சிறைச்சாலை
தும்பியைப் பிடித்து விளையாடும் சிறுவர்களிடம் பெரியவர்கள் சொல்வார் "தும்பியைப் பிடிக்காதே மறு ஜென்மத்தில் நீ தும்பியாகவும் இந்த தும்பி மனிதனாகவும் பிறந்து உன்னை அது பிடித்து விளையாடும்" என்று
இக்கால பிள்ளைகள் புத்திசாலிகள் "போன முறை அது என்னை பிடித்து விளையாண்டதற்கு தான் இப்போது நான் அதை பிடித்து விளையாடுகிறேன்" என்கிறார்கள்.
இந்த விடை சிரிப்பாக இருந்தாலும் சிந்திக்க வேண்டியது.
துன்பங்கள் நீயாக தேடிப் போவதற்கும் தானாக தேடிவருவதற்கும் வித்தியாசம் உண்டு.
உணவில் விசத்தை கலந்து நீயே உண்பதற்கும் நண்பன் உணவை அவனுக்கு தெரியாமல் எடுத்து உண்டபின் அதில் விசம் கலக்கப் பட்டிருப்பது தெரியவருதற்கும் நிறைய வித்தியாசம் உண்டல்லவா.
எங்கே வழி
வாழ்க்கை முழுதும் இன்பத்திலே மூழ்கி இருப்பவனுக்கு மீண்டும் ஒரு இன்பம் வந்தால் அவனுக்கு என்ன தெரியபோகிறது.
துன்பத்தோடே துயில் கொள்பவனுக்கு மேலும் ஒரு துன்பம் வந்து விழிக்க வைத்துவிடுமா என்ன?
இன்ப வெள்ளத்தில் நீந்தும் ஒருவனுக்கு வரும் சிறு துன்பம் மலையை காட்டிலும் பெரிதாகத் தெரியும்
அந்த துன்பத்தை அவன் மீண்டும் நீஞ்சி கடக்கும் போது வரும் இன்பம் அவன் இது வரை பார்த்திடாத அளவுக்கு இனிக்கும்
துன்பம் இருந்தாலே இன்பம் தெரிகிறது
இன்பம் இருந்தாலே துன்பம் வருகிறது
நன்மையையும் தீமையையும் கலந்துகட்டி செய்ததன் எதிர் வினையே நன்மையும் தீமையும் மனிதனிடத்தே சஞ்சரிக்கிறது.
பாவம் கோபம்
ஒரு மரத்தின் வளர்ச்சி போன்று தான் நீங்கள் செய்த நன் செயலின் பிரதி பலனும்.
நெல்லிக்காய் முதலில் கசக்கிறது.
உண்ட பிறகு இனிக்கிறது.
கஷ்டப்பட்ட மனிதர்களே வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள்.
அவர்களின் முன் வாழ்க்கை மிகவும் கசப்பாகவே இருக்கிறது.
திடீர் என்று மேலே வந்தவன், திடீர் என்றே கீழே போகிறான்.
அவனின் அசுர வளர்ச்சி, அந்த சிறிய அடியைத் தாங்காது அடங்கி ஒடுங்கிப் போகிறது.
அடிபட்டு அடிபட்டு எழுந்தவனுக்கோ எத்தனை பலமான அடியும் ஏற்கனவே பட்ட காயங்களுக்கு ஒத்தரம் கொடுப்பது போல இருக்கும்.
துயரங்களிலே வாழ்ந்தவன் அழுகையை நண்பனாக்கிக் கொள்கிறான்.
தலையணை ஈரமாவதால் அவன் தூக்கம் களைவதில்லை.
இழப்பு
'தம்பி இவ்வளவு உற்சாகமாக இருக்கிறாயே உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையா' என்று தளபதி கேட்டதற்கு அச்சிறுவன் சொன்னான்,
எனக்கு என்ன கவலை, நானோ சிறுவன், இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் உற்சாகமாகத் தான் இருப்பேன்.
இதை கேட்ட தளபதி உடனே சரி தம்பி உன் பெற்றோர்கள் எங்கே? எனக் கேட்டார், அதற்கு அவனோ
எனக்கு பெற்றோர்களே கிடையாது உடன் பிறந்தோர், உற்றார், உறவினர் யாருமே கிடையாது.
எனக்கு எல்லாமே இந்த காடுதான். அதோ அந்த மரங்கள் எனக்கு உணவு தருகிறது. இந்த ஓடை நீர் தருகிறது.
அச்சச்சோ தம்பி இப்படி தனியாக இருந்து கொண்டும் எப்படியப்பா உற்சாகமாய் இருக்கிறாய்?
