அண்மை

சிறப்பு - கவிதை மற்றும் உரை

சிறப்பு

the best


அன்பின் சிறப்பு

கண்ணீரைத் தருதல்

அறிவின் சிறப்பு

அமைதியாய் இருத்தல்

தாயின் சிறப்பு

பசியை களைதல்

தந்தையின் சிறப்பு

நேர்வழி புகட்டல் 

குருவின் சிறப்பு

குற்றத்தை குறைத்தல்

இறையின் சிறப்பு

நல்லவன் ஆக்கல்

நட்பின் சிறப்பு

பொறாமை தவிர்த்தல்

தோழனின் சிறப்பு

கவலையை தடுத்தல்

தோழியின் சிறப்பு

தோல்வியை தேற்றல்

இன்பத்தின் சிறப்பு

துன்பத்தை மறத்தல்

துன்பத்தின் சிறப்பு

இன்பத்தை நினைத்தல்

நுண்மையின் சிறப்பு

சான்றோரை கவர்தல்

உண்மையின் சிறப்பு

உறுதிபட உரைத்தல்

பெருமையின் சிறப்பு

பிறரதை மொழிதல்

தானத்தின் சிறப்பு

சொல்லாது இருத்தல்

கானத்தின் சிறப்பு

இன்பத்தை அளித்தல்

நூலின் சிறப்பு

நுவல்வோன் தெளிதல்

கோலின் சிறப்பு

நேர்மை வரைதல்

கல்வியின் சிறப்பு

உண்மையை அறிதல்

கேள்வியின் சிறப்பு

உண்மையை ஆய்தல்

அறத்தின் சிறப்பு

அதன்படி நடத்தல்

பொருளின் சிறப்பு

இல்லார்க்கு ஈதல்

இன்பத்தின் சிறப்பு

கூடி மகிழ்தல்

துறவின் சிறப்பு

ஒன்றென உணர்தல்

உறவின் சிறப்பு

நலமா கேட்டல்

தனிமையின் சிறப்பு

கடந்ததை நினைத்தல்

நினைவின் சிறப்பு

நிஜத்தை மறத்தல்

உழைப்பின் சிறப்பு

உடலைப் பேணல்

தொழிலின் சிறப்பு

உள்ளத்தைப் பேணல்

மண்ணின் சிறப்பு

இயற்கை விளைத்தல்

மழையின் சிறப்பு

வெயிலோடு தூறல்

வானின் சிறப்பு

இரவை மகிழ்தல்

உழவின் சிறப்பு

பிறர்பசி ஆற்றல்

உணவின் சிறப்பு

வயிற்றுக்கு அளித்தல்

ஆண்மையின் சிறப்பு

பெண்மையை போற்றல்

பெண்மையின் சிறப்பு

தாய்மையை ஏற்றல்

ஆணின் சிறப்பு

அடங்காமை தவிர்த்தல்

பெண்ணின் சிறப்பு

அடக்கமாய் இருத்தல்

இருபால் சிறப்பு

கற்பைக் காத்தல்

குழவியின் சிறப்பு

மழலையின் புலம்பல்

காதலின் சிறப்பு

களவினால் காணல்

காலத்தின் சிறப்பு

நிற்காது போதல்

மானத்தின் சிறப்பு

உயிராக போற்றல்

வெற்றியின் சிறப்பு

மயங்காது இருத்தல்

தோல்வியின் சிறப்பு

கலங்காது இருத்தல்

முயற்சியின் சிறப்பு

முடிவதை ஆக்கல்

பயிற்சியின் சிறப்பு

பயத்தை நீக்கல்

மனதின் சிறப்பு

புத்துலகம் படைத்தல்

மனிதனின் சிறப்பு

பிரிவினை உடைத்தல்

வாழ்க்கையின் சிறப்பு

முழுதாய் வாழ்தல்

அதனினும் சிறப்பு

பிறர்கென வாழ்தல்

 


