அண்மை

குறுந்தொகை 7 சிறுகதை - குகன் (kurunthogai 7 story)

உனக்காக வந்தேன்

நிலவோடு ஒட்டியிருந்த சமுத்திரத்தை ஏக்கத்துடன் நோக்கிக் கொண்டிருந்தாள் வள்ளி. அந்த நிலவின் ஒளியில் அந்த கடலில் கப்பல் வருவது போல் அவளுக்கு தெரிந்தது அது தன் தலைவன் சமுத்திரன் என நினைத்தவள் தனது மனதின் பிரதிபலிப்புதான் இது என்று உணர்ந்தாள்.


Kurunthogai 7

'கப்பலும் செல்வமும் அதில் வேலை செய்ய எனது ஆட்களையும் அனுப்பிவைக்கிறேன் நீ நான் சொல்லும் இடத்தில் சென்று வைர, மாணிக்க ரத்தினங்களை கப்பல் நிறைய பாதுகாப்பாக கொண்டுவந்தால் போதும். அதுவும் வரும் சித்திரை மாதம் முதல் தேதிக்கு முன். இல்லையேல் என் மகளை இளவரசர் அனங்கனுக்கு திருமணம் செய்து தந்து விடுவேன்' என்று தன் தந்தை தன் காதலர் சமுத்திரனிடம் சொல்லியது அவள் நினைவிற்கு வந்தது. இன்னும் சித்திரை மாதம் தொடங்க இரு நாட்களே உள்ளது. அதற்குள் தன் காதலர் வந்து தன் கரம் பற்ற வேண்டும். இல்லையேல் தனக்கும் இளவரசர் அனங்கனுக்கும் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று கவலையடைந்தாள்.



அன்றைய இரவு அவளுக்கு பலவித எண்ணங்களையும்,அச்சத்தையும், கவலையும் தந்தது.



மறுநாள் காலை பொழுது விடிந்தது. தனது தலைவன் தனக்காக இன்று வந்துவிடுவான் அதனால் தன் தோழியுடன் சென்று கடற்கரையில் காத்திருப்போம் என்று நினைத்து கிளம்பினாள் வள்ளி.



இவள் செல்வதை பார்த்த வாணிகர் ரத்தினசாமி 



'அந்த சமுத்திரன் இன்னும் வரவில்லை. அதனால் உனக்கும் இளவரசருக்குமே திருமணம்!'



'இல்லை தந்தையே…. அவர் நிச்சயம் வருவார்' என்றாள் வள்ளி.



'அவன் வரமாட்டான்! நான் கொடுத்த செல்வத்தை திருடிக்கொண்டு எங்காவது ஓடி இருப்பான். அவன் உன்னை காதலித்ததும் என்னிடம் உள்ள செல்வத்திற்க்காகவே!'



' "உழைத்து பெறும் ஊதியமே நிலைக்கும்"‌ என்ற எண்ணம் கொண்டவர் அவர்'



'பார்போம் நாளை இரவுக்குள் அவனது உண்மை முகம் தெரியும் உனக்கு. நீ எங்கும் வெளியில் செல்லக்கூடாது!'



'நான் தோழியை பார்க்கவே செல்கிறேன்'



'சொன்னதை செய்…' என்று தன் தந்தை கூறியதால் அவள் தனது அறைக்குள் சென்றாள்.



ரத்தினசாமி திருமண ஏற்பாடுகள் செய்ய பேரரசரை பார்க்க அரசவை  நோக்கி புறப்பட்டார். 




அங்கு சென்றபின் திருமண ஏற்பாடுகளுக்காக அரசர் படைவீரர்களிடம் சில கட்டளைகளை பிறப்பித்தார். 



'நாளை தங்களை அழைக்க என் படைவீரனை அனுப்புவேன் அப்போது தாங்கள் வந்தால் எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். உங்களுக்கு ஏன் வீண் அலைச்சல்' என்று பேரரசர் ரத்தினசாமியிடம் சொன்னார்.




மறுநாள் சூரிய உதயமாக முற்பட்ட நேரம்


ரத்தினசாமி வீட்டில்….




'முதலாளி… அவன் வந்துவிட்டான்…! உயிருடன் வந்துவிட்டான்..!' என்ற படி வேலைக்காரன் ஓடி வந்தான்.



'எவன் வருகிறான்? தெளிவாக சொல்லடா மடையா'



'அந்த சமுத்திரன். கையில் வாளேந்தி வருகிறான்'



'அவனை வாசலிலேயே தடு அவனை உள்ளே விடாதே!'



'அவன் எப்படி உயிருடன் வருவான் நமது ஆட்கள் அவனை கடலிலேயே கொன்றிருப்பார்களே! இவன் பகல்கனவில் உளருகிறானோ?' என்று ரத்தினசாமி நினைத்தார்.



வேலைக்காரன் கூறியபடியே சமுத்திரம் வந்தான் அவனை தடுக்க வேலைக்காரன் முற்பட்டான்



'இதன் பெயர் வாள் இதை நான் உன்மீது பயன் படுத்தினால் நீ இனி வாழமுடியாது.. என்ன செய்வதாக உத்தேசம்?' என்று சமுத்திரன் அந்த வேலைக்காரனிடம் கேட்க வேலைக்காரன் பின்வாங்கினான். 



பின் கடும் கோபத்துடன் ரத்தினசாமி வீட்டின் உள்ளே நுழைந்து 



'வள்ளி… வள்ளி… வெளியேவா!'  என்று பேரிடியாக சமுத்திரன் முழங்கினான்.



வள்ளி, தலைவன் தன்னை அழைக்கிறான்.அவன் தன்னை கரம்பிடிக்க வந்துவிட்டான் என்று நினைத்து வந்து அவனை பார்த்தவுடன் பெரும் மகிழ்ச்சி கொண்டாள். அவன் கையில் வாளுடன் வந்திருப்பதை கண்டு சிறிது ஐயமுற்றாள்.



வள்ளியை கண்ட சமுத்திரன் 'வள்ளி… நான் சொல்வதை கேள்..என்னுடன் இப்போதே புறப்படு. உன் தந்தை என்னை நூதனமுறையில் கொல்லவே கப்பலையும், ஆட்களையும் அனுப்பிவைத்திருக்கிறார். அந்த ஆட்களை வைத்தே என் உயிரை எடுக்க திட்டம் வகுத்திருக்கிறார்!' என்று வேகமாக கோபத்துடன் சமுத்திரன் கூறினான்.



இவன் இவ்வாறு கூறியதை கேட்ட ரத்தினசாமி இப்போது இவனை கொல்லச் சொல்லி ஆணையிட்டால் தன் மகள் அதன் காரணமாக அரசருடன் திருமணம் செய்யமறுப்பாள். ஆகவே சமுத்திரன் மீது குற்றம் சுமத்தி அவனை வெறுக்கும் படி செய்யவேண்டும் என்று நினைத்தவர்.



'வள்ளி இவன் நமது ஆட்களை கொன்றுவிட்டு நம் செல்வங்களை பதுக்கி வைத்துவிட்டு உன்னையும் ஏமாற்ற நினைக்கிறான்' என்றார்.



வள்ளி யார் சொல்வதை ஏற்பது. எதை நம்புவது என்று செய்வதறியாது தவித்தாள்.



'வள்ளி என்ன நடந்தது என்று பின் விரிவாக சொல்கிறேன்.. நீ என்மீது வைத்த காதல் உண்மையானால் என்னுடன் புறப்படு. இல்லையேல் உன் தந்தை உன்னை அரசருக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்'


'நீ என்னுடன் வர மறுத்தால் நான் உன்னை நீங்கி இந்த உலகில் வாழ மாட்டேன் இங்கேயே உயிர் துறப்பேன் என்று வாளின் கூர் முனையை தனை நோக்கி செலுத்த மென்மையான பஞ்சு போன்ற கைகள் அவனது முரட்டு கையை அடக்கியது. வள்ளி உடனே வாங்க புறப்படு ' என்று சொல்லி அவளது மென்மையான கையை பிடித்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு ஓடினர்.



அவர்களை பிடிக்க அந்த வேலைக்காரனும் ரத்தினசாமியும் ஓடினர்.



அந்நேரம் அரசர் ரத்தினசாமியை அழைத்து வர சொல்லி படைவீரனை அனுப்பினார் அந்த படைவீரனை சமுத்திரன் தாக்கிவிட்டு அவனது குதிரையில் ஏறி சமுத்திரனும்,வள்ளியும் புறப்புட்டனர்.



எங்கு செல்கிறோம் என்று அறியாமல் குதிரையை வேகமாக செலுத்தினான் சமுத்திரன். அவர்கள் பாழ் நிலமான பாலைநிலத்தை அடைந்தனர்.அந்த குதிரை சோர்வுற்றதால் அதனை அங்கேயே விட்டுவிட்டு நடக்கத்தொடங்கினர்.வள்ளிக்கு நாம் தந்தையின் பேச்சை மீறி வந்தது சரிதானா? என்ற பல கேள்விகள் அவளை பேசவிடாமல் தொண்டையை அடைத்தது. 



அங்கு இருந்த கொற்றவை கோயிலில் களைப்பின் காரணமாக அமர்ந்தனர்.


அதுவரையில் பேசமுடியாமல் தவித்த வள்ளி 



'கடலில் தங்களுக்கு என்ன நடந்தது? என் அப்பா தங்களை கொல்லச் சொல்லி ஆட்களை அனுப்பினாரா? விவரமாக சொல்லுங்கள்?' என்று உமிழ்நீரை முழுங்கி விட்டு பின் சமுத்திரனை நோக்கி கேட்டாள்.



சமுத்திரன் நடந்தவற்றை சொல்லத் தொடங்கினான்..



'நம் இருவரின் காதலையும் உன் தந்தையிடம் சொன்னபோது அவர்.கப்பலையும், செல்வத்தையும் தந்து அதில் வேலைசெய்ய ஆட்களையும் தந்து சித்திரை மாதத்துக்குள் நீ ரத்தினங்கள் மற்றும் வைரங்களோடு வந்தால் உங்கள் இருவரின் காதலையும் ஏற்று  உங்கள் இருவருக்கும் ‌திருமணம் செய்து தருகிறேன். என்று உன் தந்தை சொன்னதன் காரணமாக நானும் புறப்பட்டேன். இரண்டு நாட்கள் நன்றாகவே சென்றது. மூன்றாம் நாள் கப்பலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் என்னை எப்போது கொல்வது என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. அதனால் நான் அவர்களிடம் இருந்து பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தேன். மேலும் ஐந்து நாட்கள் சென்றது அன்று இரவு போல ஒரு தீவில் இரங்க சொன்னர். சட்டென என்னை தாக்க முயன்றனர்.நான் என் சாமர்த்தியதனத்தால்  அவர்களை மாய்த்துவிட்டேன்.பிறகு அந்த தீவில் இருந்து என்னால் கப்பலை நகர்த்த முடியவில்லை பன்னிரண்டு நாட்கள் அந்த தீவிலேயே தங்கினேன்‌. அன்று மாலை நான் சென்ற கப்பல் தீவில் நிற்பதை பார்த்து ஒரு கப்பல் வந்தது‌. அது அருகில் வந்தவுடன் தான் அது கடற்கொள்ளையர் கப்பல் என்று தெரிந்தது‌. அவர்கள் என்னை சிறைப்பிடித்தனர். அந்த கப்பலின் தலைவன் ஜாக்ஸன் பேரோவிடம் நடந்தவற்றை முழுவதுமாக கூறினேன். அவன் இது காதல் விஷயம் என்று அறிந்தவுடன் அவன் என்னை கொல்லாமல் மனம் இறங்கி என்னுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான்.


அது என்னவென்றால், உன்னை உன் விருப்பப்படி உன் நாட்டில் விட்டுவிடுகிறேன் அதற்கு பதிலாக இந்த கப்பலையும் இதில் உள்ள செல்வங்களையும் நான் எடுத்துக்கொள்வேன் என்றான்.சரி என்று ஒப்புக்கொண்டுவிட்டேன்.நம் நாடு வந்ததும் அவர்களிடம் இருந்து ஒரு வாளினை பெற்றுக்கொண்டு உன்னை கரம் பிடிக்கவந்தேன்' என்று நடந்தவற்றை சமுத்திரன் வள்ளியிடம் கூறினான்.



இதை கேட்ட வள்ளிக்கு ஆச்சரியமாக இருந்தது. நம் மீது தலைவன் கொண்ட காதலைக்கண்டு பூரிப்படைந்தாள்.



பின் இருவரும் எழுந்து நடக்கத்தொடங்கினர் வேறு நாட்டிற்கு செல்ல அந்த பாலை நிலத்தில் உள்ள மூங்கில் காட்டின் வழியே மேலும் நடக்க தொடங்கினர்.



இதை கண்ட பாலை நிலத்தில் வசிக்கும் இரு பெண்கள்



'இந்த ஆடவன் வீரமுள்ளவனாக திகழ்கிறான்'



'இந்த பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று இவள் காலில் அணிந்துள்ள சிலம்பு உறுதிபடுத்திகிறது'



'இந்த இரு காதலர்கள் பார்க்கும் போது எனக்கு இரக்கம் கொண்டு உதவிசெய்ய தோன்றுகிறது'



'இந்த இரு நல்லவர்களும் யார்?'



'வாகை மரத்திலுள்ள வெள்ளை நெற்றுகள் ஆரியக்கூத்து ஆடும்போது எழுப்பபடும்  பறையின் ஒலி போல ஒலி எழுப்பும் மூங்கில்காட்டு வழியில் செல்லத் துணிந்திருக்கிறார்களே!' 



'இவர்கள் எங்கு சென்றாலும் நல்லபடியாக வாழ வேண்டும்'


என்று சமுத்திரனையும் வள்ளியையும் கண்டவர்கள் கூறினர்.


-குகன்



குறுந்தொகை 7 செய்யுள்


வில்லோன் காலன கழலே; தொடியோள் 

மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர் 

யார்கொல்? அளியர்தாமே-ஆரியர் 

கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி 

வாகை வெண் நெற்று ஒலிக்கும் 

வேய் பயில் அழுவம் முன்னியோரே


கருத்துரையிடுக

புதியது பழையவை