அண்மை

திருவாரூர் பெரியக் கோவிலின் உண்மை வரலாறு

எந்த ஒரு தலத்தின் வரலாறுகளிலும் பொய் இருக்காது,

temple history


மிகைப்படுத்தும் கற்பனைகளும் இல்லாமல் இருக்காது. கற்பனையினை பொய் என்று கூற முடியாது, அது படைத்தோரின் திறன் என்பதே சரியாகும். தமிழகத்தில் சப்த விடங்கர் தலங்களில் ஒன்றான ஆரூர் திருத்தலம், சிறப்பான தல வரலாற்றினைக் கொண்டிருந்தாலும் ஆலய தோற்றக் காலத்தை தெளிவுற விளக்கவில்லை. உலகம் பிறந்து இத்தனை ஆண்டுகளாகிறது எனத் தோராயமாக சொன்னாலும், தன் கருத்திலிருந்து மாறாமல் நிலையாக இருக்கும் அறிவியல் உலகம், திருவாரூர் பெரியக் கோவில் தோன்றி இரண்டாயிரம் ஆண்டுகளாகிறது, நாலாயிரம் ஆண்டுகளாகிறது ஆறாயிரம் ஆண்டுகளாகிறது என்று மாற்றி மாற்றி சொல்வது வேடிக்கைத் தருகிறது. அவர்கள் அப்படி சொல்வதற்கு காரணமுண்டு, புராணங்களை ஆய்ந்து ஆலயக் காலத்தை கண்டறிய முற்படும் போது, உலகமே உணவிற்காக உயிரினங்களை வேட்டையாடி தின்ற காலத்தில் இந்தியர்கள் ராஜகோபுரம் அமைத்து திருவிழா நடத்தினார்கள் என்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை. 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜரோப்பியர்கள் உலகம் தட்டையானது என்று வாதிட்டுக் கொண்டிருந்தனர் ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் சுழலக்கூடியது என்பதைக் தமிழர்கள் அறிந்திருந்தனர். இன்றைய 'ஆட்டோ பைலட் விமான' முறையை 'வளவன் ஏவா வானூர்தி' என்று புறநானூறு சொல்கிறது. ஏனைய நாடுகளைக் காட்டிலும் இந்தியர்கள் அதிலும் குறிப்பாக தமிழர்கள் அசாத்திய சிந்தனையாளர்களாவே இருந்துள்ளனர். ஏழுத்துபூர்வ ஆதாரம் மட்டுமே கிடைக்கும் இந்த அசாத்தியங்களை அறிவியல் உலகம் மறுப்பதில் ஆச்சரியம் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இத்தனை வேலைபாடு மிக்க கோவில்களை அமைக்கிறான் எனில் அவன் எத்தனை ஆண்டுகால தொன்மையை பெற்றிருக்க வேண்டும். அதுவும் இக்கால பொறியாளர்களால் நினைத்து கூட பார்க்க முடியாத அளவில் அவன் கோவில்களையும் அணைகளையும் அறிவியல் இல்லாத அக்காலத்திலே அமைக்க எப்படி பட்ட வல்லுநர்களை பெற்றிருக்க வேண்டும். என்பதை எல்லாம் நினைக்கையில் உண்மையிலே வியப்பாக இருக்கிறது. அந்த வகையில் திருவாரூர் பெரிய கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனும் போதே நமக்கு வியப்பு தான், ஆனால் உண்மை அதுவல்ல. ஆரூர் கோவிலில் இரு சந்நிதிகள் புகழ் வாய்ந்தவை. ஒன்று தியாகராஜர் இரண்டாவது புற்றிடங்கொண்டான். ஆலயத்தின் பெயரே புற்றிடங்கொண்டான் திருக்கோவில் தான் மக்கள் பேச்சு வழக்கில் பெரிய கோவில் என்பார்கள். முதலில் புற்றிடங்கொண்டான் தல வரலாற்றைப் பற்றி பார்ப்போம், 