ஐயா முதலில் நீங்களொன்று புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு பெறுவதற்கு வேலையில்லை, இழப்பதற்கு ஒன்றுமில்லை.
நான் ஏன் துயரப்பட வேண்டும்.
இந்த பதிலை கேட்டு அதிர்ந்து போன தளபதி தன் குரலை சற்று தளர்த்தி உன்னிடம் ஏதாவது சட்டை இருந்தால் எனக்கு கொடுக்கிறாயா? என்றார்.
ஐயா என் சட்டை என்னைத் தவிர வேறொருவருக்கு பொருந்தாது நான் இறந்த மறுகணமே நீங்கள் அதை எடுத்துச் செல்லலாம்.
சிறுவனின் பதில் பொறுக்காது கோபமடைந்த தளபதி, அத்தனை நேரமில்லை எனக்கு, சீக்கிரம் உன் சட்டையை எடுத்து வா, என்று அதட்ட
அதற்கு அந்த சிறுவன் பொறுமையாக சொன்னான்.
அந்த சட்டையே நான் தான் என்று.
அந்த ரகசியம்
உங்களது படைப்பின் காரணம் உங்களக்கே தெரியவில்லையானாலும் அந்த ஏதோ ஒரு ரகசியம் உங்களை வைத்து தன் காரியத்தை சாதித்து கொள்கிறது.
சிலர் மட்டுமே 'நான் யார்?' எனும் கேள்விக்கு விடை கண்டு பிடிக்கின்றனர்
பலர் தங்களது கருமம் என்னவென்பது கூட தெரியாமல் இறந்து போகின்றனர் ஆனால் செய்யாமல் இல்லை.
சூரியன் தன் கடமையாக கதிரை அனுப்பி கொண்டே இருந்திருக்கலாம்
ஆனால் அதுக்கு தெரிந்திருக்காது நமது ஒளியால் பலக்கோடி உயிரினம் உண்டாகும் என்று,
ஆனால் இப்படி உயிரினங்களை உண்டாக்குவதற்கென்றே சூரியனை படைத்த அந்த ரகசியம் சூரியனுக்கு தெரியாமலே தன் நோக்கத்தை பூர்த்தி செய்து விட்டது.
நடந்தாகுமெனில் அது நடவாமல் இருப்பதில்லை.
இதனால் தான் சொல்கிறேன், இருவர் இதில் ஈடுபட்டுள்ளனர் என்று,
ஆனால் இரண்டாமவருக்கு அந்த தொழில் தெரியாமலே நடந்து கொண்டிருக்கிறது.
அதனால் ரகசியம் ரகசியமாகவே காக்கப்படுகிறது.
கேள்வி பதில்
எவனொருவன் இந்த உயிர் நமக்கு சொந்தமில்லை என்பதை உணருகிறானோ அவன் வாழ்வையே வெல்கிறான்.
இதை என் ஞான குரு நாதர் கண்ணதாசன் அவர்கள் ரத்தின சுருக்கமாக சொல்லி இருப்பார்கள்.
"உயிர் கடவுள் கொடுத்த கடன், உடல் கடவுள் கொடுத்த பரிசு"
கடனைத் திரும்பிக் கொடுக்க வேண்டும். பரிசை கொடுத்தவரே திருப்பிக் கேட்கமாட்டார்.
உடலாகிய நம்மிடையே உயிரைத் தவிர இழப்தற்கு வேறொன்றும் இல்லை.
கவலை இல்லாத அந்த சிறுவன் என்னிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை எனக் கூறினான்.
தளபதி அவனிடம் சட்டைக் கேட்டதற்கு 'நான் தான் அந்த சட்டை' என்று தன் உடலையே கூறுகிறான்.
இழப்பதற்கு அவனிடம் 'உயிர் அடைத்த உடல்' இருந்தாலும் அதை அவன் ஓர் இழப்பாக கருதவில்லை.
அது அவனைக் கவலையின்றி இருக்க வைத்தது.
நம் கைகளுக்கு வந்து போகும் மற்ற பொருள்கள் அனைத்துமே மாயை தான்.
அந்த பொருட்கள் இன்னொருவரின் பசியைத் தீர்கப்பயன்படுகிறதெனில் அதை கொடுப்பதில் (இழப்பதில்) தவறொன்றும் இல்லையே
ஜீவகாருண்யம்
'உலக உயிர்கள் அனைத்துமே உணவுக்காகவோ உதவிக்காகவோ ஒன்றையொன்று சார்ந்திருக்கும்'.
இது உண்மையே.
ஆனால் அது அந்த இடத்தைப் பொறுத்தது.
பாலைவனங்களிலும் பனிப்பிரதேசங்களிலும் வாழும் மக்கள் தாவரங்களை கண்டெடுக்க கூட முடியாது.
வேறு வழியே இன்றி வயிற்றுக்காக அவர்கள் உயிர்க் கொலை செய்ய வேண்டிருந்தது.
அது தான் அவர்களின் வாழ்வாதாரமும் கூட.
ஆனால் இயற்கையே மனிதனுக்கான உணவு எது? என்பதை தெளிவாக நமக்குச் சொல்கிறது.
ஓர் ஆட்டைக் கொல்வதற்கென்று அழைத்து வரும் போது, அது அந்த கத்தியை பார்த்த உடனே 'மே...மே' என இடைவிடாது சத்தமிடுகிறது.
என்னை 'விட்டுவிடுங்கள் விட்டுவிடுங்கள்' என்று துள்ளுகிறது.
தன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றை அவிழ்க்க முடியுமா என்று இழுத்து இழுத்து ஏமாற்றமடைகிறது.
இதே போல் ஒரு கோழியை அழைத்து வரும் போது சிறகினை பட பட வென அடித்து அலறுகிறது.
பிடிபட்டவன் கைகளிலிருந்து விடுபட வேண்டுமென்று அங்குமிங்கும் ஆட்டம் போடுகிறது.
இறுதியில் இதுவும் ஏமாற்றமடைகிறது.
தூண்டிலில் மாட்டப்பட்ட மீன்களும் என்னை தண்ணீரில் விட்டுவிடுவென துடித்து துடித்து ஏமாற்றமடைகிறது.
இவைகளனைத்தும் 'உணவிற்காக படைக்கப்பட்ட உயிர்கள்' என்றால் அமைதியாக அல்லவா இருந்திருக்க வேண்டும்.
ஏன் தான் கொல்லப்பட்டுவிட கூடாதென்று துடிக்கிறது? துள்ளுகிறது? பறக்கிறது?
ஏன் என்றால் இவைகள் எதுவும் மனிதனின் உணவிற்காக படைக்கப்பட்டது அல்ல.
மரஞ்செடிகளில் இருக்கும் கனிகளையும் காய்களையும் இலைகளையும் பறிப்பதால் அவைகள் காய்ந்து இறப்பதில்லை.
மீண்டும் துளிர்த்து உனக்கான உணவுத் தயார் என்பதைக் காட்டுகிறது.
இயற்கையின் இந்த செயல்களின் மூலமே உணரமுடிகிறது தாவரங்கள் தான் மனிதனுக்கு உணவென்று.
எந்த ஒரு உணவும் நாக்கு வரை தான் சுவை தரும், அதன் பின் துர்நாற்றமாகி விடும்.
சரியான பசியின் போது நான்கு வாழைப்பழத்தை எடுத்து உண்டாலே பசி அடங்கிப் போகிறது.
அதன் பின் உலகிலேயே சுவையான உணவைக் கொண்டு வந்தாலும் வயிறு வேண்டாம் என்கிறது.
உன்னுள் ஒருவன்
அனுபவிக்காதவனின் ஆட்டம் அனுபவத்தால் அடங்கிவிடுகிறது.
அன்று என் வேதியியல் ஆசிரியர் சொன்னது நினைவுக்கு வருகிறது,
'ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிய வித்தியாசமில்லை, ஆண் பேன்ட் சட்டை போட்டிருப்பான், பெண் பாவடை தாவனி போட்டிருப்பாள்'
'உலக வாழ்க்கையை தெரிந்து கொண்ட எனக்கு இப்போது ஆண் பெண் தெரியவில்லை தோலும் எலும்புந்தான் தெரிகிறது' என்கிறார் பட்டினத்தார்.
இதை வெற்றென கேட்பதற்கும் அனுபவத்தால் உணர்வதற்கும் வித்தியாசம் உண்டு.
போகத்தில் வீழ்ந்தவன் ரோகத்தின் மூலமாக யோகத்தை அடைகிறான்.
நெருப்பு சுடுமென்று குழந்தைக்குச் சொன்னால் புரிந்து கொள்ளாது. தொட்டு தெரிந்து கொண்டால் மீண்டும் தொடாது.
அது போலவே மனிதனும் ஆசைகளில் வீழ்ந்த பின்னே அறிவைப் பெறுகிறான்.
மனதை புரிந்து கொண்டவன் திமிராக இருப்பது பிடிவாதமாகாது.
ஆசையால் வரும் பிடிவாதத்தின் பெயரே திமிர்.
