அண்மை

என்பார்வையில் என்ன வேலை செய்யலாம்?

en parvai


காந்தி வக்கீல் தொழில் செய்தார் என்பதை உலகம் அறியும். 

ஆனால் அவர், ஆண் செவிலியராய் இருந்துள்ளார். துணி சலவையராய் இருந்துள்ளார். துணி நெய்துள்ளார். ஆசிரமம் நடத்தியுள்ளார். ஆசிரியராய் பணியாற்றியுள்ளார். பத்திரிக்கைகளில் வேலைப் பார்த்துள்ளார். பத்திரிக்கை நடத்தியுள்ளார். சமையல் வேலை செய்துள்ளார். செருப்பு தைத்து விற்றுள்ளார். வேறு எனக்கு நினைவில்லை.



தொழில் என்பது உடலுக்கு கொடுக்கப்படும் ஒரு பயிற்சி, உண்டதை செரிக்க வைக்கும் உழைப்பு, அவ்வளவு தானே தவிர அதுவே வாழ்க்கை இல்லை.


பள்ளியில் சேர்ந்ததிலிருந்து கல்லூரியை முடிக்கும் வரை, இன்று அனைவருமே வேலைக்காகவும் மதிப்பெண்ணுக்காகவும் படிக்கிறார்களே தவிர அறிவுக்காகவும் கற்பனைத் திறனுக்காகவும் படிக்கவில்லை.



உன் வாழ்வின் லட்சியம் என்ன? அல்லது உன் வாழ்வின் இலக்கு என்ன? இந்த கேள்வி ஒருமுறையேனும் உங்களிடம் பள்ளியிலோ கல்லூரியிலோ கேட்கப்பட்டிருக்கும்.



என் வாழ்வின் லட்சியம், இந்த உலகம் முழுக்க சுற்றிப்பார்க்க வேண்டும், எவரஸ்ட் சிகரத்தில் ஏறிப் பார்க்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்களேன், அதுஇல்லையப்பா உன் வாழ்க்கையின் லட்ச்சியம் என்ன? என்று மீண்டும் அழுத்தி கேட்பார்கள். நீ வருங்காலத்தில் என்ன வேலைக்கு போகப் போகிறாய்? என சூசகமாய் கேட்கக்கூடிய கேள்விகளில் இதுவும் ஒன்று, பள்ளியில் என்னிடம் இக்கேள்வி கேட்கப்பட்ட போது, மருத்துவர் பொறியாளர் ஆசிரியர் அரசுஅதிகாரி என்று அதற்கான விடைகளும் தரப்பட்டது. வேறு எதையும் தேர்வு செய்ய முடியாத நிலையில் இருந்த நான் மருத்துவரை தேர்வு செய்தேன். காலம் என்னை இன்று எழுதவைத்து கொண்டிருக்கிறது.



கலாம் ஐயாவின் 'கனவு காணுங்கள்' வார்த்தையை எதிர்க்கவில்லை, கனவை மட்டுமே காணாதீர்கள் என்கிறேன். புரியவில்லையா, இதை கலாம் ஐயாவின் வார்த்தைகள் மூலமே புரிய வைக்கிறேன்.



மலையின் சிகரத்தையே இலக்காக வையுங்கள், இலக்கையே பார்த்துக் கொண்டு பாதையை ரசிக்க தவறிவிடாதீர்கள்  - ஐயா அப்துல் கலாம் 



நான் பத்தாம் வகுப்பிற்கு வந்த போது பலர் என்னிடம், பத்தாம் வகுப்பு தான் வாழ்க்கை, இதில் மட்டும் அதிக மதிப்பெண் எடுத்தால் வாழ்க்கையையே வென்று விடலாம் என்று சொன்னார்கள். நானும் கடுமையாக படித்தேன். விளையாட எங்கும் செல்லவில்லை. விடுமுறையிலும் படித்தேன். தனியாக டியூசன் சேர்ந்திருந்தேன். வகுப்பிற்கு ஆசிரியர்கள் வரவில்லையானாலும் படிப்பேன். வாரத்தில் ஒருமுறை நடக்கும் விளையாட்டு வகுப்பிற்கு கூட போகாமல் அதிலும் படித்தேன். பொது தேர்வு வந்தது. நன்றாக எழுதினேன். பள்ளியிலே இரண்டாம் மதிப்பெண் பெற்றேன். எல்லோரும் பாராட்டினார்கள். பதினொன்றாம் வகுப்பிற்கு வந்தேன். முதல் நாள் வகுப்பு. ஆசிரியர் சொன்னார், 'இதுவரை நீங்கள் படித்ததெல்லாம் சும்மா, இனி படிக்கப் போவது தான் உங்கள் வாழ்க்கையே' என்று. இப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். பத்தாம் வகுப்பை படித்தே வீணடித்து விட்டோம் என்பது இன்று எனக்கு புரிகிறது. பத்தாம் வகுப்பில் படித்த ஆங்கில இலக்கணம் எனக்கு நினைவில்லை, கணிதம் சொல்லவே வேண்டாம், இம்மியும் நினைவில்லை. அறிவியலும் சமூக அறிவியலும் யாராவது நினைவூட்டினால் நினைவிற்கு வரும் என்றெண்ணுகிறேன். தமிழில் படித்த ஒன்று இரண்டு செய்யுள் மட்டுமே நினைவுள்ளது. அப்போது நடந்த அதே பத்தாம் வகுப்பு பொது தேர்வை இப்போது நான் எழுதினால் நிச்சயமாக FAIL ஆகி விடுவேன். என்னுடைய இலக்கு முழுதும் அன்று மதிப்பெண்ணிலே இருந்தது, பார்க்காமல் கடந்து வந்த பாதை இப்போது நினைவில்லை.



