அண்மை

செயலானது எவ்வாறு அமைதல் வேண்டும்? | தெரிந்து செயல்வகை

தெரிந்து செயல்வகை

கடல் சூழ்ந்த இவ்வுலகில் எத்தனையோ பிரிவுகள் இருந்தாலும் யார், யார் வேண்டுமானாலும் ஆகலாம் என்று நம் நிலைபாட்டை‌ மாற்றும் அளவிற்கு சக்தி கொண்டது பொருள். அப்பொருளை ஏதோ ஒரு தொழிலின் மூலம் தான் நாம் பெறுகிறோம். 

'செய்யும் தொழிலே தெய்வம்' என்று முன்னோர்கள் சொன்னது போல் அத்தொழிலை விரும்புவதன் மூலம் அதில் வெற்றி கண்டு சமுதாயத்தில் தகுதியான இடத்தை அடைகிறோம். அத்தொழிலை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதை வள்ளுவர் வகுத்துக் கூறியுள்ளார்.


thirukual tamil
Copyright Free Image from PIXABAY

அனுபவம் அறிக


ஒரு செயலை செய்வதற்கு முன்பாக அந்த செயலில் ஏற்கனவே இருப்பவர்களிடம் கலந்து ஆலோசித்து பின்னர் அந்த செயலில் ஈடுபடுபவர் செய்யமுடியாத காரியமே இல்லை. இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் எழுதப்படாத ஒரு புத்தகம் தான். எவற்றையெல்லாம் ஒரு மனிதன் கற்றுக் கொள்கிறானோ, அவற்றையெல்லாம் அந்த புத்தகத்தில் எழுதுவது போன்றதாகும். அதனால், செயல்பட போகின்ற துறையில் அனுபவமிக்கவரிடம்  சந்தேகங்களையும், கொண்டு செல்லும் பாதையையும் கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் அந்த செயலை செய்ய வேண்டும். அனுபவமே சிறந்த ஆசான் என்பதை முன்பே கணித்து வள்ளுவர்,


தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல்.  (குறள்- 462)


ஆசை வேண்டாம்


ஒரு செயலில் ஈடுபடும்போது அதை பற்றி நன்கு அறிந்து எல்லா வழிகளிலும் அதனை ஆராய்ந்து பின்பே அந்த செயலில் ஈடுபட வேண்டும். நல்ல ஒரு லாபம் கிடைக்கும் என்று ஏமாந்து எந்த ஒரு செயலிலும் இறங்கி விடக்கூடாது. அப்படி ஒரு செயலை அறிவுள்ளவர்கள் செய்ய மாட்டார்கள். அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் நானும் என் நண்பர்களும் இணையவழியில் பணம் முதலீடு செய்து அதில் வேலை பார்த்து வந்தோம். சிறிது நாட்களில் அந்த இணையதளம் முடக்கப்பட்டது. அதிக லாபம் எதிர்ப்பார்த்து முதலை இழந்து விட்டோம். இப்படிப்பட்ட கூர்மையான கருத்தினை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர்..,


ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார். (குறள்- 463)


பயனுள்ளது செய்தல்


மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை எத்தனையோ செயல்களை செய்து கொண்டே இருக்கிறான். ஆனால் இவற்றுள் பயனுள்ள செயல்கள் பயனற்ற செயல்கள் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இவை இரண்டில் பயனுள்ள செயல்களை செய்யாமல் இருப்பதும் கெடுதலை விளைவிக்கும், பயனற்ற செயல்களை செய்து கொண்டிருப்பதும் கெடுதலை விளைவிக்கும், பயனுள்ள செயல்கள் பலவிதமாக இருந்தாலும் பயனற்ற செயல்களையே இவ்வுலகம் விரும்புகிறது. ஏனென்றால், அதுவே மனிதனுக்கு அந்நேரத்தில் மாயையான இன்பத்தை கொடுக்கிறது. ஆனால் பயனுள்ள செயல்களை செய்யும்போது மனிதனில் உள்ளுணர்வுக்கு இன்பமாகவும், அடுத்த பிறவிக்கும் பயன்படக்கூடியவையாகவும் இருக்கும் இதை உணர்ந்தவர் பயனுள்ள செயல்களைச் செய்வார்.


செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்.   (குறள்- 466) 


அறிந்து செய்க


எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக பல முறை யோசித்து செயல்பட வேண்டும். செய்தபிறகு யோசித்துக் கொள்ளலாம் என்று நினைத்து எந்த ஒரு செயலையும் தொடங்கி விடக்கூடாது. தொழிலை தொடங்கும்போது அதிக லாபம் கிடைக்கும் என்று எதைப் பற்றியும் ஆராயாமல் தொடங்கிவிட்டு, பின்பு அதில் வருகின்ற பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணறும் போது சிந்திக்கவும் முடியாது. அதனைப் பற்றி ஆராய்வதும் கடினம். இப்போதுள்ள திரைப்பட வசனம் எழுதுபவர், "கை வைக்கிறதுக்கு முன்னாடி, ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சி கைய வை, வச்சதுக்கு அப்புறம் உன்னால யோசிக்கவே முடியாது" என்று எழுதியிருப்பார். ஆனால் இது வள்ளுவரின் கூற்றாகும். இது அவருக்கும் தெரிந்திருக்கும்.


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. (குறள்- 467) 


குறையின்றி செய்க


தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் தலைவர்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் காமராஜர் போன்ற ஒரு நல்ல மனிதர் கிடைப்பது அரிது  என்று சொல்லக் காரணம் அவர் தனக்காக ஏதும் செய்து கொள்ளாமல் பிறருக்காக அரசியலின் உண்மையான வடிவத்தினை, அதாவது அரசியல் என்றால் பொது சேவை செய்வதற்கே என்பதனை உணர்ந்து பதவி பணத்தின் மேல் ஆசை கொள்ளாமல் பொதுவான வாழ்க்கையை வாழ்ந்து யாரிடமும் எந்த ஒரு பழிச் சொற்களுமே பெறாமல் வாழ்ந்து காட்டினார்.

இயல்பாகவே இவ்வுலகில் யாரிடமும் பழிச் சொற்கள் பெறாமல் வாழ்வது கடினம் தான் ஆனால் செயலை மற்றவர்கள் பழித்து கூறாதவாறு செய்ய வேண்டும் இல்லையென்றால் இவ்வுலகம் நம்மை ஏற்றுக்கொள்ளாது.


எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு.  (குறள்- 470) 


நிலை அறிந்து செய்க


ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு இயல்பு. அது மனிதருக்கு மனிதர் மாறிக்கொண்டே இருக்கும். இவற்றையெல்லாம் அறிந்து அவர் அவர்களுக்கு ஏற்றவாறு செயல்களை மாற்றி செய்ய வேண்டும். இல்லையென்றால் நாம் நன்மையே செய்தாலும் தவறாகிவிடும்.


நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. (குறள்- 469)


கருத்து


செயலை செய்ய எல்லோராலும் இயலுகிறது, சிறப்பான செயலானது உன்னாலே முடிகிறது. அதற்கு அதை தொடங்குவதற்கு முன்பாக செய்ய வேண்டியதை, தொடங்கிய பின் கடைப்பிடிக்க வேண்டியதை சரியாக செய்ய வேண்டும். நல்ல நண்பனா என ஆராய்ந்த பிறகே மனதந்தரங்கத்தை பகிர வேண்டும். பகிர்ந்ந பின்னே ஆராய்வது பேதை குணமாகும். உங்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் இல்லை, நீங்களே பயன்படுத்த தவறுகிறீர்கள். தொழிலை தொடங்கிய பின்னே துன்பப்படாதீர்கள், செயல்வகையை தெரிந்தபின்னே தொழிலை தொடங்குங்கள்.


-குறள்மகன்

1 கருத்துகள்

  1. ஒரு அதிகாரத்தையே கருப்பொருளாக எடுத்துக்கொண்டு அதை மிகநேர்த்தியாக தொகுத்தளித்திருக்கிற விதம் காண்கையில் உங்களைவிடவும் உங்களுக்கு பெயரிட்டவர்களையே பாராட்ட தோன்றுகிறது..!

    பதிலளிநீக்கு
புதியது பழையவை