'சாணக்கியா' சேனலின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவில் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே அவர்கள், 'ஓட்டுக்கு பணம் வாங்குங்கள், வாங்கிக் கொண்டு நல்லவருக்கு ஓட்டு போடுங்கள்' என்கிறார்.
'நம்மிடமிருந்து திருடிய பணம் நமக்கே வருகிறது அப்படியிருக்க இதை வாங்குவதில் தவறென்ன? என்பது தான் இன்றைய பெரும்பான்மை மக்களின் மனநிலை.
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். ஏன் ஒருவரது ஓட்டுக்கு இவ்வளவு பணம் தர வேண்டும்? வெற்றி பெற்றால் மாதச்சம்பளம் அதிகபட்சமாக 2 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு மாதமும் இரண்டு லட்சம் சம்பளம் பெறுவதற்கா பல்லாயிரங்கோடி பட்டுவாடா செய்ய வேண்டும்?
எவன் முதல் போடுகிறானோ அவனே லாபத்தை எதிர்பார்ப்பான். எனக்கு ப்ரியமான ஒருவர் பேச்சு வாக்கில் சொன்னார், 'அவர் அரசியல் செய்கிறார், இவர் அரசியல் செய்கிறார் என எல்லோரும் சொல்கிறார்கள், அரசியலில் உள்ளவன் அரசியல் செய்யாமல் வேறென்ன செய்வான்' என்று
ஆம். அரசியலில் உள்ளவன் அரசியல் தான் செய்வான் ஆனால் அதையே தொழிலாக செய்யமாட்டான்.
இறை தூதர் முகமது நபி, ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு அரபு நாட்டை ஆண்ட மன்னரும் ஆவார். இது பலரும் அறியாத செய்தி. அத்தனை பெரிய நாட்டின் மன்னர், தான் மன்னராக இருந்த போதும் ஆடு மேய்த்தார். அவரது வீட்டில் எந்த விளக்கும் கிடையாது. ஒரே ஒரு பாய், ஒரு ஒரு தலையணை மட்டுந்தான். அந்த பாயைத் தான் வீட்டின் கதவாக பயன்படுத்துவாராம். தலையணையை கிடக்கையில் போட்டு ஒருபுறம் இவரும் மறுபுறம் அவரது மனைவியும் துயில் கொள்வார்களாம். அத்தனை வறுமை.
இங்கு நபிகள் செய்ததும் அரசியல் தான். நம்வூர் நாயகர்கள் செய்வதும் அரசியல் தான். ஆனால் நபிகள் அரசியலை சேவையென கருதினார். நம் காலத் தலைவர்கள் அரசியலை தொழிலாக கருதுகிறார்கள். நபிகள் நினைத்திருந்தால் செல்வச் சீமானாக வாழ்ந்திருக்கலாம். அக்கால ஏனைய பிற அரசர்களும் அப்படித் தான் இருந்தார்கள். மக்களின் வரிப்பணம் மக்களுக்கே கிடைக்க வேண்டும் அதில் நாம் அரசராக இருந்தாலும் எந்த விதத்திலும் உரிமைக் கொண்டாட முடியாது என்ற தூய எண்ணத்தை நபிகள் கொண்டிருந்தார்கள்.
ஓட்டுக்கு பணம் என்பது ஒருவித சூது போலத்தான், ஒரு கட்சி ஒரு ஓட்டுக்கு இரண்டாயிரம் கொடுத்தால் ஆட்சிக்கு வந்தவுடன் நாலாயிரம் எடுத்துவிடும். பணம் கொடுத்தும் தோற்கும் கட்சி அடுத்த ஆட்டம் வரும் வரையில் காத்திருக்கும். மொத்தமாக இழந்தவன் இன்னொருவனோடு சேர்ந்து ஆடத் தொடங்குவான். அதிலும் இழப்பவன் அடுத்தவனை தேடுவான்.
நன்றாக யோசித்துப் பார்க்கும் போது அரசியல்வாதிகள் திருடக்காரணம் மக்களாகிய நாமாகவே இருக்கிறோம். வரும் பணத்தை வாங்கிக் கொள்வேன் ஆனால் சிந்தித்து வாக்களிப்பேன் என்போர்களாலே ஊழல் அரங்கேறுகிறது. எப்படியென்றால், நீங்கள் வந்த பணத்தைக் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள், அவன் தந்த பணத்தை எப்படி மீட்கலாம் என்று யோசிப்பான். ஏற்கனவே திருடிய பணத்தை முதலாகப் போட்டு அதை விட அதிகமாக லாபத்தை எதிர்ப்பார்ப்பதே இன்றைய அரசியல்.
சரி இந்த திருட்டைத் தடுக்க என்ன தான் வழி? ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது.
அது எப்படி சாத்தியமாகும்? இப்போது இரண்டு மடங்கு லாபம் பார்ப்பவன். அந்த பணத்தையும் பெறவில்லையானால் மூன்று மடங்கு அல்லவா லாபம் பார்ப்பான்? என்ற கேள்வி வரும்
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்
ஊன் உண்பதற்கு எவனும் இல்லாமல் போனால், விற்பதற்கு எவனும் இருக்க மாட்டான்.
ஓட்டை விற்க எவனும் இல்லாமல் போனால், வாங்குவதற்கு எவனும் இருக்க மாட்டான்.
ஓட்டினை வாங்கத் தேவையில்லாதவன், வெற்றிக்காக பணத்தை சேர்க்க மாட்டான், பணத்தை சேர்க்க தேவையில்லாதவன், மக்கள் பணத்தை திருட மாட்டான்.
சிறு துளி பெரு வெள்ளம். குடிமக்கள் ஒவ்வொருவரும் 'இனி ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்' என்ற மனநிலைக்கு வந்தால் மட்டுமே நாட்டில் ஊழல் குறையும் என்பது என் துணிபு.
அப்படியானால் ஓட்டுக்கு பணம் கொடுக்காதவர்களே நல்லவர்களா? என்ற புது கேள்வி முளைக்கும்.
இல்லை என்ற காரணத்தால் கொடுக்காதவன் இருப்பானல்லவா. ஒரு தலைவர் இருக்கிறார், என்னிடம் இலவசமாக குடிநீரை வழங்கத் திட்டம் இருக்கிறது, இலவசமாக கல்வியை வழங்கத் திட்டம் இருக்கிறது, இலவசமாக மருத்துவத்தை வழங்க திட்டம் இருக்கிறது என ஒவ்வொரு பிரச்சாரத்தின் போதும் ஒவ்வொரு பேட்டியின் போதும் பேசுகிறார் ஆனால் ஒருமுறைக் கூட அவரால் வெல்ல முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
உண்மையிலேயே அந்த தலைவருக்கு மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமிருந்தால், குடிநீருக்கும் கல்விக்கும் மருத்துவத்திற்கும் ஏழைகள் படும் சிரமத்தை பார்த்து அவருடைய இந்த இலவச திட்டங்களை மக்களுக்கு அம்பலப்படுத்திருக்க வேண்டும். முடியவில்லையெனில் இந்த திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவர குரல் எழுப்புங்கள் என்று கூறியிருக்க வேண்டும். அல்லது தன்னிடம் உள்ள கூட்டத்தை வைத்து அவற்றை நிஜமாக்க துணிந்திருக்க வேண்டும். அதைவிடுத்து இன்றளவும் 'என்னிடம் திட்டம் இருக்கிறது, எனக்கு ஓட்டுப் போடுங்கள் என்று மட்டுமே கூறுகிறார் எனில் ஆங்கே தெரிவது ஒன்று பதவி ஆசை அல்லது பணத்தாசை.
நன்மை நடக்க வேண்டுமென நினைப்பவன் அது யாரால் விளைகிறது என்பதை எதிர்நோக்க மாட்டான்.
நன்மை என்ற பேரில் லாபத்தை எதிர்பார்ப்பவனே, அது நம்மால் நடக்க வேண்டுமென காத்திருப்பான்.
அதனால் பணம் கொடுக்கிறார்கள் கொடுக்கவில்லை நீங்கள் வாங்காதீர்கள்.
