நட்பு காதல்
சூரியன் ஒளிக்கதிர் அவள் மேல் பட, வெண்ணிற மேகங்கள் அவளை தொட்டு தொட்டு விளையாட, காடுகளின் பசுமையால் பச்சை நிற புடவை போர்த்தியது போல் மலைகளின் இளவரசியான அவள் அழகுற காட்சி தந்தாள். அப்படி பட்ட பேரழகு கொண்ட கொடைக்கானல் பகுதியில் அவரவர் தங்கள் பணிக்காக சென்று கொண்டிருந்த காலை நேரமது…
'அம்மா பெய்ட்டு வரேன்'
'சரிப்பா.!! பாத்து பெய்ட்டுவா'
'சரிம்மா….' என்று சொல்லி தன் இருச்சக்கர வாகனத்தை கிளப்பினான் நெடுமாறன். சில தூரம் செல்லுகையில் அவனது செல்பேசி ஒலித்தது. தன் வண்டியை ஓரமாக நிறுத்தி செல்பேசியை எடுத்து பார்த்தான்.தன்னுடன் வங்கியில் நான்கு வருடங்களாக வேலை பார்க்கும் தன் நண்பன் முருகன் தன்னை அழைக்கிறான் என தெரிந்ததும்.அவரது அழைப்பை ஏற்று செல்பேசியை காதருகில் வைத்தான்.
'நெடுமாறா… என்ன இன்னக்கியாவது சொல்லிடுவியா?'
'கொஞ்சம் பயமா இருக்கு'
'நான் இருக்கும் போது என்ன பயம்'
'அது சரி.. அந்த முருகன் தான் என்ன காப்பாதனும்'
'அதான் நான் இருக்கன்னு முன்னாடியே சொல்லிடன்ல'
'உன்ன யாருப்பா சொன்னா? நா அந்த பழனி முருகன சொன்னேன்!!'
'சரி சீக்கிரமா வா அப்ப தான் கரக்டா இருக்கும்'
'இதோ வந்துக்கிட்டே இருக்கன்'
'சரி வச்சுடுறேன்'
வங்கி திறக்கும் நேரமோ ஒன்பதரை மணி. முருகனும், நெடுமாறனும் ஒன்பது மணிக்கே வந்து, வங்கியின் வாசல் கதவு பூட்டபட்டிருந்ததன் காரணமாக தனது வாகனங்களையே இருக்கையாக கொண்டு அதன் மீது அமர்ந்திருந்தனர்.
பத்து நிமிடம் கடந்தது. நெடுமாறன் முகத்தில் வியர்வைத்துளிகள் வெள்ளமாக ஓடியது. இதை கண்ட முருகன்,
'என்ன அதுக்குள்ள இப்புடி வேர்க்குது உனக்கு? அவளவு பதட்டம்' என்று சொல்லி நெடுமாறனை பார்த்து கேலியாக சிரித்தான்.
நெடுமாறன் எதிரில் இருந்த பேருந்து நிலையத்தை பார்த்துக்கொண்டிருந்தான் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு தாயின் இடுப்பில் அமர்ந்திருந்த குழந்தை இவனை பார்த்தது இவனும் அதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தான். அந்நேரம் 12 G எனும் ஸ்டிக்கர் ஒட்டி இருந்த பேருந்து வந்து அந்த பேருந்து நிலையத்தில் நின்றது. நெடுமாறனின் உள்ளமோ ஆர்வத்தினாலும், சிறு அச்சத்தினாலும் துடித்தது.
'பேங்க் ஸ்டாப்லாம் எறங்குபா…!' என்று பேருந்தின் உள் இருந்த நடத்துனர் சத்தமாக கூற, ஒவ்வொருவராக பேருந்திலிருந்து சிலர் இறங்கினர்.
அங்கிருந்து ஒரு பெண் மட்டும் சாலையை கடந்து வங்கியினை நோக்கி வந்தாள்.
நெடுமாறனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
'குட் மார்னிங் சார்'
'குட் மார்னிங்..'
'இன்னக்கி தேன்மொழி வரலையா?' என்று முருகன் கேட்க.
