அண்மை

வளமான இந்தியாவை உருவாக்குவோம்

வளமான இந்தியாவை உருவாக்குவோம்



என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்


நம்மில் பலருக்கு தெரிவதில்லை. உலகில் வேறு எந்த நாட்டிலும் விளையாத பொருட்கள் நம் இந்திய மண்ணில் விளைகிறது. 


கிரேக்கர்களும் ரோமானியர்களும் நம்மிடையே தங்கத்தினை கொடுத்து மிளகினை வாங்கிச் சென்றனர் அன்று. அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு அழகான பட்டாடைகளை நெய்தளித்தனர் நம் மக்கள். பிறநாட்டார் யானையை கண்டு நடுங்கி ஓடிய போதே அதைக் காட்டிலிருந்து பிடித்து வந்து வீட்டு விலங்காய் வளர்க்கத் தொடங்கினர். போர்களில் யானைகளை கூட்டங்கூட்டமாய் பயன்படுத்திய முதல் வீரன் ஓர் இந்தியன். 



இந்திய மண்ணில் விளைவிக்க முடியாத பொருட்களே இல்லை. நெல் மணி முதல் ராக்கெட் வரை நம் மண்ணில் விளைகிறது. இருந்தும் நாம் இன்னொரு நாட்டின் உதவியை நாடவேண்டியுள்ளது. 


ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ரூபாய் செலவில் 100 யூனிட் மின்சாரம் தரக்கூடிய சக்தி நம் பாரதத்திற்கு உண்டு. ஆனால் அந்த மின்சாரத்தை சேர்த்து வைக்க கூடிய சக்தி நம்மிடம் இல்லை. 


வளரும் நாடுகளின் பட்டியலில் சீனா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை போன்ற சிறு நாடுகளை விடவும் இந்தியா கீழே உள்ளது. குற்றங்களுக்கும் பஞ்சமில்லை. 


கலாம் ஐயாவின் கனவு கனவாகவே நிகழ்ந்து கொண்டு வருகிறது. அதனை மாற்ற நாட்டின் வளர்ச்சியினை ஏற்ற வளமான இந்தியாவினை உருவாக்கும் விழிப்புணர்வினை பற்றி இக்கட்டுரையில் காண்போம்


அன்று, "கடை கோடி கிராமங்களின் வாழ்வு தான் இந்தியாவின் வாழ்வு" என்றார் மகாத்மா காந்தி. கிராமப்புற நிலங்களை அழித்து, கழிவு வெளியேற்றும் நிறுவனத்தை அமைத்து, இளைஞர்களுக்கு வேலையை கொடுத்து இந்தியாவை முன்னேற சொல்லவில்லை அவர். காந்தி என்ன சொன்னார் என்பதை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே ஔவைப்பாட்டி கூறிவிட்டார்


"வரப்புயர நீர் உயரும்


 நீர் உயர நெல் உயரும்


நெல் உயர குடி உயரும்


குடி உயர கோல் உயரும்


கோல் உயர கோன் உயர்வான்"



இப்போது பாட்டிக் கூறியதையும் தாத்தா கூறியதையும் படிக்கும் போது "விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலுப்பு" என்பது நினைவிற்கு வரும். 



நன்கு படித்த இளைஞர்களும் வேளாண்மையை மேம்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் இதற்கு துணை நிற்கும். ஒர் ஏக்கருக்கு ஒரு லட்சம் முதல் லாபம் கிடைக்கும் செயற்கை விவசாயத்தில், ஆனால் நம் பாரம்பரிய இயற்கை விவசாயம் 5 லட்சம் வரை லாபந்தரும் உடலுக்கும் நன்மை தரும். 



இதற்கெல்லாம் பருவ மாற்றம் தடையாக இருக்குமே என்றால், மிக மிக குறைந்த நீரினைக் கொண்டு விளையக் கூடிய வளம் பொருந்திய வித்துக்கள் நம் பாரதத்தில் உண்டு என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். 


சீனாவின் மொத்த நிலப்பரப்பில் விவசாய நிலம் மட்டும் 54.8%. இந்தியாவிலோ விவசாய நிலம் 60.5%, ஆனால் சீனா விவசாயத்தால் ஈட்டக் கூடிய வருமானம் 68 லட்சம் கோடி. நாமோ 24 லட்சம் கோடி. அதிக நிலப்பரப்பு இருந்தும் நாம் நட்டம் அடைவதே அதிகம் ஏன் என்றால் இந்தியாவின் பருவ கால மாற்றத்தை அறியாமல் பழைய முறையில் விவசாயம் செய்பவர்களே இங்கு அதிகம். 


