அண்மை

ஞானத்தைத் தேடி நூல் வெளியீடு

 அணிந்துரை

ஞானம் பற்றி எழுத வயது தேவை, இங்கு வயது என்பது உடல் அடையும் பரிணாம வளர்ச்சி இல்லை. அன்றாட அநுபவம் தருகிற ஒரு முதிர்ச்சி. கவிஞர் வைரமுத்து ஒருமுறை சொன்னார். "நீங்கள் தமிழைப்(திருக்குறளை) படிக்கிறீர்கள் என்றால் ஈராயிரம் ஆண்டுகள் தொன்மையான பண்பாட்டினையும் அநுபவத்தையும் அதோடு சேர்த்தே படிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!"


80 ஆண்டுகள் வாழ்ந்து ஒருவன் எட்டுகிற குறிப்பிட்ட துறைசார்ந்த அநுபவத்தை, எட்டுமாதங்கள் ஒருநூலகத்தில் அத்துறைசார்ந்த நூலை வாசித்தே ஒருவனால் (ஞான வடிவில்) எட்டிவிட முடியும்.

இந்நூலின் முதலிரு தலைப்புகளை கடந்தாலே அது கண்கூடும். தந்தையின் தோளில் அமர்ந்து தந்தையைக் காட்டிலும் அதிக தூரம் காணும் மகனைப் போல, நம் முன்னோரது எழுத்தை வாசிப்பதால் அவர்களது அநுபவமும் ஞானமாய் நமக்கு சேர்ந்து கிட்டுகிறது. நன்கு கனிந்துவிட்ட பழத்தை விட செங்காயாக இருக்கும் போது ஒருவித தனி ருசி இருக்கும்.

இந்நூலையும் நூலாசிரியரையும் அத்தகைய ருசி கொண்டோருக்கு மிகவும் பிடித்துவிடும்.

வாழ்வில் எத்தகு கடினமான தருணத்திலும் திருக்குறளையோ பகவத்கீதையையோ அர்த்தமுள்ள இந்துமதத்தையோ புரட்டினால் நிச்சயமாக ஒரு தெளிவுகிட்டும். அவ்வகையில்,

இந்நூல் ஒரு மினி திருக்குறள்…!

ஒரு நானோ பகவத்கீதை…!

ஒரு மைக்ரோ அர்த்தமுள்ள இந்துமதம்…!


"இளைதாக முள்மரம் கொல்க"

என்பார் வள்ளுவர். இளமையிலே இந்நூலை வாசித்து தர்க்கம் புரிவோர் தங்களின் தவறுகளையும் எளிதாக மனமுவந்து களையவும் கூடும். நன்னெறி நல்கும் இத்தகு நன்னூல்கள் நாடெங்கும் பெருக! நல்வாய்ப்பு தருக! நற்பலன் பெறுக!


                                                        இப்படிக்கு,

சே.சூரியராஜ்



என்னுரை


ஞானத்தைத் தேட வைத்த தமிழ் தாய்க்கு என் முதல் வணக்கம். உலக இயக்கத்தோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்கள் இன்றைய அறிவியலார் விளக்கக் கூடிய அளவிலே தங்களது கருத்துக்களை முன்வைத்து இருந்தாலும் ஞானிகளின் கருத்துக்கள் ஆச்சரியமாகவே உள்ளது. இயல்பான வாழ்வினிலே சுகத்தைத் தேடும் மனிதனானவன் எவரும் இல்லாத தனிமையோடு சுகமாக வாழும் ஞானியைக் கண்டு வியந்து போகிறான். வாழத் தேவையான சூத்திரத்தை தரும் அவர்கள் வாழ ஆசை இல்லாமல் இருப்பதைக் கண்டு குழப்பம் அடைகிறான். ஞானம் பற்றியும் ஞான வாழ்வைப் பற்றியும் அறியத் தொடங்கும் லௌகீக மனிதனுக்கு இந்நூல் நிச்சயம் உதவி செய்யும் என நான் நம்புகிறேன். ஞானவாதிகளின் தத்துவங்களை எளிதில் விளக்க மகாபாரத கதைகளை நூல் முழுதும் தேவையான இடத்தில் உதாரணமாய்க் காட்டியுள்ளேன். வரலாற்றை நேரடியாக படிப்பதை காட்டிலும் புனைவு கதைகளாய் படிக்கையில் பசுமரத்தாணி போல் மனதில் பதிகிறது. அதேபோல தத்துவங்களை வெறும் வார்த்தைகளாய் அல்லாமல் கதைகளாய் தெரிந்து கொள்ளும் போது எளிதில் புரிகிறது. நீங்களும் இவ்வுலகமும் என்றும் அமைதியாகவும் பரிபூரண நிம்மதியோடு இன்புற்று வாழ உதவி செய்வதற்கு முயல்வதே இந்நூலின் முதற்கடனாகும். அணுவளவே ஞான துளிகள் இடம்பெற்றிருக்கும் இந்நூலை இயம்புவதற்கு அறிவும் அனுபவமும் நூல் வழியே எமக்களித்த அமர நிலை எய்திய எனது ஞான குருமார்கள் அனைவருக்கும் அடக்கத்துடனே நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இச்சிறு நூலுக்கும் சிறப்பான அணிந்துரை வழங்கிய சொல்லாய்வுச் செல்வர் சே.சூரியராஜ் அவர்களுக்கும் நூல் வடிவமைப்பிற்குதவிய அண்ணன் ஸ்ரீராம் அவர்களுக்கும் ஞானத்தை தேடி வந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் பணிவான வணக்கங்கள் நன்றிகள்.


தமிழ்நேசன்,

                                                           தீசன்



நூல் வெளியீடு




ஞானத்தைத் தேடி நூலை முற்றிலும் இலவசமாக PDF வடிவில் பெறுங்கள்

ஞானத்தைத் தேடி நூலை Kindle Ebook ( ₹49 )வடிவில் பெறுங்கள்


கருத்துரையிடுக

புதியது பழையவை