அண்மை

தந்திர உலகம் - 2.ஒளியின் நிழல்

முதல் பாகம் - புகைக்கூண்டு
ஒளியின் நிழல்

light reflection


தகிக்கும் செந்தழல்  ஆதவன் தன் வெப்பமிகு ஒளிப்பாகினை வெள்ளமென வளிமண்டலத்தில் அள்ளி அள்ளி இறைத்துக்கொண்டிருந்த நண்பகல் நேரமது.. அதன் தாக்கம் தெரியாதபடி வான்நோக்கி உயர்ந்த பல ராட்சத மரங்கள் யாவும் வெம்மையையும் ஒளியையும் தாமே தாங்கிக்கொண்டு,  கீழே தரையினில் நிழலை பரப்பி.. குளிரை கொஞ்சம் தக்க வைத்திருந்தன.. அந்த மரங்களின் கீழே அடர்ந்த பல சிறுசெடிகள் புதர்களாய் படர்ந்து இருந்தன.

அவை பெரும்பாலும் பூச்செடிகள்..!


செடிகள் என்றாலும் அவை ஓரளவு மரமென சொல்லுமளவு உயரம் கொண்டிருந்தன. அவற்றின் மீது சில காட்டுக்கொடிகளும் ஆங்காங்கே விரவி.. படர்ந்து.., தம்பங்கிற்கு விதவிதமான மலர்களையும் அவரை வடிவிலான காய்களையும் தத்தமது கிளைக்கரங்களில் ஏந்தியிருந்தன..

பூச்செடிகள் அடர்பச்சைநிற இலைகளை கொண்டிருந்தன. அவற்றில் ஒன்றிரண்டு பழுத்து மஞ்சளாகவும் செம்பழுப்பாகவும் தென்பட்டது.. 

சொல்லிவைத்தாற் போல அனைத்துச்செடிகளிலும் பலவண்ண அழகிய மலர்கள் குழுகுழுவாக சீரான இடைவெளிவிட்டு பூத்துக்குலுங்கின.. 


இதமான அந்த சூழலில் வண்ணத்துப் பூச்சி ஒன்று  செம்பொன்நிற ஏட்டினில் ஆங்காங்கே கறுப்புக்கோலம் வரைந்து வைத்தது போன்ற தோற்றமுடைய தன் மெல்லிதழ் சிறகை படபடத்துக்கொண்டே.. அந்த நறுமணமலர்களில் நல்லதொன்றை தேடிக்கொண்டிருந்தது...


இதோ.., அப்படி ஒன்றை கண்டுபிடித்தேவிட்டது போலும்... படபடத்த சிறகு இப்போது "பட்" என விரைந்துசென்று ஒரு செம்பருத்தி மலரில் அமர்ந்தது. சுருண்டிருந்த தன் மீசைபோன்ற தேன்குழல் நா கம்பியினை நீட்டி பூவின் சூலகத்தேனினை முழுவதும் உறிஞ்சி சுவைத்தது.... சிலநேரம் அதிலேயே அசைவின்றி ஒட்டிக்கிடந்து மறுபடி படபடத்து எழுந்து மற்றொரு மலரில் அமர்ந்தது. அடடா..., இம்முறை ஏமாற்றம்... அதில் தேன் இல்லை! நிச்சயம் இது அம்மலரினை மொய்த்திருந்த எறும்புகள் செய்த வேலையாகத்தான் இருக்கும்...!


சரி போனால் போகிறது... இந்தப் பூ உலக பூவனத்தில் பூக்களுக்கா பஞ்சம்? அதோ அங்கே அழகுச்சிவப்பில் ஒரு அடுக்குச்செம்பருத்தி தெரிகிறதே அதில் போய் பார்ப்போம் என்றெண்ணி காற்றில் மிதந்து போய் அதன் மீது  அமர்ந்தது....


எண்ணம் வீண்போகவில்லை.. ஆழ்ந்த சுவைகொண்ட அமுதம் நிகர்த்த தேன் அதில் இருந்தது. அன்றலர்ந்த மலரன்றோ..?

அதில் மணமும் மிகுந்த சுகந்தம் தான்.

உண்ட களைப்போ அல்லது தெவிட்டிய போதையோ என்னவோ அந்த மலரோடு மலராக தன் ஆறுகால்களால் அதன் அல்லிஇதழை இறுகப்பற்றி அதிலேயே மயங்கிவிட்டது. காற்றடித்த போது செடியும் அசைந்தது; செம்பருத்தியும் அசைந்தது; அதனோடு இதுவும் அசைந்ததே தவிர அகலவில்லை.!


பூ வில் பூத்த பூவென இருந்தது. மலரில் மயங்கி தேனுண்ணும்.. அந்த வண்ணத்துப்பூச்சி யின் காட்சி!


நிலைமை நீடிக்கவில்லை..

பூவின் இதழ்களில் மயங்கி

கிடந்த வண்ணத்துப்பூச்சியின் உள்ளுணர்வு ஏதோ எச்சரித்தது..!

இதமான காற்றுவீசிய சூழலில் திடீரென அனல்காற்று அதன் இரு உணர்வி ரோமங்களைத் தீண்டியது.

இன்னது என அது சுதாரித்துக்கொள்வதற்குள் அதன் மெல்லிதழ் சிறகு இரு தடித்த 

ராட்சத தேகத்தினிடையே சிக்கிக்கொண்டுவிட்டது....!


கணநேர வலி... அப்பறம் முற்றாக மரத்துப்போய்விட்டது.. எவ்வளவு முயன்றும் சிறகை அசைக்கவே முடியவில்லை. உணர்வே இல்லை. 

அவ்வளவுதான் அது மாட்டிக்கொண்டுவிட்டது.....!


**************


"நேரமில்லை ஆக்கூ...! சிறுபிள்ளைபோல வண்ணத்துப்பூச்சியோடு விளையாடுவதை நிறுத்திவிட்டு இங்கு வந்து தொலை...!" என்று கத்தினான் நன்னன்.


"ஆஹான்..! எத்தனை எளிதாக சொல்லிவிட்டாய்!  வண்ணத்துப்பூச்சியினை பிடிப்பது ஒரு கலை. அது எல்லாருக்கும் சுலபத்தில் கைகூடாது நன்னா!. ஆக்கூ போன்ற அதிதிறமைசாலி களிடம்தான் அந்த லாவஹம் இருக்கிறது." என்று தான் பிடித்த வண்ணத்துப்பூச்சியை மட்டுமே பார்த்தபடி பதிலுரைத்தான் ஆக்கூ.


" சரி... இருந்துவிட்டு போகட்டும்.  அதான் உன் அதிபலாத்கார திறமையால் பிடித்துவிட்டாயல்லவா ? பிறகு ஏன் நிற்கிறாய்..? அதனை ரசித்தது போதும் எறிந்துவிட்டு வா..!. இதோ வரவேண்டிய இடத்துக்கு வெகு அருகில் வந்துவிட்டோம்..! வந்த வேலையை விடுத்து வீணே காலம் கடத்துவானேன் ? " என்றான் நன்னன் சற்று குரல் தாழ்த்தி...


" வருகிறேன் நன்னா..! இதோ வருகிறேன்.. ஆனால் இந்த வண்ணத்துப்பூச்சி யை எறிந்துவிட்டு வருவதாக இல்லை.. உனது மூங்கில் கலனை கொஞ்சம் இரவலாக கொடு அதில் இதனை சிறைவைக்கப்போகிறேன்..."


""என்ன சொன்னாய்..? நான் முக்கியமான பொருட்களை போட்டுவைக்க ஒரு காப்பு கலனாக அதை வைத்திருக்கிறேன்..ஆக்கூ..! இப்போது கூட கருப்புக் கல் அதில்தானே இருக்கிறது...! அற்ப பூச்சியை அதில் அடைத்துவைக்க கேட்டால்...நான் தருவேன் என்று  நினைத்தாயா ..? அப்படி என்ன அற்புதத்தை நீ அதில் கண்டாய்?"" என்று வினவியபடியே இடையில் சொருகி இருந்த தனது மூங்கில் கலனை ஒரு கையினால் மறைத்துக்கொண்டான் நன்னன்.


