ரா பொழுது
(தனிமையில் படிக்கவும்)
பால் வண்ணம் ததும்பும் நிலவை மேகங்கள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரம். கோடை கால காற்றால் ஏற்படும் தென்னங்கீற்றின் ஓலை சலசலப்பு, சூழ்ந்திருந்த அமைதியை இடையிடையே கலைத்துப் போனது.
தெருவோரத்தில் இருக்கும் நாய்கள் குப்பைத்தொட்டிகளை ஆய்ந்துவிட்டு பசியுடனே கண்களை மூடி படுத்திருந்தன. சலசலப்பு வரும் நேரமெல்லாம் அவற்றின் காது மடல்கள் மேலெழுந்தன. சப் சப் சப் தேங்கிக் கிடந்த தண்ணீரை மிதித்துக் கொண்டு வருபவனின் சத்தம் அது. நாய்களின் காதுகள் முன்பை விட சற்று அதிகமாக சிலிர்த்தது. அவன் தள்ளாடிக்கொண்டே வந்தான். பாக்கெட்டுக்குள் கைவிட்ட அவன் தன் போனை எடுத்தான். வைப்ரேசனில் இருந்த அது அதிர்ந்து கொண்டிருந்தது. அவனும் போனை எடுத்து காதில் வைத்தான், 'சொல்லு மச்சி, என்ன ஆச்சு' அவன் குரல் குழறியது.
'டேய் கிஷோர் வீட்டுக்கு போய்டியா? இல்ல எங்கையாவது விழுந்து கிடக்கியா? வழக்கத்துக்கு அதிகமாவே குடிச்சிட்ட, இங்க நீ போனத்துகப்பறமும் கூட உன்னால தான் ப்ராஜக்ட் சக்ஸஸ் பண்ணோம்னு நம்ம மேனேஜர் சொன்னதையே சொல்லி சாகடிக்கிறான்டா, அதுனால நா என்ன பண்ண போறேன்னா, 'கிஷோரு காந்தி சாலைல விழுந்து கிடக்கானாம் சார்' னு பொய் சொல்லி இங்கேந்து கெளம்ப போறேன். நாளைக்கு நம்ப மேனேஜரு இத பத்தி கேட்டா, ஆமா சார் பிரகாஷ் தான் என்ன வந்து கூட்டிகிட்டு போய் வீட்ல ட்ராப் பண்ணானு சொல்லனும்.. சொல்லுற'
கிஷோரின் பதிலைக் கேட்காமலே பிரகாஷ் போனை துண்டித்தான். கிஷோரும் செல்போனை பாக்கெட்டில் வைத்து நடக்கலானான். வீடு நெருங்கியது. யாருமே இல்லாத சிறிய வீடு அது. கிஷோர் மட்டுமே இருக்கான். ஆதலால் வெளிச்சமே இல்லாமல் இருண்டு கிடந்தது. கதவின் அருகே ஒரு ஜன்னல் இருக்கும். பூட்டி பூட்டி திறந்தால் ஒட்டடை படியும் என்பதால் கிஷோர் அதை மூடுவதே கிடையாது. திறந்திருக்கும் அந்த ஜன்னல் வழியே அவன் தன் வீட்டைப் பார்த்தான். அவன் வீட்டில் இருக்கும் பெண்டுலக் கடிகாரத்தின் நொடி முள் அசையும் சத்தமே அந்த இருள் நிறைந்த பகுதி முழுதும் நிறைந்திருந்தது. தான் வைத்திருந்த ஆபீஸ் பைக்குள் கையை விட்டு அலசி, வீட்டின் சாவி கொத்தை எடுத்தான்.சுற்றியிலிருந்து வந்த சுவர்கோழியின் சத்தமும் சாவி கொத்தின் சத்தமும் 'ஜல் ஜல்' எனும் சலங்கை உணர்வை தந்தது.
கதவை திறந்தான். தெற்கு பக்கம் நோக்கிய அந்த வீட்டின் கதவு திறக்கப்பட்டவுடன் 'ஸல்' என்று புகுந்த காற்று கட்டப்பட்டிருந்த அழகிய தோரணங்களை சலசலக்க செய்தது.
பணிச்சுமை தந்த களைப்பினாலும் போதை தந்த மயக்கத்தினாலும் வீட்டிற்குள் நுழைந்த அவன், கதவை தாழிட்டு பையினையே தலையணையாய் வைத்து படுக்கலானான். கடுமையான சோர்வு சிறிது நேரத்திலே ஆழ்ந்த நித்திரையை தந்தது.
