அண்மை

தேடல் - சிறுகதை

தேடல்

why me? story


வானத்தின் ஒரு பகுதி இரவாகவும் மறுபகுதி வெளிச்சத்துடனும் கண்களை இழுக்கும் அந்திப் பொழுது அது. மேகங்கள் சிறுசிறு திரள்களாக வானெங்கும் பரவி போருக்கு தயாராகும் வீரர்கள் போல அணிவகுத்திருந்தது. மாலை சூரியனின் பொன் நிறக் கதிர் அந்த மேக அணி கூட்டத்தை ஊடுருவ முடியாமல், கிடைக்கும் இடைவெளியைக் கொண்டு நிலத்தைக் கண்டது.

செவ்வொளியின் தாக்கத்தை தாங்க முடியாதது போல கொள்ளிட பிரவாகம் மீண்டும் மீண்டும் கரையில் மோதி வெளியேறப் பார்த்துக்கொண்டிருக்கிறது. சில்லென்று வந்த வாடைக் காற்றால் கரை மர கிளைகளில் அமர்ந்திருந்த தும்பிகள், கூட்டங்கூட்டமாக எழும்பி 'இன்று மழை உண்டு' எனும் குறுஞ்செய்தியை கொந்தகை கிராமம் முழுதும் பரப்பியது. அக்கரையின் ஓரத்தில் போதுமான அளவு வேட்டையாடிய மீனவன் ஒருவன், தன் வலையில் சிக்கிய மீன்களை வகைப்பிரித்து தனித்தனி வாளிகளில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். அப்போது தூரத்தில் ஒருவர் உடல் தளர்ந்து கூனியபடி நீளமான கம்பை ஊன்றிக்கொண்டு 'யம்மா...கண்ணு' என்றவாறே வந்துக் கொண்டிருந்தார். அந்த முகமறிய முடியாத வெளிச்சத்தில் குரலைக் கொண்டே வருவது 'கண்ணு பெரியவர்' தான் என்பதை அறிந்தான் அம்மீனவன்.


'என்ன பெரியவரே? யார தேடுறீங்க?'


'யாரு?...யாரு?...யாரு கண்ணு அது?'


'பதறாதீங்க...பதறாதீங்க… நான் தான் கோவிந்து பையன் அண்ணாதுரை'


'மீன் கடகாரர் கோவிந்தா?'


'ஆமா'


'கண்ணு எம்பொண்ண பாத்தியாப்பா? மதியத்துலேந்து அவள காணும்பா...இன்னிக்கி அவளோட பொறந்த நாளு வேற… பாத்தியா கண்ணு அவள?'


பெரியவரின் குரல் குன்றியது, இயல்பாக அமர்ந்திருந்த அம்மீனவனும் இதைக் கேட்டு மெதுவாக எழுந்தான்.


'இல்லிங்க...நா காணல'


பெரியவர் அங்கும் இங்கும் தன் கைகளை நீட்டியவாரே மீனவர் முன் வரத்தொடங்கினார்.


'கண்ணு எப்புடியாச்சும் எம்பொண்ண கண்டுபுடிச்சி குடு கண்ணு, உனக்கு புண்ணியமா போகும்…. கண்ணு..இருக்கியாப்பா? இருக்கியா கண்ணு? போய்டாதப்பா…'


பெரியவரின் கண்கள் குளமானது, தன் வலக்கையால் கோலை அழுத்திப் பிடித்துக் கொண்டே இடக் கையால் கண்களை துடைத்துக் கொண்டார்.


என்ன சொல்வதென்றே தெரியாது வாயடைத்து நின்ற அண்ணாதுரை, 'பெரியவரே நா எங்கையும் போகல, நீங்களும் எங்கியும் போகாதீங்க..கொஞ்ச நேரம் இங்கயே இருங்க, நா இதோ இந்த வாளியையும் வலையையும் வீட்ல கொடுத்துட்டு உடனே வந்துடுறேன். எங்கியும் போய்டாதீங்க இங்கயே இருங்க..' என்று கூறி விட்டு வேகமாக புறப்பட்டான். வாளியையும் வலையையும் வீட்டில் வைத்த அண்ணாதுரை மீண்டும் புறப்பட முற்படும் போது, 'எங்க போற' என ஒரு கரகரப்பான குரல் கேட்டது.


வாசல் வரையிலும் சென்ற அண்ணாதுரை பொறுமையாக பின் திரும்பிப் பார்த்தான். ஐந்தடி உயரத்தில் நல்ல அகலமான தோற்றத்தோடு கூடிய அவனது தந்தை கோவிந்துவின் குரல் அது.


'அப்பா, நம்ப கண்ணு பெரியவரோட மகள் மதியத்துலேந்து காணுமா, என்ன வர சொல்லி ரொம்ப வேண்டி கேட்டாரு...கரைல அவர நிக்க வச்சிருக்கேன், அங்க தான் போறேன்'.


வீட்டிற்குள் இருந்த அண்ணாவின் அம்மா, மகனின் இச்சொல்லைக் கேட்டு பதட்டத்துடனே வெளியே வந்தாள்.


'கண்ணு பெரியவர் பாவம்.. கண்ணு தெரியாத மனுசன், இப்ப கூட அவரோட பொண்டாட்டிக்கு உபம்பு முடியல படுத்த படுக்கையாவே இருக்காங்க, அவருக்கிருந்த ஒரே துண அந்த பொண்ணு தான், அவளும் ஓடிப் போய்ட்டாளா, பாவம் அந்த மனுசன் ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பாங்குறது சரியா தான் இருக்கு'


'அதுமட்டுமா சரியா இருக்கு… ஊர் பேசிக்கிட்டதும் சரியாயிடுச்சில இப்போ' என்றார் கோவிந்து.


'என்னாச்சோ..ஏதாச்சோ.. நீ போப்பா அவர தவிக்க விடாத, எங்க போனாலும் அவரு கைய பிடிச்சி கூட்டிட்டு போ' என்றாள் அண்ணாவின் அம்மா மென்மையாக.


'சரிம்மா' என்று கூறி அண்ணாதுரையும் மின்னல் வேகத்தில் புறப்பட்டான்.


பெரியவரும் அதே இடத்தில் அழுதபடி அமர்ந்திருந்தார்.


கொள்ளிடக் கரையை வந்தடைந்த துரை பெரியவரைத் தேடத் துவங்கினான். நல்ல இருள் சூழ்ந்துவிட்டதால் எதிருள்ள எவையுமே அவனால் காண முடியவில்லை. 'பெரியவரே…' என்று பலமாக கூச்சலிட்டான். 


'கண்ணு இங்க இருக்கேன்பா' என்று வடக்கிலிருந்து ஒரு குன்றிய தீனக் குரல் கேட்டது. அண்ணாதுரை அந்த திசையை நோக்கிச் சென்றான். 


'கண்ணு வந்துட்டியா வா... வா, அவ கிடைச்சுடுவா கண்ணு, இங்க தான் எங்கியாச்சும் போயிருப்பா, கண்டிப்பா கிடைச்சிடுவா' எனப் பெரியவர் தன்னைத் தானே உறுதிப்படுத்திக் கொண்டார்.


'ஐயா பெரியவரே கோவிச்சுக்காதீங்க… எனக்கென்னம்மோ ஊரார் சொல்லுறமாதிரி உங்க பொண்ணு திருப்புன்கூர் போயிருப்பாளோனு சந்தேகமா இருக்கு, அங்க போனா அவள கண்டிப்பா கண்டுபுடிச்சிடலாம்'


பெரியவரின் மனதால் இவ்வார்த்தைகளை தாங்க முடியவில்லை. இவ்வளவு நேரம் கழுத்துக்கடியில் அழுத்தப்பட்ட அவரது அழுகை, இவ்வார்த்தையால் வெடித்து கண்ணீராய் கசியத் தொடங்கியது. 'அப்புடியெல்லாம் சொல்லாதப்பா...அவ நல்ல பொண்ணுப்பா' எனக்கூறிக் கொண்டே கதறி அழுதார்.


பெரியவரின் இத்துயரத்தை தாங்காத வானம் 'பளிச்' என்று மின்னியது. சிறிது சிறிதாக தூறல்கள் அவர்களின் மேலே விழத்தொடங்கியது.


'பெரியவரே...அழுகாதீங்க, உங்க பொண்ணு நிச்சயம் கிடைச்சிடுவா, நல்ல மழை பெய்யும் போல, இப்பத்துக்கு என் வீட்டுக்கு வாங்க, விடிஞ்சதும் தேடலாம்'


பெரியவரின் பார்வை இல்லா கண்கள் அண்ணாதுரையை கண்டது. அவரது விம்மல் குறைந்து இயல்பு நிலைக்கு வர கொஞ்சம் நேரம் எடுத்தது. 


'இல்ல கண்ணு, வீட்டுல பொண்டாட்டி தனியா இருப்பா, நா போய்கிறேன், நீ பாத்து போ கண்ணு, நா போய்டுவேன்'


பெரியவரின் குரலில் உயிர் இல்லை. தன் அம்மா சொன்னது நினைவில் இருந்தாலும் 'பாத்து போங்க பெரியவரே' எனக் கூறி அண்ணாதுரை புறப்பட்டான். அதே சமயம் தூறல் அதிகமாகி அடை மழையானது.


தலையில் கைவைத்துக் கொண்டே அண்ணாதுரையும் கொந்தகையை நோக்கி ஓடத் தொடங்கினான். துயரத்தின் உச்சத்திலே இருந்த பெரியவரோ அந்த அடை மழையிலும் ஆதனூரை நோக்கி நடக்கத் தொடங்கினார்.


அதே நேரத்தில் ஆதனூரில் இருக்கும் பெரியவரின் வீட்டிற்குள் தேடப்பட்ட அந்த பெண் யாருக்கும் தெரியாமல் உள்நுழைகிறாள்.


-தீசன்

1 கருத்துகள்

  1. கதையின் போக்கிற்காக மட்டுமே கதையில் மீன் வேட்டையைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். பிற உயிரைக் கொல்லுதல் பாவமாகும், மனதறிந்து கொல்லுதல் மகா பாவமாகும். கற்பனைக்காக கூறப்பட்டதை நானோ தினத்தென்றலோ ஆதரிப்பதாய் கருத வேண்டாம்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை