அண்மை

தினத்தென்றல் இந்துத்துவத்தை ஆதரிக்கிறதா?

சில எழுத்துப்பணிகளின் காரணத்தால் நீண்ட நாட்களாக தென்றலில் நான் எந்தவொரு கட்டுரையும் எழுதவில்லை; மன்னிக்கவும்.

en paarvai


கடந்த பதிவுகள் அனைத்துமே 'அர்த்தமுள்ள இந்து மதத்தின்' நூல் விமர்சனமாகவே இருந்தது. நண்பர் குகன் அந்நூலை முழுவதுமாக படித்தறிந்தவர். எவ்வித குறையும் இன்றி பத்து பாக நூல் விமர்சனங்களையும் அவர் தெளிவுற முடித்துவிட்டார். இதற்கு முன்னும் பகவத்கீதை மற்றும் மகாபாரத நூல் விமர்சனங்கள் தென்றலில் இடம்பெற்றது. அப்பதிவுக்கு ஒழுக்கத்தை தரும் உயர்வான நூல்கள் என்றே பெயரிடப்பட்டிருந்தோம். ஒழுக்கம் தரும் உயர்வான இந்து மத நூல்கள் எனப் பெயரிடவில்லை. அர்த்தமுள்ள இந்து மதம் எனும் நூலிலே இந்து மதத்தின் பெயரும் வந்துவிட்டது. அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் ஒரு நல்ல நூலைப் பற்றி எங்களால் சொல்லாமல் விட்டுவிட முடியாது. அதே காரணத்திற்காக தினத்தென்றலும் இந்துத்துவத்தை ஆதரிக்கிறது என்றாகிவிடாது.


தென்றலின் நோக்கம், மக்களை அன்பென்னும் பாதையில் அறநெறியோடு நடக்க வைப்பதே ஆகும். அதற்கு பாதகமில்லா எம்முறையையும் நாங்கள் எழுதுகோலாய் கையிலெடுப்போம்.


நான் எழுதிய ஞானத்தைத் தேடி நூல் முழுவதும் மகாபாரதக் கதைகளையே உதாரணமாக்கியிருந்தேன். இந்து மீது எனக்கிருக்கும் ப்ரீயம் எனப் பலர் கருதியிருக்கலாம். அறக்கருத்துகள் எளிதில் அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே நான் அப்படி எழுதினேன். அதில் எந்த உள் நோக்கமும் கிடையாது. 


திருக்குறளில் இல்லாத அறக்கருத்துகள் இல்லை, ஏன் நீ அவைகளை பயன்படுத்தவில்லை? எனக் கேட்பர்.


வரலாற்றைக் கூட புனைவுக் கதைகளாய் படிக்கும் போதே மனதில் நிற்கிறது. அதே முறையைத் தான் நானும் கையாண்டேன். அறத்தைக் கூறும் பாரதக்கதையினை ஆயுதமாக்கினேன். என் முயற்சி வீண் என இப்போது புரிகிறது. இங்கு பலர் அறத்தை தெரிந்து கொள்வதைக் காட்டிலும் அதை யார் சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள அதிக ஆர்வங் காட்டுகின்றனர். இன்று, இந்து கருத்தை ஓர் இந்து பொது வெளியில் சொன்னால் அவன் இந்துத்துவா ஆகி விடுகிறான். இஸ்லாத்தின் கருத்தை ஓர் இஸ்லாமியனும் கிறிஸ்தவத்தின் கருத்தை ஓர் கிறிஸ்தவனும் சொன்னால் அவர்கள் மதப்பரப்பி ஆகிவிடுகிறார்கள்.


எல்லோரும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், எல்லோரும் ஒன்றல்ல. மதப்பெருமை அடிக்கும் இந்துத்துவாவும் இருக்கிறான், மதப்பரப்பியும் இருக்கிறான். தினத்தென்றல் அப்படிப்பட்டதல்ல.


இராமாயணத்தின் மூலம் பலப் பிரச்சனை இன்றைக்கும் நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. காரணம், சரியான புரிதல் இல்லை. 


இராவணன், இராமன் லட்சுமணனை ஏமாற்றி, சீதை தனித்திருக்கும் வேளையில் அவள் வேறொருவனுடன் மணமானவள் எனத் தெரிந்திருந்தும், அவள் மேல் கொண்ட ஈர்ப்பால், சீதையின் கைகளை பிடித்திழுத்து இலங்கைக்கு கூட்டிச் செல்வான். பிறன் மனை நோக்குவதையே இழிவான செயல் என வள்ளுவர் கூறுகிறார். இவனோ கையை பிடித்திழுத்து கூட்டியும் சென்று விட்டான்.


என்னிடம் ஒருவர் கேட்டார், 'இராவணன் சீதைக்கு செய்ததை தவிர வேறு என்ன தவறு செய்தான்? என்று.


இதை விட பெரிய தவறு வேறெண்ண உங்களுக்கு வேண்டும்?


இராவணன் ஒரு இழிமகன். இராமன் இத்தவறை செய்திருந்தாலும் அவனையும் நான் இப்படியே தான் சொல்வேன். ஏனென்றால், என்னைப் பொறுத்தவரையில் இரண்டுமே கதாப்பாத்திரம் அவ்வளவு தான். 


வால்மீகி வட நாட்டோரை தேவர்களாவும், தென் நாட்டோரை அசுரர்களாவும் இராமாயணத்தில் காட்டுகிறார். அதன்படி தமிழனான இராவணனை இப்படி ஒரு கேவலமான செயலை செய்ததாக புனைகிறார், என்பார்கள்.


வால்மீகிக்கு தமிழர்கள் மீது கோபமிருந்தால் ஏன் பாண்டியர்களைப் பற்றி இத்தனை உயர்வாக எழுத வேண்டும். அன்னை சீதையை அனுமன் தேட செல்லும் போது சுக்கிரீவன் வாயிலாக வால்மீகி பாண்டிய இனத்தவர்களைப் பற்றி குறிப்பிடுவார். அதனால் வால்மீகிக்கு தமிழர்கள் மீது கோபமல்ல இராவணன் மீதே கோபம் என்பது தெளிவாகிறது.


சரி, இராவணனை அருகிலேயே உள்ள ஏதும் ஓர் ஊரின் மன்னராக புனைந்திருக்கலாமே? ஏன் தென்னகத்தில் உள்ள இலங்காபுரிக்கு மன்னராக்க வேண்டும்? என அடுத்த கேள்வி வரும்.


நற்றிணையிலும், அகநானூறிலும் வடக்கிலிருந்து வந்த மன்னர்கள் தமிழர்களிடம் அடிவாங்கி புறமுதுகு காட்டி ஓடியதை ஓரிரு வரிகளில் படித்தறிய முடிகிறது. நம் தமிழ்ப் புலவர்கள் இயற்றும் செய்யுள்களிலும் காப்பியத்திலும் புறந்தவிர்த்த எந்நூலிலும் பெரும்பாலும் 'எதிரி' என்ற பாத்திரமே இருக்காது. அறத்தோடே வாழ்ந்த நம் மக்கள் போராட்டங்களை விரும்பவில்லை. வந்த போரையும் விட்டு வைக்கவில்லை. அதனால் 'எதிரி' என்ற பாத்திரம் நமக்கு தேவையற்றதாகியது. தமிழ் செய்யுள்களும் ஆயிரம் முறை அமைதியை சொன்னால் ஒரு முறையே சினத்தைப் பற்றிக் கூறும். 


ஆனால் வடநாட்டு காப்பியங்களில் எதிரி பாத்திரத்தை காணமுடிகிறது. நான் முன்பே சொன்னேனல்லவா வடக்கத்தியர்கள் தமிழர்களிடம் தோற்றோடினர் என்று அதனால் அவர்களுக்கு வலிமை பொருந்திய எதிரியாய் தெரிந்தது தமிழர்கள் மட்டுமே. குறிப்பாக சில வெல்ல முடியாத வேந்தர்களையே அவர்கள் ஜென்ம சத்ருவாய் கருதினர். புலவர்கள் மன்னர்களை மகிழ்ச்சிப்படுத்த நடக்காத காரியங்களை நடந்தது போல கற்பனை கலந்து எழுதுவது இயல்பு. அதுபோலக் கூட வால்மீகியின் கதையும் ஆகியிருக்கலாம்.


உண்மையோ..பொய்யோ.. இராவணன் ஒரு தமிழன் என்ற ஒரு காரணத்தை மட்டுங் கொண்டு அவனைக் கொண்டாடுவது எப்படித் தகும்?


இராவணன் செய்தது பாவம். தமிழனாக இருந்தாலும் பாவம் பாவமே. இங்கு பலர் இராவணனைக் கொண்டாடுவதன் காரணம் என்ன தெரியுமா?


இராமன் ஆரியனாவான், இராவணன் திராவிடனாவான்.