யாரும் இத்தவறை செய்துவிடாதீர்கள். உங்களது இலக்கு எதுவானாலும் இருக்கட்டும் ஆனால் உங்களுடைய தேடல் பரந்துபட்டதாய் அமைய வேண்டும். அது உங்களை ஒரு குறிப்பிட்ட உத்தியோகத்திற்கு கூட்டிச் செல்வதாய் இருக்கக் கூடாது. அப்படி அமையும் கல்வி அறிவைத் தராது. ஆசையைத் தான் தரும்.



உத்தியோகம் புருஷ லக்சனம் என்று சமஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு. இதை 'தொழில் செய்வதே ஆண்களுக்கு அழகு' என்று தமிழில் தவறாக மொழிப் பெயர்க்கின்றனர். அதன் அர்த்தம் இதுவல்ல. புருஷன் என்பது ஆண் மகனை குறித்தாலும், மனைவி கணவனை குறிப்பிடும் சொல்லாகவும் பயன்படுகிறது. அதன் அர்த்தம் மனைவியின் ஆத்மா போன்றவன் கணவன் என்பதாகும். எனவே, புருஷன் என்பது ஆத்மாவையே குறிக்கும். 'ஆத்மார்த்தமாய் செய்யப்படுவதே தொழிலுக்கு அழகு' என்பதே அச்சுலோகத்தின் பொருள்.



எந்த ஒரு பணியிலும் ஆத்மார்த்தமான ஈடுபாடு இருக்கும் போது அப்பணியின் மீது பக்தி ஏற்படுகிறது. பக்தி இருக்கும் இடத்தில் பயம் எழுகிறது. பயம் எழுகிற இடத்தில் நேர்மை பிறக்கிறது. நேர்மை பிறக்கும் இடத்தில் உயர்வு கிடைக்கிறது.



நான் சமீபத்தில் ஓர் அரங்கத்தில் கலந்து கொண்டேன். அவர் வேலை வாய்ப்புகளைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். அனைத்துமே அரசு வேலையைப் பற்றி தான். ஒரு அரசு பணியின் பெயரைச் சொன்ன உடனே அவரது வாயிலிருந்து வந்த விவரங்கள் யாவும், இந்த வேலையில் முப்பதாயிரம் தருவார்கள், இந்த வேலையில் ஐம்பதாயிரம் தருவார்கள், இந்த வேலையில் கார் கூட தருவார்கள் என்பது மட்டுந்தான். இந்த அரசு பணியின் மூலம் நீங்கள் இத்தனை பேருக்கு உதவலாம். இவர்களுக்கெல்லாம் மறுவாழ்வு தரலாம். ஏழைகளுக்கு சலுகைகள் அளிக்கலாம் போன்ற விவரமெல்லாம் அவரால் கூறியிருக்க முடியும். ஆனால் மனித மனம் எதை விரும்புகிறதோ அதைப் பற்றியே பேச நினைக்கும்.



பெரும்பாலும் அரசுப் பணியைத் தேர்வு செய்வோர்களின் எண்ணம் என்ன தெரியுமா?



நிரந்தர வருமானம். உழைக்கிறோம், இல்லை. மாதமானால் சம்பளம் நிச்சயம். வாழ்க்கையில் பாரமிருக்காது. என்பதாகத்தான் இருக்கும்.