பொழுதுபோக்குத்துறையில் அசுர வளர்ச்சி காட்டும் மின்னணு சாதனங்கள் விவசாயத்துறையில் நத்தையை காட்டிலும் மெதுவாக நகர்கிறது. வேளாண் கல்வி படித்தோரும் நேரடி விவசாயத்தில் ஈடுபடாதது மூலக்காரணம். ஏர் உழுவதற்கு மாட்டுக்கு பதில் டிராக்டர் பயன்படுத்திய அன்றே நம் கிராம வளர்ச்சி தடைப்பட்டுவிட்டது.



நெஞ்சு பொருக்குதில்லையே இந்த  நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்



என்றார் மகாகவி. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சியும் காரணமாகிறது. அந்த வளர்ச்சி அவன் நடத்தையிலும் ஒழுக்கத்திலும் உள்ளது.


உதாரணமாக நெகிழிப்பைகளை தமிழக அரசு தடை செய்துள்ளது. இருந்தாலும் நெகிழிப்பை இல்லையெனில் பொருள் வேண்டாம் என சொல்லும் நுகர்வோரும் உண்டு. தன் பொருட்களை விற்பதற்காக மறைமுகமாக அந்த நெகிழியை கொடுக்கும் கடைகளும் உண்டு. 


இங்கு அரசாங்கத்தை குறை கூற முடியாது. தனி மனித ஒழுக்கம் இல்லை. ஒருவன் செய்யும் குற்றத்திற்காக நாட்டின் வளர்ச்சியும் இயற்கை வளமும் பாதிக்கப்படுகிறது. மட்கும் குப்பை மட்காத குப்பை பிரித்து போடச் சொன்னால் மட்கும் குப்பைகளை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து குப்பை தொட்டியில் போடுகின்றனர். மக்களுக்கு பிளாஸ்டிக் ஒரு மட்காத குப்பை என்று தெரியாதா என்ன? நாட்டின் நலனின் மீது அக்கறை இல்லை. 


பொது இடங்களிலும் பேருந்தின் உள்லிருந்தும் கோவில்களிலும் சாலைகளிலும் கொஞ்சம் கூட யோசிக்காமல் எச்சில் துப்பும் எருமைகள் பலருண்டு. அவர்களுக்கு என்ன சொன்னாலும் உறைக்காது. 


குடிநீர் குழாயிலிருந்தே வீட்டுக்கு தேவையான மொத்த நீரையும் பிடித்துக்கொள்ளும் குடும்பங்களுண்டு. 


வீட்டின் கழிவு நீரை சாலைச் சாக்கடையில் திருப்பி விடும் குடும்பங்களுண்டு. 


இரவு முழுதும் தெருவோரம் படுத்துக்கொண்டு சீட்டாடி சிகரெட் பிடித்து மதுவருந்தி அந்த பாட்டில்களை அங்கேயே உடைத்து போட்டுச் செல்லும் அயோக்கியர்கள் உண்டு. 


இதில் கொலை, கொள்ளை, கற்பழிப்பென்று குற்றங்களுக்கு பஞ்சமே இல்லை நம் பாரதத்தில். 


இவைகளால் நாட்டிற்கு என்ன பின்னடைவு? என்று நீங்கள் நினைத்தால். "ஒருவன் செய்யும் குற்றமானது அவனையும் அவன் உடலையும் மட்டும் பாதிக்குமானால் நாட்டின் வளர்ச்சிக்கு ஒருவித பாதிப்பும் இருக்காது, ஆனால் அவனது குற்றம் பிறரையும் பிறரின் உழைப்பையும் பொது சொத்தையும் கெடுக்கும் விதமாக இருப்பின் நிச்சயமாக நாட்டின் வளர்ச்சியினை பாதிக்கும்.


விழிப்புணர்வெல்லாம் விழிக்கும் உணர்வு உள்ளவர்களுக்கு மட்டுமே. இவற்றை பள்ளி மாணவர்களிடம் மிக எளிதில் சேர்த்து விடமுடியும். 


உதாரணமாக ஒரு மாணவனின் தந்தை மதுவினாலும் புகையினாலும் நோய்வாய் பட்டு படுக்கையிலே கஷ்டப்பட்டு இறந்த பிறகு தனிமையில் அவன் தாய் படும் கஷ்டங்களை நேரே பார்த்திருந்தான் எனில் அவன் நிச்சயமாக மதுவையும் புகையையும் தொடமாட்டான். 


இருபது வயதிற்குள் ஒருவன் ஒர் செயலுக்கு அடிமையாகி விட்டான் எனில் அவனை மாற்றுவது கடினம். அது நற்செயலாகவும் இருக்கலாம். 


வல்லரசு நாடான ஜப்பானில் ஐந்தாம் வகுப்பு வரையில் வாழ்க்கை கல்வியைத்தான் பாடமாக்குகின்றனர். புத்தக கல்வி இல்லை. அதில் விவசாயமும் உண்டு. 