இதைக் கேட்டால், என் இனத்தவன் நான் கொண்டாடுகிறேன், உன்னிடம் இனப்பற்று இல்லை அலட்சியம் செய்கிறாய் என்பார்கள்.


மகாத்மா காந்தி சொல்கிறார், "இந்த நாடு எப்படி இருக்க வேண்டுமென நீ ஆசைப்படுகிறாயோ, அதுபோல முதலில் உன்னை மாற்று"


ஏற்றத்தாழ்வு காணாத நாடு வேண்டும் என ஆசைப்படுவோர்கள் முதலில் பிரிவினை காணாத மனப்பக்குவத்திற்கு வர வேண்டும். இன்றைய நம் மக்களுக்கு, பிரிவினையானது பிறப்பிலிருந்தே ஒட்டிக்கொண்டிருக்கிறது.


இராமன் ஆரியன், இராவணன் என் இனம் என்பதாலே பிரச்சனைப் பிறக்கிறது. அனைவரும் சமமென்ற மனநிலை உங்களுக்கு இருந்திருந்தால் 'இராவணனுக்கு இந்த தண்டனை சரி தான்' என்பீர்கள். அது இராமனை வெற்றி அடைய செய்ததாக காட்டாது, அறம் கூறும் கருத்துகளின் உண்மையைக் காட்டும்.


எந்த ஒரு நூலிலிருந்தும் அறக்கருத்துகளை மட்டும் தேடும் ஒருவன் இராமயணத்தின் மூலம், ஒருவனுக்கு ஒருத்தி எனும் உயர்வான வாழ்வியலை அறிவான். பக்தியின் மூலம் கிடைக்கும் அமைதியை அறிவான். (கடவுள் பக்தி அல்ல, தாய் தந்தை குரு மீதுள்ள பக்தி) பாவத்தினால் வரும் தண்டனையை அறிவான். கோபத்தைக் காக்கும் பொறுமையை அறிவான். உதவி மூலம் வந்த உதவியை அறிவான். 


எந்த ஒரு செயலிலும் நன்மை தீமை இரண்டும் விளைகிறது. மகாத்மா சொன்னபடி உங்களது எண்ணம் போலே வாழ்க்கை அமைகிறது. அறம் கூறும் நூலில் பிரச்சனையைத் தேடினால் கண்களுக்கு அறங்கள் தெரிவதில்லை பிரச்சனைகளே தெரிகிறது. இதைக் கொண்டு பிழைப்பு நடத்தும் சிலர், பலரது வாழ்வைக் கெடுப்பது எனக்கு இப்போதும் வருத்தமளிக்கிறது. வீரியமாக ஒருவன் பேசினால் எதுவும் உண்மையாகிவிடாது, எதையும் படித்துணருங்கள்.


வடநாட்டுக் காரன் எழுதியவை என்பதால் இராமாயணமும் மகாபாரதமும் மோசமான நூலாகி விடாது. சேற்றிலும் செந்தாமரை முளைக்கிறது. அவர்களிடத்தே மனுசாஸ்திரம் போன்ற கொடுமையான நூல்கள் இருந்தாலும், அறக்கருத்து கொண்ட நூல்களும் நிரம்பி இருப்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.


இப்போதும் சொல்கிறேன், நான் இந்து மத நூல்களைப் பற்றியே பேசுவதால், இந்துவைப் பற்றியே ஸ்துதி பாடுபவன் ஆகி விட மாட்டேன். அறம் எங்கிருக்கிறதோ அங்கெல்லாம் தமிழும் தென்றலும் எப்போதும் இருக்கும். இனி எனது அறக்கருத்து கூறும் கட்டுரைகளில் அனைத்து மத அறக்கருத்துகளும் இடம்பெறும். அப்படி இல்லையெனில் ஒவ்வொரு மதமும் கூறும் அறக்கருத்துகளையே ஒவ்வொரு தொடராக வெளியிடுகிறேன். தினத்தென்றலும் நாங்களும் குறிப்பிட்ட மதக்கருத்தை மட்டும் சார்ந்தோர் அல்ல என்பதை நிரூபிக்க எங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு இது.


இந்துமதம் என்றில்லை

எம்மதமும் சம்மதமென

என்றே நாங்கள்

கொண்டாடுவோம்


-தீசன்

1 கருத்துகள்

  1. கொன்றன்ன இன்னாசெயினும் அவர்செய்த
    ஒன்று நன்றுள்ளக் கெடும்.

    குணம்நாடி குற்றமும்நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை