நாக்கிற்கு அறுசுவையையும் அறியக்கூடிய தன்மை உண்டு. அதற்காக மட்டும் அதை பயன் படுத்துவது முட்டாள்தனம்.
நாவினால் ஆண்ட தலைவர்களும் இம்மண்ணில் உண்டு. நாவினால் அழிந்தவரும் இம்மண்ணில் உண்டு. அதனால் நாம் பேசும் சொற்கள் நம் கட்டுப்பாட்டை மீறி வரக்கூடாது. இதை இப்போது நான் கூறவில்லை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கூறியுள்ளார்.
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு. (குறள்- 642)
Copyringht free image from PIXABAY |
பேச்சிலே எந்தவித மாற்றமும் இல்லாமல், எங்கு? யார்? என்ன? கேள்வி கேட்டாலும் தயங்காமலும், தடுமாறாமலும், சொல்லிலே அழுத்தமாகவும், பேசுபவர்களை எவராலும் எப்போதும் சொல்லில் வெற்றி கொள்ள முடியாது.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. (குறள்- 647)
ஆனால் பிழையிலேயே பேச்சை வைத்துக்கொண்டு பேசுபவர்களையும், நம் முன்னோர்கள் நமக்காக வகுத்துக் கொடுத்த பழமொழியைக் கூட சரியாக சொல்லத் தெரியாதவர்களையும், பாதி பேசிக்கொண்டிக்கும் போதே மீதியை மறந்துவிடுபவர்களையும், தன்னை கேள்வி கேட்பவர்களை பதற விடாமல் தப்பித்து விடலாம் என்று எண்ணுபவர்களையும் இவ்வுலகம் தலைவன் என தூக்கி வைக்கும் காலம் வரும் அப்படி வருமானால் நம் நாட்டின் தலை விதியை மாற்றுவது மிக கடினம்.
பேசும்போது அது மக்களின் மனதில் சென்றடைகிறதா என்றும் பேசுகின்ற பேச்சிலே இனிமையும், கேட்பவர்கள் தன் பேச்சினை ஆர்வமாக கேட்கும் விதமாகவும், தன் பேச்சினை வெறுக்கத்தக்கது என்று நினைக்காத வண்ணம் அதேபோன்று நீண்ட நேரம் உரையாடாமல் சொல்ல வருகின்ற கருத்தினை சுருக்கமாக சொல்லி மக்களின் மனதில் கருத்தினை பதிவு செய்ய வேண்டும்.
தாம் படித்த நல்ல புத்தகங்களின் கருத்துக்களை தெளிவாக விளக்கி பேச முடியாதவர்கள் கொத்துக்கொத்தாக அழகாக பூத்து இருக்கும் வாசனை இல்லாத பூக்களை போன்றவர்கள் என்று வள்ளுவர் 650 வது குரலிலே குறிப்பிடுகிறார்.
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்.
நாம் பேசுகின்ற பேச்சில் கேட்பவர்கள் இன்னும் நாம் பேசவேண்டும் என ஏக்கம் அடையும் அளவிற்கு நம்முடைய பேச்சு இருக்க வேண்டும் அதேபோன்று இவர் பேச்சை கேட்கத் தவறி விட்டோமே என நம் பேச்சை கேளாதவர்கள் வருத்தப் படும் அளவிற்கு நம்முடைய பேச்சு இருக்க வேண்டும் அதுதான் உண்மையான பேச்சாளர்களுக்கு அழகாகும்.
கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். (குறள்- 643)
நம்முடைய பேச்சை கேட்பவர்கள் விரும்பிக் கேட்க வேண்டும் அதே போன்று யாருடைய கருத்தாக இருந்தாலும் அதை நன்கு ஆராய்ந்து அதில் உள்ள நல்ல கருத்தை உணர்ந்து அதை எடுத்துக் கொள்வதே சிறந்த பேச்சாளன் சிறப்பாகும்.
பேச்சில் உள்ள கருத்துக்களை கேட்பவர்கள் தவறான வண்ணம் புரிந்து கொள்ளாமல் சரியான முறையில் புரிந்துகொள்ள எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசினால் தான் சொல்ல வருகின்ற கருத்திற்கு அர்த்தமுள்ளதாக இருக்கும்.
சிறந்த வழிகள்
வரலாற்று நிகழ்வுகளை கூறும்போது அந்த வரலாறின் ஆண்டை குறிப்பிட்டு கூறலாம்.
கணக்கு வழக்குகளைப் பற்றி பேசும்போது அதை சீட்டில் எழுதி வைத்து கொள்ளாம்.
ஒரே மாதிரி பேசாமல் நகைச்சுவை உணர்வுடன் பேசலாம். (நகைச்சுவை உணர்வில் பழித்து கூறும்போது தன்னையும், புகழ்ந்து கூறும்போது பிறரையும் கூறுவது சிறப்பு)
எதிரிகள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி பேசும்போது ஆதாரங்களுடன் பேசுவது மிகத் தெளிவு.
மக்களின் மனதைக் கவரும் வகையில் பல உவமைகளை வைத்துப் பேசலாம்.