அண்மை

நாட்டை நலம் செய்தல் வேண்டும்

அரசு வேலை திட்டம்


குப்பைகளை எடுக்க சரியான நேரத்தில் துப்புரவாளர்கள் வருவதில்லை. டீக்கடைகளில் டீயினை பேப்பர் கப்பில் குடிப்பதற்கும் பிளாஸ்டிக் கவரில் பார்சலாகவும் கட்டித் தருகிறார்கள். இரண்டுமே தடை செய்யப்பட்ட பொருள். இது என் அரசு கல்லூரியில் கூட நிகழ்கால நடைமுறையாக உள்ளது.


சில மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பாக்குகளை இன்றளவும் விற்பனை செய்கிறார்கள். பள்ளி மாணவனே வந்து கேட்டாலும் அதை கொடுப்பதற்கு அவர்கள் தயங்குவதில்லை. சிகரெட் கேட்டாலும் தருவார்கள். லைசன்ஸ் இல்லாத ஒருவன் ஓட்டும் வண்டியில் மூன்று பேர் அமர்ந்து செல்வார்கள். வகுப்புக்கு வரும் ஆசிரியர் பாடம் நடத்தாமல் புறப்படுவார். சிலசமயம் வகுப்புக்கே வராமல் இருப்பார். மாதம் ஒரு நாள் நம் தெரு ரேஷன் கடையிலிருந்த பொருட்கள், அரசியல் வாதி ஒருவரது வேனில் ஏற்றுமதி ஆகிக் கொண்டிருக்கும்.


கண்களுக்கு நேரே நடக்கும் கொடுமைகளை பொருக்காத நம் நெஞ்சம், 'இவர்களை ஏதாவது செய்ய வேண்டும்' என்று நினைக்கும், பின் 'நமக்கு ஏன் வம்பு' என்று அடங்கி ஒடுங்கிவிடும். இது தான் நான் சொல்லப்போகும் திட்டத்தின் அடித்தளமாகும்.


பெரிய குற்றங்களே கவனிக்கப்படுகிறது. சிறிய குற்றங்கள் அலட்சியப்படுத்தப்படுகிறது. அந்த பெரிய குற்றமும் குற்றமென அம்பலமாவதற்கு முன்பே பலராலும் கவனிக்கப்பட்டிருக்கும் ஆனால் நமக்கு ஏன் வீண் வம்பு என்று விலகி இருப்பார்கள். எல்லோரும் அப்படி இல்லை, உண்மையை ஒப்புக்கொள்கிறேன் 'நான் இதுபோலத் தான்'. என் கண்களுக்கு நேராக நிகழ்ந்த குற்றங்களை சகித்துக்கொண்டிருக்கிறேன், பொறுத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் எக்குற்றத்திலும் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை, முன்பு நான் செய்த குற்றங்களையும் அரசின் விதி மீறல்களையும் எண்ணி இப்போதும் வருந்தாமல் இல்லை.


திட்டம்


அரசின் விதி மீறல்களுக்கு அரசு கொடுக்கும் தண்டனை அபராதம் விதிப்பதாகும். சாலையில் இருக்கும் அரசின் பொது சொத்தை ஒருவன் சிதைத்து விட்டால் அவனுக்கு அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சமாக சிறை தண்டனை கொடுக்கப்படும். ஆனால் அந்த பொது சொத்தை சேதப்படுத்தியவன் யாரென்றே தெரியவில்லையானால், அரசுக்கு நட்டம் தான். இதற்கு தான் ஒரு செயலி உருவாக்கப்பட வேண்டும். அரசுக்கோ கேமராவுக்கோ தெரியாத அந்த குற்றம் அதே தெருவில் இருக்கும் யாரோ ஒருவர்க்கு நிச்சயம் தெரியும். நாம் ஏன் ஒருவனை பிரச்சனையில் மாட்டிவிட்டு நாமும் பிரச்சனையில் மாட்ட வேண்டும் என்று எண்ணுபவர் எதுவுமே செய்யாமல் இருப்பார். அவர் இந்த செயலியின் மூலம் தான் பார்த்த அந்த குற்றத்தை பதிவு செய்யலாம்.


இப்போது அவர் பிரச்சனைக்கு ஆளாக மாட்டாரா?


நிச்சயம் ஆக மாட்டார். அந்த செயலியானது உங்களிடமிருந்து எந்த data வையும் பெறாது. அதாவது பெயர், மொபைல் எண் போன்ற எந்த விவரங்களையும் பெறாது. நீங்கள் செயலியினுள் நுழையும் போதே அந்த பயனருக்கு Reference Id தரப்படும். குற்றத்தை பதிவு செய்யும் போது மட்டும் இருப்பிட விவரத்த தானகவே எடுத்துக்கொள்ளும். காரணம் குற்றத்தை ஆய்வதற்காக. அதாவது மதுரையை வாழிடமாக கொண்ட நபர் சென்னையில் உள்ளார். அங்கு ஓர் குற்றம் நிகழ்வதை காண்கிறார். அவர் அதே இடத்தில் அந்த குற்றத்தை செயலியில் பதிவு செய்துவிட்டு மீண்டும் மதுரைக்கு வருகிறார். குற்றம் நடந்த இடத்தை ஆய்வதற்காக மட்டுமே அந்த 'இருப்பிட விவரம்' பெறப்படுகிறது. அதனால் ஒருவரை மாட்டிவிட்டாலும் கூட குற்றத்தை பதிவு செய்பவர் எந்த விதத்திலும் மாட்டிக்கொள்ள மாட்டார்.


எப்படி குற்றத்தை பதிவு செய்பவரை நம்புவது?


யார் வேண்டுமானாலும் குற்றத்தை பதிவு செய்யலாம் எனும் போது, சிலர் தனக்கு பிடிக்காத நபர்களையும் கூட மாட்டிவிட கூடும். அதுமட்டுமல்லாமல் ரோட்டில் யாரோ ஒருவர் செய்த குற்றத்தினை யார் என்றே தெரியாமல் 'இவர் செய்தார்' என்று மொட்டையாக குறிப்பிட முடியாது. அந்த செயலியில் குற்றத்தை பதிவு செய்யும் போது Attach media எனும் option இருக்கும். இப்போது சாலையில் நடக்கும் தவறுகளை பார்க்கும் பலரும் போட்டோகளையும் வீடியோகளையும் எடுக்கிறார்கள். பின் லைக்குக்காகவும் சேர்களுக்காகவும் சமூக வளைதளங்களில் பதிவிடுகிறார்கள். அதை இந்த செயலியில் பதிவிடலாமே. ஊரில் உள்ள யாருக்கும் தெரியாமல் ஒருவர் ஒரு குற்றத்தில் ஈடுபடுகிறார். ஆனால் அது உங்களுக்கு மட்டும் தெரிகிறது. உங்களுக்கு சரியான வாய்ப்பு, ஒரு போட்டோ முடிந்தால் ஒரு வீடியோ. நம்பகத்தன்மையை இப்படியே அறிந்து கொள்ளலாம். 


எப்படி குற்றம் செய்தவர் தண்டிக்கப்படுவார்?


உங்களது வேலை குற்றத்தை பதிவு செய்வதோடு முடிந்து விடும். அதற்கு பின் நீங்கள் செய்ய வேண்டிய வேலை ஒன்றும் இல்லை. உங்களது குற்றப்பதிவானது இதற்கென்றே அமைக்கப்பட்ட ஒரு 'ரகசிய ஆய்வுப் படையால்' ஆயப்படும். அதாவது நீங்கள் அனுப்பிய பதிவில் உள்ள நம்பகத்தன்மை முழுவதுமாக ஆயப்படும். சிலர் தங்களுக்கு பிடிக்காத நபரின் படத்தை கூட 'அவர் செய்ததாக' அனுப்பலாம். எடிட் செய்த படங்களையும் வீடியோக்களையும் அனுப்ப அதிக வாய்ப்புள்ளது. ஆய்வு செய்யப்பட்ட பதிவில் Reference Id யும் குற்றம் நடந்த இருப்பிடமும் இருக்கும். உடனே 'ரகசிய ஆய்வுப்படையால்' அந்த செய்தியானது குற்றம் நடந்த இடத்தின் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு பகிரப்படும். அத்தோடு நீங்கள் அனுப்பிய ஆதாரப்படமும் பகிரப்படும். எக்காரணத்தைக் கொண்டும் உங்களது Reference Id பகிரப்படாது. பின் அந்த காவலர்களால் அந்த குற்றத்திற்கான தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


சரி, இந்த குற்றத்தை பதிவு செய்பவருக்கு என்ன பயன்?


குற்றம் செய்தவருக்கு தண்டனை கிடைக்கும் அதுவே முதல் பயன். இரண்டாவது அவரிடமிருந்து பெறப்படும் அபராதத் தொகையில் பாதி அளவு உங்களுக்கு வழங்கப்படும். அதாவது ஒருவருக்கு ஐயாயிரம் அபராதம் விதித்தார்களேயானால் உங்களுக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் சன்மானமாக வழங்கப்படும். அவருக்கு விதிக்கப்படும் சிறை தண்டனையில் பாதி உங்களுக்கு கிடைக்காது.


எப்படி வழங்கப்படும்?


எனக்கு சில Captcha செயலிகளில் பணிபுரிந்த அனுபவம் உண்டு. எவ்வளவு வேலை செய்கிறோமோ அதற்கேற்ற வகையில் பணமானது அதே செயலியில் இருக்கும் Walletல் ஏற்றப்படும். பின் நாம் எப்போது விருப்பப்டுகிறோமோ அப்போதே அதிலிருக்கும் பணத்தை withdraw செய்து கொள்ளலாம். இந்த நடைமுறையை இந்த செயலி கொண்டிருக்கும். உங்களுக்கு வரும் பணம் Wallet ல் சேமிக்கப்படும். வேண்டும் எனும் போது வங்கிக்கணக்கு விவரங்களை குறிப்பிட்டு ஒருபாயிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.


அரசு தலையிட முடியாத குற்றங்களுக்கு எப்படி சன்மானம் வழங்கும்?


அரசு சில பிரச்சனைகளில் தீர்ப்பு தர முடியுமே தவிர சன்மானம் வழங்க முடியாது. இதில் தான் நாம் ஜப்பானியர்களின் நடைமுறையை பின்பற்ற வேண்டும். ஜப்பான் நாட்டில் யாராவது தங்கள் பர்ஸை துலைத்துவிட்டால் துலைந்து போன இடத்தில் தேட தேவையில்லை, அது யார் மூலமாகவோ காவல்நிலையத்தை வந்தடைந்துவிடும். சாலையில் பர்ஸையோ பணத்தையோ இல்லை வேறு எந்த பொருளையும் யார் கண்டெடுத்தாலும் அதை காவல்நிலையத்தில் வந்து தர வேண்டும் என்பது அவர்களது சட்டம். அந்த பொருளை வாங்கிக் கொள்ளும் காவலர், கொடுப்பவரின் வீட்டு முகவரியையும் வாங்கிக் கொள்வார். குறிப்பிட்ட காலத்திற்கு பின்னும் பொருளை இழந்தவர் தேடி வரவில்லையானால், அந்த பொருள் கீழிருந்து எடுத்து வந்து கொடுத்தவரையே சாரும். அப்படி இழந்தவர் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அந்த பொருளை வாங்கிக் கொண்டாலும் பொருளின் மதிப்பில் 10 சதவீதம் எடுத்து வந்து காவல் நிலையத்தில் கொடுத்தவருக்கு இழந்தவர் தர வேண்டும். அதாவது இழந்தவர் பர்ஸில் 10000 Yen இருந்தால் எடுத்து வந்து கொடுத்தவருக்கு 1000 Yen இழந்தவர் கொடுக்க வேண்டும். அரசு தலையிட முடியாத பிரச்சனைகளில் சன்மானமானது இந்த வகையில் பெற்றுத் தரப்படும். இன்னும் புரியும் படியாக சொல்ல வேண்டுமானால், இருவருக்கு உள்ளான பிரச்சனையில் இன்னொருவரும் பாதிக்கப்படுகிறார். அவர் குற்றத்தை செயலியில் பதிவு செய்கிறார். குற்றத்தை ஆராயும் பிரிவு, யார் மீது தவறு இருக்கிறதோ அவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையோ அல்லது அவர் இழந்த பொருளோ பெற்றுத் தருகிறது. நியாயத்தைப் பெற்றவருக்கு அவர்களால் பாதிக்கப்பட்ட குற்றத்தை பதிவு செய்தவரிடம் சன்மானத்தை வழங்க சொல்லி உத்தரவிடப்படும். 


குற்றத்தை பதிவிட தான் காவலர்கள் உள்ளார்களே?


