அண்மை

பெண்ணின் மனம் - திருமண முன் இரவு

திருமணத்தின் முன் இரவு - தொடர் சிறுகதை 2

night-before-wedding-tamil


அண்ட சராசரத்தையே புரிந்து கொள்ள முடிந்த என்னால், பெண்களின் மனதை புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். இந்த படத்தை பார்த்து முடித்த பிறகு பெண்களின் மனதை என்னால் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிகிறது. அதை இப்பதிவின் இறுதியில் சொல்கிறேன்.

இதற்கு முன் பதிவை படிக்க இங்கே தொடவும்


'திருமணத்தின் முன் இரவு' கதையில் நோபிட்டா தன் மறுநாள் திருமணத்தை இன்றென கருதி அவசர அவசரமாக வந்தது. ஷிசுகாவை சந்தித்தது. நண்பர்களுடன் அலைந்து ஆசிரியரை சந்தித்தது போன்றவைகளை பார்த்தோம். அவன் வாழ்வில் எதை எதிர்ப்பார்த்து காத்திருந்தானோ அது நாளை அவனுக்கு கிடைக்கப்போகிறது ஆனால் இதற்கு காரணமாய் இருந்த அந்த நண்பன் அங்கில்லாததை எண்ணி நோபிட்டா வருந்தாமல் அந்த நண்பனுடன் செலவிட்ட சுகமான நினைவுகளை நினைத்துப் பார்க்கிறான்.


இப்போது அவன் காதலியான ஷிசுகாவிற்கு என்ன நடக்கிறது? ஒரு பெண்ணுக்கு எத்தனை முக்கியமான நாளாய் அது அமைகிறது? என்பதை பார்ப்போம். ஒவ்வொரு ஆணும் இதை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.


மணி பத்து இருக்கும். மங்கிய மஞ்சள் நிற விளக்கொளி கீழ் ஷிசுகா பாத்திரங்களை விளக்கிக் கொண்டிருந்தாள். அவளது அம்மா அருகிலே நின்று, அவள் விளக்கி கொடுக்கும் பாத்திரங்களை துடைத்து வைத்துக் கொண்டிருந்தார். எப்போதும் புன்முறுவலுடனே இருக்கும் ஷிசுகா அமைதியாகவும் கவலையுடனும் தெரிந்தாள். பொறுமையாக ஆரம்பித்தாள், 


அம்மா…


சொல் ஷிசுகா


நான் செல்லவா..


அவளது இயல்பான குரலில் தயக்கம் தெரிந்தது. மகளின் மனதை புரிந்து கொண்ட அம்மா 'நன்றாக தூங்கு' எனக் கூறி அவளது தலையை வருடி அனுப்பினார். ஷிசுகாவும் மெல்ல திரும்பினாள். மகளை விட்டு பிரிய மனமில்லாத அந்த தாய் திடீரென கழுத்தில் இருந்த முத்து மாலையாய் கழற்றி ஷிசுகாவிற்கு சூட்டினாள்.


ஏன் மா இதெல்லாம்… என்றாள் கண்ணீர் கொண்ட குரலோடு.


இது உனக்கு தான் ஷிசுகா, உன் அப்பாவை பார்த்துவிட்டு தூங்கு என்றார் அந்த அன்பான தாய்.


ஷிசுகாவும் தயக்கத்தோடே தந்தை இருக்கும் மேல் அறைக்கு சென்றாள். கதவின் முன் நின்று 'அப்பா..' என்றாள் மெல்ல.


'வரலாம்' என்றது ஒரு கம்பீரக் குரல்.


ஷிசுகாவும் கதவை திறந்தாள். கையில் சிகரெட்டுடன் அவர் ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தார். 


'அப்பா… நன்றாக தூங்குங்கள்' என்றாள் தலை குனிந்தவாரே.


எப்போதும் இல்லாது மகளின் கவலையை நொடிப் பொழுதில் புரிந்து கொண்ட தந்தை, மென்மையாக சிரித்து 'நீயும் நன்றாகத் தூங்கு' என்றார்.


அவளும் குனிந்த தலை நிமிராதவாரே அந்த அறையை விட்டு வெளியேறினாள்.