அந்த வங்கியில் ஒரு வாரத்திற்கு முன் புதிதாக சேர்ந்த உதவி பணியாளரான கிரிஜா, 'இல்ல சார். இன்னக்கி அவ வரமாட்டா? அவள் உடம்புக்கு சரியில்ல'
'ஏன் என்ன ஆச்சு..!! ஹாஸ்பட்டலுக்கு போய் பாத்தாங்களா….?' என்று பதபதைப்படைந்த நிலையில் கிரிஜாவை நோக்கி கேட்டான் நெடுமாறன்.
'இல்ல சார் சாதாரண ஜொரம் தான். நாளைக்கு அவ வந்துடுறதா சொன்னா..!'
தன்னை விட உயர்ந்த பதவியில் இருந்தாலும், தன்னுடன் பால்ய பருவத்தில் இருந்து தோழியாக பழகியதால் தேன்மொழியை 'அவள் இவள்' என்ற படியே அழைத்து வந்தாள் கிரிஜா.
பிறகு அவள் கம்பியால் அமைக்கப்பட்டிருந்த அந்த பூட்ட பட்ட 'கேட்டை' பையில் இருந்த சாவியின் துணை கொண்டு திறந்தாள்.
'நம்ம பிளான் எல்லாம் வீணா போச்சு, சரி வா உள்ள போவோம். வேற ஒரு டைம் கிடைக்கும் அப்ப பாத்துப்போம்' என்று நெடுமாறனை தேற்றினான் முருகன்.
கவலையுடனே நெடுமாறனும் வங்கியின் உள் நுழைந்தான்.
'சரி சார் ஏன் இவ்வளவு சீக்கிரமா இன்னக்கி வந்துட்டிங்க?'
'இல்ல ஒன்னும் இல்ல சும்மா தான் ' என்று கிரிஜாவிடம் மழுப்பினான்.
அன்றைய பொழுது முழுதும் நெடுமாறனுக்கு கவலையாகவே இருந்தது.ஏனெனில் அவன் கடந்த ஒன்றரை வருடமாக ஒரு தலையாக காதலித்து வரும் தேன்மொழியிடம் இன்று தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்ற ஆவலில் இருந்தான். அது நடக்காது போனதே அவன் கவலையின் காரணம்.
பிறகு வேலை முடிந்து வீட்டிற்கு சென்று, அன்று இரவு தேன்மொழியின் செல்பேசிக்கு அழைப்பு விடுத்து நலம் விசாரித்தான். எனக்கு உடல் நலமாக உள்ளது. நான் நாளை வந்துவிடுவேன் கவலை வேண்டாம் என்று சொல்லி இணைப்பை துண்டித்தாள்.
நெடுமாறனுக்கு குழப்பம் எழுந்தது. அவள் எந்த அர்த்தத்தில் கவலை வேண்டாம் என்றாள்? ஏதேனும் நோக்கம் கொண்டா? அல்லது சாதரணமாகவா?. தன்னுடன் ஒன்றரை வருடமாக நட்பாக தான் அவள் பழகி வருகிறாள். நாம் தான் காதல் கொண்டு பழகி வருகிறோம். அவள் சாதாரணமாகவே தான் சொல்லி இருப்பாள். என்று தனக்கு தானே முடிவு கூறிக் கொண்டான்.
முருகனிடம் எப்போதும் போல காதல் 'டிப்ஸ்களை' செல்பேசியில் கேட்கலானான். ஏனெனில் முருகன் திருமணமானவன் என்பதனால்.
'இதுக்கு மேல நீ இப்புடியே பண்ணிக்கிட்டு இருந்தினா! அவ வேற ஒருத்தரோட பொண்டாட்டி ஆயிடுவா!!'
'என்னடா இப்புடி சொல்ற'
'பொறு... ஒரு ஜடியா?'
'என்ன என்ன?'
