அண்மை

குறுந்தொகை 1 சிறுகதை - குகன் (kurunthogai 1 story)

காதல் லஞ்சம்

kurunthogai


ர்ர்ம்ம்….. ர்ர்ம்ம்… என தன் லட்சரூபாய் பெருமானம் உள்ள பைக்கின் ஆக்ஸிலேட்டரை திருகிக் கொண்டிருந்தான் ராஜேஷ்.


தம்பி ராஜேசு, திரும்ப வெளிநாடு எப்ப போற?


'அடுத்த மாசம் கிளம்பிடுவேன்' என்றான் அந்த தெருவின் பெரியவரிடம்.

'ம்ம்… சரிப்பா' என அவர் கூறி செல்ல

மீண்டும் ஒரு உறுமலுடன் தன் நண்பர்களை பார்க்க பைக்கில் புறப்பட்டான்.


ராஜேஷ் பணக்கார வாலிபன். வெளிநாட்டில் மென் பொருள் தொழிற்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்பவன். ஆடம்பரத்திற்க்காக அதிகம் செலவு செய்வான். அவனும் அவனது நண்பர்கள் வட்டமும் பணக்காரர்களே.


அவன் சென்ற வழியே ஒரு பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி பேருந்திற்க்காக காத்துக் கொண்டிருந்த தன்னுடன் பள்ளியில் படித்த தோழியான லெட்சுமி நிற்பதை கண்டு, அவளை நோக்கி வண்டியை திருப்பினான்.


தன் முன் ஒரு ஆடம்பர வண்டி திடீரென வந்து நிற்க, அதிர்ச்சியில் சற்று பின் சென்று முன் பார்த்தாள் லெட்சுமி.


முகத்தில் புன்னகை மலர்ந்தது. அது தனது பள்ளித் தோழன் ராஜேஷ் என்று கண்டு கொண்டாள்.


'ஏ ராஜேஷ் எப்படி இருக்க?'


'நல்லா இருக்கேன் நீ?'


'நானும் நல்லா இருக்கேன். நீதான் வெளிநாடு  போனதுலேந்து என்ன மறந்துட்ட'


'அப்படிலாம் இல்ல லெட்சு'


இவ்வாறாக இருவருக்கும் உரையாடல் போய் கொண்டிருக்கையில், ராஜேஷ் லெட்சுமியின் அருகில் இருந்த அந்த அழகிய பெண்ணை தன் கடைக் கண்ணால் கண்டான்.


அவளோ அழகிய முகத்துடனும் மிக எளிமையான தோற்றத்துடனும் பெண்களுக்கே உரித்தான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய அனைத்து குணங்களையும் கொண்ட அடக்கமான பெண்ணாக அவனுக்கு தெரிந்தாள்.


இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் பேருந்து பெருத்த சத்தம் எழுப்பிக் கொண்டே வந்து நின்றது. உடனே ராஜேஷ் தன் தோழியிடம் விடை பெற்றுக் கொண்டு. இமை மறைவில் விழி மறைந்து கொண்டு பார்ப்பது போல் அந்த பெண்ணை இவனது விழிகள் களவு கொண்டே இருந்தது.


நடந்த இந்த சம்பவத்தை இரவு நேர சந்திப்பில் தன் நண்பர்கள் கூட்டத்தில் கூறினான் ராஜேஷ்.


அதில் ஒரு நண்பன், 'இது நிச்சயம் காதல் தான், நீ அவளிடம் உன் காதலை எப்போது சொல்லப் போகிறாய்? என்றான்


அந்த இரவு நிலவின் அழகை அவனது கண்கள் பார்க்க அவனது எண்ணங்களோ அவளின் அழகை நினைத்துக் கொண்டிருந்தது.


அவளது பெயர், மற்ற விவரங்களை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவுகட்டி இருவாரங்களுக்கு பின்பு அவளது பெயர் வள்ளி, அவள் தனது தாய் மாமன் வீட்டில் தங்கி படிக்கிறாள் போன்ற விவரங்களை சிரமப்பட்டு அறிந்துக் கொண்டான்.


இன்னும் தான் வெளிநாடு புறப்பட ஒரு சில வாரமே உள்ளதால். அவளிடம் தன் காதலை கூற நண்பர்களிடம் யோசனை கேட்டான். 


ஒரு நண்பர், 'ராஜேசு நீ எதாவது அந்த பொண்ணுக்கு பிடிக்கிற மாதிரி காஸ்லி கிப்ட் வாங்கி கொடுத்து பிரப்போஸ் பண்ணு' என்றார்.


'அது சரி, அந்த பொண்ணுக்கு என்ன புடிக்கும்?'


'ஓ அப்புடி கேக்குறியா…' யோசனையில் ஆழ்ந்த அந்நண்பர் சில விநாடிகளில் பேசத் தொடங்கினார்.


