டி, காய்கறி மூட்டை என ஒரு மினி லாரியை போல் தினமும் ஏற்றிவிடுவான் மளிகை வியாபாரம் மட்டும் அல்ல . சில பேர் மாத்திரை வாங்க சொல்வார்கள் சில பேர் டிஷ் டீவிக்கு பணம் கட்ட சொல்வார்கள் ஓட்டல் நடத்துபவர் இலை வாங்கித்தர சொல்லுவார் டாக்டரிடம் டோக்கன் எடுத்து வரக் கூட சிலர் சொல்வார்கள் எல்லா வேலையும் செய்வான் ஆனால் சீனுவிடம் எல்லாவற்றுக்கும் ஒரு ரேட் உண்டு பேங்கிற்கு மெழுகுவர்த்தி , அரக்கு , கார்பன் முதல் ஸ்கூலுக்கு சாக்பீஸ் வரை அவன் தான் வாங்கித் தர வேண்டும் . கேஸ் புக் பண்ண சொன்னால்கூட அதிலும் பத்து ரூபாய் பார்த்து விடுவான் . காசு இல்லாமல் எதுவும் செய்யமாட்டான் . உதவி செய்வான் ஆனால் அதில் வருமானம் இருக்க வேண்டும் . 



சுந்தரமூர்த்தி செட்டியார் ஒரு நாள் சீனுவை கூப்பிட்டு உனக்கு எப்படிப்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும் என்று கேட்டார்.


சீனு தயங்காமல் சொன்னான் . ' ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை . நான் கடையில் இல்லாதபோது கடையை பார்த்துக் கொள்ளும் பெண்ணாக இருக்க வேண்டும் . மளிகை பொருள் , தயிர் , கடலை போன்றவற்றை பாக்கெட் போட தெரிந்த பெண்ணாக இருந்தால் நல்லது இன்னும் சொல்லப் போனால் உங்கள் பெண் லட்சுமியை போல் இருந்தால் நல்லது ' என்றான் . செட்டியார் கடையில் இருந்தவரை அவர் பெண் லட்சுமிதான் வீட்டிலிருந்தபடியே பொருள்களை பாக்கெட் போட்டு கொடுத்து உதவி வந்தாள் . சீனு லட்சமி என்ற பெயரை சொன்னதும் சுந்தரமூர்த்தி செட்டியார் மனதிலே ஒரு மின்னல் வெட்டியது . ஏன் சீனுவுக்கு நம் லட்சுமியை கொடுக்க கூடாது ? சாதி என்ன சாதி! அவளும் பத்தாவது படித்தவள் தானே இரண்டு பேரும் சேர்ந்தா நல்லாதான் இருக்க போறாங்க . மனைவியுடனும் லட்சுமியிடமும் கலந்து ஆலோசித்தார் யாரும் மறுப்பேதும் சொல்லவில்லை . மூத்த மகனை நன்றாக படிக்க வைத்து நல்ல வேளைக்கு சென்னைக்கு அனுப்பினார் . அவன் அங்கேயே அதிகம் சம்பாதிக்கும் பெண்னை திருமணம் செய்து கொண்டு ஊருக்கே வருவதில்லை . பணம் மட்டும் அனுப்புகிறான் . சீனுவை மருமகனாக்கி கொண்டால் மகனாகவும் இருப்பான் என்று கணக்கு போட்டார் அடுத்த வாரமே திருமணம் முடிந்துவிட்டது . ஆணும் பெண்னும் உழைக்க பல வழிகளில் பணம் சேர பக்கத்திலேயே ஒரு மனை வாங்கி வீடு கட்ட அஸ்திவாரமும் போட்டுவிட்டான் சீனு . ஒன்னாங்கிளாஸ் படிக்கும் சிறுவர்கள் கூட சீனு இந்த மிட்டாயை கொடு என்று பேர் சொல்லித்தான் கேட்பார்கள் அதற்கெல்லாம் கவலை பட மாட்டான் சீனு . அவனுக்கு தேவை வியாபாரம் .



2020 மார்ச் 22 , ஞாயிற்றுக் கிழமை . இந்தியா முழுதும் ஒரு நாள் ஊரடங்கை அறிவித்தார் பிரதமர் . ஏதோ கொரானா என்ற கொள்ளை நோய் வருவதால் இந்த முன்னெச்சரிக்கை என்றார்கள் . ஒரு நாள் தானே என்று கடையை முடிவிட்டு வீட்டில் இருந்தான் சீனு . ஆனால் அந்த ஊரடங்கு மேலும் 15 நாள் நீடிக்கப்பட்டபோது எல்லோரும் நிலை குலைந்து போனார்கள் , பக்கத்து டவுனில் ஒரு மணி வரை தான் மளிகை கடை என அறிவித்தார்கள் . பேருந்துகள் லாரிகள் ஓடவில்லை ஒரே நாளில் பல பொருட்களின் விலை ஏறியது . இரண்டாவது பெரிய மளிகை கடை நடத்தியவர் , மனைவி பேச்சை கேட்டு கொரானா பயத்தில் நிரந்தரமாக கடையை மூடிவிட்டார், இப்போது அந்த ஊருக்கு சீனு கடை மட்டும்தான் பெரிய மளிகை கடை போட்டிக்கு ஆள் இல்லை கடையில் கூட்டத்தையும் கட்டுப் படுத்த முடியவில்லை.


