அண்மை

தந்திர உலகம் - 3.வெஞ்சின விழிகள்

முதல் பாகம் - புகைக்கூண்டு
வெஞ்சின விழிகள்

angry eye


வெயிலின் வெம்மையால் ஆவியான காற்று அனல்காற்றாகி உயரே எழுந்தது..... திடீரென காற்று வற்றி போனதால் வெற்றிடமான அந்த இடத்தை நிரப்ப... அங்கிருந்து கிழக்கில் வெகுதொலைவிற்கு அப்பாலிருந்து கிளம்பி வரும் கடல்காற்று உள்நுழைந்தது.. கடல்காற்று என்றபோதிலும் அது நீண்டதூரம் கடந்துவந்து வீசுவதால்..,  அது தான் கொண்டுவந்திருந்த ஈரப்பதம் முற்றிலும் வற்றி வெறும் வறண்டகாற்றாகத்தான் வீசியது.. அந்த குறிப்பிட்ட ஒரு இடத்தை தவிர...

காரணம்  அவ்விடம் ஓடிக்கொண்டிருக்கும்  நீரோடை..!

வறண்ட காற்று அந்த குளிர்ந்த நிழல் நீரோடை மேனியை தீண்டிநகரும் தருவாயில் தன்னை புத்துணர்ச்சி ஆக்கிக்கொண்டு, உயிர்கொண்ட வளி என அந்த கானகவெளியினில் விரவி.. அங்குள்ள செடிகளுக்கும் கொடிகளுக்கும் மலர்களுக்கும் குளிர்பரப்பிக்கொண்டிருந்தது.

குளிர்ந்த நீரை கொண்டுவருவதாலோ என்னவோ அந்த கிழக்குக்காற்றுக்கு "கொண்டல்" என்றே பெயர்..!


சாதகமான இந்த சூழலே செடிகளும் புதர்கொடிகளும் நன்றாக மண்டிவளர வாய்ப்பளித்தன. ஆனால் இந்த காற்று நல்கிய ஈரம் வானளாவிய உயர்மரங்களுக்கு போதுமானதாக இல்லை.. அதனால் அவை தமது நீரிழப்பை குறைக்க வேண்டி இலைகளை எல்லாம் உதிர்த்திருந்திருந்தன. உதிர்ந்த சருகுகள் நிலமெலாம் விரவி..தரையை மூடி மறத்திருந்தன. நீருண்ட ஈரக்காற்று சற்றே பாரமிகுதியால் உயரே எழ இயலாமல் தணிந்தே வீசியது. தணிந்து தரையில் வீசும்போது தரையில் பரவிகிடக்கும் சருகுகளை கலகலக்க செய்துவிட்டுபோனது.


சருகுகளின் சலசலப்பிற்கு சற்றும் சலனம் செய்யாமல் தன் முதுகை காட்டியபடி நீண்ட தேகத்தை தரையில் கிடைமட்டமாக நீட்டி படுத்திருந்தது கருஞ்சாந்து நிற உருவம் ஒன்று.


மெலிந்த தேகம். வனப்பான தோற்றம். வலிமையான உடற்கட்டு. மஞ்சள் நிற விழிகள். கூரிய நகங்கள்.. வெண்ணிற சிகரமென வாயின் மேலும் கீழும் ஈர் இணை வெட்டும்பற்கள். மை நிறத்த மயிர்க்கால்கள் மேனியெங்கும் போர்த்தியிருக்க.. கருநாகம் எழுந்து அசைந்தாடுவது போல தன் வால்-ஐ ஆட்டிப் படுத்திருந்தது...


அந்த கானகப் பிரதேசத்தின் முடிசூடா மகாராணி 

காரிருள் வேங்கை யாம்


கருஞ்சிறுத்தை...!(BLACK PANTHER ) ஒன்று...!


மகாராணி என்றதினால் அது ஆண் இனமல்ல என்றுணர்வீர். மேலும் அது தாய்மை அடைந்திருந்தது. ஓரிருவாரம் முன்புதான் வேறு ஒரு இடத்தில் நான்கு சிசுக்களை ஈன்றிருந்தது. மூன்று ஆண் பறழ்கள். ஒரு பெண்பறழ். விதிவசத்தால் பெண்பறழ் சிலநாளில் இறந்துவிட... அங்கிருந்து இடம்மாற்றிக்கொண்டு இங்குவந்து இதமான சூழலில் ஒருவாரமாய் முகாமிட்டுள்ளது.


தாகம் தணிக்கும் நீரோடைகளும்.. மறைந்துகொள்ள புதர்ச்செடிகளும்.. சுற்றுவட்டாரத்தில் அடிக்கடி கிட்டும் இரைகளும் இந்த இடத்தை கருஞ்சிறுத்தை தேர்வுசெய்ய காரணமாயிற்று. 


வந்த முதல்நாளே முதிர்ந்த காட்டுமான் ஒன்றை வேட்டையாடி புசித்துவிட்டது... அதன் குட்டிகளுக்கு இன்னமும் பால்குடியே மறந்தபாடில்லை.. ஆதலால் அவை மாமிசம் தின்னும் நாள் இப்போதைக்கு கிடையாது.


அன்றைக்கு புசித்ததை கொண்டு நாலைந்து நாளை ஓட்டிவிட்டது. இன்னும் ஒருவாரம் கூட உணவின்றி இருக்க இதனால் முடியும்! என்றாலும் பால்சுரக்காவிடின் குட்டிப்பறழ்கள் பசியில் நொந்து நொடிந்துவிடுமே! அதனால் இரைதேடி

தினசரி சில மணிநேரம் காட்டில் உலாவரும். தன் எல்லையை பாதுகாக்கும். குட்டிகளோடு இருந்தால் நிம்மதியாக உறங்கமுடியாது என்பதால் தனியாக எங்காவது சென்று மரக்கிளைகளில் ஏறி சிறிதுநாழி சாய்ந்து தூங்கும். அவ்வபோது அங்குவரும் பறவைகளை கூட இரையாக்க முயன்று பெரும்பாலும் தோற்றுப்போகும்...! ஆனால்

நேற்று அதிர்ஷ்டவசமாக ஒரு பெரிய நாரை ஒன்று சிக்கிக்கொண்டது. அதனை ஒரே பாய்ச்சலில் பாய்ந்து கவ்வி கபளீகரணம் செய்து விழுங்கிவிட்டு வந்து இரவு குட்டிகளோடு படுத்ததுதான்.. நண்பகலாகியும் இன்னும் எழவில்லை..!


குட்டிப்பறழ்கள் மூன்றும் தாயின் வயிற்று மடியில் முகம்புதைத்து ஆர்வமோடு பால் குடித்துக்கொண்டிருந்தன.. தாய் கருஞ்சிறுத்தை மூச்சை இழுத்துவிடும்போதெல்லாம் வயிறு உப்பி இறங்கும். குட்டிகளும் அதற்கேற்ப தலையை தூக்கி இறக்கும்; ஆனால் பால்குடிப்பதை விட்டு வாய்நகராது! வெகுநேரம் இப்படியே கிடந்துவிட்டு ஏதேனும் ஒரு குட்டி மட்டும் இடம்மாற்றி வந்து இன்னொரு குட்டியை தள்ளிவிட்டு தான் முந்துறும்.., அவ்வளவுதான்..! தள்ளப்பட்ட குட்டிக்கு கோபம் பிறந்ததை பார்க்கவேண்டுமே..! அவை பால்குடிப்பதை விட்டு ஒன்றுக்கொன்று 'துவந்த யுத்தம்' செய்ய தொடங்கிவிடும்.

