அண்மை

குறுந்தொகை 6 சிறுகதை - குகன் (kurunthogai 6 story)

நடுயாமம்

kurunthogai 6

அந்த மாலை பொழுது, சூரியனின் மங்கிய வெளிச்சத்தில் மக்கள் அனைவரும் அரசவை விழா மண்டபத்தினை நோக்கி பெருந்திரளாக சென்று கொண்டிருந்தனர்.

'நம்ம இளவரசர் எதிரி நாட்ட தும்சம் பண்ணிட்டு படை வீரர்களோட ஆரவாரமா திரும்பி வராராம்!'


'ஆமா நானும் கேள்விப்பட்டேன், அதுக்கு தான இப்போ அவசர அவசரமா விழா மண்டபத்தில் ஏற்பாடு நடந்துக்கிட்டு இருக்கு '


'நம்ம இளவரசருக்கும் வாணிகர் ரத்தினசாமி மகளுக்கும் திருமணம் செய்யுறத பத்தி இந்த விழால அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை '


'அதான் ஊரறிந்த விசயமாயிற்றே'


'அந்த பெண்தான் பாவம்!!' என்று அந்த கூட்டத்தில் சென்ற இருவரின் உரையாடல் ஒரு வயதான வழிப்போக்கரின் காதில் விழ.


'ஐயா….. நில்லுங்கள்!. அரசரோட மகனும் வாணிகரோட மகளுக்கும் திருமணம் பேசுறதுனால அந்த பெண்ணுக்கு நல்லது தானே? ஏன் அந்த பெண் பாவம் என்கிறீர்கள்?'


'அது இருக்கட்டும் நீங்கள் யார்?'


'நானா… நாடு நாடாகச் சென்று கோயில்களில் தரிசனம் செய்து வரும் ஒரு வழிப்போக்கன்'


'ஓ….'


'ஐயா… என் கேள்விக்கு பதில்?'


'அதுவா? எங்களுடன் வந்து விழாவை காணுங்கள் பின் சொல்கிறோம்…'


'சரி ஐயா…'


மூவரும் விழா மண்டபத்தினை அடைந்தனர்.


விழா மண்டபத்தின் கீழ், மக்கள் அனைவரும் அமர்ந்தனர். மண்டபத்தின் மேல் பேரரசரும் அவரது அருகில் ரத்தினசாமி வாணிகரும், மந்திரியாரும் அமர்ந்திருந்தனர்.


சட்டென இளவரசர் அனங்கன் மேடையில் வருகை தர, 'இளவரசர் அனங்கன் வாழ்க… வாழ்க..' எனும் முழக்கம் கடல் சீற்றம் போல போரொலியால் அதிர்ந்தது.


இளவரசருக்கு மாலை மரியாதைகள் செய்யப்பட்டது. பின் அரசரை புகழ்ந்து ரத்தினசாமியும், மந்திரியாரும் பேசினர். பின் பேரரசர் இளவரசரை புகழ்ந்து பேசிய பிறகு 


'என் மகனுக்கு சித்திரை மாதம் முதல் நாளன்று இந்நாட்டின் அரசராக முடிசூட்டு விழாவும், அது முடிந்த கையுடன் எனது நண்பர் ரத்தினசாமி வாணிகர் மகள் வள்ளிக்கும் எனது மகனுக்கும் சுபயோக சுபகாலத்தில் திருமணம் நடக்கும்' என்று அறிவித்தார்.


மக்கள் மீண்டும் ஆரவார கோசங்களை விண்ணதிர எழுப்பினர். விழா முடிவுற்றது. அந்த வழிப்போக்கர் கேள்விக்கான பதிலை அந்த இருவரிடமும் மீண்டும் கேட்டார் அதற்கு அவர்கள், 'பேரரசரும் வாணிகரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள் அதானால் தான் அரசர் இந்த திருமணத்தை பற்றி அறிவித்தார்'


'அது தான் தெரியுமே…'


'அது எப்படி உமக்கு தெரியும்?'


'அது... கேள்விபட்டேன். அந்த பெண் பாவம் என்றீர்களே அதைப் பற்றி சொல்லுங்கள்'


'அதுவா அந்த பெண் ஒருவனை காதலிக்கிறாள்!'


