அண்மை

அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் பத்து உன்னையே நீ அறிவாய் நூல் விமர்சனம்

அர்த்தமுள்ள இந்து மதத்தின் கடைசி பாகம்,

யதார்த்தமாய் வாழும் பலரது வாழ்வை மாற்றிய பத்தாம் பாகம், உன்னையே நீ அறிவாய் நூல் விமர்சனம் இனி காண்போம்


எப்படி எல்லாம் வாழக் கூடாதோ, அப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே, இப்படித் தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு.

arthamulla indhu matham


இப்பாகம் மொத்தம் ஒன்பது அத்தியாயங்களைக் கொண்டது, முதல் அத்தியாயம் 'பதில் இல்லாத கேள்வி' இந்த அத்தியாத்தில் கண்ணதாசன், என்னை இனி ஒரு நாத்திகனாக கொள்ளுங்கள், இனி அப்படி பயணிப்போம் என்று முடித்திருப்பார். ஆனால் அந்த பயணம் ஒரு சில அத்தியாயங்களோடு முடிந்துவிடும், எழுத்திலும் அவரால் பொய்யாக வாழ முடியவில்லை.


இரண்டாவது அத்தியாயத்தில் தான் கொண்ட தவறான பழக்கத்தாலே எனக்கு நாத்திக உணர்வு வந்தது என்று நாத்திகர்களை மறைமுகமாக சாடியிருப்பார். அதேசமயத்தில் நமக்கும் அவ்வத்தியாயத்தின் மூலம் சேரிடம் அறிந்து சேர்வதை விளக்கியிருப்பார்.


மூன்றாவது பகுத்தறிவு, இன்றைய பகுத்தறிவு என்னவெனில் இந்து தர்மத்தை மட்டும் நம்பாமல் இருப்பதாகும். பகுத்தறிவு என்பதே பகுத்து அறிவதாகும். அது இறுதியில் ஓர் ஆச்சரியத்திடமே நம்மை அழைத்துச் செல்கிறது.


கண்ணதாசன் அவர்களின் வரிகளில் ஒரு சிலவற்றை நான் குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.


"இன்றைய பகுத்தறிவாளனை காட்டிலும் நான் அதிக புத்தகங்களை படித்து இருக்கிறேன், அதிக கருத்துகளை எழுதி இருக்கிறேன். எந்த ஆராய்ச்சியில் இறங்கினாலும் என் ஆறாவது அறிவு, அதிலே தெய்வத்தை தான் கண்டுபிடிக்கிறது"


"கடவுளை நம்புபவன் பாவம் செய்ய அஞ்சுகிறான், கடவுளை நம்பாதவன் பாவத்திற்கு துணிகிறான்"


அடுத்து ஈஸ்வர லயத்தினால் ஏற்படும் நிம்மதியை விளக்கும் கவிஞர், மனிதனுக்கு மிகவும் அவசியமான பொய்யில்லா வாழ்க்கையை தெளிவு படுத்துகிறார்.


"நான் திமுக வில் இருந்த போது காங்கிரஸ் காரர்களும், காங்கிரஸில் இருந்த போது திமுக காரர்களும் பேசுவார்கள், கண்ணதாசன் குடிப்பவன் என்று. எந்த மேடையிலும் நான் அதை மறுத்ததில்லை. 'ஆமாம், நான் குடிப்பேன்' என்று வெளிப்படையாக ஏற்பேன். திறந்த புத்தகமாய் நம் வாழ்வை அமைத்துக் கொண்டு விட்டால் அடுத்தவன் நம்மை விமர்சனம் செய்ய விஷயம் இருக்காது"


பிறகு மனதிற்கான மற்றும் உடலிற்கான கடிவாளத்தைப் பற்றியும், சில சித்திரவதைகள் என்று மனிதன் எப்படி நிறைவுற வேண்டும் என்பதையும் எளிமையாக விளக்குகிறார்.


நம்மிடம் செறுப்பு இல்லை என்று நினைப்பவன், கால் இல்லாதவனை பார்த்து நிம்மதி அடைவான், கால் இல்லாதவன் கண் இல்லாதவனை பார்த்து நிம்மதி அடைகிறான் என வாழ்வியல் நிறைவை எளிமையாக புரிய வைக்கிறார்.


உனக்கு கீழே உள்ளவர் கோடி

நினைத்து பார்த்து நிம்மதி நாடு


வாழ்க்கை என்பது வாழ்வதற்காகவே எனும் எட்டாவது அத்தியாயத்தில்  வருவதை கண்டு மயங்காதே, போவதை கண்டு மயங்காதே எனும் தனது அனுபவத்தையே அறிவரை ஆக்குகிறார். 


நல்லவனை விடவும் தீயவன் உயர்கிறானே எனும் மயக்க கேள்விக்கு விடை தந்த கண்ணதாசன் இறுதியில் 'நல்லவன் வாழ்வான்' எனக் கூறி நம் கண்களையெல்லாம் குளமாக்கி புத்தகத்தை முடித்துக் கொள்கிறார்.


எத்தனை அருமையான புத்தகம், தமிழ் தெரிந்த அனைவோராலும் போற்றப்பட வேண்டிய புத்தகம் இது, ஒரு மனிதனை எப்படி இன்பமாக வாழ செய்வது என்பதை சலனமின்றி விளக்குகிறது இந்நூல்.


இப்போதும் நான் சொல்வேன், இறைவன் நம்மை எல்லாம் சுகமாக வாழ வைக்க, கண்ணதாசன் என்ற ஒருவரின் வாழ்க்கையையே வீணடித்து விட்டார்.


கண்ணதாசன் எனும் மா மனிதரின் பிறப்பின் நோக்கம், அர்த்தமுள்ள இந்து மதம் என்னும் இந்நன்னூலை இயற்றுவதற்காகவே இருக்கும் என்பது என் உறுதியான நம்பிக்கை.


-குகன்

கருத்துரையிடுக

புதியது பழையவை