அப்படி வாங்காதவர்களை இச்சமூகம் வாழத்தெரியாதவன் பிழைக்கத்தெரியாதவன் என்று கூறும். சான்றோர் அவர்களை, நேர்மையுள்ளவன் மனதிற்கு விரோதமில்லாதவன் என்பர்.
கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டில் சாதி லஞ்சம் வன்முறை இவைகளை ஒழிக்க சத்தியாகிரக இயக்கத் தலைவர் ராமகிருஷ்ணசாஸ்திரி மற்றும் அவ்வியக்க தோழர்கள் பலர் மக்களின் கால்களில் விழுந்து போராடி வருகிறார்கள். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் பணம் வாங்கி ஓட்டு போடுவதை தடுக்க மக்களின் கால்களில் விழுந்து கெஞ்சுகிறார்கள். நாற்பது வயது மதிக்கத்தக்க அவர் சாலையில் போகும் ஒவ்வொருவரது காலையும் பிடித்து 'தயவுசெய்து ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள்' என்பது கல் மனது கொண்டோரையும் கணநேரத்தில் சிலையாக்கிவிடுகிறது.
இனி வரும் தேர்தலில் உங்கள் மனதிற்காக இல்லையானாலும் சத்தியாகிரக இயக்கத் தலைவர் ராமகிருஷ்ண சாஸ்திரிக்காக 'பணம் வாங்காது ஓட்டு போடுங்கள்'
நாடு செழிக்கும்
தீசன்
ஓட்டுக்கு பணம் என்பது ஒருவித சூது போலத்தான், ஒரு கட்சி ஒரு ஓட்டுக்கு இரண்டாயிரம் கொடுத்தால் ஆட்சிக்கு வந்தவுடன் நாலாயிரம் எடுத்துவிடும். பணம் கொடுத்தும் தோற்கும் கட்சி அடுத்த ஆட்டம் வரும் வரையில் காத்திருக்கும். மொத்தமாக இழந்தவன் இன்னொருவனோடு சேர்ந்து ஆடத் தொடங்குவான். அதிலும் இழப்பவன் அடுத்தவனை தேடுவான்.
பதிலளிநீக்குஇச்செந்தழல் வரிகள் என் எண்ண இருளினை அகன்றோட செய்துவிட்டன.
தென்றல் நபிகளை உதாரணம் காட்டியதற்கும் என்முதற்கண் பாராட்டுகள்...
எனினும்... நபிகள் வறுமையில் வாழ்ந்தார் என்பதை விட எளிமையில் வாழ்ந்தார் என சொல்லியிருக்கலாம்... எல்லாம் இருந்தும் துறப்பது தான் அரிது. நபிகள் அரியன நிகழ்த்தியவர்.
நன்மை நடக்க வேண்டுமென நினைப்பவன் அது யாரால் விளைகிறது என்பதை எதிர்நோக்க மாட்டான்.
பதிலளிநீக்குஉண்மை தான்.. அதே நேரம் அரசியலை சேவை என்றும் தொண்டு என்று சொல்கிறீர்.. தொண்டு செய்ய யார் வருவார்கள் என்று பார்ப்பது சரியா தானே களம் இறங்கி செய்வது சரியா?
மேலும் அவர் ஒண்ணும் திட்டம் இருக்கிறது மந்திரம் இருக்கிறது என்றுசொல்லி திரியவில்லை.
அவரது பேச்சை ஒரு அரைமணிநேரம் கேட்டாலே அதில் அதை செய்யவேண்டிய முறையை முற்றாக எடுத்துரைத்துரைத்திருப்பார்.மேலும் கொள்கைவரைவு என்று விளாவாரியாக தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளும் அதைகையாளவேண்டிய தீர்க்கமான முறைகளுடன் மிகமிக நேர்த்தியாக பதிவுசெய்து சில ஆண்டுகளுக்கு முன்பே அம்பலபடுத்தி ஆயிற்று...
தமிழுக்கு கதி என்ப கம்பராமயணம் திருக்குறள் என்பதுபோல தமிழ்நாட்டுக்கு அந்த வரைவு அறிக்கையே கதி! அதை தவிர இன்னொரு உபாயத்தை தீசனாலும் ஏன் அந்த ஈசனாலும் காட்ட இயலாது.உங்கள் பாணியில் சொல்வதென்றால் இது என் துணிபு.