என்னுரை: அன்பின் சிறப்பானது அடக்கமுடியாத கண்ணீரினால் வெளிப்படுகிறது, அறிவின் சிறப்பானது எத்தனை சிக்கலான சமயத்திலும் அமைதியை கொடுக்க வல்லது, தாயின் சிறப்பானது பிள்ளையின் பசியறிந்து பசி களைதல், தந்தையின் சிறப்பானது பிள்ளைக்கு நேர்மையை தருதலாகும், குருவின் சிறப்பு ஒழுக்கத்தை தந்து குற்றத்தை குறைத்தல் ஆகும், இறையின் சிறப்பு அறத்தினை கொடுத்து நல்லவன் ஆக்கும், நட்பின் சிறப்பு பொறாமையை தவிர்த்து நடத்தலாகும், தோழனின் சிறப்பு என்றும் மகிழ்ச்சியை தருதலாகும், தோழியின் சிறப்பு இன்பமான வார்த்தைகளைக் கூறி நம் தோல்வியினை மரக்க வைத்தலாகும், இன்பத்தின் சிறப்பு துன்பத்தை நினைவிலிருந்து அழிந்துவிடும் துன்பத்தின் சிறப்பு இன்பத்தையே நினைக்க வைக்கும், மிக நுண்ணிய காரியங்களின் சிறப்பு அறிவுடைய சான்றோர்களை கவர்தல் ஆகும், உண்மையின் சிறப்பு பயமின்றி உறுதிபட உரைத்தல் ஆகும், புகழ் பெருமையின் சிறப்பு பிறர் அதை பலரிடம் உரைத்தல் ஆகும், தானத்தின் சிறப்பு தந்ததை சொல்லி காட்டாமல் இருப்பதாகும், கானத்தின் சிறப்பு கேட்டோர் நன்றென மொழிதலாகும் அது இன்பத்தை தரும், நூலினது சிறப்பு அதை படிப்போரை தெளிய வைத்தலாகும், கோலின் சிறப்பு அது செங்கோல் ஆனாலும் எழுதுகோல் ஆனாலும் நேர்மையை வரைதல் ஆகும், கல்வியின் சிறப்பு உண்மையை அறிதல் ஆகும் கேள்வியின் சிறப்பு அந்த உண்மையை ஆய்ந்து அறிதல் ஆகும், அறத்தின் சிறப்பு அதன்படி நடத்தல் ஆகும் பொருளின் சிறப்பு இல்லாதோருக்கு அளித்தல் ஆகும் இன்பத்தின் சிறப்பு மனம் கூடி மகிழ்தல் ஆகும், துறவின் சிறப்பு அனைத்தும் ஒன்றே என நினைத்தலாகும், உறவின் சிறப்பு பார்க்கும்போதெல்லாம் நலமாய் இருக்கிறீர்களா என கேட்பது ஆகும், தனிமையின் சிறப்பு நினைவு ஏடுகளைப் புரட்டிப் பார்ப்பதாகும், அந்த நினைவின் சிறப்பு நிஜத்தை மறக்கடித்தல் ஆகும், உழைப்பின் சிறப்பு தசை போர்த்திய உடலை பாதுகாப்பதற்காகவும் தொழிலின் சிறப்பு அலைபாயும் மனதை பாதுகாப்பதற்காகவும் ஆகும். உலக மண்ணின் சிறப்பு இங்குள்ள இயற்கையை விளைவிப்பதாகும், மழையின் சிறப்பு வெயிலோடு இருக்கும்போதே தூரல் போடுவதாகும், வானின் சிறப்பு இரவினை தனிமையில் மகிழ்தல் ஆகும், உழவின் சிறப்பு உலகோர் பசியை தீர்ப்பதாகும், உணவின் சிறப்பு நாக்குக்காக அல்லாமல் வயிற்றுக்காக எடுப்பதாகும், ஆண்மையின் சிறப்பு பெண்மையை தூற்றாது இருப்பதாகும், பெண்மையின் சிறப்பு தாய்மையை எற்பதாகும், ஆணின் சிறப்பு அடங்காமை இல்லாமல் இருப்பதாகும், பெண்ணின் சிறப்பு அடக்கமாய் இருப்பதாகும், இருபாலோரின் சிறப்பு கற்பை காத்தலாகும், குழந்தையின் சிறப்பு மழலையின் புலம்பலில் அறியலாம். காதலின் சிறப்பு தலைவியை களவுக் கொண்டு காண்பதாகும், காலத்தின் சிறப்பு எவருக்கும் பணியாது இருத்தலாகும், மானத்தின் சிறப்பு உயிராக போற்றுதலாகும், வெற்றியின் சிறப்பு உச்சத்தை கண்டு மயங்காது இருத்தல் தோல்வியின் சிறப்பு கீழ்மையைக் கண்டு கலங்காது இருத்தல், முயற்சியின் சிறப்பு முடிந்ததை செய்து முடிப்பது, பயற்சியின் சிறப்பு அதை பயமின்றி செய்ய வைப்பது, மனதின் சிறப்பு சோகத்திலும் புத்துணர்வு தந்து வேறு கண்ணோட்டத்தில் உலகைக்காண வைப்பது, மனிதனின் சிறப்பு பிரிவின்றி ஒற்றுமையை வாழ்வது, வாழ்க்கையின் சிறப்பு இடை நிற்காமல் முழுதாய் வாழ்ந்து முடிப்பது, அதனினும் சிறப்பு பிறர்க்கென்றே வாழ்ந்து முடிப்பது


தீசன்

3 கருத்துகள்

  1. ஆகா...கடைந்தெடுத்த நறுஞ்சொற்கள்...

    பத்தொன்பதாவது கீழ்க்கணக்கு நூலாக வைக்கப்படவேண்டியது..



    இன்ப துன்பம்

    கல்வி கேள்வி

    ஆண்மை பெண்மை

    முயற்சி பயிற்சி

    இவை யாவும் இக்கவிதையின் சிறப்புகள்..

    நூலின் சிறப்பு

    தொழிலின் சிறப்பு

    இருபால் சிறப்பு

    இம்மூன்றும் சிறப்புகளுள் அதிசிறப்பு...

    தினத்தென்றல் வாசகன் என்பதில் பெருமை கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. படிக்கும்போதே தெளிவு கிடைக்கிறது.விளக்கம் தேவையில்லையே!

    பதிலளிநீக்கு
  3. சொல்ல வார்த்தைகளே இல்லை... அட்டகாசம் தீசனாரே

    பதிலளிநீக்கு
புதியது பழையவை