'சொல்றன் ஆனா என் யோசனை ஒர்க்கவுட் ஆயிட்டுனா, நா கேட்பத நீ வாங்கி தரனும்'
'சரி சரி வாங்கி தரேன் சொல்லு'
'நீ என்ன பண்ணு…, நம்ப பேங்க்ல அசிஸ்டன்டா வேலை பாக்குற கிரிஜா, உன் லவ்வரோட கிளோஸ் பிரண்டு தான். அவளும் உன் லவ்வரும் ஒன்னா தான் பஸ்ல போவாங்க…'
'அதுக்கு என்ன'
'சொல்றத முழுசா கேளுடா. உனக்கு தான் நேரா சொல்ல பயமா இருக்கு, அதுனால அந்த கிரிஜா பொண்ணுக்கிட்ட சொல்லி உன் விருப்பத்த சொல்ல சொல்லு' என்று கூறினான் முருகன்.
இந்த யோசனை சரியானது என்று நெடுமாறனுக்கு தோன்றியது.
மறுநாள் விடிந்தது. அன்று முருகன் வங்கிக்கு வரவில்லை. இதனால் மிகவும் அச்சம் நெடுமாறனுக்கு ஏற்பட்டது. மதியம் உணவு இடைவெளை நேரம்.
'நெடுமாறன் வாங்க சாப்புட' என்று அழைத்தாள் தேன்மொழி. ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் தான் இவளது தோழியிடம் விஷயத்தை கூற முடியும் ஆகவே, 'இல்ல நீங்க சாப்புடுங்க எனக்கு ஒரு சின்ன வேல இருக்கு. நான் இடையில் ஜாய்ன்ட் பண்ணிக்குறேன்' என்று கூறினான்.
பின் வங்கியின் திண்ணையில் தன் இருக்கையில் அமர்ந்திருந்த கிரிஜாவிடம்
'ஒரு நிமிசம் உங்கள்ட பேசனும்'
'என்ன…? சொல்லுங்க சார்'
'அது…அது...அது வந்து' என்று இழுத்த அவன்
'அது ஒன்னும் இல்ல உங்க ஃபிரண்டு தேன்மொழிய நான் லவ் பண்றன். நாங்க ரெண்டு பேரும் ஒரு வருசமா ஃபிரண்ஸ்சா தான் பழகிகிட்டு இருக்கோம். நான் இப்ப லவ் பண்ணுறேனு சொன்னா என்ன நினைப்பானு தெரியல அதுநால சூட்சமமா இந்த விசயத்த அவங்ககிட்ட நீங்க சொல்லனும்.. அதுக்கு அப்பறம் நானே பேசிக்குறேன்'.என்று பட படவேன தனது மனதில் பட்டதை சொன்னான்.
சிறிது நேரம் சிந்தித்து கொண்டிருந்தாள் கிரிஜா.
'ரொம்ப யோசிக்காதிங்க… நான் ரொம்ப நல்ல பையன். நீங்களே என் நடவடிக்கையைலாம் பாத்துருப்பிங்க. உங்க ஃபிரண்ட நான் நல்லா பாத்துப்பேன். ரொம்ப காலம் வெய்ட் பண்ணிடன் இனக்கி என்னனு கேட்டு சொல்லுங்க' என்றான் நெடுமாறன்.
'சரி, எங்க பஸ் வரத்துக்கு லேட் ஆகும், எப்போதும் போல அந்த இடத்துலதான் உட்கார்ந்து இருப்போம் அப்ப இத பத்தி பேச முயற்சிக்கிறேன்.
'எப்புடி..என்ன..சொல்ல போறீங்க ?'
'அத நா பாத்துகுறேன்'
வங்கி வேலை நேரம் முடிந்தது. கிரிஜா தேன்மொழியிடம் இதை பற்றி பேசி நாளை நல்ல பதிலை கூறுவாள் என்று சிந்தித்த படியே வண்டியை கிளப்பினான் நெடுமாறன். சில தூரம் சென்ற அவன் இதை நாமே நேரில் கண்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி மீண்டும் வண்டியை வங்கியின் அருகில் இருந்த தேநீர் கடையில் நிறுத்திவிட்டு, வங்கியின் 'கேட்' அருகில் மறைந்து நின்றான். இருவரும் எப்போது வருவார்கள் என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தான்.
கிரிஜாவும், தேன்மொழியும் வங்கிக் உள் கதவுகளை மூடிவிட்டு பின் இருவரும் வங்கிக் திண்ணையில் உள்ள இருக்கையில் அமர்ந்தனர்.
அப்போது கிரிஜா நெடுமாறன் மறைந்து கொண்டு நிற்பதை பார்த்தாள்.
உடனே
'தேன்மொழி நம்ம நெடுமாறன் சார் இருக்காருல, அவரு சரியான ஜொல்லு பார்டியா இருக்காரு'
'ஏன் இப்புடி சொல்லுற?'
'இல்ல அவர் பாத்தாவே சரியான ஆளுமாதிரி தெரியல'
இவ்வாறாக கிரிஜா சொல்வதை கேட்டு நெடுமாறன் அதிர்ந்து போனான். உதவி செய்ய சொன்னால் உபத்திரம் செய்கிறாளே என்று அவன் நினைத்துக் கொண்டு, கிரிஜாவை நம்பியதை எண்ணி மனம் வருந்தினான்.
'அப்புடி எல்லாம் சொல்லாத, அவர் ரொம்ப நல்லவரு. அவரோட ஒரு வருசமா தான் பழகி இருக்கேன். ஆனா அவர் மாதிரி ஒரு நல்ல உள்ளம் கொண்ட ஆம்பளய நான் பார்த்ததே இல்ல.அவரோட நட்பு, நிலத்தை விட பெரியது, வானத்தை விட உயர்ந்தது, கடலை விட அதிகமானது'
'ஏஏஏ.. என்ன ரொம்ப ஓவரா வர்ணிக்கிற..? அப்ப அவர மாதிரி ஒருதர தான் நீ கல்யாணம் பண்ணிக்க போறியோ?'
'அவரு மாதிரி ஒருத்தருக்காகத் தான் நான் வெயிட் பண்றேன்'
'அப்ப அவரே உனக்கு மாப்பிள்ளையா வந்தா?' என்று கிரிஜா தேன்மொழியிடம் கேட்க இதை மறைந்திருந்து கேட்டு கொண்டிருந்த நெடுமாறனின் இதயம் வேகமாக துடிக்கலானது. அந்த இதயத்தின் ஓசை தேன்மொழியின் மறுமொழியை எதிர்நோக்கி செவிகளை கூர்மையாக்கியது.
'நான் ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கேனு அர்த்தம், ஆனா அவருக்கு அப்படிபட்ட எண்ணம் வராது, ஏன்னா அவருக்கும் எனக்கும் இருக்குற நட்பு இந்த உலகத்துல உள்ள எந்த உறவ காட்டிலும் புனிதமானது'
தேன்மொழியின் வார்த்தைகளை மறைந்திருந்து கேட்ட நெடுமாறன் சிறுதுநேரம் ஆழ்ந்து சிந்தித்துவிட்டு, சோகங்கலந்த மகிழ்ச்சியுடனே அவ்விடத்தை விட்டு அகன்றான்.
-குகன்
குறுந்தொகை 3 செய்யுள்
நிலத்தினும்பெரிதே வானினும்உயர்ந்தன்று
நீரினும்ஆரள வின்றேசாரல்
கருங்கோற் குறிஞ்சிப்பூக்கொண்டு
பெருந்தேனிழைக்கும் நாடனொடுநட்பே
ஆசிரியர் - தேவகுலத்தார்
குறுந்தொகை 3 உரை
தோழி தலைவியின் மனப்போக்கை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு தலைவியடம் வினவுகிறாள். அதற்கு தலைவி, 'நீ நினைப்பது போல அவன் என் மனம் கவர்ந்தவன் அல்ல, நாங்கள் இருவரும் பிரியாத நட்பைக் கொண்டோர்கள் ஆவோம்' என்று உறுதியாக சொல்கிறாள்.
நிலத்தைக் காட்டிலும் பெரிது, வானைக் காட்டிலும் உயர்ந்தது, கடல் நீரின் அளவை காட்டிலும் அதிகமானது, கருநிற கிளையில் பூக்கின்ற குறிஞ்சுப் பூவில் உள்ள பெருந்தேனை சேகரிகின்ற நாட்டவனுக்கும் எனக்கும் உள்ள நட்பு.