விஷ்ணுவும் இந்திர தேவனும் குருஷேத்திரத்தில் யாகம் நடத்துகிறார்கள், யாகத்திலிருந்து ஒரு வலிமை மிக்க வில் தோன்றுகிறது. மாவீரர்கள் மட்டுமே ஏந்தக் கூடிய அமைப்புள்ள அவ்வில்லை மகா விஷ்ணு எடுக்கிறார். அவரால் அதை மிக எளிதாகவே ஏந்த முடிந்தது. யாரும் செய்ய முடியாத காரியத்தை தான் செய்ததாக வியந்து செருக்கடைகிறார். இந்திரன் மீதும் மற்ற தேவர்கள் மீதும் அதைப் பயன்படுத்த ஆசைப்படுகிறார். எதிர் உள்ள தேவர்களை பார்த்து விஷ்ணு வில்லை வளைத்த கணமே அங்குள்ள அனைத்து கந்தர்வர்களும் தேவர்களும் ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர். அவர்களது ஓட்டம் திருவாரூரில் வந்து நின்றது. விஷ்ணுவும் விட்டபாடில்லை, அவர்களை துரத்திக் கொண்டே திருவாரூரை வந்தடைந்து விட்டார். விஷ்ணு வில்லை ஓர் இடத்தில் நிறுத்தி தேவர்களை அடிக்க வளைக்கத் தொடங்கினார். சட்டென அந்த வில்லை பிடிக்குமாறு கீழே ஒரு புற்று தோன்றியது. நொடிப் பொழுதில் அப்புற்றிலிருந்து வெளிவந்த கரையான்கள் வலிமை பொருந்திய அவ்வில்லை அரிக்கத் தொடங்கியது. வளைந்த வில் மேலேழுந்து விஷ்ணுவின் தலையை அடித்து தெறிக்க வைத்தது. பின் அந்த புற்றிலிருந்து ஈசனார் எழுந்து தெறித்த விஷ்ணுவின் தலையை ஒரு சேர்த்து தேவர்களை காத்ததோடு மட்டுமல்லாமல் திருமாலின் ஆணவத்தையும் அழித்தார். ஈசன் புற்றிலிருந்து வெளிவந்த அவ்விடமே இப்போது புற்று இடம் கொண்டான் என்று அழைக்கப்படுகிறது. 


சைவர்கள் வைணவர்கள் மீது எவ்வளவு துவேஷம் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இக்கதை ஒரு சாட்சி. ஆரூரின் மூலவரான புற்றிடங்ககொண்டானுக்கு (வன்மீகிநாதர்) இப்படி ஒரு கதை புனையப்பட்டிருப்பது வருத்தமே, ஆனால் இதன் தொடர்ச்சி நமக்கு ஆச்சரியத்தை தருகிறது. வன்மீகி நாதரை வணங்கிய மன்னர்களின் பெயர் பட்டியலில் தசரதன் இடம் பெறுகிறான். தசரதன் வாழ்ந்ததோ த்ரேதா யுகம். சரியாக தசரதன் வாழ்ந்ததை த்ரேதா யுக இறுதி எனக் கொண்டாலும், துவாபர யுகம் சுமார் 8 லட்சம் வருடங்களாகும். நாம் வாழும் கலியுகம் ஐயாயிர வருடங்களை கடந்து விட்டது. அப்படி பார்த்தால் தோராயமாக 9 லட்சம் வருடங்களுக்கு முன்பே புற்றிடங்கொண்டான் லிங்கமானது எழுந்திருக்க வேண்டும். இங்கே இராவணனைக் கொண்டாடும் தமிழர்களுக்கு கேள்வி வரும். ஒரு வேளை இராமாயணம் பொய்யாக இருந்தால்? (இராவணனை என் பாட்டன் என்று ஏற்கும் அவர்களது மனம், இராமனையும் இராமாயணத்தையும் நம்பாதது எனக்கு புரியவில்லை) இக்கேள்விக்கு அறிவியல் பூர்வ விடையே என்னிடம் உள்ளது. அதற்கு முன் தியாகேச பெருமான் வரலாறு, 


