அண்மை

திருமண முன் இரவு - தொடர் சிறுகதை

திருமண முன் இரவு - தொடர் சிறுகதை

night-before-wedding-tamil


மிகுந்த பரபரப்போடு டோக்கியோ நகரம் இயங்கிக் கொண்டிருந்தது. அதை விட பரபரப்பாக ஒரு டாக்ஸி டவுன் வெட்டிங் ஹால் (Town wedding hall) முன்பு வந்து நின்றது. டாக்ஸியிலிருந்து கோர்ட் சூட் போட்டு மணக்கோலத்தில் இறங்கிய இருபது வயது மதிக்கதக்க ஒருவன், ஓட்டுனரை கொஞ்சம் கூட கவனிக்காமல் வெட்டிங் ஹாலுக்குள் நுழைந்தான். இதற்கு முன் அவன் இவ்வளவு வேகத்தில் ஓடியதே இல்லை. ஹாலின் ஓரத்தில் இருந்த வரவேற்பு பகுதிக்கு சென்று, அவன் பெயரையும் அவனது காதலியின் பெயரையும் கூறி என்ன தளம் என்று கேட்டான். அவனது பரபரப்பை உணர்ந்த வரவேற்பாளர்கள், உடனே பதிவேட்டைப் பார்த்து இருபதாவது தளம் என்றார்கள். கேட்ட நொடி கூட தாமதிக்காமல் அவனும் மின்னல் வேகத்தில் ஓடினான். லிப்ட் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்ததால், படிகளில் ஓடத்தொடங்கினான்.