இந்த கொரானா சீசனை பயன்படுத்தி வீட்டை கட்டி முடித்து விட வேண்டும் என மனதுக்குள் திட்டம் போட்டுவிட்டான் சீனு . அலைந்து திரிந்து பொருட்களை வாங்கினான் . பாலத்தின் நிற்கும் போலீசுக்கு வேர்க்கடலையும் வாழைப்பழத்தையும் கொடுத்து பழக்கப்படுத்தி கொண்டான் . டவுனில் மொத்த ஏஜன்ஸி திறந்தில்லை என்றால் அவர்கள் வீட்டுக்கே சென்று கதவை தட்டினான்.  ஒரு மொத்த வியாபாரிக்கு 5 பெட்டி பிஸ்கட் தான் வருகிறதென்றால் அதை அப்படியே எம் ஆர் பி ரேட்டுக்கு பண ஆசை காட்டி அப்படியே தூக்கினான் . அதை கொண்டு வந்து இரு மடங்கு விலைக்கு விற்றான் . ஐந்து ரூபாய் சீவலை பத்து ரூபாய்க்கு விற்றான் . பத்து ரூபாய் புகையிலையை இருபது ரூபாய்க்கு விற்றான் . நூறு ரூபாய் பருப்பெல்லாம் இருநூறு ரூபாய் ஆகிவிட்டது . கடைத்தெரு போக ஐடி கார்டு தேவைப்பட்ட போது நெட் சென்டரில் மெடிக்கல் சேல்ஸ்மேன் போல போலி ஐடி கார்டை ஆயிரம் ரூபாய் செலவில் செய்து வாங்கி வைத்து கொண்டான் . மாஸ்க் வைத்து இருப்பான் போட மாட்டான் ஹெல்மட் வைத்து இருப்பான் போட மாட்டான் யாராவது பிடிக்கிறார்கள் யாராவது அபராதம் போடுகிறார்கள் என்றால் மட்டும் எடுத்து மாட்டிக் கொள்வான்.


கொரானா பற்றிய பயம் அவனுக்கு சிறிதும் கிடையாது . கொரானா காலம் முடியும் வரை யாருக்கும் கடன் கிடையாது என கண்டிப்பாக சொல்லி விட்டான் . இருமடங்கு லாபத்தால் அக்கவுன்டில் பணம் எகிறியது . கொத்தனார் ஆசாரி போன்றவர்கள் வேலை இல்லாமல் வீட்டில் இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான் . 600 ரூபாய் சம்பளம் வாங்குபவர்களுக்கு 200 ரூபாய் மட்டுமே கொடுத்து , வீடு கட்டும் வேலையை ஆரம்பித்தான் . அந்த நேரத்தில் அது அவர்களுக்கு பெரிய பணம். கிராமம் என்பதால் யாரும் கேள்வி கேட்கவில்லை . வியாபாரம் மூச்சு தினறும்படி நடந்தது வீடும் மளமளவென மேலே எழுந்தது . ஒரு நாள் அந்த வழியாக வந்த வருவாய் அதிகாரி அவன் கடையில் இருந்த கூட்டத்தை பார்த்து சமூக இடைவெளி இல்லை என சீல் வைத்துவிட்டு சென்று விட்டார் . ஆடி போய்விட்டான் சீனு , உடனே உள்ளுர் பிரசிடென்சிடம் போனான் அவர் டவுனில் உள்ள கட்சிக்காரரிடம் அழைத்து சென்றார் , மூன்றாயிரம் கை மாறியது . அதிகாரி வாங்கினாரா ? அரசியரல் வாதி வாங்கினாரா தெரியாது . கடை சாவி கைக்கு வந்துவிட்டது . மாஸ்க் போடாவிட்டாலும் மாஸ்க் விற்றான் . ஹேன்ட் வாஷ் பயன்படுத்தாவிட்டாலும் அதை விற்றான் . சில தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் நள்ளிரவு வந்து சப்ளை செய்வார்கள் . அப்படி ரிஸ்க் எடுத்து வாங்கும் பொருட்களை பல மடங்கு விலைக்கு விற்று லாபம் சம்பாதித்தான் மேலும் மேலும் 15 நாள் ஊரடங்கு தள்ளி போனது அவனுக்கு வசதியாகிவிட்டது . பணம் சேர சேர வீடு வேலை முடிந்து விட்டது . கிர பிரவேசத்துக்கு ஒரு நாள் குறித்தான் இருபது பேருக்கு மேல்தான் கூட கூடாதே அதனால் முறை செய்ய வேண்டியவர்களை மட்டும் முறைபடி அழைத்தான் லட்சமியின் அண்ணன் சென்னை மச்சான் இ-பாஸ் எடுத்துக் கொண்டு குடும்பத்தோடு வருவதாக சொல்லி விட்டார் . அந்த நாள் வந்தது . ஊர் ஜனங்கள் எல்லாம் கூடி விட்டார்கள் கவர்மெண்ட் போடும் கண்டிசன் எல்லாம் கிராமத்துக்கு ஒத்து வராது . புது வீடு ஜே ஜே என்று இருந்தது . இதையெல்லாம் பார்த்து உள்ளூர் போலீஸ்காரர் கண்டும் காணாமல் போய்விட்டார் . ஏதாவது நடவடிக்கை எடுத்தால் பின்பு சீனு கடையில் கணக்கு வைத்துக் கொண்டு கடன் கேட்க முடியாது . கிரகப் பிரவேசம் முடிந்து விட்டது . சீனுவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை அன்று இரவு மொட்டை மாடியில் நிலவின் ஒளியில் நின்றான் சீனு . காற்று அடிக்கும் போது எல்லாம் உடல் முழுதும் குளிருவது போல் இருந்தது . எச்சில் முழுங்க முடியாமல் தொண்டை வலித்தது . அருகில் நின்ற லட்சுமி அவனை தொட்டு பார்த்தாள் உடல் கொதித்தது


