அண்மை

கவிஞர் கண்ணதாசன் எழுதிய வனவாசம் நூல் விமர்சனம்

முன்னாள் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள், நான் படித்ததிலே உண்மையான சுயசரிதம் இரண்டு தான். ஒன்று சத்திய சோதனை. இரண்டாவது வனவாசம் என்கிறார்.


அது உண்மை தான். இந்நூலைப் படிக்கும் யாராலும் 'இந்த நிகழ்வு பொய்' என்று மறுத்துவிட முடியாது.


1962 லே நான்கு ரூபாக்கு விற்ற போதிலும் இந்நூல் அமோகமாக விற்று தீர்ந்ததாம்.


கவிஞர் கண்ணதாசன் அவர்கள், காந்தியின் சுயசரிதத்தை படித்த பின்பே இந்நூலை எழுதுகிறேன் அதனால் உண்மையை நிர்வாணமாக சொல்வதில் தவறில்லை என்கிறார்.


புதிய முன்னுரையில் கவிஞர் குறிப்பிடும் கருத்துக்கள்:


vanavasam
COPYRIGHT FREE IMAGE FROM PIXABAY



உலகம் என்ன குளிக்கும் அறையா, இஷ்டம் போல் ஆடையின்றி குளிக்க? ஆற்றில் குளிக்கும் போது ஒரு கோவணமாவது கட்டிக் கொள்ளத் தானே வேண்டியிருக்கிறது. அவமானத்திற்கு பயந்து வெட்கப்பட்டு, சில உண்மைகளை மறைந்தே தீரவேண்டியதாகி விட்டது.


என்னோடு பழகியவர்கள் எனக்குப் பின்னால் அதனை வெளியிட்டால், அது எனக்கு செய்யும் உதவியாகவே இருக்கும்.


எழுதுகிறவனைப் பொறுத்தல்ல, எழுதப்படும் செய்திகளைப் பொறுத்து இது ஒரு சுவையான நூல் தான்.


ஒரு பெருமிதம் எனக்குண்டு. என் தலைமுறையில் வாழும் எந்த மனிதனுக்கும், தலைவனுக்கும், கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாதென்பதே அது. இப்படி ஒன்று அமைய வேண்டுமானால், யாரும் நீண்டகாலம் முட்டாளாக இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் கைவரக் கூடிய கலை அல்ல!



இந்நூல் முழுவதிலும் கண்ணதாசன் அவர்கள் தன்னை 'அவன்' என்றே குறிப்பிடுவார். 'நான்' என்று எழுதுவதற்குத் தகுதி போதாது என்ற தன்னடக்கத்துடனேயே 'அவன்' என்று என்னைக் குறிப்பிடுகிறேன் என அவரே கூறி இருப்பார்.


நூலின் முதற் பகுதியாக 'எனது பிள்ளைப் பருவம்'என்று கவிஞர் தன் குழந்தை காலத்தை வருணித்திருப்பார்.


சிறுகூடல்பட்டியில் தன் பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாக அவதரித்ததை பற்றியும் தந்தையின் சீட்டாட்ட குணத்தால் வந்த இழப்புகளைப் பற்றியும். தாயின் மீது அவர் கொண்ட அன்பைப் பற்றியும் உருகியிருப்பார்.


தந்தையின் சீட்டாட்ட தோல்வியால் தாயார் இரவெல்லாம் அழுவார்கள் அதைக் கண்டு அவனும் அழுவான் எனும் கவிஞரின் வார்த்தைகளை படிப்போரின் கண்கள் குளமாகாமல் இருப்பதில்லை.


அவரது குருகுல வாழ்க்கையைக் கூறியதோடு முதற்பகுதி முடிவடையும். அந்த இறுதி வரிகள் இதோ,


ஒருமுறை சில மாணவர்களோடு சுவரேறிக் குதித்து நாலு மைல் தொலைவிலுள்ள காரைக்குடிக்குச் சென்று 'கண்ணகி' படம் பார்க்கப் போனான். டிக்கெட் எடுத்துக்கொட்டகைக்குள் நுழையப் போகும் போது அவன் தோளிலே ஒரு கை விழுந்தது. ஹாஸ்டல் நிர்வாகி மகராஜன் அங்கே வந்திருந்தார். டிக்கெட்டைக் கிழித்துப் போட்டுவிட்டு, அவனும் சக மாணவர்களும் திரும்ப வேண்டியதாயிற்று. மறுநாள் காலையில் குருகுல நிர்வாகி சுப்பிரமணிய நயினார் அவனையும், அவனோடு சேர்ந்த மாணவர்களையும் பெட்டி படுக்கைகளைத் தூக்கி வெளியே வைத்து ஊருக்குப் போகச் சொல்லிவிட்டார். நேரம் போகப் போக அவரே மனம் மாறி மன்னிப்புக் கொடுத்தார். கடைசியாக மிச்சமிருந்த ஓராண்டுக் காலத்திலும் ஒழுங்காகப் படித்து எட்டாம் வகுப்பை முடித்துக்கொண்டு குருகுலத்தை விட்டு வெளியேறும்போது, சுப்பிரமணி நயினார் அவனுக்குக் கொடுத்த வாழ்த்து. 'நீ எங்கு போனாலும் உருப்படமாட்டே' என்பதேயாகும்.