டங் டங் டங், மணி மூன்று என்பதை பெண்டுல ஓசை சுட்டியது. சிறுக சிறுக உடலை வளைத்த கிஷோர். மெல்ல எழுந்து உட்கார்ந்தான். அவனது அடிவயிறு ஒருவிதமான வலி உணர்வை தந்தது. சிறுநீர் கழிப்பதற்காக எழுந்தான். அவனிடமிருந்த போதை மயக்கம் இன்னும் தெளியவில்லை என்பதை அவனது உடல் தள்ளாட்டமே சொல்லியது. மெதுவாக வீட்டின் பின்னே உள்ள கொல்லைப் புறத்திற்கு சென்றான். முழுவதுமாக சிறுநீரை கழித்து முடித்தப் பின் அவனது வயிற்று வலி குறைந்திருந்தது. மீண்டும் கொல்லை புறத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்தான். கொல்லைக் கதவை தாழிட்டு வருகையில் அறையின் கதவின் கீழ் உள்ள இடைவெளியில் மங்கிய வெளிச்சம் தெரிந்தது. அந்த மயக்கக் கலக்கத்தில் கண்களை சுருக்கி விரித்துப் பார்த்த போது, கிஷோருக்கு அந்த மங்கிய வெளிச்சம் சற்றும் மாறாமல் அப்படியே தெரிந்தது. தாழிட்ட அந்த கதவை திறக்க போனான். மங்கிய ஒளி சட்டென அணைந்தது. கிஷோரின் போதை மயக்கம், நடந்த இந்நிகழ்வுகளை கண்டு கொஞ்சம் கொஞ்சமாக தெளியத் தொடங்கியது.
அறைக்குள் எப்படி வெளிச்சம் வந்தது? திடீரென எப்படி அது அணைந்தது? போன்ற கேள்விகளை அவனது மூளை கண நேரத்தில் சிந்திக்கத் தொடங்கியது.
திறந்து பார்த்தாலொழிய அதற்கு பதில் கிடைக்காது. திறக்க போனான். தாழ்ப்பாளை தொட்ட அடுத்த கணமே. அறையின் உள்ளிருந்து சத்தமான ஒரு அலறல் சத்தம் கேட்டது. அதிர்ந்து போனான் கிஷோர். கதவை திறக்கும் படியாக உள்ளிருந்து தடார் தடார் என்று யாரோ கதவை உடைக்கும் படியாக தட்டினார்கள்.
இரவு மூன்று மணி, யாரும் இல்லாத தனிமை வீடு, கொஞ்சம் கூட கிஷோர் இதை எதிர்ப்பார்க்கவில்லை. அவனது கண்கள் விரிந்தது. இதயம் வேக வேகமாக துடிப்பதை அவனால் உணர முடிந்தது. அறையின் கதவை திறக்கப் போன அவனது விரல்கள் நடுங்கத் தொடங்கியது. வீட்டின் கதவை திறந்துக் கொண்டு வெளியே ஓடி வந்தான்.
டங் டங் டங் மணி மூன்று ஆனதை பெண்டுலக் கடிகாரம் சுட்டியது. சட்டென எழுந்து உட்கார்ந்தான் கிஷோர். அவனது முகமெல்லாம் வியர்த்து இருந்தது. நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. வெப்பம் நிறைந்த மூச்சுக் காற்று வேக வேகமாக வெளியேறியது. இது எல்லாம் கனவு என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. அவனது அடிவயிற்றில் ஒரு விதமான வலி உணர்வு வந்தது. கனவுகளில் வந்தவை நிஜத்தில் நிகழ்வதை அவன் சினிமாக்களில் கண்டதுண்டு. சிறுநீரை அடக்கிக்கொள்ள முடியாதபடி அந்த வலி இருந்தது. அவனது பயத்தால் மேனி சிலிர்த்தது. திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஜன்னல் வழியாக நுழையும் காற்று அவனது உடல் சிலிர்ப்பை மேலும் அதிகமாக்கி நடுக்கியது.
கொல்லைப் புறத்திற்கு செல்லும் போது அந்த அறையின் அடிப்புறத்தை பார்த்தபடியே நகர்ந்தான். எந்த வெளிச்சமும் அங்கில்லை. கொல்லையின் கதவை திறந்தபோது அங்கிருந்த கிளை உரசலின் சத்தம் அவனது இதய இயக்கத்தை நிறுத்தியே விட்டது. வேகவேகமாக சிறுநீரை கழித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்த அவனது கண்கள் அந்த அறையையே நோக்கியது.
எந்த வெளிச்சமும் இல்லை. 'உஷ்' என்ற பெருமூச்சுடன் கிஷோர் இயல்பானான். 'எல்லாம் கனவுதான்' என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு படுக்க வந்தான்.
இந்த முறை ஒரு தலையணையை எடுத்து வந்து பெரும் நிம்மதியோடு கண்களை மூடினான்.
சிறிது சிறிதாக மினிக்கிக்கொண்டே அந்த அறையின் உள்ளே வெளிச்சம் தோன்றியது.
-தீசன்
நல்லவேளையாக தூக்கும்முன்பாக இதை படிக்கவில்லை...!
பதிலளிநீக்குஅற்புதமான கதை
பதிலளிநீக்குஇதயத்துடிப்பை சட்டென நிறுத்திவிட்டது...
பதிலளிநீக்குமிகச் சிறப்பு...
இனி ஒவ்வொரு முறையும் ராத்திரி எழும்போது இந்த கதை தான் நியாபகம் வரும்...
பதிலளிநீக்குபயந்து வருது
பதிலளிநீக்கு