விஷ்ணுவின் பிரச்சனைத்தீர ஈசன் ஒரு பொன் சிலையை அவருக்களிக்கிறார். அதை விஷ்ணு மிகுந்த பக்தியோடு பாதுகாத்தார், அந்த சிலை எங்கிருந்தாலும் அங்கெல்லாம் நன்மை நன்மை நன்மை மட்டுந்தான். ஒரு முறை இந்திரனை எதிர்த்து ஓர் அரக்கன் தன் மாபெரும் படையோடு தேவலோகம் வந்தான். அதைக் கண்டு பயந்த இந்திரன் நேரே விஷ்ணுவிடம் சென்று அருள் கேட்க, அவரோ ஈசன் கொடுத்த அச்சிலையை எடுத்து இந்திரனிடம் கொடுத்தனுப்பி விட்டார். இந்திரனுக்கோ அவ்வளவாக நம்பிக்கை இல்லை. அன்றைய வானரத் தலைவரான ஆரூரை ஆண்ட முசுகந்த சக்கரவர்த்தியை போரில் உதவி செய்யும் படி அழைக்கிறார். முசுகுந்தனும் தேவலோகம் சென்று இந்திரனுக்கு உதவி, அந்த அரக்கனை வதம் செய்கிறார்.  தனக்கு உதவிய காரணத்தால் இந்திரன் முசுகுந்தனிடம் 'உனக்கு என்ன வேண்டும் கேள்? என்கிறார். அதற்கு முசுகுந்தனோ 'எனக்கு அந்த சிலையை கொடுங்கள்' என்று விஷ்ணு கொடுத்த அச்சிலையைக் கேட்கிறார். தானே இரவலாகத்தான் விஷ்ணுவிடம் வாங்கி வந்திருக்கிறோம் என்பது தெரிந்தும் இந்திரன் முசுகுந்தனிடம் அப்பொன் சிலையைக் கொடுக்கிறார். ஆரூரில் அப்போது மிகுந்த வறட்சியும் பஞ்சமுமாக இருந்தது. முசுகுந்தன் இச்சிலையை எடுத்து வந்த நேரம் ஆரூரின் ஒட்டுமொத்த பஞ்சமும் தீர்ந்து செழிப்படைந்தது. சிலையின் மகத்துவத்தை உணர்ந்த முககுந்தன், அதற்கொரு கோவில் அமைத்தார் . அதுவே இப்போது தியாகேச பெருமான் சந்நிதியாக விளங்கப்படுகிறது. அந்த பொன் சிலையே தியாகராஜ பெருமான் ஆவார். தேவலோகம், அரக்கன், படை, போர் என கற்பனைக் கலந்த இத்தல வரலாற்றிலிருந்து சில கருத்துகளை நம்மால் தெளிவுற அறிய முடிகிறது. அவை, 


"அன்றைய ஆரூரை ஆண்டவர் முசுகுந்த சக்கரவர்த்தி. அவர் ஒரு வானரம். அவரே தியாகேச பெருமான் சந்நிதியை உருவாக்கியுள்ளார்"


முசுகுந்த சக்கரவர்த்தி தான் தியாகராஜ பெருமானின் சிலையை கொண்டு வந்தார் என்பதை திருவாரூர் பெரிய கோவிலின் தேவாசிரிய மண்டபத்தில் உள்ள பாதுகாக்கப்படும் மிக மிக தொன்மையான ஓவியங்களும், முககுந்தன் ஒரு வானரம் என்பதை அதே ஓவியங்களும் உற்சவர் சந்நிதியின் தெற்கு வாசலில் உள்ள சிற்பமும் உறுதி செய்கிறது. அதனால் இச்செய்தியை பொய் என்று எவராலும் மறுத்து பேச முடியாது.