எத்தனை முறை தொலைக் காட்சியை பார்க்கிறாள் அவளுக்கு பயம் வந்துவிட்டது .மெட்ராஸில் இருந்து வந்து விட்டு போயிருக்கிறார்கள் என்பது அவளது கூடுதல் பயத்துக்கு காரணம்.  எதற்கும் காலையில் போய் , பக்கத்து ஊர் காலேஜில் உள்ள கொரானா முகாமில் ஒரு டெஸ்ட் கொடுத்துடுவோங்க ' என்றாள் .காலையில் எழுந்ததும் அந்தக் கல்லூரியில் டெஸ்டுக்கு கொடுத்தார்கள் டெஸ்ட் எடுத்தவர்கள் , நீங்கள் இப்போது வீட்டுக்கு போகலாம் ரிசல்ட் எஸ்எம்எஸ் - ல வரும் அதுவரை உங்களை தனிமைப் படுத்தி கொள்ளுங்க என்று சொல்லி அனுப்பினார்கள் .சீனுவுக்கு இரவு பசியில்லை , இரவு முழுதும் தூக்கமும் வரவில்லை.  சுரமும் நிற்க வில்லை. காலையில் எஸ்எம்எஸ் வந்தது. மனைவியிடம் காட்டி படிக்க சொன்னான் பாஸிடிவ் என்பதை படித்ததும் கதறி அழுதாள் மனைவி. வெளியில் பலரது குரல் கேட்டது. மெதுவாக வெளியே வந்தான் சீனு. அவன் வீட்டையும் கடையையும் சுற்றி , வளைத்து வளைத்து கிருமி நாசினியை ஸ்பிரே செய்து கொண்டு இருந்தார்கள் சகாதாரத் துறையினர் , கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அடைக்க தகர சீட்டுகள் வந்து இறங்கின. அதற்குள் அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வந்துவிட்டது .


பாதுகாப்பு கவச உடையுடன் மூன்று பேர் இருந்து இறங்கினார்கள். சீனுவை பார்த்து 'யாரும் பயப்பட வேண்டாம் பதினஞ்சு நாளில் குணப்படுத்தி விடுவோம் . என்ன இன்னும் இரண்டு மாசத்துக்கு கடை தான் திறக்க முடியாது' என்றார் அதில் ஒருவர் . ஆம்புலன்ஸ் புறப்பட்டது தெருவே பயத்துடன் வேடிக்கை பார்த்தது, அதே வேளையில் பக்கத்து தெருவில் மூன்று மாதமாக மூடி வைத்து இருந்த கடையை திறக்க ஆயத்தமாகி கொண்டு இருந்தார் அந்த இரண்டாவது மளிகை கடைக்காரர் .


ஜெ.மாரிமுத்து 

1 கருத்துகள்

  1. தென்றலின் தேர்ந்த படைப்புகளிலேயே இது ஆகச்சிறந்த சிறுகதை..!

    பதிலளிநீக்கு
புதியது பழையவை