'என்ன!' என்று சற்று கோபத்துடன் அந்த வழிப்போக்கர் கேட்க


'எதற்கு நீங்கள் கோபப்படுகிறீர்கள்?'


'ஒன்றுமில்லை ஒன்றுமில்லை மேலே சொல்லுங்கள் யார் அந்த ஒருவன்?'


'அவனா... அவன் பெயர் சமுத்திரன். நெய்தலவன். மீன் பிடிக்கும் தொழில் செய்கிறான். மிகவும் நல்ல குணங்களை உடைய நல்ல மனிதன்'


'ஓ… சரி சரி நேரமாகிவிட்டது இன்னும் பல கோயில்களுக்கு செல்ல வேண்டும் வருகிறேன்' என்று இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அவர் தன் வழியே புறப்பட்டார்'.



இரவு தொடங்கியது, அந்த பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது. நிலவின் பார்வையில் இரு காதலர்கள் ஆற்றாங்கரையின் ஓரம் அமைந்துள்ள தோட்டத்தில் காதல் அமுதை பரிமாறிக் கொண்டிருந்தனர்


'வள்ளி…. ஒரு துர்செய்தி ' என்ற படியே வள்ளியின் தோழி பதற்றத்துடன் வந்தாள்.


'என்ன செய்தி சொல்லடி சீக்கிரம்?'


'நாம் நினைத்தது போல பேரரசரே உனக்கும் இளவரசருக்கும் திருமணம் என்று இன்றைய விழாவில் அறிவித்துவிட்டார்'


தோழி சொல்லியதை கேட்டு அதிர்ச்சியுற்ற வள்ளி. விழிகளில் கண்ணீர் சுரந்தபடியே சமுத்திரனை நோக்கினாள். 


சமுத்திரன், 'வள்ளி கவலையை விடு!  நம் இருவருக்கும் தான் திருமணம் நடைபெறும். இடையே யார் வந்தாலும் அவனை கொன்று உன்னை கரம்பிடிப்பேன்!!' என்று உறுதி கூறினான்.


'நம் காதலுக்காக யாரையும் துன்பப்படுத்த வேண்டாம். என் தந்தையிடம் சென்று நேரே நம் காதலை கூறு, அதுவே வீரம். என் தந்தை மிகவும் நல்லவர் அவர் கட்டாயம் நம் காதலை ஏற்றுக்கொள்வார்' 


'இதை பற்றி நாளை பேச இயலாது. தொழிலுக்காக கடலுக்குள் செல்கிறேன். நாளை மறுநாள் வந்து நம் காதலை பற்றி உன் தந்தையிடம் பேசுகிறேன்'


'நல்லபடியாக சென்று வாருங்கள். சரி நேரமாகிவிட்டது தந்தை என்னை தேடுவார் புறப்படுகிறேன்.. வா செந்தாமரை'  என தோழியுடன் தன் வீட்டை நோக்கி புறப்பட்டாள் வாணிகர் மகன் வள்ளி.



வாணிகர் வீட்டில்...


'முதலாளி.. நீங்கள் சந்தேகப்பட்டது சரிதான். உங்கள் மகள் ஒருவனை காதலிப்பது உண்மை. அதுவும் ஒரு மீனவனை'


'மீனவனையா..!?  அட ச்சை என்னதொரு அவமானம், யார் அவன்?


'அவன் பெயர் சமுத்திரன். நல்ல குணங்களை உடைய நல்ல மனிதன்'


'என்ன சொன்னாய்….'


'இல்லை நான் சொல்லவில்லை. மாறுவேடம் போட்டுக்கொண்டு மக்களிடம் இன்று கேட்டபோது அவர்கள் சொன்னது'


'சரி. அவனை என்ன செய்யலாம்?


'எப்படியும் அவனை வள்ளி அம்மாவிற்கு  திருமணம்…..'


'மூடா என்ன சொன்னாய்..!'


'இல்லை எப்படியும் அவனை வள்ளியம்மாவிற்கு திருமணம் செய்தா வைக்க போகிறீர்கள்‌. அவனை கொல்ல தானே போகீறீர்கள்!'


'அவனை கொல்ல போவது உண்மை தான். ஆனால் என் மகளுக்கு சந்தேகம் வராதவாறு செய்ய வேண்டும்'


'எப்படி ?' 


