மகாபாரதம் ஏன் படிக்க வேண்டும்? பகவத் கீதை ஏன்? குர்ஆன் பைபிள் இவற்றை படிப்பதால் நமக்கு என்ன கிடைக்க போகிறது?
இவை எல்லாம் இவற்றை அறியாத காதல் கதைகளிலும் மர்மக்கதைகளிலும் தன் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் புத்திமான்களின் கேள்விகள்.
காந்தி தன் சத்திய சோதனை சுயசரிதையில் சொல்கிறார். ஒருவன் ஒரு சொல்லுக்கு எப்படி அர்த்தத்தை அகராதியில் தேடுகிறானோ அதே போல வாழ்க்கையின் அர்த்தத்தை ஒழுக்க நெறிகளை தர்ம நெறிகளை பகவத் கீதையில் தேட முடியும்.
நான் குர்ஆனும் படித்துள்ளேன் கீதையும் படித்துள்ளேன். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் எனும் சூத்தரம் மத நூல்களை தவிர்த்து வேறு எதிலும் அத்தனை ரசமாக இருக்காது.
Copyright free image from PIXABAY |
ஒருவனின் முற்கால வாழ்க்கையை மத நூல்கள் சட்டென மாற்றிவிடும். இக்கட்டுரையில் இரண்டு நூலைப்பற்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
முதலில் வியாசர் விருந்து. இந்நூல் மகாபாரத கதைகளை வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு சொல்லி நன்நெறியை புகட்டும் படி அமைக்கப்பட்டிருக்கும். கதைகள் மிக அற்புதமாக நேர்த்தியாக அத்தியாயம் அத்தியாயமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்நூலின் ஆசிரியர் ராஜகோபாலச்சாரி தரும் முன்னுரையைப் பார்ப்போம்.
திரும்பத் திரும்பப் படிக்க வேண்டிய புஸ்தகங்களில் ஒன்று வியாசர் விருந்து. நான் எழுதிய நூல் அது. ஆயினும் இவ்வாறு சொல்கிறேன். ஏனெனில், வியாசர் விருந்து நான் எழுதிய ஒரு புத்தகமாயினும் உண்மையில் நம்முடைய நாட்டின் தருமதேவதை தூண்டித்தான் எழுதினேன். இதைப் படிக்கும்போது இதை நான் எழுதினேனா என்று எனக்கே வியப்பும் ஆனந்தமும் உண்டாகி, கூடவே கண்ணன் அருளால் அடக்கமும் தோன்றுகிறது.
விசிஷ்டரின் பசுக் கதை தொடங்கி கண்ணன் இறந்து பின் தருமன் இறந்து எமலோகம் சென்றடையும் வரை ஒரு முழுமையான மகாபாரதக்கதை இந்நூலில் சமஸ் கலந்த தமிழோடு அழகுற இயம்பப்பட்டிருக்கும்.
மகாபாரத கிளைக் கதை கலப்பின்றி அற்புதமாக நேரடியான உண்மை தொகுப்பிலிருந்து ஆதாரத்துடன் எழுதப்பட்ட இந்நூல் வானதி பதிப்பகம் சிறந்த முறையில் அச்சேற்றியுள்ளது. படிப்போருக்கு இந்நூல் சுவாரஸ்யம் மட்டுமல்லாது அறநெறியைக் கூறி ஒழுக்கத்தையும் கொடுக்கிறது.
இரண்டாவது கண்ணன் எழுதிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்கவுரை
இந்நூல் பகவத்கீதையை சுலோகமாக தமிழில் படிக்கும் ஓர் உணர்வை நமக்கு ஏற்படுத்தி தரும். அழகிய பாடல்களால் கீதை அற்புதமாக எழுதப்பட்டிருக்கும். பொதுவாக காஞ்சி காமகோடி பீடத்திலிருந்து அவ்வளவு எளிதில் அணிந்துரை கிடைக்காது ஆனால் இந்நூலுக்கு ஜயந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை வழங்கியிருப்பார்.
நீங்கள் இதை படிக்கும் போது ஆரம்பத்திலிருந்து இறுதி வரை அர்ஜூன கதாப்பாத்திரமாக உங்களையே கருதிக் கொள்வீர்கள். அப்படி இருவர் பேசிக்கொள்ளும் படி சிறப்பாக அமைந்து இடை இடையே பாடல்களால் கண்ணதாசன் அவர்கள் தன் தனித் திறனை காட்டியிருப்பார்.
இதற்கு முன் நான் படித்த கீதை எழுபது சதவீதத்திற்கு மேல் சமஸ்கிருத மொழியில் இருந்ததது. அது எனக்கு சலிப்பைத் தந்தது. ஆனால் இந்த கண்ணதாசனின் விளக்கவுரை மென்மையான தமிழ்நடையில் மிகுந்த பணிவோடு கண்ணனிடம் நம்மை பேச வைக்கும்.
மதங்களைக் கடந்து ஆன்மீகத்தை தேடும் அன்பர்கள் நிச்சயம் இந்நூலை படித்துக் கொண்டே இருங்கள். கண்ணனோ சிவனோ அல்லாவோ இயேசுவோ புத்தரோ மகாவீரரோ அருகனோ யார் உங்களை காக்கத் தவறினாலும் இந்நூலின் எழுத்துகள் உங்களின் சங்கடத்திலிருந்து சத்தியம் காக்கும்.
© Dhinaththendral Own the COPYRIGHT to this Content