அண்மை

என்னைந்து கவிதை - தீசன்

எனக்கொரு டைரி பரிசாக கிடைத்தது. அது ஒரு தை மாதம் ஆதலால், கவியை தையில் எடுத்தேன் கவிதையாக என்று எழுதி தொடங்கினேன்.

அதன்பின் எழுதப்பட்ட கவிதைகளே இவைகள். இக்கவிதைகளே கவிதை பகுதியில் முதலில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதனால் ஒரு குறையும் இல்லை.

my five quotes


முதற்கவிதை


காலில் கற்கள்

குத்துவதை கவனிக்காத

நான்

மாலைநேர மயக்கத்தை

உணர

மாடிக்கு செல்கிறேன்

கண்கள் கூசாத

அந்திப் பொழுதை

பார்வையால் விழுங்கி

பள்ளி குழந்தைகளின்

சத்தத்தையும்

பச்சை கிளிகளின்

சத்தத்தையும்

ஒண்றிணைத்து

செவியென்னும் சிறையினுள்

தாழிடுவேன்

இசையென்னும் வாசனையை

உள்ளிலுப்பேன்

கானம் எனும் கவி

மழையை வெளியிடுவேன்

கணத்தில் மறக்கும்

வரிகளை

ஞாபகப்படுத்த முயன்றிடுவேன்

மூளைக்கு என்ன

வேலை கொடுத்தும்

பழைய வரி மறந்து

போகும் - அதைவிட

நல்லவரி உதயமாகும்

தூரத்தில் தாய்குயில்

மகள் குயிலை கூவும்

மனதிலிருந்த புதிய

வரியும்

மேகக்கூட்டமாய்

களையும்

வாரங்கள் ஓடின

மாதங்கள் ஓடின

கவிதை யெனும்

உதிரிப் பூவை

மாலையாக்க முடியவில்லை

மாதகாலமாயிருந்த

மனதின் ஏக்கம்

ஒரு பக்க கவிதையாய்

தொடரும் தொடரும்

பறக்கும் மைனாவை

போல…

வரிசை பிடிக்கும்

எறும்பு கூட்டம்

போல…

என்றும் தொடரும்…

எப்போதும் தொடரும்...



மனிதம்


அழகான உலகத்தை

ஆண்டவன் கொடுத்தான்- அங்கு

மண்ணோடு கொஞ்சம்

மனிதனையும் படைத்தான்


மாசில்லா நெஞ்சோடு

தனக்கான கஞ்சோடு

ஆடோடு மாடோடு

அறிவையும் வளர்த்தான்


அழகான ஆண்டவனை

அறிவாலே கல்லாக்கி

ஆளுக்கொன்றாய் பிறித்து

அமைதியை முறித்தான்


ஊரைச் சுற்றி

வீட்டை கட்டி

வீட்டின் மேலே மாடி கட்டி

மாடி மேலே மாடி கட்டி

மரத்தை வெட்டி

கட்டில் கட்டி

ஆசை என்னும்

காலை நீட்டினான் - அதில்

ஆணவ தீயை மூட்டினான்


இன்று

சொகுசாக வாழ்ந்தவனும்

சோற்றுக்கு ஏங்க

உறவினரை காணாமல்

ஊருக்குள்ளே அடங்க

தெருவாழ்க்கை வாழ்ந்தவனோ

ஆலயத்தை அனுகி

அன்னத்தை சாப்பிட

ஆவலாக சென்றால்..

கடவுள் போன்ற மனிதர்கள்

அன்னம் கொடுக்கவே

மரமான மனிதருள்ளும்

மனிதம் வாழுதே...!


தாய் வணக்கம்


அம்மா…

நான் பிறந்த போது

அழுதேனாம்

அதை கண்டு நீ

சிரித்தாயாம்

எனக்கு நினைவில்லை


கண்ணுபடாமலிருக்க 'மை' வைத்த

காலத்திலே - மையினையே

அழகாய் பொட்டாய் வைத்து

அழகு பார்த்தவள் நீ


தவழ்வதிலிருந்து நடப்பதற்கு

மாறினேன்

துணியிலிருந்து கால்சட்டைக்கு

முன்னேறினேன் - ஆனால்

நீ அடித்து விடும்

பவுடர் மட்டும்

காது மடல்களில்

ஒட்டியே இருந்தது


விடுமுறையில்

அத்தை வீடு செல்ல

அடம் பிடிப்பேன்

நீயும்

அனுப்பி வைப்பாய்


முழுதாய் ஒருநாள் கூட

ஆகி இருக்காது

கதறி அழுவேன்

அம்மா வென்று


என்னை அழவைத்ததே

நீதான் என்று

அன்று எனக்கு

விளங்க வில்லை

அம்மா


விரல்களால் எண்ணக்கூடிய

அளவில் உள்ள

என்னுடைய

வெற்றிகளுக்கு

துணை நின்றவள்

நீ


எத்தனையோ பல

தோல்விக்கும்

எனக்கு

துணை

நின்றவளும்

நிற்பவளும்

நீயே


உறுதியாக

தமிழின் எல்லா படைப்புக்கும்

அகரமோ

அன்னை சரஸ்வதியோ

துணை நிற்கும்


அதுபோல

வரும் எனது

படைப்புகளுக்கு

அகரமும்

அன்னையும் ஆகிய நீ

துணை நிற்க

வேண்டுமம்மா…


கீதை கவி


சுயநலமே

தேடும் மானிடா

வீட்டைப் பற்றியே

நினைக்கிறாய்

நாடும் உன் வீடென்பதை

ஏன் மறக்கிறாய்

ஏழையின் கண்ணீரில்

உன் கல்நெஞ்சும்

கரைய வேண்டாமா?

பணத்தை தேடி தேடி

சேர்ப்பதன் பயனென்ன

செல்வங் கொழிக்கும்

உனக்கும் ஆறடி

பசியால் இரக்கும்

அவனுக்கும் ஆறடி

கல்வி கூட

உன்னோடு அழியும்

நற்புகழ் உன்னை

மறவாமல் நினைக்கும்…

எடுப்பதை மற

கொடுப்பதை நினை…


வாய்திற கண்ணா


கொஞ்சும் மொழி பேசிடு என்

கோபியர் கிருஷ்ணா- உன்

பிஞ்சு இதழ் விரித்திடு என்

கண்கவர் கண்ணா - பல

ராமன் பலம் கொண்ட கோ

மகன் மன்னா - உன்

பவளவாய் பரிந்தெடுத்து

உண்டது மண்ணா...?


மலர்கரங்கள் இடையினிலே

இருப்பது ஏதோ..?

தங்க இதழுக்குள்ளே தாழிட்டு

அடைந்தது ஏதோ..?

நீல வண்ண மேனியிலே

மிதப்பது ஏதோ...?

கயல்விழிகள் சொல்லாது

மறைப்பது ஏதோ..?


கண்ணான கண்மணியே

கருநிற கிருஷ்ணா - வாய்

சொல்லாது மறைப்பதைநீ

சொல்லிடு கிருஷ்ணா...

எழில் கொண்ட இளவரசே

என்னருங் கிருஷ்ணா...

பிஞ்சினிலே பொய்விழிகள்

ஆகாது கிருஷ்ணா...

குகன் போன்ற தோழமையை

கூப்பிடு கிருஷ்ணா - உன்

இதழ்ப் பூட்டை இவ்விடமே

உடைத்திடு கிருஷ்ணா


-தீசன்

1 கருத்துகள்

புதியது பழையவை