எவ்வித ஆசையுமின்றி, எவ்வித பிரதி பலனும் எதிர்பாராது ஒரு செயலில் நிலைத்திருப்பதன் பெயரே வைராக்கியம்.
கடன்
உதவி வேறு கடன் வேறு இல்லை. உதவி, கடன் இரண்டுமே திருப்பி செலுத்த வேண்டியவைகளே.
கடனை கட்டாயம் திருப்பி செலுத்த வேண்டும், உதவியை திருப்பி செலுத்த வேண்டுமென்று பலர் நினைப்பதில்லை.
அவசரமாக ஓர் இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். ஆட்டோவையோ டாக்ஸியையோ தேடுகிறீர்கள்; கிடைக்கவில்லை.
யாரோ முகமறியாத ஒருவரிடம் 'லிப்ட்' கேட்கிறீர்கள். அவரும் உங்களை தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு நீங்கள் நிறுத்த சொல்லும் இடத்தில் இறக்கிவிடுகிறார்.
இப்போது அவரிடம் நீங்கள் கடன் பட்டுள்ளீர்கள். அவர் செய்த உதவிக்கு பதிலுதவி நீங்கள் செய்ய வேண்டும்.
ஆனால் அத்தகைய அவசரமான நேரத்தில் உங்களால் அவருக்கு உதவி செய்ய முடியாதல்லவா?
ஆட்டோவில் வந்திருந்தால் நூறு ரூபாய் ஆகியிருக்குமென்றால், உங்களை அழைத்து வந்தவருக்கு ஐம்பது ரூபாய் தருவதில் தவறில்லையே.
உதவிக்கு உதவி செய்ய வேண்டியது உங்களுடைய கடமை, அதை அவர் வேண்டாமென மறுத்தால், அது அவருடைய மேன்மை.
எந்த வகையிலும் உதவி செய்ய முடியாத போது 'நன்றி' எனும் வார்த்தையே போதுமானது.
அறிவுரையே முடிவுரை
"உயர்ந்தவன் உதவிக்கு பதிலுதவி கேட்பதும் இல்லை, தாழ்ந்தவன் உதவிக்கு பதிலுதவி செய்வதும் இல்லை"
பிறப்பினாலே ஒருவன் உயர்ந்தவனாகவோ தாழ்ந்தவனாகவோ ஆகிவிட முடியாது.
நல்ல குணமான ஒருவனை 'நற்குடி பிறப்பு' என்பார்கள்.
பிறப்பினால் ஒருவன் உயர்ந்தவன் இல்லை எனில், ஏன் அதற்கு நற்குடி பிறப்பு எனப் பெயர் வந்தது என்ற கேள்வி வரும்.
நற் பண்பு கொண்ட தாய் தந்தையால் வளர்க்கப்பட்ட அவர்களது பிள்ளை நிச்சயம் நல்லப் பண்புகளை கொண்டிருப்பார்கள் என்பது நம்பிக்கை.
ஆனால் அன்றைய இந்த நம்பிக்கை இன்றைய காலத்திற்கு பொருந்தாது.
பிறப்பாலும், சாதிப் பெயராலும், செய்யும் தொழிலாலும் தான் உயர்ந்தோர் என எண்ணும் அனைவருமே இழிந்தோரே.
இதற்கு சுவாமி கிருபானந்தவாரியார் அவர்கள் ஒரு கதை சொல்வார்.
ஒரு யானை நன்றாக குளித்து விட்டு விபூதி பூசிக் கொண்டு ஆற்றின் மறுகரைக்கு செல்ல பாலத்தின் அருகே வந்து நிற்குமாம். அப்போது அந்த பாலத்தின் எதிர் முனையில் சேற்றையும் மலத்தையும் பூசியபடி அருவருக்க முடியாத கோலத்தில் ஒரு பன்றி வந்து கொண்டிருக்குமாம். பன்றியைக் கண்ட யானை 'சரி அதுவே முதலில் போகட்டும்' என்று ஓரமாக ஒதுங்கி விடுமாம். ஆனால் பன்றியோ 'நம்மைக் கண்டு யானையே பயந்து ஒதுங்கி விட்டது' என்று எண்ணுமாம்.
தாழ்ந்தோர்கள் இந்த பன்றியைப் போல தன்னைத் தானே உயர்வாக நினைத்துக் கொள்வார்கள்.
யானை நினைத்திருந்தால் அந்தப் பன்றியை ஒரே மிதியில் கொன்றிருக்க முடியும்.
ஆனால் உயர்ந்தோர் குணம் அந்த யானையைப் போல் என்றும் அமைதியையே விரும்புகிறது.
-தீசன்
முழு தொகுப்பையும் இன்றே படியுங்கள்