இது தென்றலின் நூறாவது இதழாகும்.
நாலு பேர் கொண்ட குழு நூறு இதழை தாண்டுவது ஆச்சரியம் இல்லை. அது நாளிதழாய் இருப்பதே இங்கு ஆச்சரியம் ஆகும். செய்யும் கர்மத்தில் பலன்களை எதிர்ப்பார்க்க கூடாது, வீண் புகழ்ச்சி தேவை இல்லாதது. அப்படி இருக்க இந்த நூறாவது நாள் கொண்டாட்டம் எல்லாம் வீண் தான் ஆனால் இப்பதிவில் நான் பலருக்கும் நன்றி செலுத்த கடமைப் பட்டுள்ளேன்.
எந்தவொரு பலனும் எதிர்பாராது நான் கேட்கும் நேரங்களிலெல்லாம் கேட்டபடியே எழுதித்தரும் தென்றலின் எழுத்தாளர்களுக்கு என் முதல் நன்றிகள். அவர்களாலே தினத்தென்றல் சக்கரம் தினமும் இயங்கிக்கொண்டிருக்கிறது. உங்களின் எழுத்துக்கான பலன்கள் கூடிய விரைவில் கிடைக்கும் என நான் உறுதியளிக்கிறேன். இவ்விதழ் பிறந்த கதை சுவாரஸ்யமானது தன்னம்பிக்கை தரக்கூடியது. வாசகர்கள் அனைவரும் அதனை தெரிந்துகொள்ள வேண்டுமென நான் ஆசைப்படுகிறேன்.
போட்டிக்காகவும் பரிசுக்காகவும் புகழுக்காகவும் ஆசைப்படும் ஒருவன் இருந்தான். இங்கே ஒரு போட்டி நடக்கிறது என்றால் அங்கே அவனை முதலில் காணமுடியும். போட்டியில் பங்கேற்கும் முன்பே பரிசு வாங்குவது போலவும், பலரது பாராட்டுக்கு மத்தியில் உலவுவது போலவும் கற்பனை செய்வதென்றால் அவனுக்கு பிடிக்கும். அவனது இந்த கற்பனைகளுக்கு காரணம், பெரும்பாலான போட்டிகளில் அவன் வென்று விடுவான். வெற்றி மோகம் அவன் நிலையினை அறியாமல் கற்பனைக்குள் புகுத்தியது. போட்டிக்கு யாருமே இல்லாத போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசை தட்டிச் செல்வான். அன்று அதுவும் அவனுக்கு தர்மமாகவே பட்டது. பத்து பதினைந்து பேர் பங்கேற்கும் போட்டியிலும் அவனுக்கு பரிசு கிடைக்கும் போதெல்லாம், 'நாமெல்லாம் திறமையானவர்கள்' என்று தாமே நினைத்துக் கொள்வான். அன்று ஒரு நாள் அவன் பள்ளியில் கலாம் ஐயா பற்றிய கட்டுரைப் போட்டி நடந்தது. போட்டிக்காக அதிகம் படித்தான் அவன். மறுநாள் போட்டி நடந்தது. தன்னைவிட வயதில் பெரியவர்கள் அவனோடு போட்டியிடுவது அவனுக்கு புதிதாக இருந்தது. 'நாம் தான் படித்திருக்கிறோமே' என்று அவனும் எழுதத்தொடங்கினான். கொஞ்ச நேரத்திலே அந்த பெரிய வகுப்பு போட்டியாளர்கள் அவனை பார்த்து எழுதுவதை அவன் கவனித்தான். அவர்கள் அந்த கட்டுரையை கேட்டார்கள். அவனும் யோசிக்காமல் கொடுத்தான். போட்டி முடிந்தது. மறுநாள் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. ஒருநாள் முழுதும் விவரங்களை சேகரித்து சுயமாக எழுதிய அவனுக்கு மூன்றாம் இடமும், தன்னை பார்த்து காப்பி அடித்து எழுதிய அவர்களுக்கு முதல் இரண்டு இடமும் கிடைத்ததை அவனால் பொறுத்துகொள்ள முடியவில்லை. தான் எப்படி இவ்வளவு நாளாக வென்றோம் என்பது அவனுக்கு புரியவந்தது. எந்த வித யோசனையும் இன்றி பெரியோர்களிடம் சிறியோர்களை விட அதிகம் திறன் இருக்கும் என்பதை அவனும் நம்பியதுண்டு. சறுகுகளும் சேறும் குழம்பிய குட்டைப் போன்ற அவன் மனது தெளிந்த நீரோடையாகத் தொடங்கியது.
