அண்மை

தந்திர உலகம் - 1.கருப்புத்தனிமம்

முதல் பாகம் - புகைக்கூண்டு
கருப்புத்தனிமம்

blackelement


நுழையும் முன்....,,


உலகம் தோன்றியிருந்தது...

உயிர்கள் ஒவ்வொன்றாய் உருவெடுத்திருந்தன..

வட அரைக்கோளத்தை விடவும் பூமத்யரேகையிலும்  தென் அரைக்கோளத்திலும் அவற்றின் செறிவும் பரவலும் மிகுந்திருந்த சமயம் அது....கிமு 20,000.!!

இந்தியப் பெருங்கடலின் வடபகுதியில் ஒரு செழிப்பான பெருநிலப்பகுதி... பூகம்பத்தை எதிர்கொண்டிருந்தது...  ஒருவேளை இன்றைக்கு இருப்பதுபோல ரிக்டர் அளவுகோல் அங்கு இருந்திருந்தால் அது 11.5 என காட்டி இருக்கும்.. ஓர் இடத்தில் மட்டுமல்ல... அதன் தாக்கம் அடுத்தடுத்த ஆயிரம் மைல் சுற்றளவிற்கு சங்கிலிதொடர்போல பரிணமித்தது... குலுங்கி கொட்டியது பூமி... தகர்ந்து சரிந்தன வானளாவிய சிகரங்கள்.. பசும்போர்வையென விரிந்திருந்த நூறாயிரம் ஏக்கர் வனங்கள் வேருடன் கிளைகொப்புடன் மண்ணில் புதைந்து போயின... சற்று நேரத்தில்... ஏழு பனைமர உயரத்திற்கு  எல்லையில்லா அகலத்திற்கு எழுந்து வந்தது ஆழிப்பேரலை எனும் ஊழியின் தத்ரூப நேரலை...!


கண்டம் கொண்டிருந்த கண்கண்ட பொருளெல்லாம் வாரிசுருட்டப்பட்டு வாரியில் போய் சேர்ந்தன.. மிதக்கும் பொருள்கள் கூட மூழ்கிப்போயின.. மூழ்கும் பொருளெல்லாம் அமிழ்ந்தே போயின...!..ஆழ்கடல் அமைதியில்..!


பேரிரைச்சலான அந்த அலை யோசையின் முன்னால்.. எண்ணிலடங்கா உயிரினங்களின் மரண ஓலம் அபயக்குரல்  எல்லாம் அடங்கித்தான் போயிருந்தது. 


அடுத்த சில திங்கள்கள் தொடர்ந்து 

ஓடி வந்த பற்பல சிறு கடற்கோள்களும்...  பூகம்பத்தின் சிலகுட்டிப் பேரப்பிள்ளைகளும் முக்கால்வாசி கண்டத்தை கரைத்து அரித்த பிறகுதான் காலனின் மரணதாகம் ... சற்றே தணிந்தது போல இருந்தது. 


எஞ்சி இருந்தது இலங்கை ஒத்த சில தீவுகள் தாம் அவையும் வாழ்வதற்கு அருகதை அற்றதாய் மாறிப்போயிருந்தன. 

ஏற்கனவே வெவ்வேறு கண்டங்களுக்கு இடம்பெயர்ந்த சில உயிரினங்கள் தமது பழைய தாயகத்தின் தொடர்பை அறவே இழந்துவிட்டிருந்தன. 


தப்பிப்பிழைத்தவை தாம் மேலும் புவியில் நீடித்து வாழ பல புதியவற்றை கற்றுத்தேர வேண்டியிருந்தது..  ஒவ்வொரு உயிரின சிற்றினமும் பிரத்யேகமாக தாமே தமக்கென இயற்கையில் கற்றுத்தேர்ந்த விஷயங்களில் அது அது வல்லமை கொண்டதாக இருந்தது.. ஒன்றின் வல்லமை மற்றொன்றிற்கு ஆச்சரியமாக இருக்கும்.. மந்திரமாய் மாயமாய் தோன்றும்... அவை மந்திரங்கள் அல்ல... தெரிந்துகொண்ட இயற்கை விதிகளின் தந்திரங்கள்... !


தந்திரங்கள் சூழ்ந்த இவ்வுலகை வரலாற்றுக்கு முற்பட்ட கால ஓட்டத்தில் ஒரு வலம் வரும் அநுபவத்தை பெற ஆவல் கொள்வீரானால்...



வாருங்கள்.....!



இனி  கதைக்குள் நுழைவோம்...





(முதல் பாகம் )--புகைக்கூண்டு


1. கருப்புத்தனிமம்.


முகில்கள் மூடி நிற்கும் முதுபெரும் மலைசிகரம் அது.. மேகங்களின் இடைவெளி ஊடாக இளங்காலைக் கதிரவனின் இதமான கதிர்கள்விரவி அச்சிகரத்தை குளிர்காய வைத்துக்கொண்டிருந்தன... இலையுதிர் காலம்  ஆதலால் வேர்களைப்போல தோற்றமளிக்கும் மரங்கள் ஆங்காங்கு தென்பட்டன. காகம் ஒன்று மும்முரமாக தன் அலகு கொண்டு காய்ந்த கிளைக்கொம்பு ஒன்றை பிய்த்துக்கொண்டிருந்தது. இப்படியும் அப்படியுமாக அது இழுத்த இழுப்பில் அச்சிறுகிளைக்கொம்பு "மடக்" எனமுறிந்தது. அதை வாயில் கவ்விக்கொண்டு சிகரத்தின் உச்சியிலிருந்து சற்றே கீழே போனால் மலைச்சரிவின்கண் தேவதாரு மரத்தில் தான் கட்டிவரும் கூடு இருக்கும் திசை நோக்கி பறந்து வந்து சேர்ந்தது. 


ஆங்கு, ஏற்கனவே அதன் துணை காகம் தன்பங்கிற்கு ஒரு சுள்ளிக்குச்சியை கொண்டுவந்து கூட்டினை கட்டமைத்து கொண்டிருக்க... அதனருகே இப்பெண்காகம் வந்தமர்ந்தது..


குருவிகள் கட்டுவது போல நேர்த்தியான கூடு அல்ல.. அது! முள் களையும் இலைச்சருகுகளையும் ஒரு மூலையில் கூட்டிப்பெருக்கி குவித்து வைத்தது போலிருந்தது....வெளித்தோற்றம் ..ஆனால் உட்புறம் மூன்று முட்டைகள் வரை தாராளமாக தாங்கும் வலிமையும் வசதியும் இருக்கவே செய்தது.. 


அந்த தேவதாரு மரம் மிகப்பருமனாக போத்துபோல பெருத்து ஓங்கி வளர்ந்து ஏராளமான கிளைகளுடன் அளவான இலைகளுடன் இருந்தது. நூற்றுக்கணக்கான பறவை ஊர்வன அணில்கள் பூச்சிகளின் வாழிடமாக விளங்கியது. அதில் ஏற்கனவே வேறுசில பறவைகள்....  கட்டி- முட்டையிட்டு -குஞ்சுபொறித்து- பிறகு விட்டுச்சென்ற பல கூடுகளும் இருந்தன. மரமும் அதன் அடிப்பரப்பும் காலங்காலமாக விழுந்த பறவை எச்சங்களால் வண்ணம்பூச பட்டிருந்தது...! காகங்களை தவிர சில அரியவகை பருந்துகளும்.. நாரை குருவிகளும்

அதில் வசிக்கின்றன. இரவு வந்தால் பழந்திண்ணி வௌவால்களும் படையோடு வந்து விடும்.


சற்றே வழக்கத்திற்கு மாறாக அச்சமயம் ஒரு பஞ்சவர்ணகிளி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து அம்மரத்தில் அமர்ந்து விசித்திரமாக ஒலி எழுப்பி ஏனைய பட்சிகளை அச்சம் கொள்ள செய்தது.. அதன் சிறகுகளின் வண்ணக்கலவையையும் அது எழுப்பிய வினோத ஒலியையும் மற்ற பறவைகளால் எளிதாக ஏற்கமுடியவில்லை. பயந்த சில சிட்டுக்குருவிகள் வானில் பறந்து கீச்சிட்டன. பருந்துகளே சற்று பம்மித்தான் கிடந்தன. நாரைகள் நடுங்கின.. அணில்கள் கிளைவிட்டு கிளைதாவின.. காகங்கள் மட்டும் துணிந்து அந்த புது பறவையை விரட்டும்  தொனியில் வட்டமிட்டு ஒன்றுகூடி கரைந்தன.. கா..கா..கா.. என்று அவைகரைந்தது..போ போ..போ.. என்பது போல இருந்தது.


பஞ்சவர்ண பட்சி அசரவில்லை! மறுபடியும் அது விநோத குரல்

எழுப்ப... இம்முறை அதை தொடர்ந்து வேறுபல ஒலிகளும் வேறுமார்க்கத்தில் ஒலித்தன..


இலையும் புதரும் அசைகிற ஓசை..!


சர சர வென இரைச்சல்.. சிறுசிறு செடிகள் வளைந்து ஒடிவது போலவும் காய்ந்து உதிர்ந்த சருகுகளை கசங்குவது போலவும் நொறுங்குவது போலவும் வெகு அருகே கேட்டது..

பறவைகளின் பதற்றம் அதிகமானது.. 


அவை ஆளுக்கொரு திசையில் எழுந்து பறந்து பிரம்மாண்டமான அந்த மரத்தை சுற்றிச் சுற்றி கூச்சலிட்டன. அநேக பறவைகள் ஒரேசமயத்தில் இப்படி எழுப்பிய அவ்வொலி அந்நேரத்தில் மலைச்சிகரத்தையும் தாண்டி வெகுதொலைவில் அடிவார கானகத்தில் ஒரு குட்டையில் நீர் அருந்திக்கொண்டிருந்த இரு 'லாமா' வகை செம்மறி ஆடுகளை அண்ணாந்து பார்க்கச்செய்தது. அவை அவசர அவசரமாக நீர் அருந்திவிட்டு அகன்றுசென்று புதரில் மறைந்தன..


பொதுவாக பறவைகளின் இத்தகைய பரபரப்பு காட்டின் மற்ற உயிரினங்களுக்கு ஒரு எச்சரிக்கை சமிக்ஞை...! அபாயகரமான பிராணியின் வருகை... அந்நிய சிற்றின தரிசனம் ... சிறிய இயற்கை பேரிடர்..இப்படி எதுவாகவும் இருக்கலாம். இது பறவைகளின் தொண்டு உள்ளமோ சேவையோ அல்ல..

அவற்றின் அசைவுகளை கொண்டு ஏனைய மிருகங்கள் வழிவழியாக உணர்ந்துகொண்ட மரபுவழி பட்டறிவு அவ்வளவுதான்.


முதலில் அந்நிய சிற்றினமான பஞ்சவர்ணகிளி தந்த தரிசனம் தான் பறவைகளின் 'கிலி' க்கு காரணமென்றாலும் ...


உண்மையில் அதைத்தொடர்ந்து எழுந்த பரவலான சலசலப்பு ஓசைதான் அந்த புள்ளினங்களை புல்லரிக்க செய்துவிட்டிருந்தது..!


அதுவரையில் அந்த ஜோதியில் ஐக்கியமாகாமல் தங்களின் கூடுகட்டும்பணியை செவ்வனே செய்த இரு காகங்களும் தற்போது தங்களை அறியாமல் அனிச்சையாக இன இயல்பினால் சேர்ந்து கரைந்து கூச்சலிட்டு அந்த பஞ்சவர்ணத்தை விரட்ட முயன்றன. பஞ்சவர்ண பறவையோ எதையோ எதிர்பார்த்து ஒரே திசையை நோக்கியிருந்ததே தவிர இவற்றின் கூச்சலை அசட்டை செய்யவில்லை.


காகங்களும் சலசலப்பு கேட்கும் திசையை கவலையுடன்உற்று

நோக்கின... வருவது மாமிச உண்ணி மிருகமாயின் அச்சம் இல்லை. அவற்றுக்கு மரத்தில் வேலை இல்லை..!

ஒருவேளை ராட்சத மலைபாம்பாக இருந்தாலும் அச்சமில்லை.. ஏனெனில் காகம் இன்னும் முட்டையிட வில்லை..!


ஆனால் வானர படையாம் மந்திகளின் கூட்டம் என்றால் என்ன செய்வது...? அது உண்மையில் அபாயம்..! குரங்கினங்கள் பறவைகளின் கூட்டை பிய்த்து எறிவதை தமது தார்மீக கடமையென கொண்டவை! அவற்றிடமிருந்து கூட்டினை சேதமின்றி காப்பது என்பது தீப்பிடித்து எரிகிற காட்டினை தம் அலகில்  நீர்கொணர்ந்து அணைப்பதற்கு ஒப்பானது.! என்பதை காகங்கள் அறிந்திருந்தன.. கவலையுடனும் மிகுந்த ஆயத்தமுடனும் தலையை சாய்த்தபடி காகங்களிரண்டும் உற்று நோக்கின..


ஓசைவந்த திசையிலிருந்து இறுதியில் வெளிப்பட்ட உருவங்கள்... அந்த காகங்களை 

சிறகடித்து வேறிடம்நோக்கி பறந்தோட செய்தன...!! 


வந்தவை மந்திகளல்ல... மனிதர்கள்...! 


குரங்குகளாவது இன்னது செய்யும் என பட்சிகளால் ஒருவாறு யூகித்துவிட முடியும்.,..ஆனால்  இந்த மனித ஜென்மங்கள் எப்போது என்ன செய்யும் என்பது அவற்றுக்கே தெரியாத போது பட்சிகள் என்ன செய்யும்... பாவம்?


மேலும் ஒருவாரமாக கட்டிவரும் கூடா.. இல்லை உயிரா என்றால் ... உயிர்தான் முக்கியம். உயிரே போய்விட்டால் வெறுங்கூடு என்னத்துக்கு....?


மொத்தம் நான்கு மனிதர்கள்.. கைகளில் தடி..கம்பு..அம்பு..! இடையில் சுரைகுடுவையில் நீர்..!

தோளில் தாவரக்கொடி- விழுதுகளை கொண்டு செய்த கயிறு..!

கோரைப்புற்களையும் மூங்கிலையும் நுணுக்கமாக நெய்து கைகால் முழங்கால் மார்பு தொடைப்பகுதிகளில் கவச அணிகலனாக அணிந்திருந்தனர். குறிப்பிட்டு சொல்லமுடியாத ஏதோ மிருக தோல் ஒன்றை உடையாய் உடுத்தி இருந்தனர்...கீழே மட்டும்..!

நால்வரும் ஆண்கள்தான் போலும்....!


நால்வரும் நேராக அந்த தேவதாரு மரத்தடியில் வந்து நின்று அண்ணாந்து பார்த்தனர்.. பஞ்சவர்ணகிளி மட்டும் அமர்ந்திருந்தது... அவர்களில் ஒருவன் புதிதாக கட்டிவரும் அந்த காகத்தின் கூட்டினை சுட்டி கைகாட்டினான். ஒருவன் மட்டும் மிக லாவகமாக விறுவிறுவென மரத்தில் ஏறினான்;

கூடு இருந்த கிளையில் தாவி அதன் அருகில் சென்று எட்டிப்பார்த்தான். கூட்டில் எதுவுமில்லை..என்பதுபோல சைகை செய்தான்.. கீழே நின்ற  மூவரும் சற்றே புன்னகை புரிந்தனர். அவர்களில் ஒருவன் தன் இடையில் இருந்த ஒரு மூங்கில்குழாய் துண்டத்தை தூக்கி மேலே வீசினான். அதை பற்றிக் கொண்ட மேலிருந்த ஆள் அதை  திறந்து ஒருகரத்தில் பிடித்து மறுகரத்தின் உள்ளங்கையில் அதை சாய்க்க.. மூங்கில் குழாயிலிருந்து பளிச்சென கண்ணை கவரும் அழகிய பச்சைநிற மரகத கல் ஒன்று வந்து விழுந்தது. அதை பத்திரமாக எடுத்து காக்கை கூட்டில் வைத்தான்; இல்லை இல்லை சொருகினான். அந்த கல் அந்த முள்கூட்டில் எவ்வித இடையூறுமின்றி நன்றாக நுழைந்துகொண்டது. சிக்கிக்கொண்டது எனவும் கூறலாம். 


வந்த வேலை முடிந்தபடியால் கீழே இறங்க எத்தனித்தான்..தற்செயலாக அந்த மரத்தின்கண் இருந்த பொந்து ஒன்று அவன் கண்ணில் பட, அருகே சென்று அதற்குள் கையை விட்டுத்துழாவி பார்த்தான். பிறகு கீழே நின்றவர்களில் ஒருவனை பார்த்து...,,.    " நன்னா..! இங்கு பாரேன்.. அற்புதமான இடம். நீ கண்டெடுத்ததை பத்திரப்படுத்த சரியான இடம் கிடைத்துவிட்டது. அதை வீசு என்னிடம்... இங்கு வைத்துவிடுகிறேன்.." என்றான்.


மற்ற இருவரும் நன்னனை நோக்கினர்.

நன்னன் , 'இல்லை சென்னி! வேணாம்..அது என்னிடமே இருக்கட்டும்..தற்சமயம் வேணாம்...! பிறகு பார்த்துக்கொள்ளலாம். நீ கீழே இறங்கிவிடு‌..' என்று சொல்லிவிட..


மேலிருந்து மெல்ல பாதிதூரம் இறங்கி பிறகு 'பொத்' என கீழே குதித்தான்...சென்னி.


சென்னி குதித்ததும் கீழே நின்றவர்களில் ஒருவன் தன் அம்புகொண்டு மரத்தின் மேனியில் ஒரு அடையாளக் குறியீடு வரைந்தான். அது பார்ப்பதற்கு நாகம்போல இருந்தது.


'இதோடு மொத்தம் பதினேழு கற்கள் சேர்த்தாயிற்று இன்னும் மூன்று சேர்த்தால் போதும் தானே..?' எனக் கேட்டான் சென்னி..


'அந்த திருட்டுப்பயல் 'மகரமாயன்' மட்டும் 4 கற்களை களவாடியிருக்காவிட்டால் நாம்

இந்நேரம் ஒன்று கூடுதலாகவே பெற்றிருப்போம் என்பதை மறவாதீர்கள்! ஒருநாள் இல்லை ஒருநாள் அந்த கள்வனை கழுத்தைப்பிடித்து திருகுகிறேனா இல்லையா பாருங்கள்...!!' என்று சினம்கொண்டு கர்ஜனை செய்தான் ஆக்கூ.....


'கோபத்தை அடக்கு ஆக்கூ.. நீ மறுபடியும் மகரமாயனிடம் வம்பு இழுக்காதே.. அவன்தான் நம்மிடமிருந்து திருடினான் என்பதை நிரூபிக்க நம்மிடம் ஆதாரம் எதுவுமில்லை..! மேலும் நாம் இத்தனை கற்களை சேமிக்கும் விஷயம் வெளியில் எல்லோருக்கும் கசிந்துவிடும் எச்சரிக்கை..!' என்று அறிவுறுத்தினான் நன்னன்.


'ஆம் நன்னா ! அந்த ஒரு காரணம் கொண்டே நான் ஓய்ந்திருக்கிறேன். இல்லாவிட்டால் அந்த மகரமாயன் இந்நேரம் மண்புழுவாயன் ஆகி இருப்பான்.'

