அண்மை

தங்கச்சங்கிலி - சிறுகதை

தங்கச்சங்கிலி

தங்கச்சங்கிலி - சிறுகதை


கும்பகோணத்தை நோக்கிப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த கொரானா காலத்திலும் பேருந்து நிரம்பி வழிந்தது. காரணம் அன்றைய தினம் தை மாதத்தின் முக்கிய திருமண நாள். சரவணன் எப்படியோ மனைவி கவிதாவிற்கு ஒரு இடம் பிடித்து உட்கார வைத்துவிட்டான். அவர்களும் ஒரு திருமணத்திற்கு தான் செல்கிறார்கள். காட்டூர் தாண்டி இருக்கும்.


'என்னங்க! என் கழுத்தில் இருந்த செயினை காணுங்க' 


கவிதா தான் கூச்சலிட்டாள். பகீரென்றது சரவணனுக்கு. அவர்கள் வீட்டில் தங்கம் என்று இருப்பது அந்த 5 பவுன் செயின் மட்டுந்தான். கல்யாணத்தின் போது அவள் போட்டு வந்தது தான். அவள் போட்ட சத்தத்தில் கன்டக்டர் விசில் ஊதும் முன்பே பேருந்தை நிறுத்தி விட்டார் டிரைவர்.


'என் பக்கத்தில் இரண்டு பேர் உட்காந்து இருந்தாங்க, அதுல ஒருத்தி காட்டூரில் இறங்கி விட்டாள். அவள் தான் எடுத்து இருக்கனும்' என்றாள் கவிதா.


'யாரும் பஸ்ஸை விட்டு இறங்காதீங்க! யாராச்சும் எடுத்து இருந்தா கீழே வாச்சும் அதை போட்டுடுங்க! இல்லேன்னா போலிஸ் ஸ்டேசன் தான் வண்டி போகும். அங்க அவங்க செக் பண்ணி கண்டுபுடிச்சா கேஸூம் போடுவாங்க! மானமும் போய்விடும். நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்' என்றார் கன்டக்டர்.


நான் கும்பகோணத்திற்கு 10 மணிக்கு வேலைக்கு போக வேண்டும். என்ன செக் பண்ணிட்டு உடனே விடுங்க, நான் வேறு பஸ்ஸில போய்க் கொள்கிறேன். என்றான் ஒரு இளைஞன். அதற்கும் கன்டக்டர் அனுமதி கொடுக்கவில்லை.


கவிதா அருகில் இருந்த பெண்ணை உற்று பார்த்த கன்டக்டர்


ஏம்மா நீங்க திருக்கன்னமங்கைக்கு ரெண்டு டிக்கெட்டுல எடுத்தீங்க. உங்க கூட வந்த அந்த பெண் எங்கே என்று கேட்டார்.


அவள் என் தோழி தான். பெருமாள் கோவிலுக்கு போகலாம் என்று நான் தான் இரண்டு டிக்கெட் எடுத்தேன். ஆனால் அவள் வரவில்லை என்று அவள் ஊரான காட்டூரிலேயே இறங்கிவிட்டாள். அவள் அப்படிபட்டவள் கிடையாது.


வேணும்னா போன் போட்டு தரேன். நீங்களே பேசுங்க என்றாள். போனும் போட்டாள். ரிங்தான் போனது. அவள் எடுக்கவேயில்லை. அவள் போன் நெம்பரை குறித்து வாங்கிக் கொண்ட கன்டக்டர் பேருந்தை வேறு வழியில்லாமல் குடவாசல் போலிஸ் ஸ்டேஷனுக்கு போகும்படி டிரைவருக்கு சொன்னார்.


குடவாசல் காவல் நிலையம்.


பேருந்துக்குள் 60 பேர் என்றால். பேருந்தைச் சுற்றி 200 பேர் கூடிவிட்டார்கள். ஆண் போலிஸ் பெண் போலிஸ் எல்லாம் சேர்ந்து அக்கு வேறு ஆனி வேறு என எல்லோரையும் சோதித்துப் பார்த்துவிட்டார்கள். ஒரு தூசி விடாமல் பேருந்தை கூட்டி பெருக்கிப் பார்த்துவிட்டார்கள்.


செயின் கிடைக்கவில்லை. பேருந்து புறப்பட்ட பிறகும் சரவணனும் கவிதாவும் போலிஸ் ஸ்டேஷனிலே உட்கார்ந்து விட்டார்கள்.


கவிதா புலம்பிக் கொண்டே இருந்தாள். 


அறிவே இருக்காதா உனக்கு! அப்படி என்ன சொரணைக் கெட்டு உட்காந்து இருந்த என சரவணனும் அவளை சொல்லால் தாக்கிக் கொண்டே வந்தான்.


ஸ்டேஷனில் ஒரு புகார் எழுதி வாங்கிக் கொண்டார்கள்.


ஒரு மணி நேரமாக கவிதா அழுகையை நிறுத்தவில்லை. எப்படியும் கண்டுபிடித்திடுவோம் அழாதே அம்மா என்றார் இன்ஸ்பெக்டர்.


கல்யாணத்துக்கு போக வேண்டும் என்ற உடனேயே ஆயிரம் குறைவில்லாது காலியாகிவிடும் என்று கணக்கு போட்டான் சரவணன், இன்று முழுதாக 2 லட்சத்தை இழந்து விட்டு நிற்கிறான்.


மீண்டும் திருவாரூர்க்கு பஸ் ஏறி நடை பிணமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். கதவைத் திறந்த கவிதா அழுது அழுது வீங்கிய முகத்தோடு அறைக்குள் சென்றாள்.


அங்கு நிலைக் கண்ணாடியைப் பார்த்தவள் திடுக்கிட்டாள். காலையில் முகத்துக்கு பவுடர் போட்டு கண்ணாடியைப் பார்த்த போது கழுத்து பக்கம் கருப்பாக இருக்கவே, செயினைக் கழட்டி டிரேயில் வைத்து விட்டு கழுத்துக்கு பவுடர் அடித்தவள் மீண்டும் செயினை மாட்டவே இல்லை.


செயின் அங்கு தான் இருந்தது.


ஆனந்தத்தில் வார்த்தைகள் வரவில்லை. செயினோடு கணவனிடம் ஓடினாள். அவளது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. புதிதாக ஒரு செயின் செய்தது போன்று மகிழ்ச்சி அவளுக்கு ஏற்பட்டது.


அப்போது செல்போன் ஒலித்தது. சரவணன் தான் எடுத்தான். மறுமுனையில் இன்ஸ்பெக்டர் தான் பேசினார்.


'உடனே கிளம்பி வாங்க அக்யூஸ்டை பிடித்து விட்டோம். நீங்க நேரில் பார்த்து கன்பார்ம் பண்ணிட்டா, அரெஸ்ட் பண்ணிடலாம்' என்றார்.


-ஜெ மாரிமுத்து

2 கருத்துகள்

புதியது பழையவை