ஒருமுறை மாவட்ட அளவில் நடந்த கட்டுரைப் போட்டியில் அவன் பங்கேற்றான். தலைப்புக்கு பொருந்தும் வகையில் பல புது கருத்துகளை அவன் எழுதினான். போட்டி முடிந்த பிறகு கட்டுரையை தேர்வு செய்து கொண்டிருந்த ஒரு ஆசிரியர் அவனைக் கூப்பிட்டு, 'உன் கட்டுரை கட்டுரை மாதிரி இல்லையே' என்றார். இன்று கட்டுரைகள் கருத்துக்காக அல்லாமல் எழுத்துக்காகவே கவனிக்கப்படுகிறது என்பதையும் அந்நிகழ்வின் மூலம் அவன் புரிந்துகொண்டான். 'என் கட்டுரைக்கு தகுதி இல்லாமல் இல்லை, அதை தேர்வு செய்யும் அளவிற்கு உங்களுக்குத் தான் தகுதி இல்லை' என்று அவனாகவே நினைத்துக் கொண்டான். பங்கேற்கும் பல போட்டிகளிலும் அவன் தோல்வியையே கண்டான். நல்ல புதுமையான கருத்துகள் கொண்ட அவனது கட்டுரைகள் அழகை மட்டும் பார்க்கும் சிலரிடையே சிக்கி வீணானது. என்னதான் நன்றாக எழுதினாலும் தேர்வு செய்யும் குழுவுக்கோ அல்லது போட்டி நடந்தும் நிர்வாகத்திற்கோ நெருக்கமானவர்களே வெற்றி பெற்றார்கள். அப்படி இல்லையானால் சிறப்பான கையெழுத்து உடையவனும் அழகாக காகிதங்களை அலங்கரிப்பவனுமே வெற்றி பெற்றார்கள். இதற்கான உபாயத்தை அவன் தேடத் தொடங்கினான்.
அந்த நேரத்தில் தான் அவன் கண்ணதாசனை படிக்கத் தொடங்கினான். அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் அவனது பல்வேறு குழப்பங்களுக்கு விடை தந்தது. கிருபானந்தவாரியாரின் கதைகள் அவனுக்கு ஒழுக்கத்தை போதித்தது. கீதை இதுவரை நடந்தவனவற்றையெல்லாம் மறக்க சொன்னது. பல்வேறு மகான்களின் எழுத்துகளால் அவன் புது மனிதனானான். உலகத்தாரோடு பொருந்தாமல் போவது அவனுக்கு புரியத் தொடங்கியது. அவனது மனமும் இந்த பழைய சூத்திர வாழ்வை விடச்சொல்லி அவனுக்கு அறிவுரைத் தந்தது. கண்ணதாசன் மீதிருந்த தீராத ஆசையால் அவன் வனவாசம் படித்தான். பலராலும் நிராகரிக்கப்பட்ட போதும் கண்ணதாசன் தனக்கென ஒரு தனிவழி அமைத்துக் கொண்டது அவனுக்கு உத்வேகத்தை தந்தது. கூட்டுக்குரல் அத்தியாயம் அவனுக்கு புதுவிதமான சிந்தனையை அளித்தது. கண்ணதாசனின் தென்றல் போல அவனது தென்றலும் பிறந்தது.
முன் காலத்தில் அவனுக்கு வந்த இன்னல்கள் மிக மிக சிறியது, சாதாரண மனிதனின் இன்னல்களையும் அவனது துன்பங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கும். அவ்வளவு அற்பமானது. இருந்தாலும் அந்த சிறிய துன்பங்களே பெரிய பெரிய தத்துவங்களை உணர்வதற்கு அவனுக்கு போதுமானதாய் இருந்தது.
இன்று அவனது கட்டுரைகள் எதற்கும் ஆசைப்பட்டு எழுவது இல்லை. இனி அவனது கட்டுரைகள் யாராலும் தேர்வு செய்யப்பட வேண்டியதில்லை. போட்டி எனும் குறுகிய வட்டத்திலிருந்து அவன் வெளியேறிவிட்டான். போட்டிப்பார்வையோ பரிசின் ஆசையோ புகழின் மயக்கமோ இனி அவனை நெருங்கமுடியாது. காரணம், கண்ணதாசன்.
அவன் கவிஞர் கண்ணதாசனுக்கு நன்றி சொல்ல பெரிதும் கடமைப்பட்டுள்ளான். பல்வேறு ஞானகுருமார்கள் அவன் தேர்வு செய்த பாதையை அழகாக்கி கொண்டுள்ளார்கள். அதில் அவருக்கு பெரிய பங்குண்டு.
தினத்தென்றல் இணையத்தில் மட்டுந்தான் இப்போது இயங்கிக் கொண்டுள்ளது. பெரிய அளவில் வாசகர்களை அது கவரவில்லை. ஆனால் யாராலும் கவனிக்கப்படாத எங்களின் எழுத்து இன்றைக்கு தினசரியாக குறைந்தபட்சம் ஐம்பது நபர்களால் கவனிக்கப்படுவது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது. அனைவருக்கும் எங்களது நன்றிகள்.
-இதழாசிரியர்
வான்பறக்கும் கொடியினிலே..
பதிலளிநீக்குமீன்பறக்கும் மதுரையிலே...
தான் பறந்து ஆட்சி செய்யும் தமிழ்மணித்தென்றல்..!--அது
வான்பிறந்த போதுவந்த வாலிபத்தென்றல்!
இது
நாள்பிறந்த போதுவந்த நாளிதழ் தென்றல்!