இனி தான் கதையே ஆரம்பமாகும். ஒரு மனிதனுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா? என்ற கேள்வி இதை படிக்கும் அனைவரது மனதிலும் எழுந்துவிடும்.


மொத்தம் 64 அத்தியாயம். 424 பக்கம். 2010 லிருந்து வெளிவரும் பதிப்புகள் அனைத்துமே மிகவும் தரமானதாய் உள்ளது.


இந்த அத்தியாயங்களில் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பிரிவு, உறவு, காதல், மோகம், துரோகம், இன்பம், துன்பம், ஏமாற்றம், நிறை, குறை, திடீர் உதவி, சட்ட சிக்கல், போராட்ட வாழ்வு என அனைத்துமே வெட்டவெளிச்சமாக்கப்பட்டிருக்கும்.





கவிஞர், கலைஞர் கருணாநிதி அவர்களை சந்தித்த பின் கதை இன்னமும் வேகம் பிடிக்கும். படிக்கும் நமக்கு அது ஒரு போட்டி உணர்வை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.


கவிஞரின் பசியைத் தீர்க்க கருணாநிதி, அருகில் இருப்பவரின் கூடையில் இருக்கும் பழத்தைத் திருடலாமா? எனக் கேட்பது படிப்போருக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியைத் தரும்.


இலக்கிய உலகத்திலும் நம் பங்கு இருக்க வேண்டுமென 'தென்றல் இதழ்' பீடு நடைப் போட்டு எழுவது, உத்வேகம் அளிக்குமொரு பகுதி.


'லிவ்விங் டுகெதர்' எனும் இக்கால நடைமுறையை 1950களிலே கண்ணதாசன் நடத்திக்காட்டி இருப்பார். அந்த பக்கங்கள் நிச்சயம் உங்களது கண்களை விழிக்கச் செய்யும்.


பெரிய பெரிய நாவல்களில் வருவது போல் எங்கோ நடந்த சமாச்சாரம் நடு அத்தியாயத்தில் இணைவது போன்ற சுவையுள்ள நிகழ்வை அந்த பெண் வனவாசத்திலும் ஏற்படுத்தி தருவாள். கதை போன்ற அமைப்புக் கொண்ட இந்நூல் ஒரு சுயசரிதமாக இருப்பது அதிசயமே.


குறிப்பிட்ட வருடங்கள் ஒரு கட்சியில் இருந்து மனதிற்கு விரோதமாக செயல்பட்டதன் காரணமாகவே இந்நூலுக்கு வனவாசமென்று கவிஞர் பெயரிட்டுள்ளார்.


மனப்போராட்டம், பயங்கர அனுபவம், ஆசை அச்சம், கொதித்தெழுந்தான், போராட்டம், இரண்டு இரண்டு, கணையாழியும் கசப்பும் போன்ற அத்தியாயங்கள் சிரிப்பையும் திகிலையும் மாறி மாறி கொடுக்கும்.


ஒரு ஆண் எவற்றையெல்லாம் இன்னொருவனுக்கு சொல்ல தயக்கப்படுவானோ அவை அனைத்துமே இந்நூலில் அப்பட்டமாக இடம் பெற்றிருக்கும்.

அதனால் சுயசரிதத்திற்குரிய தகுதியை இந்நூல் நூற்றுக்கு நூறு சதம் பெற்றுவிடுகிறது.


கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி இக்கால மாணவனுக்கு சலிப்பைத் தரக்கூடும். அந்த வகையில் கவிஞர் எழுதிய வனவாசம் அப்படிபட்டதல்ல.


முதற்பதிப்பில் கண்ணதாசனின் உரை,


1943 - லிருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்க்கை நடந்த விதம் இதில் வருணிக்கப்பட்டுள்ளது. சில உண்மைகளை நிர்வாணமாகக் காட்டியிருக்கிறேன். சில துயரங்களைத் தாழ்வு கருதாது கூறியிருக்கிறேன். எனது மேன்மைகள் என்று நான் கருதுபவனவற்றை பயத்துடனேயே குறிப்பிட்டிருக்கிறேன். ஒரு பெரிய அரசியல் தலைவனின் வரலாறுமல்ல இது, ஒரு மாபெரும் கவிஞனின் காவிய வாழ்க்கையுமல்ல இது.வாழ்க்கை வழிப்போக்கன் ஒருவனின் உயர்வு, தாழ்வுகளே இந்நூல். இதனைப் படிக்கின்றவர்கள் என்னை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். சில ரசிகர்களுக்காக இந்தச் சரிதம் பலகாலம் காத்துக் கொண்டிருக்க நேர்ந்தாலும் நான் வருந்தமாட்டேன். ஏனென்றால், என் காலத்துக்குப் பிறகு இது ஓர் அதிசயமாக இருக்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு.


கவிஞர் கண்ணதாசன் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிய ஆசைப்படுவர்களுக்கும், சுறு சுறுப் பான தமிழ் நடையின் காதலர்களுக்கும் இந்நூல் நிச்சயம் திருப்தி தரும்.


நூலின் விலை ரூபாய் 185/-


மிகக்குறைந்த டெலிவரி சார்ஜ் ( ரூபாய் 18 க்கு ) இந்நூலைப் பெறுங்கள்


Amazon kindle Ebook பதிப்பாக ( ரூபாய் 157 க்கு ) இந்நூலைப் பெறுங்கள்


© Dhinaththendral Own the COPYRIGHT to this Content

கருத்துரையிடுக

புதியது பழையவை