நினைவில் வந்தவள்
பதிநான்கு வயதில் இந்த தீவிற்கு வந்ததாக ஞாபகம், இன்று எனக்கு இருபது வயதாகி இருக்கலாம். முகத்தில் வளரும் தாடியையும் மீசையையும் வைத்து நான் தோராயமாக சொல்கிறேன். என் குழந்தை பருவம் கடந்து விட்டது. அம்மா அப்பாவோடு இருக்கும் ஆனந்த காலங்கள் அழிந்துவிட்டது. இந்நேரம் என்னை அவர்கள் மறந்திருப்பார்கள்.
நான்கு பக்கமும் நீலம். ஆரம்பத்தில் காலை முழுதும் கத்திக் கொண்டே இருப்பேன். போகப்போக இவை வீணென்று புரிந்து கொண்டேன். இத்தனை ஆண்டு கடந்தும் இந்த தீவருகில் ஒரு படகு கூட வந்தது கிடையாது. பறவைகளை சில சமயம் பார்ப்பதுண்டு. கழுகுகள் நான் எப்போது சாவேன் எனக் காத்திருக்கும். நான் சாகும் நேரம் வந்துவிட்டது. ஆம் நான் மடியப் போகிறேன். இங்குள்ள மரஞ் செடி கொடி தயவினால் உயிரைப் பிடித்து வைத்திருந்தேன். இப்போது இந்த தீவு முழுதும் மண் மட்டுந்தான் சூழ உள்ளது. எல்லாம் அந்த பாழும் புயலின் வேலை. நான் இங்கு வந்து சிக்கிய போது இரவெல்லாம் நடுங்குவேன். ஆந்தை அலறும் போதெல்லாம் இதயமே வெடிப்பது போலிருக்கும். நீங்கள் பயத்தை எதிர்த்தது உண்டா? நான் செய்துள்ளேன். தனிமை எனக்கந்த சக்தியை தந்தது. பயத்தைக் கண்டு சிரிக்கத் தொடங்கினேன். ஆந்தை அலறல் கேட்டால் போதும் கைகள் ரெண்டும் கல்லைத் தேடும். பலமுறை சாப்பிட்டதும் உண்டு. நான் வாழ உணவு தேவை. இலையோ பழமோ காயோ பூச்சோ அணிலோ எலியோ எதுவோ வேண்டும். இங்கு வேறேதும் கிடைப்பதில்லை. ஆனால் இப்போது இங்கு எதுவுமே இல்லை. என் தலை மயிர் இடுப்பைத் தாண்டியுள்ளது. கடல் மண்ணிலே படுத்திருப்பதால் தலையிலும் உடலிலும் அரிப்பு தாங்க முடியவில்லை. இங்கு வந்தபோது நான் போட்டிருந்த சட்டையை பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். இப்போது அது எனக்கு பொருந்தவில்லை. வந்த முதல் வருடம் மிகுந்த சிரமப்பட்டேன். சின்ன காற்றடித்தாலும் தேகம் சிலிர்க்கும். இரவு தென்னை மர ஓலைகளின் உறசல் உறங்கவிடாது. நான் பயித்தியமாகி விட்டோனென்றே தோன்றுகிறது. இந்த தீவில் என்னோடு சேர்ந்து இன்னொரு பெண் இருக்கிறாள். இது நாள் வரையில் என்னோடு அவள் பேசியது கிடையாது. ஊமை என்றே நினைக்கிறேன். நான் வந்த போது அவள் எப்படி இருந்தாளோ இப்போதும் அவள் அப்படியே இருக்கிறாள். பகலையும் இருளாக எண்ணி நடுங்கி கொண்டிருந்த எனக்கு இருளையும் பகலாக மாற்றி தேற்றியவள் அவள் தான். அவளும் நானும் ஆடிப் பாடி விளையாடியுள்ளோம். நான் ஏதாவது சிரிப்பாக சொன்னால் அவள் தன் கரங்களை உதட்டில் வைத்து மெல்லச் நகுவாள். இந்த தீவில் ஆரம்பத்தில் எத்தனையோ ரம்மியமான காட்சியிருக்கும் ஆனால் அவள் என்னை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பாள். இதோ இப்போது கூட என் எதிரே அமர்ந்திருக்கும் அவள் என்னையே பார்த்து கொண்டுள்ளாள். நீ யார்? என்னைப் போல் நீயும் இந்த தீவில் மாட்டிக் கொண்டாயா? நீயும் அலைகளில் சிக்கிக் கொண்டாயா? என்று கேட்கும் போதெல்லாம் இங்கிருந்து சென்றிடுவாள். நானும் எங்கே அவளென்று இந்த தீவு முழுதும் தேடிப் பார்ப்பேன், இருக்கமாட்டாள். இரவு வந்த உடனே எங்கிருந்தோ ஓடி வந்து என்னெதிரே அமர்ந்து கொள்வாள். ஒருமுறை என் கரங்களைப் பிடித்து தீவின் நடுவே அழைத்துச் சென்று ஒவ்வொரு மரமாகக் காட்டினாள். நானும் அதிலிருந்து காய்களையெல்லாம் பறித்துக் கொண்டேன். இலைகளையெல்லாம் எடுத்துக் கொண்டேன். அதற்கு அடுத்த நான்கு நாள் கடுமையான மழைப் பிடித்தது. எந்த பிரச்சனை வந்தாலும் என்னை பரிந்து காத்த அவளால் இந்த கொடும் புயலுக்கு முன் அழ மட்டுந்தான் முடிந்தது. எத்தனை கொடுமையான காலம் இது ஆனால் அதையும் எனக்கு இனிமையாக்கியவள் அவள் தான். இங்கிருந்த நூறு தென்னை மரங்கள் என் பசியையும் தாகத்தையும் தீர்த்தது. இன்று நான் முடியப் போகிறேன். என் தோள் மீது கைவைத்து அருகில் உட்காந்திருக்கும் இவள் யார்? இவள் பெயரென்ன? எதுவுமே எனக்கு தெரியாது. இவள் உண்மையா இல்லை என் பிரமையா தெரியவில்லை. ஆனால் என் வாழ்வின் எழுத்துகளில் உண்மையாகிவிட்டாள். எனக்கு மூச்சு விடுவதில் சிரமமாக உள்ளது. என் தலையைத் தவிர மற்ற அங்கங்கள் மரத்து போவதை உணரமுடிகிறது. இதோ போகப் போகிறேன். இப்போதும் அவள் என்னையே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள். அவளின் மெல்லிய விரல்கள் என் காய்ந்த கரத்தோடு கோர்கிறது. ஆஹா.. நான் சென்று விட்டேன். கீழேயிருக்கும் என் உடல் என் கண்களுக்கு தெரிகிறது. அவளின் மடியில் என் தலை இருக்கிறது. மண்படிந்த என் கன்னத்தில் அவளின் இதழ் படுகிறது. கண்களில் கண்ணீருடன் மேலே செல்லும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவளும் மறைந்து விட்டாள். நினைவில் வந்தவள் நினைவாகவே சென்று விட்டாள்.
ரஷ்ய நாவல்களிலும்...
பதிலளிநீக்குபாரசீக பனுவல்களிலும்... சூஃபி - ஜென்இலக்கியங்களிலும் கிட்டாத
ரசவாத உணர்வுகளை சில அதிகாலை கனவுகளில் கண்டிருக்கிறேன்.. அடுத்தது இந்த கதையில்தான்...
உயர் ரக படைப்பு...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு