அண்மை

கொரோனாவை வெல்ல எளிய வழிமுறைகள்

சென்ற வருடம் பரவத்தொடங்கிய கொரோனா. இன்னமும் ஒழிந்தபாடில்லை. நாளை புதிய கட்டுப்பாட்டுக்கான ஆலோசனையை தலைமைச் செயலர் சொல்ல இருக்கிறார். தமிழக அரசு கொரோனா கிருமியின் இரண்டாம் அலையின் விகித கட்டுப்பாடு கையைமீறி சென்று விட்டது என்று அறிவித்துள்ளது.


coronavirus
Copyright free image from PIXABAY 


பெரும்பாலும் நாளை மாலையிலிருந்து கடுமையான கட்டுபாடுகளோடு மீண்டும் ஊரடங்கு தொடங்கலாம். இந்தியா முழுவதும் 1.5 லட்சத்திற்கு மேல் சராசரியாக தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது. தமிழகத்தில் 7000 த்திற்கு மேல் அதிகரிக்கிறது. சென்ற வருடம் ஏப்ரல் மாதம் இதைவிட பல மடங்கு குறைவாகவே இருந்தது. நமக்கு தெரியவரும் நோய் தொற்று பாதித்தவர்களின் கணக்கீடு மிக மிக குறைவே, ஏன்னெனில், காய்ச்சல் ஏற்படும் பலரும் மருந்துவமனைக்கு வந்து covid 19 பரிசோதனை செய்வதில்லை, வீட்டிலே முடங்கிவிடுகிறார்கள். சென்றமுறை இதுபோன்று வீட்டிலே தங்கி வைத்தியம் பார்த்துக் கொண்ட மக்கள் தான் மரணத்திடம் வெகுவிரைவில் நெருங்கினர். இம்முறை அந்த அலட்சியம் வேண்டாம். தொற்று பாதிக்காதவர்களும், 'நமக்கும் கொரோனா வந்துவிட்டதோ' என்னும் சந்தேகத்தில் இருப்போர்களும் இவ்வழிகளை பின்பற்றுங்கள்.


அடிப்படை சுத்தம்

கிராமத்தில் இருக்கும் பல வீடுகளிலும் வீட்டு வாசலில் கை கால்களை சுத்தம் செய்ய தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும். அதில் கழுவி சுத்தம் செய்த பின்பே வீட்டிற்குள் நுழைய வேண்டும் அப்படிஇல்லையானால் வீட்டின் பின்புறம் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டிருக்கும் வீட்டை சுற்றி கொல்லைக்கு வந்து கை கால்களை சுத்தம் செய்த பின்னரே வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்பார்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அது இயலாத காரியம். செருப்பையே வீட்டின் உள் வந்து கழட்டி போடும் வகையில் தான் இன்றுள்ள வீடுகள் இருக்கிறது. 


வெளியே இருக்கும் போது உங்களது கைகளை முகத்தருகில் கொண்டு வராதீர்கள். வீட்டின் உள்நுழைந்த உடனே முதல் வேலையாக கைகளை நன்கு Sanitizer போட்டு கழவி விடுங்கள். இயலுமானால் குளித்து விடுங்கள். Sanitizer இல்லாதவர்கள் சுடுநீரை கொண்டு சுத்தம் செய்து கொள்ளலாம். இப்போது மட்டுந்தான் அப்போது மட்டுந்தான் என்று கணக்கு வைக்க வேண்டும். எப்போது வீட்டை விட்டு வெளியே சென்று வந்தாலும் கைகளை கழுவிவிட்டு பிற வேலையை கவனியுங்கள்.


முககவசம்

முககவசம் அணியாத பலரும் சொல்லும் காரணம், சமூக இடைவெளியே இல்லை எதற்கு முககவசம்? என்பதுதான். முககவசம் நீங்கள் எப்போதும் அணிந்திருந்தீர்களானால் இன்று இந்த நிலை வந்திருக்காது. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். முகக்கவசம் அணியாது இருக்கும் போது எதிர்வரும் நபரால் பரப்பப்படும் தொற்றானது உங்களது கட்டுபாடின்றி நாசிக்குள் நுழைந்துவிடும். சமூக இடைவெளி இருந்தாலும் கூட முககவசம் இல்லாதிருந்தால் பாதிப்பு சதவீதம் மிக மிக அதிகமாகும்.


உங்களது கை தோள்பட்டை கால் போன்ற அங்கங்களில் தொற்றப்படும் கிருமியானது நேரடியாக உடலுக்குள் நுழையவில்லை. முககவசம் அணியவில்லையானால் உங்களது அனுமதி இன்றியே கிருமியானது உடலுக்குள் நுழைந்துவிடும். அதனால் பெரும்பாலும் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், முடியவில்லையா? முககவசத்தை மட்டுமாவது கடைபிடியுங்கள்.


சுடுநீர்

இந்த முறை covid 19 வைரஸ் கெட்டிக்காரத்தனமாக உருவெடுத்துள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. என்ன தான் கெட்டிக்காரத்தனம் வந்தாலும் முதலில் தொண்டையை தாக்கும் சுபாவத்தை அது மாற்றவில்லை. அதனால் முடிந்த வரை குளிர்ந்த நீரை விட்டுவிடுங்கள். கோடை தொடங்கிவிட்டது, அனைவரின் நாக்கும் குளிர்பானங்களைத்தான் கேட்கும். ஆனால் இயன்றவரை குளிர் பொருட்களை இந்த நிலையில் தவிர்ப்பது நல்லது. சுடுநீர் அதிகம் பருக பருக தொண்டையில் ஏற்பட்ட தொற்றின் தாக்கம் குறைவாகும். பல மருத்துவர்களும் covid க்கு முன்னும் பின்னும் சுடுநீரை எடுத்துக் கொள்வதே நல்லது என பரிந்துரை செய்கிறார்கள்.


மாத்திரை 

சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் இன்று பலர் மாத்திரை எடுத்துக் கொள்கிறார்கள். அந்த காய்ச்சல் கொரோனா (covid 19)  தானா என்னும் அறிகுறியை கூட அந்த மாத்திரைகள் மறைக்கிறது. covid தொற்று ஏற்பட்டு பத்து நாள் ஆனாலும் கூட paracetamol போன்ற மாத்திரைகள் அதன் வீரியத்தை குறைத்து காட்டும் வல்லமைக் கொண்டது. அந்த மாத்திரையை எடுத்துக் கொண்டு நமக்கு கொரோனாவே இல்லை என்று உயிரை விட்டுவிடாதீர்கள். தினமும் paracetamol பயன்படுத்துவது எவ்வளவு தீங்கானது என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.


காய்ச்சல் தொடங்கிய நான்கு நாட்கள் எந்த மருந்தும் பயன்படுத்த வேண்டாம். தேவையற்ற சளியை வெளியேற்ற உங்களது உடல் கொடுக்கும் அவகாசமே நான்கு நாட்கள். அந்த நேரத்தில் paracetamol போன்ற மாத்திரைகளை பயன்படுத்துவதால் நோயின் அறிகுறியை உங்களால் தெரிந்துகொள்ள முடியாது. நான்கு நாட்களுக்கு பிறகும் காய்ச்சல் தொடர்ந்தால், மருத்துவரை அணுகி மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளவும்.


மூச்சு பயிற்சி

ஒரு நிமிடத்திலிருந்து தொடங்கி முப்பது நிமிடம் வரை கூட மூச்சு பயிற்சி செய்யலாம். தினம் ஒரு நிமிடம் ஒதுக்குவது உங்களது உயிரையே காக்கும் திறன் கொண்டது. அடர்ந்த காட்டில் தினமும் ஒரே வழியில் நடந்து சென்றுக் கொண்டிருந்தால் மூன்று மாதங்களுக்கு பின் தானாகவே அங்கொரு ஒற்றை அடி பாதை உருவாகியிருக்கும். மூச்சு பயிற்சியும் அப்படித்தான் தினமும் ஒரு சீரான சுவாச அசைவு நுரையீரலில் ஏற்பட்டுக்கொண்டிருந்தால் மாரடைப்பு மரணம் குறைந்துவிடும். covid 19 கிருமி முதலில் செய்யும் வேலை இதுதான். நம் சுவாச திறனை வெகுவாக குறைத்துவிடும். போதுமான அளவு ஆக்ஸிஜனை உள்ளிழுக்க கூட நம்மிடம் சக்தி இருக்காது. சளியும் அதிகமாவதால் மார் அடைத்து நோயாளி இறந்து போய்விடுவார். அதனால் ஒருநிமிட மூச்சு பயிற்சி உங்களது உயிரை காக்கும் என்பதை நினைவில் கொள்க.


வந்த பிறகு

covid 19 தொற்று ஏற்பட்ட பிறகு மருத்துவமனையில் சேர்வதுதான் நல்லது. மருத்துவமனையில் சேர்வதால் தான் மரணமே வருகிறது என்றும் பலர் சொல்கிறார்கள், நடைமுறையிலும் காண்கிறோம். ஆனால் ஒன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மருத்துவமனையில் சேராமல் குணமானவர்களும் அதிகம், இறந்தவர்களும் அதிகம். என்னைக் கேட்டால் மருத்துவமனையில் சேர்வது தான் நல்லது.


coronavirus
Copyright free image from PIXABAY 

பலரது வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளும் அளவிற்கு வசதி இருக்காது. அந்த நோயும் வீட்டில் உள்ளோரை பற்றிக் கொள்ளாமல் விடாது. அதனால் மருத்துவமனையில் சேர்வதே நல்லது. தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி படைத்தோர் வீட்டிலேயே இருக்கலாம். ஆனால் சர்வஜாக்கிரதை தேவை. உங்களிடமிருந்து உங்களது வீட்டார்களுக்கு பரவ அதிக வாய்ப்பு உள்ளது.


முதலில் covid 19 க்கு என்னென்ன அறிகுறிகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சாதாரண கால மாற்ற காய்ச்சலுக்காக கூட்டமாக இருக்கும் மருத்துவமனைக்கு சென்று கொரோனாவை ஒட்டிக் கொண்டு வாராதீர்கள். 


  • கடுமையான காய்ச்சல்

  • வறட்டு இருமல்

  • தொண்டை வலி

  • மூச்சுவிடுவதில் சிரமம்

  • உடல் சோர்வு

  • மூட்டுகளில் வலி

  • தலைவலி

  • சுவை தெரியாமை

  • வாசம் தெரியாமை

  • குமட்டல் அல்லது வாந்தி எடுத்தல்

  • வயிற்றுப்போக்கு


இதிலும் முக்கியமாக


  • வறட்டு இருமல்

  • தொண்டை வலி

  • உடல் சோர்வு

  • மூச்சுவிடுவதில் சிரமம்


இந்த நான்கு அறிகுறியும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. படுக்கும் போதெல்லாம் சளி நெஞ்சை அடைப்பது போலிருந்தால் கொஞ்சம் கூட தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகவும். சென்ற முறை சொந்தகள் நண்பர்கள் தெரிந்தவர்கள் தலைவர்கள் எனப் பலரையும் இந்த கொடும் கொரோனாவினால் (covid 19) இழந்துவிட்டோம். இதுபோன்ற சின்ன சின்ன நடவடிக்கைகளால் நாம் இம்முறை இந்த கொரோனாவையே வெல்ல முடியும். மறந்துவிடாதீர்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை