வார்த்தைகளின் அர்த்தத்தை எப்படி அகராதியில் தேடுகிறோமோ அது போல வாழ்க்கையின் அர்த்தத்தை கீதையில் தேடலாம் என்கிறார் மகாத்மா காந்தி.
இக்கட்டுரையில் நான் கீதையின் சாங்கிய யோகத்தினை எளிதாக சொல்ல முயல்கிறேன். கீதையின் அனைத்து அத்தியாங்களுக்கும் அடித்தளம் இந்த இரண்டாவது அத்தியாயமான ஸாங்கிய அத்தியாயம் தான்.
அர்ஜுனன் இந்த அத்தியாயத்தில் வரும் கருத்துகளை கேட்டப்பின் தான் மிகுந்த குழப்பமடைவான். அதன் பின்னே கண்ணனிடம் அதிலிருக்கும் தனது சந்தேகங்களை ஒவ்வொன்றாக கேட்டு தெளிவுபெறுவான்.
சாங்கியம் என்பது தெளிந்த அறிவான ஞானத்தை குறிக்கிறது. இதில் கண்ணன் சொல்லும் ஒரு குறிப்பில் அதை ஓரளவு நம்மால் விளங்கிக் கொள்ளமுடியும்.
'இவன் கொல்வான் என்று நினைப்பவனும், இவனால் கொல்லப்படுவோம் என்று நினைப்பவனும், தெளிந்த அறிவு இல்லாதவர்கள், இங்கு யாரும் எதையும் செய்யவில்லை'
காற்றைப் பிடித்துக் கொண்டு பட்டம் ஏறுகிறது, பட்டத்தை பற்றிக் கொண்டு நூலும் ஏறுகிறது, நூலைப் பிடித்த நம் கையும் எழுகிறது. அது போலவே இந்த உலக இயக்கத்தில் தொற்றிப் போகும் சாதாரண ஆட்களே நாம். சரித்திரம் படைத்த பலர் இருந்தாலும் அவர்களும் இதிலே தான் அடங்குவார்கள். உலக இயக்கத்தின் ஏதோ ஒரு காரணம் அவர்களை அப்படி செய்ய வைத்திருக்கிறதே தவிர அவர்களாக அல்ல.
அர்ஜுன் கண்ணனிடம் என்னால் யாரையும் கொல்ல முடியாது, அதுவும் என் குருவையும் என் பாட்டனாரையும் என்னால் எப்படி கொல்ல முடியும். அப்படி குடும்ப கொலையால் வந்த இன்பத்தைக் கொண்டு நான் என்ன செய்ய போகிறேன். இத்தனை நாட்களாய் நாங்கள் எப்படி இருந்தோமோ அப்படியே இருப்பதில் தவறொன்றும் இல்லையே. நான் போரில் பங்கேற்க போவதில்லை எனக் கூறி புறப்பட முயல்கிறான்.
அப்போது கண்ணன் பேச தொடங்குகிறார்.
அர்ஜுனா உன் அறிவு தெளியவில்லை. சாத்வீகம் (அமைதியும் பொறுமையும் காப்பது) சரிதான். ஆனால் உன் செயல் தமோ (சோம்பேறித்தனம்) ஆகும். அமைதியையும் பொறுமையும் போற்றும் நீ கடமையை தவறலாமா?
வீரனான உனக்கு தர்மத்தை காப்பதே கடமையாகும், அதிலிருந்து தவறுவது முறையாகாது, நீ கொலை பாவத்திற்கு அஞ்சுகிறாய். கடமைக்கான பலன்கள் இங்கு யாருக்கும் கிடைப்பதில்லை. அது பாவமானாலும் சரி. கடமையை தவறுவதே பாவமாகும். அது பழி சொல்லையும் தரும். பாரத செல்வா, ஒரு உண்மையை சொல்கிறேன் கேள். கிழிந்த துணிகளை மனிதன் எப்படி களைந்து எறிந்துவிட்டு புது துணிகளை உடுத்திக் கொள்கிறானோ, அது போலத் தான் மனிதனின் ஆத்மாவும், உன் உடல் கிழிந்து விட்டால் அதுவும் வேறு உடல் தேடிக் கொள்ளும். உனக்கு உயிர்களின் ஆரம்பம் தெளிவாக தெரியாது, முடிவும் தெளிவாக இருக்காது. ஆனால் அர்ஜீனா இந்த இடைப்பட்ட வாழ்வில் நற்பண்புகளோடு கடமையை ஆற்றினால் உன் பிறப்பை அறுக்கலாம்.
அர்ஜீனா உன் கவலை அர்த்தமற்றது. இங்குள்ள எவன் ஆத்மாவும் இறப்பில்லாதது. அவர்களின் உடலங்களை நீ கொல்லவில்லை ஆனால் தானே மண்ணுக்கு இரையாகும். உன் சுயதர்மம் சரியே, ஆனால் ஒரு வீரன் தன்னை தேடி வலிய வரும் போரை தவிர்ப்பது முறையாகாது.
பாரத செல்வனே, உறுதி உள்ளவன் புத்தி ஒரே நிலையில் இருக்கும் அவன் எடுத்த முடிவுகள் தீர்க்கமானதாய் இருப்பதால் எந்நிலையிலும் அதில் மாற்றம் வராது. மரத்தின் கிளைகள் போல பல இடங்களில் ஆசைகளும் மாயைகளும் விரவிக்கிடக்கும். இந்த சாங்கிய யோகத்தை அறிந்து கொண்டால் அவ்வழி உனக்கு தென்படும்.
இலக்கை அடைய நூறு வழிகள் உண்டு, அதில் நல்வழி ஒன்றை மட்டும் தேர்வு செய்து, அதிலே மட்டும் உறுதியோடு இருப்பவனை காலத்தாலும் வெல்ல முடியாது. அவனது வெற்றி தடுக்க முடியாதது. கிளைகள் போல பல வழிகளில் விரவுபவனால் தீர்க்கமான நிலைக்கு வர முடியாது.
புத்தியுடைய பேரறிஞர்கள் எந்த சூழ்நிலையிலும் லாபத்தை எதிர்நோக்க மாட்டார்கள். அவர்களுக்கு தேவை கடமையினை ஆற்றுவது மட்டுந்தான். இடையில் தோன்றும் மோகத்தால் அவர்களை திசைத்திருப்ப முடியாது. மோகமே மயக்கம் தந்து கடமையிலிருந்து விலக வைக்கும். அர்ஜீனா உன் கடமைக்கு எதிரே இப்போது பாசம் இருக்கிறது. ஆமை தன் உடம்பை ஓட்டுக்குள்ளே இழுத்து கொள்வது போல உணர்ச்சிகளை அடக்க கற்றுக்கொள்.
விரதங்கள் கடைப்பிடிக்கும் சிலர் உணவு முறைகளை மாற்றுகிறார்கள். தீய உணவுகளை ஒதுக்கி வைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அதன் சுவை தெரியாமல் இல்லை, உலகத்தோடு இணைந்து பரம்பொருளை கண்டுவிட்டால் அந்த சுவையும் அவர்களுக்கு மறந்து போகும்.
ஒன்றை புரிந்து கொள் அர்ஜுனா, எவன் ஒருவன் தனக்கு தானே விதி வைத்து வாழ்கிறானோ அவன் உயர்ந்த நிலையை அடைகிறான். அமைதியான அவன் மனது நிலையான அறிவைப் பெற்று கடமையை தேடிப் போகிறது. அது வேண்டும் இது வேண்டும் என்று அலையாதவன், நான் எனும் அகந்தை இல்லாதவன், எது கிடைத்தாலும் அதுவே போதுமென்று வாழ்பவன் உயர்ந்த இடத்தை அடைந்தாலும். கடமைகளே அவர்களது வாழ்வை மேலும் உயர்வாக்கும்.
அதனால் பாரத செல்வனே கடமையை ஆற்று, நீ அவர்களது உடலைக் கண்டு கலக்கம் அடைகிறாய். இங்கு இருப்பதும் நிலைப்பதும் ஒன்றே. நீ காண்பவனின் உள்ளே இருப்பவன் நாளை வேறொருவனின் உடலில் இருப்பான்.
மயக்கம் வேண்டாம் துணிந்து போர் செய்.
-ஈசதாசன்