எல்லா காவலர்களும் நேர்மையானவர்களாய் இருப்பார்களா தெரியாது. சிலர் அரசியல் வாதிகளின் தயவில் கூட வாழலாம். அதனால் அவர்கள் செய்யும் குற்றங்கள் ஏதோ ஒரு வகையில் மறைக்கப்படுகிறது. இரண்டு கண்கள் செய்யமுடியாததை, ஆயிரம் கண்கள் செய்து முடிக்கும் என்று நான் நம்புகிறேன்.


செயலி எப்படி இருக்க வேண்டும்?


செயலி சிறந்த டெவலப்பர்களால் நல்ல கட்டமைப்போடு இருக்க வேண்டும். காரணம் இது போன்ற Wallet உள்ள செயலிகளில் Hacker கள் தங்களது இஷ்டத்திற்கு விளையாண்டு பார்ப்பார்கள். அதனால் செயலியின் coding ஐ பிரித்துவிட்டால், செயலி இயங்காது போவது போல இருக்க வேண்டும். App editors களால் இந்த செயலிக்கு எந்தவித சேதமும் வரக்கூடாது. அது போன்ற சிறந்த வடிவமைப்பை இந்த செயலியானது கொண்டிருக்க வேண்டும். குற்றங்கள் எப்போது நம் கண்ணில் படும் என்பதை சொல்ல முடியாது. அதனால் திடீரென்று மொபைலை எடுத்து பயன்படுத்தும் விதத்திற்கு Background Usageஐ கொண்டிருந்தால் நல்லது. 


காட்டிக் கொடுத்தா சம்பாரிப்பது?


நீங்கள் காட்டிக் கொடுக்கவில்லை. நமது மாநிலத்தை மேன்மைப்படுத்துகிறீர்கள். குற்றம் செய்ய முனைபவர்கள் 'நம்மை பார்த்துக் கொண்டு இத்தனை கண்கள் உள்ளது' என்ற எண்ணத்தோடு குற்றம் செய்யவே அஞ்சுவார்கள். நீயே குற்றத்தை பதிவு செய்கிறாயா? உன்னுடைய குற்றத்தை பதிவிட இன்னொருவன் இருப்பான். இப்படியே இந்த சங்கிலித் தொடர் நீண்டுக்கொண்டே போகும். இறுதியாக நாடெங்கும் உள்ள CCTV செய்யக்கூடிய வேலையை இந்த சிறிய செயலி முடித்துவிடும். இதனால் கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்க அஞ்சுவார்கள். அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்க அஞ்சுவார்கள். ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்தாமல் இருப்பதற்கு அஞ்சுவார்கள். அரசியல் வாதிகள் உழல் செய்ய அஞ்சுவார்கள். இறுதியாக அனைவரும் தங்களது கடமையின் நேர்மையினை தவற அஞ்சுவார்கள்.


இதனால் அரசுக்கு என்ன லாபம்?


குற்றங்கள் குறைக்கப்படுவதே அரசுக்கு லாபந்தானே. அரசிடமிருந்து தெரியாமல் திருடப்படும் பணம் இனி திருடாது நிறுத்தப்பட்டால் அதுவே அரசுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும். அரசுக்கு தெரியாமல் எவ்வளவோ நபர்கள் அரசின் விதிகளை மீறுகிறார்கள், தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கிறார்கள். அவர்களிடமிருந்து பெறப்படும் பணத்தில் பாதியே உங்களுக்கு தரப்படுகிறது, மீதி அரசுக்கே சேரும். இல்லையென்றால் யார் அந்த 'ரகசிய படைக்கு' சம்பளம் போட்டுத் தருவது.


இது பல நாளாக சிந்தித்து எழுதப்பட்ட திட்டமாகும். என் அரைகுறை மூளை, யோசித்து வைத்த சில கருத்துகளை மறந்து விட்டிருக்கலாம் அல்லது எனக்கு தெரியாத இந்த திட்டத்தின் குறைகள் உங்களுக்கு தெரியலாம். தென்றல் இந்த திட்டதை குறைகளே இல்லாமல் மேலும் வலுப்படுத்த விரும்புகிறது. உங்களது மாற்றுக் கருத்துகளை வரவேற்கிறது. எதுவாக இருந்தாலும் கமெண்ட்டில் தெரிவிக்கலாம். இந்த திட்டம் சாத்தியமாகுமா? எனும் உங்களது விமர்சனத்தையும் நான் எதிர்ப்பார்க்கிறேன். தயங்காது கூறுங்கள்.


ஆசிரியர்

1 கருத்துகள்

புதியது பழையவை