பொதுவாகவே அவன் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவன் ஆனாலும் இம்முறை தலை கால் புரியாமல் ஓடினான். இருபதாவது தள திருமண அறையை அவன் கண்கள் கண்டது. வேகமாக சென்று படார் என்று அக்கதவை திறந்தான். திருமணத்தைக் காண வந்த அனைவரும் அவனைக் கண்டார்கள். அங்கே வேறு இரு ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. நம் நாயகனுக்கு எல்லாம் புரிந்தது. பெருமூச்சு விட்டு நிம்மதி அடைந்தான். பொறுமையாக படிகளில் இறங்கி கீழே வந்தான். பயங்கரமான கோபத்தோடு அந்த ஓட்டுனர் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தார். ஓட்டுனரைக் கண்ட உடன்தான் அவனுக்கு எல்லாமே நினைவுக்கு வந்தது. பாக்கெட்டுக்குள் கையை விட்டான். ஒன்றுமே இல்லை. ஓட்டுனர் அவனது முக பாவனையில் புரிந்துக் கொண்டார். இரண்டாயிரத்து ஐநூறு பணத்தை எடுவென அவனது கோர்டைப் பிடித்து சத்தமிட தொடங்கினார். ஆடை அலங்காரத்திற்காக தன் பெற்றோர்களுடன் வந்திருந்த அவனது காதலி, இவன் ஒரு ஓட்டுனரிடம் அவமானப் பட்டுக்கொண்டிருப்பதை கண்டாள். சட்டென ஓட்டுனரிடம் வந்து என்ன பிரச்சனை என்று கேட்டாள். அவர் பேசுவதற்கு முன்பாகவே அவளது காதலன் 'இல்லை, பணத்தை மறந்து வீட்டிலேயே வைத்து வந்துவிட்டேன்' என்றான். எவ்வளவு? என்றாள். உடனே ஓட்டுனர் அவனது கழுத்து சட்டையிலிருந்து கையை எடுத்து இரண்டாயிரத்து ஐநூறு என்றார் அடக்கமாக. அவள் தன் கைப்பையிலிருந்து பணத்தை எடுத்து தந்து ஓட்டுனரை அனுப்பினாள். 'இனி என் டாக்ஸியில் உனக்கு இடம் கிடையாது' எனக் கூறிக் கொண்டே அவரும் புறப்பட்டார். அவளது பெற்றோர்கள் அருகில் வந்தார்கள். 'நாளை தானே நம் திருமணம், ஏன் இன்றே இந்த கோர்ட்டை போட்டுள்ளாய்' என்றாள் காதலி. அவனது கன்னம் வெட்கத்தில் சிவந்தது. உண்மையை புரிந்து கொண்ட அவளது தந்தை சிரிக்கத் தொடங்கினார். 'சரி நீங்கள் பேசி விட்டு வாங்கள்' என்று கூறி புறப்பட்டார். காதலியின் தாய் தந்தை முன் இப்படி அவமானப்பட்டதை எண்ணி அவன் தலை தரையைப் பார்க்கத் தொடங்கியது. தன்னவன் நடந்ததை எண்ணி வருந்துகிறான் என்பதை புரிந்து கொண்ட அவள் அடக்கமாக புன்முறுவல் செய்தாள். இருவரும் அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறி பொறுமையாக டோக்கிய நகர வீதியில் நடக்கத்தொடங்கினர். மிகுந்த விலைமதிப்புள்ள ஒரு கார் அவர்களது முன் வந்து நின்றது. நாளை திருமணமாகப் போகும் அவர்களது உற்ற நண்பர்களான இருவரே அந்த காரில் வந்திருந்தனர். காரின் உரிமையாளரான பணக்கார நண்பன், 'என்ன கல்யாண தேதியை மறந்துவிட்டாயா? இல்லை உனக்கு பொறுமை இல்லையா? என்று ஏளனம் செய்தான். இதைக் கேட்ட காதலனின் வெட்கத்தைக் கண்டு காதலி அழகுற சிரித்தாள். நால்வரும் தங்களது பள்ளி கால நினைவுகளை பேசியப்படியே பொழுதைக் கழித்தனர். அந்திநேரம் வந்தது, மணமகளை அவளது வீட்டில் பாதுகாப்பாக இறக்கிவிட்டு, மணமகனை அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். நண்பர்களின் இரவு நேர கூத்து ஆரம்பமானது. 'நீ ரொம்ப அதிஷ்டக்காரன், நம் தோழியை பத்திரமாக பார்த்துக் கொள்' என்றான் முதல் நண்பன். 'அவள் மட்டும் உன்னால் அழுதாள், உன்னை துலைத்துவிடுவேன்' என்றான் இன்னொருவன். நாளை நடக்கப் போகும் திருமணத்தை எண்ணி அளவு கடந்த மகிழ்ச்சியில் இருந்தான் அவன். சிறுவயதிலிருந்தே அவனது காதல் அவளின் மீதே இருந்தது. நொடிப்பொழுதும் அவளின் முகத்தையே காண வேண்டும் என்ற ஆவல் இனி அவளுடனே வாழப்போகிறோம் என்பதை எண்ணி ஆனந்தம் அடைந்தது. நேரம் நள்ளிரவை நெருங்கியது. தன் நண்பர்களிடம் விடைப்பெற்றுக் கொண்டு அவன் சுவர்கோழி தரும் இன்னிசையை கேட்டுக் கொண்டே நடக்கத்தொடங்கினான். வானம் மிகத் தெளிவாக இருந்தது. நிலவில்லா அந்நேர வானத்தை நட்சத்திரங்கள் அலங்கரித்தது. தெருவிளக்கில்லாத அந்த பகுதியின் அருகிலேயே இருந்த ஆற்றங்கரை அவன் கண்ணில் பட்டது. பாக்கெட்டுக்குள் கைவிட்டுக் கொண்டு பொறுமையாக அங்கே நடந்து சென்றான். வந்தவனுக்கோ ஆச்சரியம். அவனது பள்ளி ஆசிரியர் அந்த ரம்மியமான சூழலை ரசித்து நின்றுக் கொண்டிருந்தார். அவனைக் கண்ட ஆசிரியர், இரண்டு நாட்களுக்கு முன் அவன் தந்தையோடு பேசியதை நினைவு கூர்ந்தார். 'உன் வகுப்பு தோழியை நன்றாக பார்த்துக் கொள்' என்று வாழ்த்தினார். அறிவிலும் அழகிலும் சிறந்த அவள் பூஜ்ஜியத்தை தவிர வேறு எந்த மதிப்பெண்ணையும் எடுக்காத இவனை தன் வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுத்திருக்கிறாளே என்ற சந்தேகம் அவரது மனதில் தோன்றி பொய் புன்னகையாய் வெளியானது. அந்த புல் சமவெளியில் சட்டென்று வந்த காற்று ஆசிரியரது உடலை சிலிர்க்கச் செய்தது. அதைக் கண்ட அவன் உடனே தன் கோர்ட்டை கழற்றி அவருக்கு போர்த்தி விட்டு 'நீங்களும் நாளை என் திருமணத்திற்கு வர வேண்டும்' என்று சொல்லி புறப்பட்டான். நில் என்றார் அவர். மரியாதை குறைவாக ஆசிரியரிடம் நடந்து விட்டோமோ என்ற பயத்தோடே அவனும் நின்றான். 'வகுப்புக்கு வருவது போல நாளை உன் திருமணத்திற்கும் தாமதமாக வந்துவிடாதே' என்றார் அந்த அன்பான ஆசிரியர். படிப்பில் குறைவானவனாக இருந்தாலும் பண்பில் உயர்வான இவனை சரியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்று தன் மனதிற்குள்ளே நினைத்துக் கொண்டார். சிறிது தூரம் நடந்த அவன் அங்கிருந்த புல் மேட்டில் படுத்து தன் பால்ய பருவத்தை நினைவுப் படுத்தி பார்த்தான். தன் காதலுக்கு உதவி செய்த அந்த நண்பன் இன்று இல்லாததை எண்ணிப் பார்ததான். தெளிந்த வானில் செல்லும் எரிக்கலை கண்டபடியே அவனது இதழ் இயல்பாக சொன்னது, அரிகதோ டோரேமான்.


திருமணத்திற்கு முன் இரவு ஆண் வாழ்வில் என்ன நடக்கும், பெண் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை இக்கதை சொல்லும். பெண்ணின் கதையை நான் கூறவில்லை. நோபிடாவின் காதலி ஷிசுகாவிற்கு நெஞ்சை கரைக்கும் ஒரு சம்பவம் நிகழும். அதை 'பெண்ணின் மனம்' என்று வேறொரு பதிவில் தருகிறேன்.

கருத்துரையிடுக

புதியது பழையவை