என்று சொல்லி சிரித்தான் ஆக்கூ.


'சரி... நாம் வேறுஎங்காவது போய் பேசுவோம் வாருங்கள்...! இங்கு நிற்பது இந்த இடத்தை நாமே காட்டிக்கொடுத்தது போலாகிவிடும்.' என்று சென்னி சொல்லவும் மற்ற மூவரும் அதை ஆமோதித்து மலையை விட்டு கீழிறங்கும் மார்க்கத்தில் நடக்கத்தொடங்கினர்.. அவர்கள் புறப்படுவதை அறிந்ததுமே அதுவரை மரத்திலிருந்த பஞ்சவர்ணகிளி பறந்து வந்து நான்காவது ஆள் தோள்மீது அமர்ந்தது. அவன் தன்னிடமிருந்த அத்திப்பழம் ஒன்றை அதற்கு ஊட்டிவிட்டான்.


'இந்த நந்துவிடம் அப்படி என்னதான் வசியம் இருக்கிறதோ.... எல்லா ஜீவராசிகளையும் எளிதில் ஈர்த்துவிடுகிறானே.. வாய்பேச முடியாத இவனிடம் இந்த பஞ்சவர்ணமும் எப்படி ஒட்டிக்கொண்டது...? நாமும் இதற்கு எத்தனைமுறை தீனி போட்டிருப்போம்.. அதையெல்லாம் மறுத்து போயும் போயும் இந்த அத்திப்பழத்திற்காக அவனிடம் ஒட்டிக்கொண்டுவிட்டதே..! கட்டாயம் ஊமையனிடம் ஏதோ ஒரு மந்திரம் இருக்கத்தான் செய்கிறது..' என்பதாக சென்னி தன் உள்ளத்திலேயே ஒரு  மன உரையாடல் நிகழ்த்தியபடி நடந்து வந்தான்..

அதனைக் கலைக்கும் விதமாக நன்னனை நோக்கி ஆக்கூ ஒரு கேள்வியை வினவினான்... 'ஏன்பா நன்னா ! எங்கே அந்த கருப்புத்தனிமத்தை காண்பியேன் இன்னொரு வாட்டி பாத்துக்கிறேன்..'


'ஆமாம் நன்னா ! எனக்கும் ஆவலாய் உள்ளது.. காட்டேன்…' என சென்னியும் வழிமொழிந்தான்.


நன்னன் தன் இடையில் சொருகியிருந்த மூங்கில் குழாயை எடுத்து, அதன் வாயை மூடியிருந்த தக்கையை நீக்கி தன் இடதுஉள்ளங்கையில் தலைகுப்புற கவிழ்த்தான்.. வந்து விழுந்தது கருப்புத்தனிமம்!  கோழிமுட்டையை விட அளவில்பெரியது. ஆனால் அதன் திடமும் உறுதியும் வைரத்தைவிட பாறையைவிட கடினமாக இருந்தது.


நன்னன் அதை ஆக்கூ கரங்களில் தந்தான். அவன் அதை வாங்கி விரல்களால் தழுவி தடவிப் பார்த்து..'ஆகா.. நாம் இதுவரை கண்டெடுத்ததில் இப்படி வழவழப்பாக எதுவும் இருந்ததில்லை! நிச்சயம் இதுவும் நல்ல மாற்றுப்பொருள்தான்.'

என்றான்..

'சரியாக சொன்னாய் இது மட்டும் சிவப்பாய் இருந்திருந்தால் பவளம் என்று சொல்லி சந்தையில் மாற்றியிருக்கலாம்.. வெள்ளையாய் இருந்தால் முத்து எனலாம்.. இது விசித்திரமாக கருப்பாக இருக்கிறதே..! கருங்கல் ஒன்று நிலக்கரியாகி அது குளிர்ந்து பனிக்கட்டி ஆகியிருக்குமோ...?'


'அட சும்மா இரு..சென்னி! எதாவது உளறாதே..! கல் எப்படி கரியாகும்? அல்லது கரிதான் பனிக்கட்டி ஆகிடுமா?..அப்படியே ஆனாலும் பனிக்கட்டி இவ்வளவு உறுதியாக வெயிலில் உருகாமல் இருக்குமா?