பாமரர்களிடம் அதை கொண்டுசேர்க்க வேண்டியது.. ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஆன உங்களைப்போன்ற பத்திரிக்கையாளர்களின் கடமை. நீங்கள் உட்பட எல்லா ஏடுகளும் அதைத்தவிர மற்றதை சிறப்பாகவே செய்துவருகிறீர்கள்...அதைபற்றி விவாதிக்கவோ கருத்துபரிமாறவோ கூட வாய்ப்பளிக்காமல் மூடி மறைப்பதும் முன்னெடுக்காது புறக்கணிப்பதும் நிகழ்கால அவமானம்.
உதாரணத்திற்கு எடுத்த எடுப்பிலேயே அதில் தலைநகர்மாற்றம்/பரவலாக்கம் குறித்து கூறப்பட்டிருக்கும். நகரமயமாதலுக்கு இருக்கும் உலகளாவிய சிறந்த ஒரே தீர்வு அதுமட்டுந்தான்.
இரண்டாவதாக அவர் செயல்படுத்துங்கள் என்று சொல்லவில்லை செயல்படுத்துவோம் என்கிறார். ஜனநாயகத்தில் வெறும் இயக்கங்களால் கழகங்களால் மக்களை மாற்றிவிட இயலாது. அது சமூகவலைதளங்களில் அடுத்தவரின் like க்காக பகிரும் வெற்றுசெய்தியாகிவிடும். மாறாக அதை சட்டமியற்றி நிறைவேற்றும் அதிகாரம் தேவைப்படுகிறது. அவர் ஓட்டை வேண்டுவது அந்த அதிகாரத்தை அடையவே.
காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருதுபவர்.
நல்லது, அந்த வரைவு அறிக்கையை படித்தேன்.
நீக்குஅதில் பாதிக்கும் மேற்பப்ட கருத்துக்கள், 'ஒரு பதவி இருந்தாலொழிய செய்யமுடியாது' என்பதை போன்றது அல்ல..
குரு கண்ணதாசன் அவர்கள் சொல்வார்கள், 'உரிமை உரிமை என்று குரல் கொடுப்பதை விட்டொழிந்து கடமை கடமை என்று காரியம் செய்தாலென்ன?'
நானும் இதைத் தான் இந்த கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்.
காந்தி கடமையை செய்தார் கூட்டம் தானாக சேர்ந்தது.
காமராஜர் நன்மையை செய்தார் ஆதரவு தானாக வந்தது.
நடிகர் விவேக் அவர்கள் ஒரு சிறு குழுவைக் கொண்டு 23 லட்சம் மரத்தினை நட்டிருக்கிறார்.
ஒப்புக் கொள்கிறேன் சில விஷயங்களை பதவி இல்லாமல் செய்ய முடியாது தான்.
எனக்கு தெரிந்து அந்த வரைவு அறிக்கையில் இருக்கும் இயற்கைக்காக உள்ள செயல்பாடுகளை அவரிடமிருக்கும் குழுவை கொண்டு எப்போதோ செய்திருக்கலாமே...
இயற்கை வளங்களை காக்கும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் எவ்வளவோ உள்ளது. ஆனால் அதில் கூட அவருக்கு இருக்கும் படியான கூட்டம் இருக்காது.
பதவி வந்தால் தான் குறைந்தபட்ச கடமையை கூட நிறைவேற்ற முடியுமா என்ன?
நானும் இந்த நாடு நன்றாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். என்னால் இயன்றவற்றை செய்து கொண்டும் தான் உள்ளேன்.
மனம் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்; செய்ய முடிந்த நன்மையை நினைத்த மாத்திரத்தில் செய்வதே சிறப்பு.
ஞாலத்தை அடைய விரும்புவோருக்கு தான் காலம் வேண்டியிருக்கும், நன்மை செய்ய நினைப்போருக்கு அல்ல.
அவர் ஞாலத்தை கருதுகிறாரா? நன்மையை கருதுகிறாரா?
அருமையான பதில்
நீக்கு