சதுர் திரைப்பட டிரைலரை இன்னும் பார்க்காதவர்கள், பார்த்து விட்டு வந்து இக்கட்டுரையைப் படிக்கவும். டிரைலரைக் காண இங்கே தொடவும்
சதுர் என்பது நான்கை குறிக்கும் ஒரு சமஸ்கிருத சொல். கிருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்பதை ஒரு சதுர் யுகம் என்பர். 12 சதுர்யுகத்தைக் கொண்டது மன்வந்திரம் என்றும், 14 மன்வந்திரம் ஒரு கல்பம் என்றும் சொல்வர், இது போன்று மொத்தம் 30 கல்பம் இருக்கிறது, நாம் வாழும் காலக்கட்டம் இரண்டாவது கல்பம் இன்னும் இருபத்தெட்டு கல்பம் இருக்கிறதென புராணங்கள் சொல்கிறது. சதுர் என்னும் இத்திரைப்படத்தின் கதை 'நான்கு' என்னும் ஏதோ ஒன்றோடு பொருந்தி உள்ளது. வெளிப்படையாக யுகங்களைக் கொண்டதாக இருக்கலாம். இல்லையானால் வேத ரகசியத்தை தோண்டுவதாகவும் இருக்கலாம்.
படத்தின் ஆரம்பத்தில் Dark side of god எனும் புத்தகம் காட்டப்படுகிறது. நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதம் மட்டுமே தீய சக்திகளை பற்றி விளக்குகிறது. 1960 க்கு பின் மரியான அகழிக்குள் யாருமே செல்லவில்லை, எனும் வார்த்தைகள் வந்த உடனே ஒரு நீர்மூழ்கி கப்பல் காட்டப்படுகிறது. அதனுள் இருந்து பார்ப்பவர், கடலுக்குள் ஆச்சரியத்துடன் ஒரு லிங்கத்தைக் காண்கிறார்.
பல்லவர்களின் ஆட்சி காலத்தில் நாடு இழந்த சோழர்கள் கிழக்கு திசை பயணித்து செல்வதாய் வரலாறு உண்டு, அவர்களைத் தேடி செல்வதே ஆயிரத்தில் ஒருவன் திரைப்படமாகும். மரியானா அகழியும் இந்தியாவின் கிழக்கு திசையில் உள்ள பகுதி தான், அப்படியானால் இக்கதை சோழர்களை மையமாக்கியே புனையப்பட்டிருக்கும் என்றே பலர் நினைப்பார்கள். ஆனால் இக்கதை பாண்டியர்களையே மையப்படுத்தியிருக்கும் என எண்ணுகிறேன்.
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
எனும் இவ்வரிகளின் உண்மை நிலவிய காலக்கட்டத்தில் பாண்டியர்களே பெரு நிலத்தை ஆண்டனர். இந்த உலகத்தின் விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தைப் பற்றி அந்த ஓலைச்சுவடியில் உள்ளது, அது என்னவாக இருக்குமென யோசிக்கும் போது இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் ஒரு பொருளாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. இறந்த உடலையும் பிழைக்க வைப்பதற்கு ஒரு மருந்து இருந்தால் அது தானே விலை மதிக்க முடியாததாய் இருக்கும்.
தொல்லியல் குழு ஒன்று மரியானா அகழியை ஆய்வு செய்கிறது.
மனிதர்கள் யாருமே நுழைய முடியாத இடத்தில், தமிழர்கள் ஒரு மாபெரும் ரகசியத்தை மூடி வைத்துள்ளனர் என்பதை அவர்கள் அறிகிறார்கள். அதைப் பற்றிய ஒரு குறிப்பை தொன்மைத் தமிழ் ஓலைச்சுவடி தருகிறது. இதைப் பற்றிய விவரங்களை சேகரிக்கும் ஒருவன், தேடப்படும் முக்கிய கதாபாத்திரமாகவும் உள்ளான். ரகசியம் கசிகிறது. உலகத்தின் தேடல் அதிகமாகிறது. டிரைலரில் காட்டப்படும் அந்த அரச வேடதாரிகள் தற்காலத்தில் வாழ்ந்து அந்த ரகசியத்தை பாதுகாக்கிறார்களா? இல்லை பாதுகாத்து வந்தது இப்போது மறைக்கப்பட்டு மட்டும் உள்ளதா? என்பதை தெளிவற அறிய முடியவில்லை. ஆனால் அரசே…அரசே அதை நாங்கள் கண்டோம் என்பது உலகத்தில் ஏதோ பெரும் பொருள் ஒன்று விழுவதைப் பற்றிய செய்தியாக இருக்கும்.அதை
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது எனும் வரிகளின் மூலம் அறிய முடிகிறது.
அதாவது பூமியின் மீது விழுந்த எரிக்கல்லின் காரணத்தாலே, கடல் சீற்றம் பெற்றது. அன்றைய கடல் சீற்றத்தாலே தமிழர்கள் குமரிக்கண்டத்தை இழந்தார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அந்த எரிக்கல் விழுந்த இடமே மரியானா அகழி என்று இயக்குனர் சொல்ல போகிறார் போலும். செவ்வாய் கிரகத்தில் அவர்கள் ஏதோ மறைக்கிறார்கள் என்று சொல்வது, ஏலியன்களைப்பற்றியும் அல்லது மறைக்கப்பட்ட ஆய்வைப் பற்றியும் சிந்திக்கச் செய்கிறது. இறுதியில் ரகசியத்தை அறிவதே கதைக் களமாகிறது. விமானம் போகும் போது எரிக்கல் விழுவது போன்ற காட்சியை, மீண்டும் இது போன்று நடக்கலாம் என்பதைக் காட்டுகிறதா? அல்லது விமானம் காணாமல் போனதை குறிப்பிடுவதாய் அந்த செய்வாய் கிரக ஆராய்ச்சியைக் கூறுகிறதா? என்பதும் இரு வேறுபட்ட கருத்தாகவே உள்ளது.
தமிழர்களின் ரகசியத்தில் கைவைக்கிறேன் என்று, தமிழர்களின் வரலாற்றை மாற்றி விடாமல் இருந்தால் சரி.
-தீசன்