இந்தியாவிலும் மாணவர்களுக்கு விவசாயத்தை புத்தக கல்வியாக அல்லாமல் அனுபவ கல்வியாக பாடமாக்க வேண்டும். தனக்கு தேவையான உணவை தானே உற்பத்தி செய்து கொள்பவனுக்கு வறுமை ஏது? 


விவசாயத்திற்கு வளர்ச்சி தருவதாக கூறி இயற்கையை பாழாக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளை தடை செய்ய வேண்டும். நகரத்தாரிடமிருந்து சேகரிக்கப்படும் மட்கும் குப்பைகளை இயற்கை எருவிற்காக மட்டும் பயன்படுத்தினால் நல்லது. 


இயற்கை விவசாயி மாத்திரை எழுதாத மருத்துவர் போல, பயிர்களுக்கு ஏற்படும் நோயினை இயற்கையாகவே குணப்படுத்திவிடுவார். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு இயற்கை விவசாயி இருந்தால் இந்திய வேளாண்மையே ஏற்றம் பெரும். இதனால் இந்தியாவே ஏற்றமடையும்.


அதனால் தான்,


நெல் உயர குடி உயரும் 


குடி உயர கோல் உயரும்" 


என்றார் ஔவையார்.


"ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது, குற்றம் செய்யும் அளவிற்கு சுதந்திரம் இல்லாமல் இருப்பது" என்றார் மகாத்மா. 


சாலையில்  எச்சில் துப்புவது முதல் குப்பை போடுவது வரை தண்டனைகள் இருக்க வேண்டும். தலைகவசம் அணியாதவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் என்ற பிறகு தானே இங்கு தலைகவச தலைகளை ரோடுகளில் பார்க்க முடிந்தது. 


பாரதியார் வாழ்ந்த காலத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி, இன்று 138 கோடி. மக்கள் தொகை அதிகமாகும் போது இடப்பற்றாக்குறை ஏற்படும். இதனால் நாட்டின் விவசாய நிலங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. 


நாம் இருவர் நமக்கு இருவர் காலம் முடிந்து விட்டது. 


நாம் இருவர் நமக்கு ஒருவர் காலம் நடந்து கொண்டிருந்தாலும் நாமே இருவர் நமக்கு ஏன் ஒருவர் என்ற நிலை வர அதிக காலம் இல்லை. 


அதனால் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மன அடக்கமும் முக்கியமாகிறது. இவைகளை நடைமுறைக்கு கொண்டுவர இவற்றை பள்ளி பயிலும் மாணவர்களின் பாடங்களில் புகுத்தினாலே போதுமானது.


எங்கள் நாட்டுக்கு எந்த நாடு ஈடு?


பேரின்ப ஞான வீடு


கங்கை யமுனை பொருநை காவேரியும் பாயும்


திங்கள் மும்மாரி பெய்து தீங்கனிகள்  ஈயும்"


என்றார் பாவேந்தர். இப்போது அவற்றின் வளங்கள் குறைந்திருந்தாலும் வித்துக்கள் அப்படியேத்தான் உள்ளது. 


"பார்க்க தெரிந்தால் பாதை தெரியும் பாதை தெரிந்தால் பயணம் தொடரும்" எனும் கண்ணதாசனின் வரிகளுக்கேற்ப இயற்கையோடு ஒன்றி உழைப்பையும் துணை கொண்ட பயணத்தை மேற்கொண்டால் நிச்சயமாக மீண்டும் நம் பாரதத்தினை வளம் பொருந்திய நாடாக மாற்றியமைக்கலாம். 


அன்று சுதந்திர இந்தியா ஒளிபடைத்த கண்ணினாய் உறுதி கொண்ட நெஞ்சினாய் வந்து கொண்டிருந்தது. இன்று அது வளமான இந்தியாவாக உருவெடுத்து வந்து கொண்டிருக்கிறது.


"நூற்றுமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்


முழுமைக்கும் பொது உடைமை


ஒப்பிலாத சமுதாயம் 


உலகத்திற்கொரு புதுமை


பாரத சமுதாயம் வாழ்கவே"


-தீசன்

2 கருத்துகள்

  1. இந்த நாட்டை விட்டு வெளியே சென்றால் இந்தியர்கள் அங்கு நல்ல பெயர் எடுக்கிறார்கள்.இந்தியாவில் மட்டும் "இந்தியர்களாய்" நடந்து கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா29 மே, 2022 அன்று 7:40 AM

    மிக்க நன்றி 🙏 பயனுள்ள கட்டுரை

    பதிலளிநீக்கு
புதியது பழையவை