தாய் சிறுத்தை இக்காட்சியை அரை உறக்கத்தில் பார்த்தவண்ணம் மயங்கி கிடக்கும்.

அழகிய குட்டிப்பறழ்களின் செல்லமான இந்த பிடிவாத யுத்தம் காண்போரை பரவசத்தில் ஆழ்த்த்திவிடும்.


கடல்அலை, பெரிய யானை, ஓய்வுகால மழை, இரவுநேர விண்மீன் செறிந்த வானம், கொட்டும் அருவி, கம்பன் கவி இவற்றையெல்லாம் ஆசைதீர எவ்வளவு நாழி பார்த்தாலும் அலுப்பதில்லை.. தொடர்ந்து சலிக்காமல் ரசிக்கலாம்.. விட்டுப்பிரிவதற்கு மனம் ஒருபோதும் ஒவ்வாது. அத்தகைய நெஞ்சம் சிலாகிக்கும் காட்சிதான் தாயருகே இந்த குட்டிகள் கொஞ்சிவிளையாடி செல்லச்சண்டை போடும் காட்சியும்...


மூன்றுகுட்டிகளில் இரண்டு மல்யுத்தம் புரிகையில் மற்றொன்று பதுங்கி வேடிக்கை பார்க்கும். சட்டென்று ஏதோ ஏவுகணை பாய்வதுபோல அதுவும் அவ்விருவருக்கு மத்தியில் புகுந்து தன் பிஞ்சு வாயின் எள்ளுப்பற்களை கொண்டு கடிக்கும்.. பிறகு மூன்றும் கட்டிப்புரண்டு விளையாட்டு யுத்தம் செய்யும்... பிறகு  வாலை குலைத்துக்கொண்டு எதையோ மேய்வதுபோல பாசாங்கு செய்யும்.. அடிக்கடி தாய் சிறுத்தையின் மேனியில் ஏறி அவை குதித்து கும்மாளமிடும்.. ஒளிந்துபிடித்து விளையாடும்.. இப்படி தாயை மையமாக வைத்தே தங்களுக்குள் தாவித்தாவி கடித்து - பிறாண்டி - கீறி ஆட்டம் போட்டபடி இருக்கும்...!


எனினும் அவற்றின் புசுபுசு தேகமும் முதிராத பிஞ்சு எலும்பும் நெகிழ்வுத்தன்மையோடு இருந்து.., அவற்றுக்கு ஒருபோதும் அடிபடாதவாறு இயற்கை தகவமைப்பை பிறப்பிலேயே தந்திருந்தன..!


சிலநேரம் மும்மூரமாக மோதியதில் தாயின்  காது கழுத்து கண்களில் கூட நகக்கூறுகளால் கிள்ளி கீறல் இட்டுவிடும். அதற்காக அந்த தாய்சிறுத்தை ஒருபோதும் கோபித்துக்கொள்வதில்லை. வலியை சுகமாக தாங்கிக்கொண்டு  மிகுந்த அன்போடும் பரிவோடும் தன்தடித்த நாவால் அந்த குட்டிப்பறழ்களை நக்கிக்கொடுக்கும். அந்த அன்பான அரவணைப்பில் மயங்கிடும் குட்டிப்பறழ்கள் மூன்றும் மறுபடி தாயின்மடிகாம்பினை தேடி பால்குடிக்க முந்துறும். உண்மையில் இப்போது பால்சுரக்காது என்றாலும் பருகுவதுபோல பாசாங்கு செய்தபடி.,.. ஏதேதோ நினைத்துக்கொண்டு அப்படியே அந்த  பேரானந்த நிம்மதியில் உறங்கிப்போய்விடும்...


உலக பாலூட்டி இனங்களில் தாய்பிராணிகள் மட்டுமே இப்படி பூலோகத்திலேயே சொர்க்கத்தை அநுபவித்துவிடும் பேறு பெறுகின்றன.