இந்த பணம் சூழ் உலகில் இது இயல்பாக இருந்தாலும், இப்படி இருப்பது தவறாகும். மனது வருந்தி மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு எவனொருவன் அரசுப் பணியைத் தேர்வு செய்கிறானோ, அவனே நாட்டுக்கு பயன்படுவான். மற்றவனெல்லாம் பணத்திற்காக உழைக்கும் போலி. அவனுக்கு உண்மையாக மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்காது.



நான் பெரும்பாலானோர் அரசுப் பணியை நிரந்தர வருமானத்திற்காக மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள் என சொல்லக் காரணம், 'நான் அரசு அதிகாரி ஆகப்போகிறேன்' என்று என்னிடம் சொன்னவர்களிடத்தில், நான் ஏன் என்று கேட்ட போது அவர்கள் சொன்ன பதில் என்னை அப்படி சிந்திக்க வைத்தது. அது தான் உண்மையும் கூட.



பலர், 'லைஃப்பில் ஸ்டெடி ஆக' என்று கூறினார்கள். ஒரே ஒருவர் மட்டும் 'பச்சை இங்க் மூலம் சைன் போட' என்று புதுமையாக கூறினார். ஆனால் ஒருவர் கூட மக்களுக்கு சேவை செய்ய என்று கூறவில்லை. 



அரசுப்பணி என்பது மக்களுக்கு செய்யப்படும் சேவை, ஆனால் அப்பணிக்கு வரும் ஒருவர் கூட அதை சேவை என்று கருத மாட்டார்கள் போல.




காந்தி எத்தனை தொழில் செய்தாலும் அது அனைத்தையுமே அவர் சேவையின் காரணமாகவே செய்தார். அதிக வருமானம் இல்லையானாலும் வாழப்போதுமானதாய் இருந்தது.



அதனால் வேலையைத் தேர்வு செய்வதற்கு முன், சம்பளத்தைக் கொண்டு அல்லாமல் செய்யும் வேலையைக் கொண்டு அது உங்களுக்கு மன திருப்தியைத் தருமா என்று சிந்தியுங்கள். அதிகமாக பணம் தரும் பணிகளே எனக்கு திருப்தி தரும் என்று நீங்கள் நினைத்தீர்களானால், அது உங்கள் அறியாமையே ஆகும். நிரந்தர வருமானம் என்று எந்த ஒரு பணிக்கும் ஆசைப்பட வேண்டாம், சொல்லப்போனால் அப்படி பட்ட தொழில் முறையே இருக்க கூடாது என்றே நான் சொல்வேன். நிரந்தர வருமானம் என்றாவது ஒரு நாள் உங்களுக்கு ஆணவத்தை தந்துவிடும். செய்தாலும் செய்யாவிட்டாலும் பணம் நிச்சயம் எனும் மனநிலையைக் கொடுத்துவிடும். உனக்கு பாடம் நடத்தினாலும் நடத்தாவிட்டாலும் எனக்கு சம்பளம் உண்டு என்று கூறிய பல ஆசிரியர்களை எனக்கு தெரியும். அதுமட்டுமல்லாமல் வருமான திருப்தி உள்ள வேலையில் ஆத்ம திருப்தி இருக்காது என்பது வாழ்வியல் உண்மை. நீங்கள் ஆற்றக்கூடிய தொழில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உதவி செய்யவேண்டுமே தவிர உங்களால் ஒருவர் கெட்டார் எனும் பேச்சை தந்துவிடக் கூடாது. 



எந்த ஒரு தொழிலும் தாழ்ந்தது கிடையாது, உங்களது நேர்மை குறையாமல் இருக்கும் வரை.



-தீசன்

2 கருத்துகள்

  1. என்பார்வையில் கடைசி இரு வரிகளைத்தவிர தலைப்பிற்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லை.

    பதிலளிநீக்கு
  2. 1)சேவையை செய்வதற்கு ஊதியம் தருவானேன்??

    2)அரசு ஊழியர் அரசியல் வாதி இருவரின் கடமைகளுக்கும்/தொழிலுக்கும் இடையே உள்ள வித்யாசம் என்ன?

    3)தொழிலின் நேர்மை நாம் முடிவுசெய்வதா? சமூகம் முடிவுசெய்வதா?

    4)ஊதியம்/வருவாய் /சம்பளம் என ஈட்ட இயலாத ஒருவன் கடுமையாய் ஆத்மார்த்தமாய் உழைத்துகொண்டு..மட்டுமே வாழ்ந்திட முடியுமா?
    முடிகிற பட்சத்தில் பொருளீட்டுபவன் சிறந்தவனா? அதை படைக்கிறவன் சிறந்தவனா? .

    பதிலளிநீக்கு
புதியது பழையவை