அண்மை

கொள்ளை நோய் இல்லாத உலகம் படைப்போம் - கட்டுரை

 கொள்ளை நோய் இல்லாத உலகம் படைப்போம்

எதையும் அழிப்பது எளிது, காப்பது கடினம் படைப்பது மிகச்சிரமம் அதுவும் உலகத்தை படைப்பது என்பது ஒரு விரலால் கட்டுரை எழுதுவது போன்றது ஆனால் முடியாதது அல்ல இன்று நாம் அறிவியல் உலகத்தை படைத்து விட்டோம். காக்க தவறினோம். அழிய தொடங்கிவிட்டது அறிவியல் அல்ல மனிதர்கள். எல்லோரும் ஒன்றினை புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் ஏன் வந்தது? எங்கிருந்து வந்தது? என்ற பேச்சுகளை நிறுத்த வேண்டும். கொடிய பல நோய்களிலிருந்து நம்மை எப்படி தற்காத்து கொள்வது பிறரை எப்படி பாதுகாப்பது, இது போன்ற கொள்ளை நோய்களை எப்படி அழிப்பது? என்பதை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்.


corona free world
Copyright free image from PIXABAY


மூன்று நூற்றாண்டாக இது போன்ற கொள்ளை நோய்கள் மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது. அதற்கு முன்னும் இந்த நோய்கள் இருந்துள்ளது. ஆனால் எத்தனையோ பல கட்டுபாடுகளால் அதனை கட்டுக்குள் வைத்தருந்தனர் நம் முன்னோர்கள். இன்று அதனை நாம் மூடநம்பிக்கைகள் என்கிறோம். வாசலில் சாணி தெளித்து கோலமிடுவது. மஞ்சள் நீரை மேல் அடித்து விளையாடுவது. குடமுழுக்கு காலத்தில் வேப்பிலை மாவிலை தோரணங்கள் கட்டுவது. வீட்டு முற்றங்களில் துளசி செடிகள் வளர்ப்பது போன்ற பல விஷயங்கள் நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதற்காகவே. அப்படி நோய்கள் வந்து விட்டாலும் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டும் தன்னை யாரும் சந்திக்க வரக்கூடாது என்பதற்காக வாயிலில் வேப்பிலை தோரணமும் கரி கோலமும் போட்டு உன்னதமான வாழ்க்கையை நம் முன்னோர்கள் வாழ்ந்தனர். அவர்கள் எடுத்து கொள்ளும் உணவு முறை உடம்பினை குணப்படுத்தி அத்தோடு மட்டுமில்லாமல் தனித்திருப்பதன் காரணமாக பரவாமல் அந்நோய் அழிகிறது.

இன்று உலகமெங்கிலும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது. லட்சோப லட்ச மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தற்காத்து கொள்ளும் கட்டத்தை கடந்து விட்டோம். இன்று நமக்கு மருந்தோடு மனஉறுதியும் வேண்டும். முதலில் இந்த நாட்டவரால் வந்தது, இந்த மதத்தவரால் பரவியது என்று குற்றம் கண்டறியும் பேச்சுகளை விட்டொழிக்க வேண்டும். இது நம் மன நிம்மதியை தான் கெடுக்கும். இரண்டாவது வீண் பொய்களை விட வேண்டும் பொய்யினால் நற்விளைவு ஏற்படுமாயின் அந்த பொய்யினை சொல்வதில் தவறில்லை. எடுத்துகாட்டாக ஒரு சிறுவனிடம் 'பொய் சொன்னால் சாமி கண்ணை குத்தும்' என்ற பொய்யின் மூலம் அவனின் பொய் சொல்லும் குணத்தை நிறுத்த முடியும். அதுபோலவே இந்த வைரஸ் விஷயத்தில் செய்வது தவறொன்றும் இல்லை. அதே சமயத்தில் நாம் பீதி அடைய கூடாது. தவறான செய்திகளை ( வதந்தி ) பரப்பவும் கூடாது. இந்த நோய்க்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கபடவில்லை அது வரையில் மன உறுதி தான் நம் மருந்து. கொரோனா கொல்லும் நோய் அல்ல கொல்ல பட வேண்டிய நோய் அதை எதிர்க்கும் சக்தி எல்லோரிடத்திலும் உள்ளது. 103 வயது மூதாட்டி கூட தன் நம்பிக்கையாலும் மருத்துவர்களின் உதவியினாலும் கொரோனாவை வெற்றி கண்டுள்ளார்.

மனிதனுக்கு இன்னல்கள் வருவது இயற்கை. அன்று போலியோ சொட்டு மருந்து இல்லை குழந்தைகள் ஊனமும் இல்லை இடையில் வந்த நோய் தான் அது ஆனால் அதிலிருந்து சொட்டுமருந்து எடுக்காத குழந்தைக்கு சரியான கைகளில்லை கால்களில்லை. இது போன்று புதிதாக தோன்றிய நோய்கள் ஏராளம். பல நோய்களுக்கு நாம் மருந்து கண்டறிந்து விட்டோம், சில நோய்களை துரத்தி அடித்து விட்டோம். நோய்களின் உலகிற்கு புதிய வரவு இந்த கொரோனா. மருந்து இன்னும் இல்லாத இந்நோய்க்கு மன உறுதி மட்டும் தான் மருந்தா? என்று கேட்டால் . மன உறுதியோடு கொஞ்சம் உடல் உறுதியும் வேண்டும். உடலின் உள் சென்ற கிருமிகளை எதிர்க்கும் அளவிற்கு நமக்கு எதிர்ப்பு சக்தியும் தேவை. எதிர்ப்பு சக்திக்கு? நல்ல ஆரோக்கியமான உணவு முறை வேண்டும். எடுத்துகாட்டாக சாதாரணமாக உட்கொள்ளும் உணவுகளோடு சிறுதானிய வகைகளையும், வைட்டமின் சி நிறைந்த அமில வகை பழங்களையும் எடுத்துகொள்ள வேண்டும்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று.        - 941

என்கிறார் வள்ளுவர். வாதம், பித்தம்,கபம் ஆகியவை சமநிலையில் இல்லாத போதே நோயானது நம்மை தாக்குகிறது. இதில் கபம் என்பது நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய். கபம் என்றால் மார்புசளி என்று பொருள் அதனால் தான் கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்ள கபசுர குடிநீர் கசாயத்தினை அருந்த சொல்கின்றனர்.

சூரியன் உதிப்பதையும் மறைவதையும் சந்திரன் வளர்வதையும் தேய்வதையும் நம்மால் தடுக்க முடியாது. அது போன்று தான் உயிர்களுக்கு ஏற்படும் நோய்களும் அழிக்க அழிக்க புதிதாய் வந்து கொண்டே தான் இருக்கும். வாழ்க்கையில் வளர்ந்த களைகள் இவை. பிடுங்கி பயன் இல்லை. நாம் அனுபவிக்க தான் வேண்டும். கொள்ளை நோய்கள் இல்லாத உலகத்தினை படைப்பது கடினம் ஆனால் பாதுகாக்கலாம்.


-தீசன்

                                                                    

கருத்துரையிடுக

புதியது பழையவை