இது உலோகம் தான்..! ஆனால் புதியது..அரியதும் கூட....' என்று நன்னன் அடுக்கிச்செல்ல.....


'சரி.. இதை வைத்து என்ன செய்வதாய் உத்தேசம்?' என்றான் சென்னி குறுக்கிட்டு...,


'அதான் இருக்கவே இருக்கிறாரே..! நந்துவின் தாத்தா.. கிழவேதியர். அவரைக்கேட்டால் இது என்னதுனு சொல்லிடுவார். அடுத்து நேராக அவர் இல்லத்திற்குதான் செல்லவிருக்கிறோம்.' என்றான் நன்னன்.


ஆக்கூ சற்றே வியப்பாக,, 'யாரு அந்த பித்துக்குளி கிழவரையா நீ சொல்கிறாய்.. ! சரியா போச்சு. புத்தி உள்ள எவனாவது அவருகிட்ட போய் வாயைக்கொடுப்பானா...? ஏன் நீ வேணும்னா நந்துவையே கேளேன்…' என்றான்.


மூவரும் நந்துவை நோக்க.. நந்து நொந்த முகத்தோடு உறைந்துபோய் இருந்தான்.


சென்னி..,"ஹா..ஹா.. அவரு தொல்லை தாங்காம தான் அவரை காட்டுலயே விட்டுட்டு கிராமத்துல வந்து இவன் பாட்டியும் அம்மாவும் தங்கியிருக்காங்க..

நாம இப்ப அங்க போறது தெரிஞ்சா நந்துவுக்கு இன்னிக்கு ராத்திரி வீட்ல விஷேஷ ஆராதனைதான்..!சந்தேகமில்லை.." என்று உரைத்தான்.


நந்துவின் முகம் மேலும் சுருங்கியது..


அதை கண்ட நன்னன்,, நந்துவின் அருகே சென்று அவன் முதுகில் கைவைத்து...வருடி,,

'கவலை வேண்டாம் நந்து.. என்னிடம் வேறு திட்டம் உள்ளது.

நீ என்னுடன் வரவேணாம். நானும் 

ஆக்கூ வும் மட்டும் அவரை போய் பார்க்கிறோம். நீயும் சென்னியும் வழக்கம்போல ஆற்றுப்படுகைக்கே சென்று கற்களை சேகரிக்க தொடங்குங்கள்... பொழுது சாய்வதற்குள்ளாக நாங்களும் திரும்பி வந்து சேர்கிறோம். என்ன?'


நன்னன் மொழிந்ததை கேட்டதும் நந்து முகத்தில் ஆனந்தம் பெருகிற்று. உடனே தலை அசைத்தான்..


'பிறகென்ன ஆக்கூ புறப்படலாமா?' என்றான் நன்னன்.


'இல்லை... நானும் ஆற்றுப்படுகைக்கே போகிறேன். அந்த கிழவர் சந்தைக்கு வந்தாலே என்னை ஏதாவது வேலை வாங்கி சாகடிப்பார்.. அவர் குடிலுக்கே போனால் என்னை அடிமையாக்கிக்கொண்டாலும் ஆச்சரியமில்லை..! மேலும் அவரது குடிலுக்கு போய்சேர ஒருயோஜனை தூரம் நடக்கனும். கேவலம் ஒரு கருங்கல்லை பற்றித் தெரிந்துகொள்ள அவ்வளவு தூரம் நடக்க  என்னால் இயலாது..! நீ சென்னியை வேணுமானால் அழைத்துப் போ!.'

என்றான் ஆக்கூ..ஒரே மூச்சில்.


நன்னன் சற்றே குழம்பி நிற்க..