"அற்புதம் இருக்கிறது நன்னா! நம் அருவிக்கரை ஓவிய குகையினில் கடைசியாக நான் வரைந்த சித்திரம் இருக்கிறதல்லவா..? அதில் ஏதோ ஒரு குறை இருந்தது.. மலர்ச்சோலையை காட்சிபடுத்தும் ஓவியம் அது. அதில் இதுபோல பட்டாம்பூச்சி யை வரைந்து நிரப்பி சரிசெய்யலாம் என்று எண்ணியிருந்தேன்; நல்ல வண்ணத்தில் தேடினேன்.. நம்பகுதியில் உள்ள பூச்சிகளில் இதன்அளவுக்கு சௌந்தர்யம் உடையது எதுவுமே இல்லை நன்னா..!" என்றான் ஆக்கூ..


"சரி.. இதை வரைவதற்கு கையோடு எடுத்தே செல்லவேண்டிய அவசியம் என்ன வந்தது? இரண்டொருதடவை பார்த்து நினைவில் வைத்துக்கொண்டால் போதாதா ? என்ன?" என நன்னன் பதில்வினா தொடுத்தான்..


"இதன் வண்ணக்கலவை க்கு நான் எங்கே போவேன்...? இதை நான் வரையபோவதில்லை..! மாறாக.. சென்னி யிடம் ஒரு விஷேஷ தைலம் ஒன்று இருக்கிறது அதில் இந்த பூச்சியை தோய்த்து எடுத்து குகை சுவரில் ஓங்கி அறைந்தால் போதும் அப்படியே உயிரோடு ஒட்டிக்கொள்ளும்... தத்ரூபமான உயிரோவியம் தயார்!" என விழி அகல புருவம் உயர்த்தி சொன்னான் ஆக்கூ..


"அட பாதகா..! உங்கள் கலை தாகத்திற்காக ஒருபாவமறியாத  உயிரை இப்படி வதைக்கிறீர்களே..!"

என்றான் நன்னன் முகம் சுழித்தவாறு..,


"ஆ..! இது இன்னும் அதிபட்சம் எத்தனை நாள் இருந்துவிடும்? நான் செய்யப்போகும் செயலால் இது  ஆயிரம் ஆயிரம் வருஷங்களுக்கு நிலைத்திருக்க போகிறது..! தெரியுமா?.. அதுபோக, உயிர் உன்னிலும் இருக்கிறது.. என்னிலும் இருக்கிறது.. ஏன் புழு பூச்சி ஈ எறும்புகளிலும்தான் இருக்கிறது.. எனக்கு உயிர்மீது அக்கறையோ அநுதாபமோ மதிப்போ சிறிதும் இல்லை..! அதை எவராலும் அதிகரிக்கவோ நிலைநிறுத்தவோ இயலாது! ஆனால்..நம் ஒவ்வொருவரிடமும் இயற்கை எதாவது தனித்துவத்தை தந்திருக்கும்.. அதுவே எனக்கு முக்கியமென படுகிறது.. கொஞ்சம் சிந்தித்து முயன்றால் அதை நம்மால் நீடித்து நிலைநிறுத்திட இயலும். இதோ இந்த பூச்சியின் தனித்துவம் இதன் வண்ணங்களில் இருக்கிறது..! இயற்கையாக இதன் உயிர்போனால் ஆபூர்வமான இதன்மேனியழகும் சேர்ந்தே போய்விடும்.. அதற்கு முன்பாக இதை பத்திரப்படுத்தியாக வேண்டும்..! எனக்கு மூங்கில்குழாய் தர முடியுமா..? முடியாதா..?""



ஆக்கூ வின் அதிசாரமிகு சொற்பொழிவால் திகைத்தே விட்டான் நன்னன். 

அவன் மனதிலும் பற்பல தீ மூண்டது. சொல்லுக்குச் சொல் மறுத்துப் பேசி சொற்போர் நிகழ்த்த நெஞ்சுவிம்மியது.. எனினும் அதை அடக்கிக்கொண்டு...,


"இதோ பார் ஆக்கூ! உன்னோடு சில விஷயங்களில் தர்க்கம் செய்ய நான் பேராவல் கொண்டுள்ளேன்.

ஆயினும் அதற்கு இதுநேரமில்லை.! இந்தா இதைப்பிடி...  என்ன வேணுமானாலும் செய்! " என்றவாறு தன் மூங்கில் கலனை ஆக்கூவிடம் தந்தான்.


நன்னனிடமிருந்து மூங்கில்கலனை பெற்று அதை திறந்தான் ஆக்கூ..,


"நன்னா..! இந்த கல்லை நீ கையிலேயே வைத்துக்கொள்... அடிக்கடி திறந்து மூடினால் சரிபடாது.." என சொல்லியபடி நன்னனின் உள்ளங்கையில் கருப்புக்கல்லை விழச்செய்தான்.


பிறகு வண்ணத்துப்பூச்சியை அந்த மூங்கில் குழாயினுள் நுழைத்து.. சட்டென்று விட்டு.. விரலை வெளியே எடுத்து.. நொடிப்பொழுதில் குழாய் வாயை தக்கை கொண்டு மூடிவிட்டான்.


"திருப்திதானே.. உனக்கு..? இப்போது போகலாமா? வேறு ஏதும் பாக்கி இருக்கிறதா..?" என நன்னன் கேலியாக கேட்க..


"ஒன்றே ஒன்று..தான்!  தண்ணீர் வேணும். தாகமாய் இருக்கிறது..!"

என கெஞ்சுவதுபோல கேட்டான் ஆக்கூ..


"ஆமாம்.. முதலில் கலை தாகம். பிறகு கொலை தாகம்.. இப்போ தண்ணீர் தாகமா? நீ மூச்சுவிடாமல் பேசும்போதே நினைத்தேன்.. குரல்வற்றி சாவாய் என..."


"அட.. தண்ணீர் இருக்கிறதா பார் நன்னா! விளையாடாதே.."


"எங்கே இருக்கும்..? உன் குடுவையை முடித்தது போதாது என என்னுடையதையும் சேர்த்து அல்லவா காலி செய்தாய் பாதகா! உன் தாகம்தணிக்க குடுவையெல்லாம் போதுமா? குளமோ குட்டையோ அல்லவா கையோடு கொண்டுவரணும்..  நானும் தானடா தாகத்தில் தவிக்கிறேன்..! " என சொல்லியபடி தன் சுரைக்குடுவையை எடுத்து தலைகீழாக கவிழ்த்து காட்டினான் நன்னன்.


ஆக்கூ சோகமாக தலை குனிந்தபடி.. " இதற்கு தான் நான் முன்னமே சொன்னேன் நான் வரவில்லை.. சென்னியை கூட்டி போ.. என்று.. நீ யும் சென்னியும் ஏதேதோ ஆசைகாட்டி என்னை மோசம்செய்து விட்டீர்கள்..!"


நன்னன் சற்று பரிவுடன்.. "சரி..சரி. சற்றுபொறுத்துக்கொள் ஆக்கூ. இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இதோ வேதியர் குடிலுக்கு போய்விட்டால் அங்கு வேணுமளவு வாங்கி பருகலாம்..வா!" என்றான்.


ஆக்கூ ஒரு பெருமூச்சு விட்டபடி நடைபோட தொடங்கினான்...நன்னன் அவன் தோளில் கைபோட்டுக்கொண்டான்.


சிறிதுதொலைவு நடந்ததும்.. கண்ணுக்கு எட்டிய தொலைவில் அந்த குடிசை தென்பட்டது...! இருவரும் மகிழ்ச்சி யில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு விரைவாக நடந்தனர். 


போகும்போது திடீரென ஒரு காட்சி அவர்களின் கவனம் கவர்ந்தது. உயரமான மரங்களின் மீது நிழல்போர்த்திய இருள்சூழ்ந்த அவ்விடத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஒருவித ஒளியின்பிரகாசம் தெரிந்தது!


பார்ப்பதற்கு அழகிய மாயத்தோற்றமாய் இருந்தது.

அலைஅலையாக அந்த ஒளி நகர்ந்தது ஆனால் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே அது தென்பட்டது. அந்த நாலைந்து மரங்களில் மட்டும் குறிப்பிட்ட உயரத்திலிருந்து சற்று கூடுதல் உயரம்வரை அந்த ஒளி தகதகத்தபடி நிழலாடியது.


