2020 நிறைய பேர் எதிர்பார்த்த ஒரு வருடம் ஆனால் யாருமே எதிர்பாராத விஷயம் கொரோனா.
தவறு செய்து சிறையில் இருப்பவர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் தவறே செய்யாமல் சிறையில் இருந்தவர்களை பார்த்தேன் 2020 இல்.
டாக்டர் APJ. அப்துல் கலாம் ஐயா அவர்கள், இந்தியா வல்லரசாக மாறும் வருடம் என கனவு கண்ட ஆண்டு இது. ஆனால் இந்தியா மட்டுமல்லாமல் உலகிலே பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் முதன்மை பெற்ற அமெரிக்கா முதல் எல்லா நாடுகளிலும் வாழ்ந்து வரும் மக்களிடையே ஜாதி, மதம், இனம், மொழி பாராமல் பலரது உயிரையும், பலரது உடல் நலத்தையும் பறித்து, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொரானா என்ற தன் பெயரை உச்சரிக்க வைத்து, உலகையே உலுக்கி எடுத்துவிட்டது இக்கிருமி.
இதில் மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால், நோயினால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு பக்கமிருக்க.. வறுமையினால் பாதிக்கப்படுபவர்கள் பலர் மறுபக்கம் இருக்க..
தனக்கு மேல் சக்தி இல்லை என்று கூறுபவர்களின் மனநிலையை மாற்றும் விதமாக இந்த ஆறு மாத காலங்கள் கழிந்து விட்டது. பணக்காரர்கள், தான் சேர்த்து வைத்த பணத்தை சாதாரணமாக செலவு செய்ய, தினக்கூலி செய்பவர்களுக்கோ தங்களின் அடுத்தவேளை சோற்றை தயார் செய்வதற்கே எங்கு யாரிடம் சென்று கடன் வாங்குவது என்ற சிந்திக்கும் நிலை வந்தது.
இதற்கான தீர்வு கிடைத்து விடாதா?.. யாரேனும் மருந்து கண்டுபிடிக்க மாட்டார்களா?..
எப்படியாவது நாம் இதிலிருந்து வெளிவர மாட்டோமா?..
எப்போது இதை விட்டு வெளி வருவோம்?..
என்ற கொடுமையான அன்றைய காலத்தை காட்டிலும் மிகுந்த கொடுமையான விஷயம் எது தெரியுமா?
தட்டையான் மூக்குடையான் வெட்டுவான் விடமாவான்
கட்டுடல் மேனியவன் காயமற்று வீற்றிருக்க
மற்றவன் கொற்றவன் வித்துடல் ஆகி நிற்க
சாசில்லை மேசில்லை கொரானான் வை ராசா
என் செய்வாய் என் ராசா?
இந்த செய்யுள் வாட்ஸ் அப்பில் பலரிடம் உலா வந்ததது தான். அதுவும் இப்பாடல் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டது அனைத்தைக் காட்டிலும் கொடுமையான செய்தி.
உண்மையில் கொரானா பற்றி எந்த தமிழ் இலக்கணமும் கூறவில்லை, மேலுள்ள செய்யுளெல்லாம் தற்கால புலவர்களின் விளையாட்டு.
நோய்களைப் பற்றியும் அதை கையாளும் முறைப் பற்றியும் திருக்குறளும் சித்தர் இலக்கியமும் பல செய்திகளைக் கூறுகிறது.
அதைப் பல இணைய உலவிகளும் பதிவிட்டார்கள். அவர்களுக்கு என் பாராட்டுகள். ஆனால் கொரானா காலத்தில் இருந்த நம் நாட்டின் நிலையைப் பற்றிய குறளை யாருமே பதிவிட்டதாய் எனக்கு தெரியவில்லை.
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கு வைந்து (குறள்-738)
ஒரு நாடு எப்போது தெரியுமா இது ஒரு வளமான நாடு என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது, நோய் இல்லாத நிலை, அதிகமான வருவாய், அதிகமான விளைச்சல், மக்களின் மகிழ்ச்சி, பயமில்லாத பாதுகாப்பான வாழ்கை. இவை ஐந்தும் ஒரு சேர்ந்து அமையும் போது தான்.
கொரானா படு வேகமாக பரவிய அக்காலத்தில், நாட்டிற்கு அதிகமான வருவாய் இல்லை, விவசாயிகளால் விவசாயத்தை மேற்கொள்ள முடியவில்லை அதனால் விளைச்சலே இல்லை, இந்நோய் வந்தாலே மரணம் தான் எனும் போது பயமில்லாத பாதுகாப்பான வாழ்க்கையும் இல்லை, அதனால் வீட்டிலேயே இருந்த போது கொஞ்ச நாட்களிலே நாட்டு மக்களின் மனதில் மகிழ்ச்சியும் இல்லாமல் போனது.
ஒரு வளமான நாட்டிற்கு தேவையான ஐந்தையுமே அன்று இந்தியா மட்டுமல்ல பெரும்பாலான நாடுகள் இழந்து போயின. எந்த ஒரு நாட்டின் வளத்தையும் 'நோய்' கெடுத்துவிடும் என்பதாலே குறள் 738 ல் வள்ளுவர் பிணியின்மை என்று நோயைப் பற்றிக் கூறி ஆரம்பித்துள்ளார்.
அதனால் தட்டையான் மூக்குடையான் எனும் பொய் செய்யுளைக் காட்டிலும் வள்ளுவரின் 738 ஆவது குறட்பாவே கொரானா காலத்தை தெளிவுற காட்டும் தமிழ் செய்யுள் என்பது என் துணிபு.
பா குறள்மகன்