அண்மை

குறுந்தொகை 5 சிறுகதை - குகன் (kurunthogai 5 story)

இது தான் காதலா?

kurunthogai story


பௌர்ணமி நிலவின் ஒளி பிரகாசமாக இருந்தது‌. கடல் அருகில் இருந்ததால் குளிர்ந்த காற்று வேகமாக வீசியது. அத்தகைய காற்றினால் அவளது தேகம் நடுக்கமுற்றது. கலங்கரை விளக்கத்தின் மின் ஒளி சுற்றி சுற்றி வருவதை பார்த்த படியே காத்துக்கொண்டிருந்தால் பேருந்திற்காக.

அந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடிகாரம் இரவு 10 மணியை காட்ட அவளது முகம் சோர்வைக் காட்டியது.


மேலும் சில நிமிடங்கள் காத்துக் கொண்டிருந்தவள். வெகுநேரம் ஆகியும் பேருந்து வராததால் பேருந்து நிர்வாகியிடம் சென்று கேட்பதற்காக அவரது அலுவலகத்தை நாடினாள்.


'என்னமா வேணும்…? '


'இல்ல ரொம்ப நேரமா நீக்குறேன் எந்த பஸ்சும் வரல?..'


'பத்து மணிக்கு மேல இங்க எந்த பஸ்சும் ஓடாது.  இனிமே காலைல அஞ்சி மணிக்கிதான்!' என்று அலச்சிய மொழியில் அவர் கூற, மறுமொழி எழுப்பாமல் மீண்டும் அவள் முன் நின்ற இடத்திலேயே வந்து நின்றாள்.


தோள்பட்டையில் தொங்கவிட்டிருந்த  கைப்பையை திறந்தாள். அதில் வெறும் இருபது ரூபாய் மட்டுமே இருந்தது. 


உடனே அவளது செல்பேசிக்கு அழைப்பு வந்தது. 


'சொல்லுமா…! '


'அம்மா கௌசி. எப்பமா வீட்டுக்கு வருவ? எங்க இருக்க? '


'பூம்புகார் பஸ்டான்டுல நீக்குறேன். இனிமே பஸ் கிடையாதாம்‌. காலைல அஞ்சு மணிக்குதானாம்! அதான் என்ன செய்யுறதுனு தெரியல'


'அப்ப அர்ச்சனா வீட்டுல தங்கிக அவ அந்த ஊர்ல தான் இருக்கா. தங்கிட்டு காலைல வா! '


'ஆமால இந்த டென்சன்ல அவள மறந்துட்டேன் ‌. சரி சரி நான் நாளைக்கு காலைல சீக்கிரம் வந்துடுறேன்'


'சரி பாத்து பத்தரமா இரு. அவள கேட்டதா சொல்லு!. போன வச்சிடு' என்று கௌசல்யாவின் அம்மா அழைப்பினை துண்டித்தார்.


பின் கௌசல்யா தனது தோழியான அர்சனாவை செல்பேசியில் தொடர்பு கொண்டாள்.


'சொல்லுடி கௌசி நல்லா இருக்கியா?'


'ம்ம் நல்லா இருக்கேன்'


'என்ன விசியம்? லேட் நைட்ல கால் பண்ணி இருக்க!?'


'இல்ல ஒரு பங்சன்னுக்கு வந்தேன். உங்க ஊர் பஸ்டான்டுல நிக்குறேன். பஸ் இனிமே காலைல தானா அதான்….' என்று தயங்கி கூற


'இத மொதலையே சொல்ல வேண்டியது தானே. நீ அங்கேயே இரு நா இதோ வரேன்'.


சில நிமிடங்களில் அர்ச்சனா 'ஸ்கூடியில்' வந்தாள். கௌசி அவளுக்கு முகமன் புரிந்து ஸ்கூட்டியில் அமர்ந்தாள். இருவரும் புறப்பட்டனர்.


கடைசியாக கௌசி. அர்ச்சனாவை அர்ச்சனாவின் திருமணத்தில் பார்த்ததுதான்‌. அந்த திருமணம் கோலாகலமாக நடந்தது. மாப்பிள்ளைக்கு வெளிநாட்டில் வேலை. நல்ல சம்பளம். வசதியான வாழ்வு அர்ச்சனாவிற்கு.



'உன் அஸ்பண்ட் நல்லா இருக்காறா?'


'நல்லா இருக்காரு'


வழிநெடுக கௌசி கேள்வி கேட்க பதில் தந்துக்கொண்டே வந்தாள் அர்ச்சனா.


வீடு வந்தது கதவை சாவியின் உதவி கொண்டு திறந்து உள்நுழைந்த அர்சனா கௌசியை வரவேற்றாள்.


'வா வந்து சாப்பிடு ' என்று கூறி உணவு தட்டை உணவருந்தும் நாற்காலியில் வைத்தாள்.


'இல்ல பங்சன்லயே நான் சாப்டேன்'



'சரி என் கையால சமைச்சதயும் ஒருமுற சாப்புடேன்'


'இல்லடி வயிறு ஃபுல் ஆகிட்டு, வேணா'. என்று கூறிக் கொண்டே தொலைக்காட்சியின் மேல் மாட்டபட்டிருந்த புகைப்படத்தை பார்த்தாள். அது அர்ச்சனாவின் திருமண புகைப்படம். அதில் அர்ச்சனாவின் அருகில் தாமும் நிற்பதையும் கண்டாள்.


இதை பார்த்த அர்ச்சனா


'உனக்கு எப்படி கல்யாணம் ?' என்று கௌசியிடம் கேட்க


'இல்ல இப்ப தான் மாப்ள தேடிக்கிட்டு இருக்காங்க'


'சரி.. சரி.. நா விட்டா கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பன் மணி ஆகிட்டு வா தூங்குவோம்'


இருவரும் மெத்தையின் மீது அமர்ந்து தங்கள் வாழ்க்கையில் நடந்த இனிய நிகழ்ச்சிகளை நினைவுப்படுத்தி உரையாடிக் கொண்டிருந்தனர்.


பின் சில நேரம் இருவருக்குள்ளும் மௌனம் உரையாடியது. அந்த பொழுதில்  கௌசியின் கண்கள் தூக்கத்தை நாடியது.


சில மணிநேரம் சென்றபின் லேசாக விழிகளை திறந்து அர்சனாவை நோக்கினாள் கௌசி. அவள் உறங்காமல் அமர்ந்திருப்பதைக் கண்டு,


'அர்சனா நீ இன்னும் தூங்கலையா...?'


'இல்ல தூங்கல! தூக்கம் வரல!'


'ஏன்டி?'


'ஒன்னும் இல்ல நீ தூங்கு… காலைல பஸ்சுக்கு போனும்ல' என்று அர்ச்சனா சொல்ல 


'என்னனு சொல்லுடீ நான் பிரண்டு தான என்ன என்னட மறைக்குற? சொல்லு' என்று மேலும் உரிமையோடு வினவினாள் கௌசி.


'இல்ல அவர் வெளிநாட்டுக்கு போய் நாளு மாசம் ஆகுது. அவர் என் கூட இல்லாதது எனக்கு ஒரு மாதிரி மனசுக்கு கஷ்டமா இருக்கு.  இரவானா அவர் என்னோட இருந்த பொழுது தான் நியாபத்துக்கு வருது அவரோட பிரிவு எனக்கு வருத்தமா இருக்கு அதனால என்னோட கண்கள் தூங்க மறுக்குது. ஏன்டி கௌசி இது தான் காதலா? என்று தன் தோழியிடம் கேட்க. 


கணவர் பிரிவினால் வருத்தமுற்று உறங்காமல் அர்ச்சனா இருப்பதை கண்ட கௌசி, 'நம்ம பிரண்டுக்கு நல்ல மாப்பிள்ள. வெளிநாட்டுல வேல. இனிமே அர்ச்சனாவுக்கு கவலையே கிடையாது, வசதியா கஸ்டபடாம வாழப்போறானு நினைச்சோம். ஆனா கணவர் வெளிநாட்டில் இருப்பதால் வந்த பிரிவுக்கு இவ்வளவு துன்பப்படுவானு நினைக்கவே இல்ல'  என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அர்ச்சனாவிடம் பேசத்தொடங்கினாள்.


-குகன்


குறுந்தொகை 5 செய்யுள்


அதுகொல்தோழி காமநோயே

வதிகுருகுஉறங்கும் இன்நிழல்புன்னை

உடைதிரைத்திவலை அரும்பும்தூம்நீர்

மெல்லம்புலம்பன் பிரிந்தென

பல்இதழ்உண்கண் பாடுஒல்லாவே.


குறுந்தொகை 5 உரை


தலைவனை பிரிந்திருக்கும் தலைவி தனக்கு தூக்கம் வராததை எண்ணி வருத்தமுற்று தோழியிடம் தன் துயரத்தை எடுத்துரைக்கிறாள்.


தோழி இது தான் காம நோயா?

புன்னை மர நிழலில் குருகு மட்டும் உறங்குகிறதே. முத்து போன்ற கடல் அலைத் திவலை அதன் மேல்பட்டு நிற்கும் போதும் தூங்குகிறதே. அழகாக விரிந்து நிற்கும் மலர் இதழ்களை வென்றெடுத்த என் விழிகள் உறங்க மறுக்கிறதே. காமநோய் என்பது இதுதானோ?

கருத்துரையிடுக

புதியது பழையவை