'நீ ஒன்று செய் நாளை அவனை இங்கு அழைத்து வா!'


'தங்கள் உத்தரவு' என்று ரத்தினசாமியும் அவனது வேலைக்காரனும் உரையாடலை  முடித்த சில நிமிடங்களில் வள்ளி வீட்டிற்கு வந்து தனது அறைக்குள் நுழைந்தாள்.


மறுநாள் அந்த வேலைக்காரன் சமுத்திரனை தேடி சென்றான். அவன் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளான் என்ற செய்தியை ரத்தினசாமியிடம் சொல்ல. அவனே நம்மை தேடி வருவான் அப்போது பார்த்துக் கொள்வோம் என்றார் ரத்தினசாமி.


அடுத்த நாள் காலையில் சமுத்திரனை எதிர்பார்த்து வாசலில் காத்துக் கொண்டிருந்தாள் வள்ளி. காத்திருப்பு வீண் போகவில்லை சமுத்திரன் வந்தான். அவள் உள்ளே சென்று சிறிது பதற்றத்துடன் தூணின் மறைவில் நின்றுகொண்டிருந்தாள்.


சமுத்திரன் வந்தான். 'யார் நீ?' என்று வேலைக்காரன் கேட்க,


'என் பெயர் சமுத்திரன். நான் ஒரு மீனவன். வள்ளி விஷயமாக வாணிகரை பார்க்க வந்தேன்'


சமுத்திரத்தின் வருகையை ரத்தினசாமியிடம் சொன்னான் வேலைக்காரன். ரத்தினசாமி சமுத்திரனை உள்ளே வர சொன்னார். 


'ஐயா.. நானும் தங்கள் மகளும் ஒருவருக்கு ஒருவர் காதலிக்கின்றோம். அதை சொல்லி தங்கள் விருப்பத்துடன் திருமணம் செய்து கொள்வதே எங்கள் இருவரின் எண்ணம்' என சமுத்திரன் கூற. 


ரத்தினசாமி, 'நான் என் மகளை இளவரசருக்கு திருமணம் செய்து கொடுப்பேன் என்று பேரரசரிடம் சொல்லிவிட்டேன். என் விருப்பமே எனது மகளின் விருப்பமும் என்று நினைத்தேன். ஆனால் அவள்…' என்று தூண் மறைவில் நின்று கொண்டிருந்த வள்ளியை மெதுவாக பார்த்தார். சட்டென,


'அது இருக்கட்டும் என் மகளை அரசகுடும்பத்திற்கோ அல்லது என்னை போன்ற வாணிகனுக்கோ தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது என் எண்ணம்'


'ஐயா நான் வாணிகனும் அல்ல வாணிகம் செய்யும் அளவு என்னிடம் செல்வமும், கப்பலும் இல்லை'


'ஓ...அப்படியா! அப்படி என்றால் உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். கப்பலும் செல்வமும் அதில் வேலை செய்ய எனது ஆட்களையும் அனுப்பிவைக்கிறேன் நீ நான் சொல்லும் இடத்தில் சென்று வைர, மாணிக்க ரத்தினங்களை கப்பல் நிறைய பாதுகாப்பாக கொண்டுவந்தால் போதும். அதுவும் வரும் சித்திரை மாதம் முதல் தேதிக்கு முன். இல்லையேல் என் மகளை இளவரசர் அனங்கனுக்கு திருமணம் செய்து தந்து விடுவேன். சரியா..சமுத்திரா?'


'இப்போதே ஆக வேண்டிய ஏற்பாடு செய்யுங்கள் சென்று வென்று வருகிறேன்' என்றான் சமுத்திரன்.


'என் வேலைக்காரன் உனக்கு செல்லும் இடத்தையும் ஆகவேண்டிய காரியத்தையும் சொல்வான் போய் வா!'


வாணிகர் வீட்டிலிருந்து புறப்படும் போது கண்ணினால் தன் காதலி வள்ளியிடம் விடைப்பெற்று சென்றான்.


ஆக வேண்டிய ஏற்பாடு செய்து அவனை அனுப்பிய பின் வேலைக்காரன், வாணிகரிடம் தன் ஐயத்தை கேட்கத்தொடங்கினான்.