படிகளை நெருங்கிய உடனே தந்தையின் இருமல் சத்தம் கேட்டு பதறிப்போனாள். வேகமாக அறையின் கதவை திறந்து 'என்னப்பா' எனறாள் பயத்துடனே. 


'ஒன்றுமில்லையம்மா.. பயப்படாதே'


தந்தையின் அருகே சட்டென மண்டியிட்டு அமர்ந்தாள். 'அப்பா… எனக்கு திருமணம் வேண்டாம், எனக்கு நோபிட்டா வேண்டாம், நீங்களும் அம்மாவும் தான் எனக்கு முக்கியம்' என்றாள்.


மகளின் இந்த திடீர் முடிவைக் கேட்டு பேசாது போனார் தந்தை.


'ஷிசுகா எனக்கு உன் மனம் புரிகிறது. நாளை உன் திருமணம். இத்தனை நாள் எங்களுடனே அன்பாக வளர்ந்த உன்னால் எங்களது பிரிவை தாங்க முடியாது தான். ஆனால் இது தான் இயற்கை. பெண் பிள்ளையை பெறும் அனைத்து ஆண்களுக்கும், அந்த குழந்தை பிறந்த உடனே தெரிந்துவிடும், இவள் நம்மை விட்டு பிரிந்துவிடுவாள் என்று. நீ பிறந்த நிகழ்வு உனக்கு தெரியுமா? என் வாழ்வின் மறக்க முடியாத நாள் அது தான். அது ஒரு விடியற் பொழுது. அப்போது தான் நான் உன்னைப் பார்த்தேன். நீ பார்க்க குட்டி தேவதைப் போல் இருந்தாய். இதமான கானங்கள் என் காதுகளில் கேட்டது. மெல்ல மருத்துவமனையை விட்டு வெளியே வந்தேன். கிழக்கிலிருந்து சூரியன் எழத்தொடங்கியது. வானிலிருந்த கோடி நட்சத்திரங்களும் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கின. வானத்தை பார்த்தபடியே நின்றேன். என்னால் என் கண்ணீரை அடக்க முடியவில்லை. அது தான் என் வாழ்வில் இன்பமான நாள். நீ பிறந்ததிலிருந்து தான் எங்களுக்கு மகிழ்ச்சியே வந்தது. சிலர் நம் வாழ்க்கையை அழகுபடுத்துவார்கள். சிலர் காயப்படுத்துவார்கள். நோபிட்டா நல்லவன். நீ அவனை தேர்வு செய்தது சரியே. அவன் இன்னும் சிறுபிள்ளை தனமாக இருந்தாலும் உன் மனதை நோகும் படி நடந்து கொள்ள மாட்டான் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நானும் அம்மாவும் என்றும் உன்னை மறக்க மாட்டோம். கவலை இல்லாமல் தூங்கு ஷிசுகா'


மறுநாள் நோபிட்டா ஷிசுகாவின் திருமணம் இனிதே நடைபெற்றது. அத்தோடு இனிதே இக்கதையானது நிறைவுறுகிறது.


ஒவ்வொரு ஆணும் அவனது வருங்கால மனைவியிடம் எதிர்ப்பார்க்கும் ஒரு விஷயம், நம் மனைவி தன் தாயையும் தந்தையையும் அவளுடைய தாய் தந்தை போல் பாவிக்க வேண்டும். அவர்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இப்படி நினைக்கும் ஆண் ஏன் மனைவியினது பெற்றோர்களை தன் பெற்றோர்களாக பாவித்து நடத்தவில்லை. சொல்லப்போனால் அதற்காகத் தான் அந்த உறவு முறைக்கு மருமகன் மருமகள் என்று பெயர் வைத்தனர். ஒவ்வொரு பெண்ணின் மனதும் கேட்கும் குறைந்தபட்ச ஒரு விஷயம் என்னவென்றால், திருமணமான பிறகும் தாய் தந்தை உடனான பிணைப்பு. அதை நீங்கள் உங்களது மனைவியின் பெற்றோர்களிடத்தே கொடுத்துவிட்டால். உங்களது பெற்றோர்களிடம் உங்களின் மனைவிக்கு தானாக வரும். கொஞ்சம் சிந்தியுங்கள்.




கருத்துரையிடுக

புதியது பழையவை