"நன்னா..! இதென்ன மாயம்?"


"தெரியவில்லை ஆக்கூ! எனக்கும் விசித்திரமாகவே தோன்றுகிறது.

அதன் சலனமும் எனக்கு சஞ்சலத்தை தருகிறது.. இங்கிருந்து சீக்கிரம் நகர்வது நல்லது."


"அட அஞ்சாதே நன்னா! அது என்னவென்று தெரிந்து கொண்டால் நன்று. அறியாமைதான் அச்சத்திற்கு ஆணிவேர்..! இயற்கைக்கு மாறாக உலகில் எதுவும் நிகழாது. இயற்கையை புரிந்து கொண்டால் நாம் எதற்குமே  அஞ்சதேவையில்லை.!"


"நெருப்பு சுடும் என்று எனக்கு தெரியும்.... அது இயற்கை. இப்போது நான் அதற்கு அஞ்ச தேவையில்லையா என்ன? தெரிந்தாலும் புரிந்தாலும் அஞ்சவேண்டியதற்கு அஞ்சிதானே ஆகணும்?"


"அஞ்சவேண்டியதற்கு அஞ்சத்தான் வேணும் நன்னா. நெருப்பின் இயல்பை அறிந்தவன் அஞ்சமாட்டான் எச்சரிக்கையோடு அதை அணுகுவான். நாம் இதை இன்னதென அறியாமலேயே அஞ்சுவது ஏற்புடையது இல்லை!"


"உனக்கு என்ன தோணுகிறது? ஆக்கூ? "


"நிச்சயமாக இது ஒளிதான் நன்னா.! ஆனால் நெருப்பினால் இவ்வளவு பிரகாசத்தை தர இயலாது. அதனால் வெயிலின் வெளிச்சம்தான்."


"சரிதான்.. ஆனால் உச்சிவேளையில் கதிர் ஒளி மேலிருந்துதானே கீழே பிராகாசிக்கும்.. எனில் மரத்தின் மேலே விழும் ஒளி மரத்தால் தடுக்கப்பட்டு கீழே மரத்தின் நிழல்தானே விழனும்! இங்கே நிழலே ஒளிருகிறதே அது எப்படி சாத்தியம்?"


" அதுதான் எனக்கும் விளங்கவில்லை நன்னா..!"


"முதலில் இது எதிலிருந்து வருகிறது..? மரத்திலிருந்து இல்லைபோல தெரிகிறதே.."


அப்போது அந்த ஒளிஅலையில் பசுமை நிற தோற்றம் மெதுவாக நகருவது தெரிந்தது. திடீரென நீலநிறமாகவும் அது தோன்றியது.

அது மறைந்ததும் பழையபடி ஒளிஅலையே நிழலாடியது.


"நன்னா ! முடிந்தால் இதையும் அருவிக்கரை குகையில் ஓவியமாக தீட்டிவிடணும்.."


"ஓ.. அப்படியே என்னையும் தைலத்தில் தோய்த்து குகைசுவரில் பதித்துவிடு.. தத்ரூபமாக இருக்கும்"


"அதற்கென்ன தாராளமாக!" என்று ஆக்கூ சொல்லிவிட்டு நன்னனின் காதினை பிடித்து இழுத்தான்..


"அட விடப்பா..! இப்போது அருவிக்கரை என்றதும் எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது.. அங்கு அந்த இருண்ட குகைக்குள் நடுப்பகலுக்கு பிறகு மட்டும் வெளிச்சம் வரும் பாத்திருக்கிறாயா?" என  நன்னன் வினவ சற்றுநாழி யோசித்த பின் ஆக்கூ..,

"ஏது ... அந்த நீரலையில் வெயில் பட்டு பிரதிபலிப்பதை சொல்கிறாயா?"


"ஆம் ஆக்கூ ! அதேதான்!"


"எனில் இதுவும் ஒளியின் பிரதிபளிப்புதானா?  ஓ..! நீரலையின் நிழல்தான் இந்த ஒளியிலும் தென்படுகிறதா..? ..சரி.. இங்கு நீர் எங்கே இருக்கிறது?"


ஆக்கூ கேட்டதும்.. நன்னன் சற்றே சிந்தித்தான். பிறகு தன் இடதுகையை அந்த ஒளிபிம்பத்திற்கு நேராக உயர்த்தி நீட்டி அதற்கு நேரெதிராக வலது கையை தாழ்த்தி..ஆள்காட்டி விரலையும் நீட்டி காண்பித்து..

"நிழல் இங்கு எனில் நிஜம் அங்கே..! இருக்கவேணும்.." என மொழிந்தான்.


ஆக்கூ அத்திசையை நோக்கினான்.. அங்கே புதர் அடர்ந்திருந்தது. அதை தாண்டி பள்ளம் இருப்பதுபோல தோன்றியதால் அருகே சென்று எட்டிப்பார்த்தான்..


ஆகா.. அவர்கள் நினைத்தது சரிதான். அது ஒரு தெளிந்த நீர் ஓடை.. அதில் முழங்கால் அளவே நீர் ஓடிக்கொண்டிருந்தது. அதில் சிற்சில பாறை கற்கள்..ஏராளமான கூழாங்கற்கள் கிடந்தன அதில்மட்டும் பாசி படர்ந்திருந்தது.


"நன்னா ! நீ புத்திசாலிதான். இங்கு பாரேன்.. இத்தனை நீண்ட ஓடை இருக்க.. நாம் தாகத்தில் தவித்திருக்கிறோம்.. நீரோட்டம் குறைவாக இருப்பதால் ஓசை கேட்கவில்லை..போலும்"


ஆக்கூ சொன்னதை நன்னன் முதலில் நம்பவில்லை சந்தேகத்துடனே எட்டிப்பார்த்தான். நிஜமாகவே நீர் இருப்பதை கண்ட

பிறகு புன்னகை பூத்தான்.


அந்த ஒளி எப்படி எதிரொளிக்கிறது என்பதை உற்று கவனித்தான். ஒளி வெயிலின் நிறத்தில் எதிரொளிக்காமல் வண்ணமயமாக பிரதிபளிப்பு செய்தது இன்னும் சற்று குழப்பமாகவே இருந்தது அவனுக்கு... என்றாலும் அப்போது இருந்த தாகத்திற்கு அந்த நீரோடை அவர்களை வெகுவாக ஈர்க்கவே..


சற்றுதள்ளி இருந்த சரிவுவழியாக ஓடையில் இறங்கி தெளிந்த நீரை அள்ளி ஆசைதீர பருகினர்...முகத்தில் தெளித்து ஈரக்கைகளால் ஒற்றிக்கொண்டனர்.

ஆக்கூ தலைமுடியை கூட அலசிக்கொண்டான்.


நன்னன் மறுபடி கரையினில் ஏறி சென்று அமர்ந்து ஒளியின் வண்ணநிழல் பிரதிபளிப்பை ஒருவாறு ஊகித்து புரிந்துகொண்டான். 


ஆக்கூ சுரை குடுவைகளில் ஓடைநீரை நிரப்பினான். 

தன் கரங்களில் நீரை அள்ளியபோது கைவிரல்களை கவனித்தான். அதில் அந்த வண்ணத்துப்பூச்சியின் சிறகில் இருந்த வண்ணம் விரலில் ஒட்டியிருந்தது. 


"அட...!  இங்கு பார்த்தாயா நன்னா! அந்த பட்டாம்பூச்சியோட நிறம் இன்னும் என் கையிலேயே இருக்கிறது... அழிந்துபோகாமலே...!" என்று ஆச்சரியமாக சொன்னான்.


மறுமொழி ஏதும் வரவில்லை.. நன்னனிடமிருந்து..


ஆக்கூ சாவகாசமாக திரும்பி..,

 நிமிர்ந்து கரையைப் பார்த்தான்.


 அங்கு நன்னனை காணும்!.


(தொடரும்)

- சூரியராஜ்

2 கருத்துகள்

  1. நல்ல நடை...
    நற்றமிழ் சொல்வளம்...

    சலிப்பு தட்டாத பதிவு

    அருமை..👏👏👏

    பதிலளிநீக்கு
புதியது பழையவை