என்றாலும் அதற்கு நிகரான அவற்றின் உழைப்பும் அலைச்சலும் அசாத்தியமானது.. ஒப்பிடமுடியாததும் கூட...


குட்டிகளுடன் சிறிது நேரம் கண்ணயர்ந்த தாய்- கருஞ்சிறுத்தையின் காது மடல்கள் மட்டும் நாலாபுறமும் வரும் ஓசைகளை உன்னிப்பாக கவனித்து கேட்டுக்கொண்டிருந்தது. ஏதோ வேறுபட்ட ஒலி கேட்ட மாத்திரத்தில் தலையைத்தூக்கி ஓசைவந்த திக்கில் நிமிர்ந்து விழித்து பார்த்தது. பார்வைக்கு எதுவும் புலப்பட வில்லை எனினும் தான் கானக வலம் செல்லும் சமயம் வந்துவிட்டதை உணர்ந்து எழுந்துநின்று உடம்பை வளைத்து நெளிவு எடுத்துக்கொண்டது. சோம்பல் முறித்ததன் அடையாளமாக ஒரு உறுமல் உறுமியது..  தாய் எழுந்ததுமே குட்டிகளும் விழித்துக்கொண்டன. அதன் உறுமலை கேட்ட உடன் அவை ஓடிச்சென்று அருகிலிருந்த மரத்தடி வேரின் மறைவான பொந்தினுள் புகுந்து தங்களை மறைத்துக்கொண்டன.. இனி தாய்சிறுத்தை எப்போது திரும்பிவந்து குரல் எழுப்புகிறதோ அதுவரையில் அவை வெளியில் தலைகாட்டாது. குட்டிப்பறழ்களுக்கு உரோமம் அதிகமில்லை. அவற்றின் சிவந்த மேனி தெரியுமளவு மெல்லிய நுன் கருப்புமயிர்களே செறிந்திருந்தன.

இதனால் பொதுவாக குளிரை அவற்றால் தாங்க இயலாது. உடல்சூட்டை தக்கவைக்க சகோதரப்பறழ்கள் மூன்றும் ஒன்றின்மீதொன்று ஏறி பின்னிப்பிணைந்து கிடந்தன.


நீரோடையை ஒட்டியே நடந்து பதுங்கி போய்க்கொண்டிருந்தது கருஞ்சிறுத்தை.. ஓரிடத்தில் நீரோடை இரண்டாக பிரிந்து அகலமாக ஒருபக்கமும்.. அகலமின்றி குறுகிய ஓடையாக மற்றொரு பக்கமும் போனது.

குறுகிய ஓடையில் குறைவான நீரே ஓடுவதாலும் அதன் வழியே தாகம்தணிக்கவும் ஓடையை கடக்கவும் பிற உயிரினங்கள் வந்துபோகும்  என்பதாலும் 'இதுநாள்வரை அவ்வழியே போகாததினால் இன்று போய்பார்க்கலாம்.. ஒருமுறை போய்வந்தால் நம் எல்லையும் விரிவடைந்துவிடும்' என எண்ணியபடி முன்னேறியது.. அச்சம் என்றால் ஏதென்றறியாத அக்கருஞ்சிறுத்தை..!


அதன் எண்ணம் வீண்போகவில்லை.. அந்த சிற்றோடை வழியாக சிறிதுதூரம் நடந்ததுமே ஒரு நரன் தென்பட்டான். அவன் ஓடைக் கரையினில் அமர்ந்தபடி வேறு எதையோ சிந்தித்தவனாக சுற்றுவட்டார நிகழ்வு பற்றிய சிந்தனை சிறிதுமின்றி வேறுஏதோ உலகத்தில் சஞ்சரித்துகொண்டிருந்தான். கருஞ்சிறுத்தைக்கு வேலை சுலபமாயிற்று.. தைரியமாக வேகமாக முன்னேறியது... பதுங்க வேண்டிய அவசியமே இல்லை!


