நெஞ்சுக்குறுதி கூறல்
பாரதிதாசன் போட்டிக்கு அனுப்பிய
பாரதி கவிதைக்கு இரண்டாமிடந்தான்
பாரதிலாங்கே பலரும் இருக்க
படித்தோர்க் கெல்லாம் சிறப்பிடந்தான்
பாலும் நீரும் அருகிலிருக்க
மீனுக்கெதிலே வாழிடம் தேடு
படுக்கையிலிருக்கும் பாழும் நெஞ்சே
இந்நீசன் சொல்லை நீயுங்கேளு!
காட்டில் மனைவியை விடச்சொன்ன
வீரன் இராமன் அழுதுவிட்டான்
நாட்டில் நடந்த பாய்ச்சிகையாலே
தருமனும் தாங்காது கலங்கிவிட்டான்
சூட்டில் பட்ட விரல்களுக்கே
சூட்டைப் பற்றிப் புரிகிறது
ஈற்றில் எல்லாம் அனுபவத்தால்
இதமாய் அடங்கிப் போகிறது
காலணி இன்றி தடங்கியவன்
காலில் லாதவனைக் கண்டானாம்!
கால்கள் இன்றி முடங்கியவன்
கண்ணில் லாதவனைக் கண்டானாம்!
கண்களும் இன்றி ஒடுங்கியவன்
புவியைச் செவியால் கண்டானாம்!
போதுமென்று நினைத்து விட்டால்
போவதும் வருவதும் கண்டிடலாம்!
மாதவ முனிவனின் அகத்தியத்தை
மண்ணுக் கடியினில் இழந்துவிட்டோம்
தேனினும் இனிய தேவாரத்தை
புற்றீசல் கொண்டு அரித்துவிட்டோம்
நம்பேச்சு நடைத் தமிழினிலே
பிறமொழியின் சொல்லைப் புகுத்திவிட்டோம்
இருந்தும், படைப்பிலக்கிய பெருமையிலே
புதுவழியாப் புகழை அடைந்துவிட்டோம்!
அனுபவ அறிவைப் பெறுவதினாலே
நெஞ்சே குறியை உணர்ந்திடுக!
போதும் என்ற மனநிறைவோடு
நெஞ்சே நிம்மதி பெற்றிடுக!
இழப்பிலும் தளைத்த தமிழைக்கண்டு
நெஞ்சே உறுதிக் கொண்டிடுக!
தலையணை ஈரத்தை மறந்துவிட்டு
நெஞ்சே நீயும் தூங்கிடுக!
-தீசன்
(பாரதிதாசன் பல்கலைக்கழகப் போட்டிக்கு அனுப்பப்பட்டிருக்கும் கவிதை இது)
என்னுரை: பாரதிதாசன் போட்டிக்கு அனுப்பி பரிந்துரை செய்த பாரதியாரின் கவிதைக்கு இரண்டாம் இடம் தான் கிடைத்தது. அந்த கவிதையே 'செந்தமிழ் நாடென்னும் போதினிலே' ஆகும். உலக இயக்கத்தோடு பலரும் இயங்கி கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனால் கற்றோர்க்கு மட்டுமே செல்லும் இடமெல்லாம் சிறப்பு எட்டுகிறது. பாலும் நீரும் அருகருகே இருந்தாலும் மீனானது எதில் உயிர் வாழ முடியும். என்ன தான் உயர்வு கிடைத்தாலும் வாழ தேவையானதே போதுமானதாய் இருக்கிறது. என்றும் துன்பமென்னும் படுக்கையில் இருக்கும் பாழாய் போன நெஞ்சே, தீசன் என்னும் பெயர் கொண்ட இந்நீசன் சொல்லை கேட்டு நட.
மனைவியின் கற்பை சந்தேகப்பட்டு, காட்டில் சீதையை விடச்சொன்ன வீரன் இராமனே அழுதுவிட்டான். நாட்டில் நடைப்பெற்ற சூதாட்டத்தாலே குந்தி மகன் தருமன் தாங்கமுடியாமல் கலங்கிவிட்டான். நெருப்பை தொட்டு பார்த்த விரல்களுக்கே நெருப்பைப் பற்றி புரிகிறது. இறுதியில் எல்லாம் அனுபவத்தால் இதமாய் அடங்கிப் போகிறது.
காலணி இன்றி தடங்கி போனவன் காலே இல்லாதவனைக் கண்டானாம். கால்கள் இன்றி நடக்க முடியாது வீட்டிலே முடங்கியவன் கண்கள் இல்லாதவனை கண்டானாம். கண்களும் இன்றி ஒடுங்கி போய் உட்கார்ந்தவன் பூமியையே காதுகளால் காண்கிறான். இது போதும் என்று நினைத்து விட்டால் போவதும் வருவதும் கண்டு மகிழ்ந்திடலாம்.
மாதவ முனிவனின் அகத்திய நூலை மண்ணுக்கடியினில் இழந்துவிட்டோம். தேனைக் காட்டிலும் இனிய தேவாரத்தை புற்றீசல் கொண்டு அரித்துவிட்டோம். பேச்சு நடை தமிழினிலே பிறமொழி சொற்களை புகுத்தி செந்தமிழை கொடுந்தமிழாய் ஆக்கிவிட்டோம். இருந்தும் படைப்பிலக்கிய பெருமையிலே புதுவழியா புகழை அடைந்துவிட்டோம்.
அனுபவ அறிவை உணர்வதினாலே நெஞ்சே நீ உன் இலக்கை தெரிந்து கொள்க. போதும் என்று வாழ்வதினாலே நெஞ்சே நிம்மதி பெற்றிடுக. இழப்பிலும் தளைத்த தமிழைக் கண்டு நெஞ்சே உறுதி கொண்டிடுக. தலையணை ஈரத்தை மறந்துவிட்டு நெஞ்சே நீயும் தூங்கிடுக.
போதும் என்ற மனதுக்கு போட்டியில் என்ன வேலை?
பதிலளிநீக்குபோதும் என்ற மனதுக்கு
நீக்குபோட்டியில் இல்லை வேலை
ஏதும் கிடைக்காது இருந்தாலும்
தமிழே எனக்கு சோலை
செந்தமிழ் நாடெனும் போதினிலேவுக்கு இரண்டாம் பரிசு பெற்ற கவிதை என்றால் முதல் பரிசு பெற்ற கவிதை இது வரை வெளியாகியுள்ளதா?
பதிலளிநீக்கு