அண்மை

என்னான்கு கவிதை - தீசன்

என்னான்கு கவிதை


my fore quotes


ஞானம்


அழியுமுடல் அமைக்கப்பெற்றே 

மனிதன் பிறக்கிறான் 

தாய் மடியே தலைவிதியாய் 

தவழத் தொடங்கினான் 

அறிவு முளை விட்டப்பின்னே

கல்வி கற்கிறான் - அதைக் 

கண்டும் கேட்டும் 

விட்டுவிட்டு தள்ளி 

விடுகிறான் 

ஈன உடல் ஊன உடல் 

கேலி செய்கிறான் - அதிலும் 

எளியோரை எங்கெங்கும் 

அவமதிக்கிறான் 

மோகமென்னும் மோகினியால் 

கவரப்படுகிறான் - அது 

சொன்னதெல்லாம் கேட்டிருக்கும் பொம்மையாகிறான் 

நாவின் சுவை கண்டுவிட்டு 

பலி கொடுக்கிறான் - அதில் 

பல சுவையை சேர்த்துவிட்டு 

மதி இழக்கிறான் 

ஈகை இல்லா குணத்தோடு 

பணம் ஈட்டினான் - அதில் 

இயன்றவரை இல்வாழ்க்கை நடத்திக்கொள்கிறான் 

இப்படியே இவன் வாழ்க்கை 

நகர்ந்து இருக்கையில் 

உடலைக் காக்க ஆசைவந்து 

ஆசை துறக்கிறான் 

சேர்த்தவைகள் போதுமென்று 

செலவழிக்கிறான் - அப்போதும் 

அதில்கொஞ்சம் லாபம் பார்க்கிறான் 

வருமானம் இல்லையென்றே 

வட்டி விடுகிறான் 

செரிமானம் இல்லையென்றே 

அசைவந் தவிர்க்கிறான் 

புண்ணியந்தேடி பல இடங்கள் பயணஞ்செய்கிறான் 

வலிக்காமல் கொன்றுவிடென 

வேண்டிக் கொள்கிறான் 

அர்த்தமில்லா இவன் வாழ்க்கை 

அழிந்துவிட்டது

சத்தமில்லா இவன் மூச்சு 

நின்றுவிட்டது

குற்றமுள்ள இவன் உடலோ 

வெந்துவிட்டது

அழியா உயிரில் 

ஞானம் பிறந்துவிட்டது



விடுகவிதை


கவி காதலனே காதலியே


காலையிலே நீ விழித்து விடு


குறிக்கோள் கொண்டு படித்து விடு


நாளையை நீயோ மறந்து விடு


இன்றினை இனிதாய் மாற்றி விடு


அடையும் இன்பம் பகிர்ந்து விடு


மனதில் துன்பம் பூட்டி விடு


சரிவர வேலையை செய்து விடு


வெற்றி தோல்வி கடந்து விடு


நூல்கள் பலவும் படித்து விடு 


மாணவப் பருவத்தை மகிழ்ந்து விடு


சாதி யென்னும் விச முள்ளை


உன் காலணியாலே மிதித்து விடு


வறுமை அறிந்து உதவி விடு


குணங்கள் அறிந்து பழகி விடு


உண்மை மட்டும் பேசி விடு


வீண் பொய்களை விட்டு விடு


கதைகள் பலவும் புனைந்து விடு


கவிமழையில் மயில்போல் ஆடி விடு


நாடகங்கள் நீ நடித்து விடு


முத்தமிழ் வித்தகர் ஆகி விடு


எல்லா மொழியும் பயின்று விடு


தலைமேல் தாய்மொழி தூக்கி விடு


ஒரு முறை வாழும் வாழ்க்கையிலே


உனக்கு மட்டும் பயந்து விடு


காதல் ஒருமுறை செய்து விடு


அதை காலம் முழுதும் நினைத்து விடு


காதலில் தோல்வியே அடைந்தாலும்


உன் மனதிலே வைத்து புதைத்து விடு


இருப்பதை எல்லாம் வழங்கி விடு


ஏழையை வாழ வைத்து விடு


அடுத்தவர் சிரிப்பில் மகிழ்ந்து விடு


மனிதருள் உயர்ந்தோர் ஆகி விடு


உடம்பில் தெம்பு இருக்கும் வரை


திடமாய் நீயோ உழைத்து விடு


போதும் என்ற மன நிறைவோடு


இவ்வுலகை விட்டு சென்று விடு



தமிழும் நானும்


தமிழ்

முழு பருப்பொருளானால்

நானோ ஒரு

அணுத்துகள்


தமிழ்

பயிருள்ள வயலானால்

நானோ உயிருள்ள

மண்த்துகள்


தமிழ்

மணமுள்ள பூந்தோட்டமானால்

நானோ மணமில்லா

மகரந்தம்


தமிழ் 

பரந்த வானமானால்

நானோ வரும்

மழைத்துளி


தமிழ்

ஆழமான கடலானால்

நானோ மூழ்கும்

கூழாங்கல்


தமிழ்

மரஞ்சூழ்ந்த பூமியானால்

நானோ சிறு

செடி


தமிழ்

பரவும் தீயானால்

நானோ எரிந்த

சாம்பல்


தமிழ்

பிராண வாயுவானால்

நானோ தேவையற்ற

தூசு 


தமிழ்

அடர்ந்த காடானால்

நானோ உதிர்ந்த

சறுகு


தமிழ்

ஏறமுடியாத இமயமானால்

நானோ முயற்சியுள்ள

எறும்பு


தமிழ்

படிக்கமுடியாத நூலானால்

நானோ அதிலொரு

எழுத்து


தமிழ்

அணையா விளக்கானால்

நானோ விட்டில்

பூச்சு


தமிழ்

எண்ணமுடியாத குடும்பமானால்

நானோ அதிலோரு

உறுப்பினர்


தமிழ்

என் தாயானால்

நானோ அவளின்

ஒரு மகன்


தமிழ் 

அழியா மொழியானால்

நானோ அதை பேசும் 

ஒருவன்


தமிழே

எங்கள் அண்டமானால்

அதில் நல்ல மனிதன்

தமிழன்…


சிறப்பு


அன்பின் சிறப்பு


கண்ணீரைத் தருதல்


அறிவின் சிறப்பு


அமைதியாய் இருத்தல்


தாயின் சிறப்பு


பசியை களைதல்


தந்தையின் சிறப்பு


நேர்வழி புகட்டல்


குருவின் சிறப்பு


குற்றத்தை குறைத்தல்


இறையின் சிறப்பு


நல்லவன் ஆக்கல்


நட்பின் சிறப்பு


பொறாமை தவிர்த்தல்


தோழனின் சிறப்பு


கவலையை தடுத்தல்


தோழியின் சிறப்பு


தோல்வியை தேற்றல்


இன்பத்தின் சிறப்பு


துன்பத்தை மறத்தல்


துன்பத்தின் சிறப்பு


இன்பத்தை நினைத்தல்


நுண்மையின் சிறப்பு


சான்றோரை கவர்தல்


உண்மையின் சிறப்பு


உறுதிபட உரைத்தல்


பெருமையின் சிறப்பு


பிறரதை மொழிதல்


தானத்தின் சிறப்பு


சொல்லாது இருத்தல்


கானத்தின் சிறப்பு


இன்பத்தை அளித்தல்


நூலின் சிறப்பு


நுவல்வோன் தெளிதல்


கோலின் சிறப்பு


நேர்மை வரைதல்


கல்வியின் சிறப்பு


உண்மையை அறிதல்


கேள்வியின் சிறப்பு


உண்மையை ஆய்தல்


அறத்தின் சிறப்பு


அதன்படி நடத்தல்


பொருளின் சிறப்பு


இல்லார்க்கு ஈதல்


இன்பத்தின் சிறப்பு


கூடி மகிழ்தல்


துறவின் சிறப்பு


ஒன்றென உணர்தல்


உறவின் சிறப்பு


நலமா கேட்டல்


தனிமையின் சிறப்பு


கடந்ததை நினைத்தல்


நினைவின் சிறப்பு


நிஜத்தை மறத்தல்


உழைப்பின் சிறப்பு


உடலைப் பேணல்


தொழிலின் சிறப்பு


உள்ளத்தைப் பேணல்


மண்ணின் சிறப்பு


இயற்கை விளைத்தல்


மழையின் சிறப்பு


வெயிலோடு தூறல்


வானின் சிறப்பு


இரவை மகிழ்தல்


உழவின் சிறப்பு


பிறர்பசி ஆற்றல்


உணவின் சிறப்பு


வயிற்றுக்கு அளித்தல்


ஆண்மையின் சிறப்பு


பெண்மையை போற்றல்


பெண்மையின் சிறப்பு


தாய்மையை ஏற்றல்


ஆணின் சிறப்பு


அடங்காமை தவிர்த்தல்


பெண்ணின் சிறப்பு


அடக்கமாய் இருத்தல்


இருபால் சிறப்பு


கற்பைக் காத்தல்


குழவியின் சிறப்பு


மழலையின் புலம்பல்


காதலின் சிறப்பு


களவினால் காணல்


காலத்தின் சிறப்பு


நிற்காது போதல்


மானத்தின் சிறப்பு


உயிராக போற்றல்


வெற்றியின் சிறப்பு


மயங்காது இருத்தல்


தோல்வியின் சிறப்பு


கலங்காது இருத்தல்


முயற்சியின் சிறப்பு


முடிவதை ஆக்கல்


பயிற்சியின் சிறப்பு


பயத்தை நீக்கல்


மனதின் சிறப்பு


புத்துலகம் படைத்தல்


மனிதனின் சிறப்பு


பிரிவினை உடைத்தல்


வாழ்க்கையின் சிறப்பு


முழுதாய் வாழ்தல்


அதனினும் சிறப்பு


பிறர்கென வாழ்தல்



-தீசன்

கருத்துரையிடுக

புதியது பழையவை