இப்போது என் அறிவியல் பூர்வ விடையைத் தருகிறேன். மனிதனின் முக அமைப்பைக் கொண்டும், காலகட்டத்தைக் கொண்டும் அறிவியலாளர்கள் மனிதர்களை வகைப்படுத்துகிறார்கள். அவை, ஹோமோ ஹெபிலிஸ், ஹோமோ எரக்டர்ஸ், நியன்ட்ரத்தால், ஹோமோ செபியன். இதில் நாம் ஹோமோ செபியன் வகையாகும். அதாவது தற்கால மனிதன். ஹோமோ ஹெபிலிஸ் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னும், ஹோமோ எரக்டர்ஸ் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னும், நியன்ட்ரத்தால் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் வாழ்ந்த மனிதர்களாக கருதப்படுகிறது. இவைகளில் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ எரக்டர்ஸ் குரங்கும் மனிதனும் கலந்த புராணங்களில் வரும் வானர மனிதர்கள் போன்றே இருப்பார்கள். இராமாயணம் நடந்த காலம் த்ரேதா யுக இறுதி, அதாவது 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன். இராமாயணத்திலும் அனுமன், சுக்ரீவன், வாலி, ஜாம்பவான் போன்ற வானரங்களை காண முடிகிறது. 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் குரங்கு முகம் கொண்டிருந்ததை அறிவியலும் ஏற்கிறது. முசுகுந்தன் ஒரு வானரமனிதன். அப்படியாக புற்றிடங்கொண்டான் சந்நிதியும் தியாகராஜ சந்நிதியும் அமைக்கப்பட்ட காலம் தோராயமாக 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன். இப்போது இருக்கும் கோவில் வடிவமைப்பு போன்றே பல லட்ச ஆண்டுக்கு முன்னும் ஆரூர் கோவில் இருந்திருக்கும் என்று சொல்லவில்லை ஆனால் அத்தெய்வ பிரதிஷ்டைகள் நிச்சயமாக மாறியிருக்காது. திருவாரூர் பெரிய கோவிலின் ஒவ்வொரு சந்நிதி வரலாறு படிக்கும் போது, அறநெறித் தலைவர் அசலேசுவரர் சந்நிதியைக் கண்டே செம்பியன் மாதேவியும் ராஜராஜசோழனும் தஞ்சைக் கோவிலைக் கட்டினார்கள் என்பதை அறியமுடிகிறது. அப்படியானால் மூலவரின் சந்நிதியை சுற்றியுள்ள சந்நிதிகளே ஏறத்தாழ 1000 வருடங்கள் பழமையானதாகும். என் அறிவுக்கு எட்டிய வரையில் முசுகுந்தன் காலத்தில் தியாகராஜ சந்நிதியானது தெருவோரத்தில் இருக்கும் மாரியம்மன் கோவில் போன்று தான் எழுப்பப்பட்டிருக்கும். பின் நாளில் திருப்பணி அதிகமாக அதிகமாக அல்லது நாகரிகம் வளர வளர அதற்கேற்ற வகையில் பிரகாரங்கள், பெரிய மதில்கள், தீர்த்தங்கள் போன்றவை அமைக்கப்பட்டிருக்கும். மருத நிலம் ஆதலால் அதற்கேற்ற வகையில் லிங்க வழிபாடுகளும் திருவிழாக்களும் நடனக் கூத்துகளும் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டிருக்கும். பிறகு வந்த சோழர்கள் கோவிலுக்கு திருப்பணி செய்வதோடு மட்டுமல்லாமல், வெற்றுக் கற்களில் நுணுக்கமான சிற்பங்களை வடித்து தாங்கள் செய்த அரிய காரியங்களை கல்வெட்டாக பொறித்து ராஜகோபுரம் பல அமைத்து ஊர் மக்கள் மட்டும் வழிபட்ட தெய்வங்களை உலகறிய வைத்திருக்கிறார்கள். பத்து வரிகளில் நான் சொன்ன இவைகள் நடந்திருக்க, குறைந்த பட்சம் பல்லாயிரம் ஆண்டுகள் எடுத்திருக்கும்.


ஹோமோ எரக்டர்ஸ் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. புற்றிடங்கொண்டான் எழுந்தது த்ரேதா யுகம் என்று புராணம் சொல்கிறது. அதே காலத்தில் வானர மனிதர்கள் வாழ்ந்ததும் உறுதியாகிறது. முசுகுந்தனே தியாகராஜ பெருமான் சிலையை வைத்து வணங்கினான் என்பது சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் அறியமுடிகிறது. இப்படியிருக்க லட்சம் வருடங்கள் கடந்தும் புற்றிடங்கொண்டான் சந்நிதி பாதிப்பின்றி அழகுற காட்சி தருவதே இப்போது சந்தேகங்கலந்த ஆச்சரியம்.

ஆரூர் திருக்கோயிலின் பழமையும் தொன்மையும் ஆரூர் வாசிகளே இன்னும் பலர் அறியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. 'திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்கும் அடியேன்' என்று சுந்தரர் சொல்வது அவரின் பணிவைக் காட்டவில்லை, இவ்வூரின் மேன்மையைக் காட்டுகிறது. 


-ஈசதாசன்


3 கருத்துகள்

  1. இதைத்தான் எதிர் பார்த்தேன்..

    பதிலளிநீக்கு
  2. திருவாரூர் பிறந்தார் அனைவரும் பெருமை கொள்ளும் கட்டுரை.பெருமைமிகு திருவாரூருக்கு இந்த கட்டுரையை படிப்பவர்கள் ஒரு முறையேனும் வந்து செல்லுங்கள்.முசுகுந்த சக்கரவர்த்தி ஒரு வானரர் என்பது பெரும்பாலோர் அறியாத செய்தி.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. 18 வருடங்கள் ஆகியும். ஊரின் வரலாற்றை இப்போது தான் உணர முடிந்தது. நன்றி 🙏

    பதிலளிநீக்கு
புதியது பழையவை