சென்னி உடனடியாக சுதாரித்துக்கொண்டு..,, 'ஆம் நன்னா நானும் அதையே விரும்புகிறேன். அங்கு அவர் மாங்கனி மரமும் மாதுளை தோட்டமும் வைத்திருக்கிறார். அந்த மாமரத்தில் தேன்கூடு வேறு உள்ளதாம். மேலும் அந்த வேதியர் சமையல்கலையிலும் வல்லவராவார். நம்போன்ற இளம்பிள்ளைகள் சென்றால் விதவிதமான தின்பண்டங்களும் கூட தருவார்.. வித்தையெல்லாம் செய்துகாட்டி சிலநேரம்பரிசு பொருள்கூட தந்து அனுப்புவாராம்.சென்றமுறை மகரவாயன் அவரை பார்த்து

வந்து இதையெல்லாம் சொல்லக்கேட்டு எனக்கும் ஒரே ஆசை...ஆவல்.' என்று கூறிவிட்டு நன்னனை பார்த்து கண்சிமிட்ட..

நன்னனும் புன்முறுவல் பூத்தான்..


'சென்னி..! நீ நிஜமாகத்தான் சொல்கிறாயா?' என்றான் ஆக்கூ ஆச்சரியம் தாழாமல்.. 


'ஆம்! நிஜந்தான்…'


""அப்படியானால் சரி...! நான் என் மனதை மாற்றிக்கொண்டுவிட்டேன்.. முதலில் சொன்னபடியே செய்வோம்.

நன்னா! ஏன் நிற்கிறாய் கிளம்பு.. இப்போதே நடந்தால் தான் நண்பகலுக்குள் போய்சேரலாம். இந்த கருப்புத்தனிமத்தில் என்னதான் உள்ளது என அறிந்தே தீர வேண்டும்.. இந்தா இதை பிடி பத்திரமாக வை.. !"" என அக்கல்லை தந்தான். நன்னன் அதை வாங்கி மீண்டும் மூங்கில் குழாயிலேயே போட்டுவைத்து இடையில் சொருகினான்.


""என்ன வருகிறாயா இல்லையா...? நீ.? இதோ நான் செல்கிறேன்!..ம்ம்..புறப்படு! "" என்று அதட்டி சொல்லிவிட்டு வீறுநடை யிட்டு கம்பீரமாக தடியை ஏந்தி நடக்கலானான் ஆக்கூ..


ஆக்கூ வின் திடீர்மனமாற்றத்தை எண்ணி சிரிப்பும் வியப்புமாய் சென்னி..நன்னன்..நந்து மூவரும் பின்தொடர்ந்தனர்..


மலை அடிவாரத்தை அடைந்ததும்.. சென்னியும் நந்துவும் கிழக்கு முகமாக பிரவேசிக்க..

நன்னனும் ஆக்கூவும் தென்திசைநோக்கி விரைந்தனர்.


இவர்கள்

நால்வரும் அந்த பஞ்சவர்ணமும் பரிபூரணமாக மலையைவிட்டு நகர்ந்தபிறகு.... தேவதாரு மரத்தில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பியது.. எல்லா பறவைகளும் அணில்களும் மீண்டும் அதில் ஏறி..தாவி...லேசான அச்சத்துடன் அமர்ந்து.. நகர்ந்து...ஊடாடி பார்த்தன... பிறகு சகஜமாய் தத்தமது வேலைகளில் ஈடுபட்டன. அவ்விரு காகங்களும் வந்து தமது கூட்டினை உற்றுப்பார்த்தன. அது பத்திரமாக இருப்பதை நினைத்து ஆறுதலடைந்தன. கூட்டின் சுள்ளிக்குச்சிகளிடையே மரகத கல் இருந்தது அவற்றை பெரிதாக உறுத்த வில்லை. அதை அவை பொருட்படுத்தவுமில்லை.. ஒன்று மாற்றி ஒன்றாக கூட்டிற்கு சுள்ளிசேகரிக்க விரைந்தன.

அன்றைய தினம் முடிவில் கூடு மேலும் வளர்ந்திருந்தது..!


(தொடரும்...)


- சூரியராஜ்

கருத்துரையிடுக

புதியது பழையவை