'முதலாளி! அவனை கொன்று விடுவீர்கள் என்று நினைத்தால், இந்த சிறிய வேலையை செய்ய சொல்லி அனுப்பி இருக்கிறீர்களே. அவன் இதை சுலபமாக செய்து விடுவான். இளவரசருக்கு என்ன பதில் தருவீர்கள்?. எனக்கு நீங்கள் செய்வதே விளங்கவில்லை!'


'விளங்கவில்லையா?'



'ஆமாம் சுத்தமாக விளங்கவில்லை யாருக்கும் யாருக்கும் திருமணம்?'


'இளவரசருக்கும் வள்ளிக்கும்'


'அப்போது சமுத்திரன் வந்தால்?'


'அவன் சமுத்திரத்திலேயே சமாதி ஆகிவிடுவான்' 


'ஐயோ அது எப்படி?'


'நமது ஆட்கள் அவனை கொன்று விடுவார்கள் அதனால் தான் இந்த சுலபமான திட்டத்தை வகுத்தேன்'


'அதை இங்கேயே செய்ய வேண்டியது தானே!?'


'அறிவுகெட்டவனே... இங்கேயே செய்தால் என் மகளுக்கு சந்தேகம் வரும். தெரிந்துவிட்டால் அவள் இளவரசரை திருமணம் செய்து கொள்ள மறுப்பாள். கடலில் வைத்து அவனை கொன்றுவிட்டு என் மகளிடம் அவன் கப்பலையும் செல்வத்தையும் திருடி வேறெங்கோ சென்றுவிட்டான் என்று சொல்லி திருமணத்தை நடத்தி விடுவேன்'


'பலே வியூகம் முதலாளி' என்றான் வேலைக்காரன்.


இருபத்து எட்டு நாட்கள் சென்றன. சித்திரை மாதம் ஆரம்பமாக இன்னும் இரண்டு நாட்களே இருந்தன.


இன்னும் இரண்டு நாளுக்குள் காதலன் வந்தால் மட்டுமே, தாம் உயிர் வாழ முடியும் என்ற ஏக்கத்துடன் வீட்டின் மேல் மாடத்தில் அந்த நள்ளிரவு நிலவு ஒளியில், பஞ்சு போன்ற தன் பாதங்கள் சிவக்க திரிந்து கொண்டிருந்தாள் வள்ளி.


அவள் மனதில்…


'இந்த நல்ல இனிமையான இரவில் பரந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களும், உயிரினங்களும் அமைதியாக உறங்கிவிட்டனர். தன் வீட்டில் உள்ளவர்களும் பேசுதல் இல்லாது உறங்கிவிட்டனர். ஆனால் நான் ஒருத்தி மட்டும் தலைவன் பிரிவினால் உறங்காமல் உள்ளேன் 

அவர் வந்தால் மட்டுமே நமக்கு நிம்மதி. அவர் வருவார். வந்து என்னை மணப்பார். மணந்தென்னை அணைப்பார்' எனும் எண்ண ஓட்டம் தளர்வின்றி ஓடிக்கொண்டிருந்தது.


இரண்டு நாளே இருக்கும் தன் திருமணத்தை எண்ணி அந்த இரவு உறக்கமின்றி கழிந்தது. இருள் சூழ்ந்த வானில் நிலவோடு ஒட்டியிருக்கும் சமுத்திரத்தை நோக்கியபடியே வள்ளியும் காத்திருந்தாள்.


-குகன்


குறுந்தொகை 6 செய்யுள்


நள்ளென்றன்றேயாமம் சொல்லவிந்து

இனிதடங்கினரே மாக்கள் முனிவின்று

நனந்தலை உலகம் துஞ்சும்

ஒர்யான்மன்ற துஞ்சாதோனே


ஆசிரியர் - பதுமனார்


குறுந்தொகை 6 உரை


தலைவனின் பிரிவை பொறுக்காது தலைவி தன் நிலையை எடுத்துக்கூறுகிறாள்


நடு இரவில் யாமப்பொழுது, பேச்சே இல்லாது மக்கள் இனிதாக அடங்கிவிட்டார்கள். பல உயிர்களை கொண்டு பரவிகிடக்கும் உலகமே அடங்கி உறங்கிக்கொண்டிருக்கிறது, நான் ஒருத்தி மட்டும் தூங்காமல் இருக்கிறேன்.

1 கருத்துகள்

புதியது பழையவை