அண்மை

பள்ளிகளில் பரப்பப்படுகின்றதா சாதிய உணர்வுகள்? - ப சுர்ஜித்

"சாதிகள் இல்லையடி பாப்பா” என்றார் பாரதியார். ஆனால் இன்றைய சமூகமோ பாரதி என்பவரையே எந்த சாதி என்று பார்க்கின்றது. இன்றைய சமுதாயத்தில் ஒரு மனிதன் ஒரு துறையில் சாதிக்கிறான் என்றால்,  இந்த சமூகம் அவனது திறமையை பார்ப்பது இல்லை, பாராட்டுவதில்லை. முதலில் அவனது சாதியைத்தான் பார்க்கிறது. சாதித்த அந்த மனிதன் நம்முடைய சாதியா எனப் பார்க்கிறது. இருந்தால் மட்டுமே அவனை பாராட்டுகிறது. இப்படி ஒரு சமூக அவலம் இந்த நாட்டில் இருக்கும் வரை நமது இந்திய நாடு வல்லரசு ஆகுமா? என்ற பெரும் கேள்வி எழுகிறது. நம்முடைய நாட்டில் எத்தனையோ அரசியல் தலைவர்களும், சுதந்திர போராட்ட வீரர்களும் உள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் தங்களுடைய சாதியை காரணம் காட்டி ஒரு போதும் தங்களை உயர்த்திக் கொண்டது இல்லை. ஆனால் மற்றவர்களோ அந்த தலைவரை எந்த சாதி என்று கண்டறிந்து, அவரை தங்களுடைய “சாதியின் விடிவெள்ளி" என்று பிரச்சாரம் செய்கின்றனர். சரி, இது ஒருபுறம் இருக்க இதுபோன்ற சாதிய ரீதியிலான செயல்கள் பள்ளிகளில் எழுகின்றனவா? என்பது ஒரு பெரிய கேள்வியாக அமைந்துள்ளது. 


School student

ஒரு மாணவன் பள்ளியில் சேரும் போதே, அவனது ஆசிரியர் வருகை பதிவேட்டில் எழுதுவதற்காக, ஒவ்வொரு மாணவனாக உனது, அப்பா, அம்மா பெயர் என்ன? என்று கேட்டு எழுதுகிறார். அப்போது உன்னுடைய சாதி என்ன? என்றும், கேட்டு எழுதுகிறார். இச்செயலில் அந்த மாணவனின் சாதி வெளிப்படுகிறது. ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியில் அதிக அளவில் உயர்த்தப்பட்ட சாதியினர் படிக்கும் போது, ஒரு தலித் எழுந்து நின்று தன்னுடைய சாதிப் பெயரை சொல்ல எப்படி மனம் வரும். அல்லது ஒரு பள்ளியில் தாழ்த்தப்பட்டோர் அதிக அளவில் படிக்கின்ற போது அங்கு ஒரு உயர்த்தப்பட்ட சாதியினர் தன்னுடைய சாதியை எப்படி வெளியே சொல்வார். இந்த சாதி என்ற ஒரு கொடிய பொருள் பள்ளிகளில் மாணவர்கள் இடையே உள்ள ஒற்றுமையே நிலைக்குலைய செய்கிறது. இந்த அவலநிலை ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம், 

ஒரு பள்ளியில் படிக்கும் மாணவனின் தந்தை ஒரு சாதி ரீதியிலான ஒரு அமைப்பில் இருக்கும் போது, அவர் தன்னுடைய சாதியை வெளிக்காட்டுவதற்காக தான் சார்ந்து இருக்கும் சாதிய அமைப்பின் நிறத்தை தனது கையில் கயிறாக கட்டுவார். அதை பார்த்த அவனது மகன் ஏன் இப்படி இந்த நிறங்களில் கையில் கயிறு கட்டுகிறீர்கள் என்று கேட்க, அவனது தந்தை தன்னைப் பற்றியும், தன்னுடைய சாதியைப் பற்றியும் நாம் இப்படித்தான் என்று சாதிய அமைப்பினைப் பற்றியும் பெருமையாக சொல்லிக் கொடுக்க, அதை பின்பற்றியே அவரது மகனும் , கையில் தனது சாதியை குறிப்பது போன்ற கயிற்றை கட்டிக் கொண்டு பள்ளிக்கு வருகிறான். அவனது சக நண்பர்கள் இந்த நிறக் கயிற்றை பற்றி விளக்கம் கேட்க, தனது தந்தை கூறியவற்றை எல்லாம் அப்படியே கூறுகிறான். அதை கேட்ட அவனது நண்பர்களும் தங்களுடைய சாதியைக் குறிக்கும் வகையில் கையில் கயிற்றை கட்டி தங்களுடைய சாதியை குறிக்கும் வகையில் நடந்து கொள்ளும் போது அவனது பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவனும் தன்னுடைய சாதியை குறிப்பது போன்று , கயிறு கட்டி சாதிய குறியீடுகளைக் காட்டிக் கொண்டு பள்ளிக்கும் வரும்போது, அதைப் பார்த்த மற்ற சமூகத்து மாணவர்கள் அவனை அடிக்க, அவன் வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து அவர்களை அடிக்க, இப்படியும் பள்ளிகளில் சாதிய உணர்வுகளை தூண்டி அமைதியை கெடுக்கின்றன. ஒழுக்கமும், பண்பாடும், கல்வியும் கற்றுத்தர வேண்டிய ஒரு பள்ளியில் இப்படிப்பட்ட பல சாதிய உணர்வுகள் மாணவர்களின் மத்தியில் பரப்பப்படுகிறது. இது வளர்ந்து வரும் நம் நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளன. 

பள்ளிகளில் ஆசிரியர் மாணவர்களின் சாதியை, பொது இடமான வகுப்பறையில் வைத்து மாணவர்களின் முன்னிலையில் கேட்பதை மாற்ற வேண்டும். மேலும், சாதி ரீதியிலான பிரச்சனைகளை தூண்டும் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் தங்களுடைய சாதியை குறிக்கும் வகையில் எந்த ஒரு செயலை செய்தாலும், அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும். 

வெறும் புத்தகத்தின் முதல் பகுதியில் மட்டும் தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,  தீண்டாமை ஒரு மனித நேயமற்ற செயல் என்று மட்டும் செல்லவிடாமல், அவற்றை பற்றிய விளக்கத்தையும் அவற்றின் தீமைகள் பற்றிய உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும். 

பள்ளிகளில் முதன் முதலில் குழந்தைகளை சேர்க்கும் போது சாதி கேட்பது ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் எதிர்காலத்தில் கல்வி மற்றும் அரசு நிறுவனங்களில் இட ஒதுக்கீடு மூலம் வாய்ப்பு பெற்று சமூகத்தில் உயர்வு பெறுவதற்காக மட்டுமே என்ற புரிதல் வேண்டும். 

சாதியம் தகர்ப்போம், மனிதம் வளர்ப்போம்.


-ப சுர்ஜித், திருவாரூர்

கருத்துரையிடுக

புதியது பழையவை