'ராஜேசு..எந்த பொண்ணுக்குமே நகைனா ரொம்ப புடிக்கும், நீ என்ன பண்ணு அழகா ஒரு நகையோ இல்ல மோதிரமோ வாங்கி கொடுத்து லவ்வ அவள்ட சொல்லு, உன் ஆள் நிச்சயம் அத ஏத்துபா'


நண்பன் கூறிய யோசனை சரிதான் என்ற முடிவுக்கு வந்த ராஜேஷ் விலை அதிகமான ஒரு வைர மோதிரத்தை வாங்கினான். எப்படியும் இந்த விலை மதிப்புள்ள பரிசை பார்த்தாவது, தன் காதலை ஏற்றுக் கொள்வாள் என மனதில் நினைத்துக் கொண்டான்.


மறு நாள் பொழுது விடிய, அவனும் தன் ஒருதலைக் காதலுக்கு இன்று விடியல் கிடைக்கும் என பேருந்து நிறுத்தை நோக்கி சென்றான். பேருந்து நிறுத்தத்தில் வள்ளி இல்லை ஆனால் அவள் தோழியும் தன் பள்ளி தோழியுமான லெட்சுமி நின்று கொண்டிருந்தாள். இவளிடம் தனது எண்ணத்தையும், பரிசையும் கொடுத்து வள்ளியிடம் தன் காதலை சொன்னால் அவள் ஏற்றுக்கொள்வாள் என எண்ணி லெட்சுமியிடம் தனது எண்ணத்தைக் கூறினான்.


'நல்ல வேலை அவள்ட நீ இத கொடுக்கல என்ட வந்த இல்லைனா…' என்று லெட்சுமி இழுத்தாள்


'என்ன ஆகும்?' சற்று பதட்டத்துடனே கேட்டான் ராஜேஷ்.


'அவ மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல. அவளுக்கு பட்டு புடவை, நகை இது மாதிரியான ஆடம்பரமெல்லாம் புடிக்காது, டிசைன் சாரி சுடி கூட போடமாட்டா அவள மாதிரி ஒரு பொண்ண நான் பாத்ததே இல்ல, அது மட்டும் இல்ல அவுங்க அப்பா பெரிய பணக்காரர் அவர் இருக்குற வசதிக்கு இது மாதிரி ஆயிரம் வாங்கி தர முடியும், ஏன் அவளே இந்த மோதிரத்த விடவும் விலை அதிகமான மோதிரம் நிறைய வச்சிருக்கா ஆனா அதெல்லாம் அவளுக்கு புடிக்காம தான் சொந்தமா சொந்த காசுல படிக்கணும்னு, இங்க அவுங்க மாமா வீட்டுல தங்கி பார்ட் டைம் வொர்க் பண்ணிகிட்டே படிக்கிறா'


'இந்த மோதிரத்த அவள்ட கொடுத்திருந்தேனா உன் மேல அவளுக்கு கோபம் தான் வந்திருக்கும், காதல் வந்துருக்காது'


'என் நண்பன் நீ அதுனால தான் இத உன்ட சொல்லுறன் வேற எப்படியாவது அவள இம்ப்ரஸ் பண்ண டிரை பண்ணு, இந்த சின்ன வைரத்த கொடுத்து அந்த பெரிய வைர சிலைய அடைய முடியாது"


என்று தன் தோழியும் வள்ளியின் தோழியுமான லெட்சுமி கூற.


காதலை லஞ்சம் கொடுத்து வாங்க முயன்ற சிறுமையை எண்ணி தலைகுனிந்து புறப்பட்டான்.



கதை - குகன்



குறுந்தொகை 1 பாடல்



செங்களம் படக்கொன்றவுணர்த்தேய்த்த

செங்கோ லம்பிற்செங்கோட்டியானைக்

கழல்தொடிச் சேஎய்குன்றம்

குருதிப் பூவின்குலைக்காந்தட்டே.



ஆசிரியர் - திப்புத் தோளார்



குறுந்தொகை 1 உரை



காதலன் தன் காதலிக்கு தழையாலும் பூவாலும் செய்த தழையாடை ஒன்றை பரிசாக அவளது தோழியிடம் தருகிறான் அதற்கு அவள் இச்சொற்களை கூறி அதை வாங்க மறுக்கிறாள்.


போரில் அரக்கர்களை கொன்ற இரத்த அம்புகளையும் யானைக் கொம்புகளையும் கொண்ட வளைந்த அணிகலன் கொண்டவன் முருகன். அவன் தலைவனாக வீற்றிருக்கும் மலை எங்களது மலை. அங்கே இதே போன்று குருதி நிறத்தில் காந்தள் பூக்கள் மிகுதியாக உள்ளது. அதை வைத்து நாங்களே தழையாடை செய்து கொள்வோம். அதனால் இது வேண்டாம்.


1 கருத்துகள்

  1. வரவேற்கத் தக்க படைப்பு...
    இதுபோல இன்னும் தொடர்ந்து சங்க பாடல்களின் எளிய நடையை இளைய தலைமுறைக்கு கடத்தி செல்லுங்கள்..

    பதிலளிநீக்கு
புதியது பழையவை