வெகு வேக வேகமாய் அவனை அது நெருங்கிய கனத்தில்.... அவன் சட்டென எழுந்துவிட்டான்! 

இன்னமும் கூட அந்த நரன் அதனை கவனிக்கவில்லை . அது இருந்த இடத்தினிலேயே பதுங்கி கொண்டது. அவன் கையை உயர்த்தி ஏதோ சைகை செய்தான். அவன் செய்கை சிறுத்தைக்கு விளங்கவில்லை. ஆனால் அவன் உயர்த்திய கையின் நிறம்மட்டும் வேறுஒரு நிறத்திற்கு மாறிவிட்டது. அவனே கூட அதைகண்டு பரவசப்பட்டான். கருஞ்சிறுத்தையின் மஞ்சள் விழிகள் இரண்டும்  மருண்டு வெருண்டன..! பிறகு

அந்த நரன் சற்று நடந்து சென்று ஓடையின் எதிராக இருந்த மரத்தில் ஏற முயன்றான். அது அவனுக்கு வசதிபடவில்லை. பிடிமானமும் இல்லை. பிறகு இடுப்பில் இருந்த ஒரு கழியை எடுத்து தோளில் வைத்திருந்த கயிறால் இறுக கட்டமுயன்றான்.. அதுவரை பொறுமை காத்த சிறுத்தை இப்போது மெல்ல உறுமிகாட்டியது. மிக சாதாரணமாக நிமிர்ந்து பார்த்தவன் .. அப்படியே திகைத்து நின்றான். மூச்சு பேச்சில்லை. தொண்டை அடைத்தது. உடம்பு சிலிர்த்தது; ரோமங்கள் யாவும் புல்லரித்தன. கத்துவதற்கு கூட தோன்றவில்லை. கையிலிருந்தவை கீழே விழுந்தன. கால்கள் மெல்ல பின்வாங்கியது. 

அவன் பின்னடையும் ஒவ்வொரு அரையடியும் கருஞ்சிறுத்தையின் நான்குகால்களும் மாறிமாறி முன்னேறின.. அவன் தெறித்து ஓடத்தொடங்கினான்.. அது பாயத்தொடங்கியது....


******************


ஓடையில் நின்றிருந்த ஆக்கூ நிமிர்ந்து பார்த்தபோது உயரமான அதன் கரையின் விளிம்பில் அதுவரை அமர்ந்திருந்த நன்னனை காணவில்லை...


"நன்னா..! எங்கே போய்விட்டாய்? இங்கிருந்து உன்னை காணமுடியவில்லை ! நன்னா..?


(பதிலில்லை..)


ஆக்கூ ஐயமுற்றவனாய் தன் இரு கரங்களிலும் சுரைகுடுவைகளில் நீரை மொண்டுகொண்டு கரையிலேற முற்பட்டான். ஓடையில் இறங்கும்போது வந்த சரிவுப்பாதையை இப்போது உடனடியாக அவனால் இனம்காண முடியவில்லை. அவ்வளவு பொறுமையுமில்லை. ஆதலால் ஏதோ ஒரு சரிவில் ஏற முயன்றான்.. கொஞ்சம் கடினமாகவே இருந்தது. 

இரண்டு கையிலும் குடுவையை வைத்து ஏற சிரமமாயிருந்தது. அதனால் தனது ஒரு சுரைக்குடுவையை இடுப்பில் கட்டிக்கொண்டான். ஒருகரத்தில் மற்றொரு குடுவையை ஏந்தியபடி இன்னொரு கரத்தினால்

ஒரு மரத்தின் கிளையிலிருந்து தாழ்வாக தொங்கிய கொடியை ஆதாரத்துக்காக பிடித்தான். 

அந்த கொடி உறுதியானதுதான் ... எனினும் அது படர்ந்திருந்த மரக்கிளை பட்டுபோயிருந்தது. மரத்தின் பெரும்பாலான கிளைகள் இலையின்றி இருப்பதால் எது உயிருள்ள பச்சைக்கிளை எது பட்டுபோனது என அடையாளம் காண இயலவில்லை!


ஓரளவு தாங்கியபோது ஒத்துழைத்த அக்கிளை ஆக்கூ இரண்டாவது அடி எடுத்து வைத்தபோது 'படார்' என முறிந்தேவிட்டது! ஆக்கூ எதிர்பாராத திடீர்தடுமாற்றத்தால் பொத்தென ஓடை கரையில் போய் விழுந்தான். இடையிலிருந்த சுரை குடுவை உடைந்தது.. கையில் இருந்தது ஓடையில் விழ.. கரையின் சேற்றுநிலத்தில் வேகமாக விழுந்ததில் ஒருகால் சேற்றில் புதைய உடம்பின் ஒரு பாகமே சகதியில் சிக்கியது. கணநேரத்தில் தன்நிலைமை மோசமடைந்ததை  எண்ணி ஆக்கூ நொந்துகொண்டான். இனம்புரியாமல் வந்த கோபம் நன்னன் மீது வெறுப்புகொள்ள செய்தது. 


"அடேய் பைத்தியமே..! என்னை இப்படி நட்டாற்றில் தவிக்க விட்டு எங்கேயடா போய் தொலைந்தாய்?"

என்று கத்தினான் ஆக்கூ..  

பாவம்! அதை

செவிமடுக்கத்தான் யாருமில்லை..!


சிலநிமிடங்கள் வேண்டுமென்றே எழுவதற்கு முயலாமல் சேற்றிலேயே படுத்துக்கிடந்தான். யார்யார்மீதோ சினம் கொப்பளித்தது. பிறகு சாவகாசமாக எழுந்திருக்க முயன்றவனை ஒரு கணம் அப்படியே உறைந்துபோக செய்துவிட்டது.. அந்த ஜந்து.!


ஆக்கூ  முறித்த அந்த மரக்கிளை கீழே விழுந்துவிடாதபடி கொடிகள் இறுகச்சுற்றி அதனைத்தாங்கி கொண்டிருந்தன. அந்தரத்தில் ஊசலாடிய மரத்தின் கிளைநுனி, கீழே கிடந்த ஆக்கூவின் தலைக்கு சில அடி உயரத்தில் தான் இருந்தது. அதைவிட மோசம் அதன் நுனியில் கொடியை போலவே தோற்றம்கொண்ட நீண்ட சரீரம் உடைய நஞ்சுகொண்ட நாகம் ஒன்று தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தது.. மெல்ல மெல்ல அது ஆக்கூ வின் முகத்தை நோக்கி தன்முகத்தை இறக்கி கொண்டுவந்தது...

        ‌

**************


கருஞ்சிறுத்தை துரத்திபாய்ந்தபடி நன்னனை ஆவேசமாக விரட்ட.. நன்னன் திக்கு திசை தெரியாமல் பதறியடித்து ஓடினான். அவன் வாழ்நாளில் இதுபோல என்றுமே ஓடியதில்லை.. கரணம் தப்பினால் மரணம் என்பதை உணர்ந்து காற்றாய் பறந்தான்...!

அந்த சிறுத்தையோ நொடிக்கு நொடிதன் பாய்ச்சல் வேகத்தை ஏதோ மந்திர உந்துசக்திகொண்டதுபோல அதிகரித்தபடி விரட்டியது...!


ஒருகட்டத்தில் மயக்கம்வருவதுபோல தலைசுற்றி மூச்சிறைக்க...வே,  இனி நடப்பது நடக்கட்டும் என ஓடியபடியே கால்இடறி கீழே குப்புற விழுந்தான் நன்னன்.


இவன் இப்படி திடீரென விழுவான் என எதிர்பார்க்காத அந்த கருஞ்சிறுத்தை அவனை தாண்டியும் பாய்ந்து ஓடி.. பின்னர் வேகம்குறைத்து நின்று.. திரும்பி வந்தது அவனருகில்..


குப்புற கிடந்தவன் மல்லாந்து படுத்தான். மூச்சு வாங்கியது.. வான்நோக்கி உயர்ந்த மரங்கள் எல்லாம் அவனை சுற்றி சுற்றி வந்தன.. காது அடைத்தது... இதயம் துடித்தது.. இல்லை இல்லை வெடித்தது! அடிவயிற்றில் அனல் போல கொதித்தது. படுத்திருந்த அவனது பார்வைக்கோண வட்டத்தில் இப்போது கருஞ்சிறுத்தையின் வெஞ்சின விழி முகம் நுழைந்தது! எல்லாம் முடிந்தது என்றே எண்ணினான் நன்னன். கருஞ்சிறுத்தை தன் வலது முன்னங்கால் ஒன்றை அவனது மார்பில் அழுந்த பதித்தது. அவன் எதிர்ப்பின்றி சரணடைந்ததால் சந்தேகம் கொண்டது. அதன் பாதங்கள் பூவின் மொட்டை ஒத்திருந்ததாக அவன் உணர்ந்தான். பிறகு மெள்..ள.. அந்த பஞ்சுபொதி போன்ற பாதங்களிலிருந்து  பகைஅறுக்கும் கூர் உகிர்நகம் வெளிவந்தது. முள்வேலி போல தற்போது உணர்ந்தான். கண்களை மூடிக்கொண்டான்.....


நான்காவது அறிவாம் பார்வையை அடக்கிய மாத்திரத்தில் ஐந்தாவது அறிவாம் செவி ஒரு விசித்திர  உணர்வை எதிர்கொண்டது...

ஒரு விநோதமான ஒலி காதை கிழித்தது. ஏற்கனவே அடைபட்ட காது இந்த சுரமிகு ஒலி நாதத்தால் மேலும் வலிகண்டது. அதே சமயம் தன்மார்பிலிருந்து முள்வேலி மறைந்ததை உயிரினபரம்பரையின் முதலாம் அறிவான 'தொடுஉணர்வு' அவனுக்கு சொல்லிற்று....!


அந்த நாராசமான செவிபிளக்கும் ஒலி எங்கிருந்துவந்தது என தெரியவில்லை... நன்னனை விட மிகமோசமாக அந்த வெஞ்சின கருஞ்சிறுத்தை மருண்டுபோனது!

அது நாலாபுறமும் திரும்பி தன்னால் முடிந்தமட்டும் ஆக்ரோஷமாக உறுமிபார்த்து பயனின்றி அதற்குமேலும் அவ்வொலியை சகிக்க முடியாமல் தவித்தது...பிறகு திரும்பி பார்காமல் வந்த வழியே ஓடிப்போனது...!


கருஞ்சிறுத்தை ஓடிமறைந்த பிறகும் சிறிதுநேரம் அவ்வொலி கேட்டது. நன்னன் தன் காதுகளை இரு கை கொண்டு நன்றாக பொத்திக்கொண்டான். அப்போதும் மெல்லியதாய் ஒலித்துவிட்டு.., சிலநொடிகளில் அடங்கியது. செவியைவிட்டு கைகளை எடுத்தான்.. ஆம் நிஜமாகவே நின்றுபோயிருந்தது அவ்வொலி. 


அதுவரை படுத்திருந்தவன் எழுந்தமர்ந்து சுற்றும்முற்றும் பார்த்தான்.. 


அருகிலிருந்த

வாகைமரத்திற்கு பின்னால் இருந்து ஒரு உருவம் வெளிவந்தது.

அது பிராணி அல்ல மாந்தன். அதிலும் அவன் ஒரு பொடியன்..!


(தொடரும்)


- சூரியராஜ்


கருத்துரையிடுக

புதியது பழையவை