Copyright Free Image by Google Images
'ஒரு யோகியின் சுயசரிதம்' ஆஹா எத்தனை அருமையான புத்தகம். எனக்கிந்த புத்தகத்தை படித்த பிறகு, இப்புத்தகத்தில் இடம்பெறாத பெரியார் மீதும் அளவு கடந்த மரியாதை வந்துவிட்டது. அது ஏனென்று இறுதியில் சொல்கிறேன்.
முன்பு நான் கீதையை படித்தபோது அதில் உள்ள சில சூட்சமமான வார்த்தைகள் எனக்கு விளங்கவில்லை. ஆனால் இப்போது 'ஒரு யோகியின் சுயசரிதம்' அதற்கான தெளிவை தந்துவிட்டது.
உடலை வருத்தி தவம் செய்பவர்களை விட யோகி சிறந்தவன். ஞான மார்க்கம் அல்லது கர்ம மார்க்கத்தை பின்பற்றுபவர்களை விடவும் அவன் சிறந்தவன். எனவே, ஓ அர்ஜூனா, நீ யோகி ஆகுக. - கீதை
கீதையில் எல்லாமே யோகம் தான். ஞான யோகம், சாங்கிய யோகம், கர்ம யோகம், தியான யோகம் இன்னும் பல.
யோகம் கண்கட்டு வித்தை அல்ல. அது விஞ்ஞான பூர்வமானது. இனி தான் அந்த ரகசியத்தை அறிவியல் உலகம் கண்டறியும். ஆனால் அந்த ஒப்பில்லா கலையின் ரகசியத்தை கண்டறிய நமக்கு அறிவியலை விட்டால் வேறு கதியில்லை.
முகுந்தன் என்னும் சிறுவன் பரமஹம்ச யோகானந்தராய் பரிமாணம் பெறுவது இந்த புத்தகத்தின் சளைப்பில்லா ஓட்டமாகும்.
இந்த நூலை படிக்கத் தொடங்குகையில் 'சூட்சம தாயத்து' போன்ற அத்தியாயங்களை படிக்கும் போது எனக்கு அணுவளவும் நம்பிக்கை இல்லை. ஆனால் ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரியை சந்தித்த பிற்பாடு இவரது வார்த்தைகளில் பொய்யில்லை என்பதை உணர்ந்தேன்.
ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி. அவரை விடவும் பெரிய மகான்கள் இந்த நூலில் இருந்தாலும் ஏனோ எனக்கு யுக்தேஷ்வர் கிரியின் மீது அதிகமாக கவனம் சென்றது. அவரது பெயரை மனதிற்குள்ளே பல முறை சொல்லிக் கொண்டே இருந்தேன். யுக்தேஷ்வர் கிரி இந்திய மக்களால் கவனிக்கப்படாத ஞானி ஆவார்.
கண்ணதாசன் கலைஞர் கருணாநிதியை சந்தித்த போது 'எனக்கு அவர் மீது காதல் எழுந்தது' என்று எழுதியிருப்பார். உண்மையில் எனக்கு யுக்தேஷ்வர் கிரியின் மீது காதல் எழுந்துவிட்டது. காரணம் அவரது நோக்கம், பண்பு, அமைதி.
ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டுமென நன்னூல் சொல்கிறது யாதெனில்,
குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும்
அமைபவன் நூலுரை யாசிரியன்னே
ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி இந்த இலக்கணத்திற்கு சுத்தமாக தகுந்தவர் ஆவார். இந்த இலக்கணத்தில் வரும் குலன் என்பது பிறப்பால் வருவதல்ல பண்பால் ஒளிர்வது.
யுக்தேஷ்வர் கிரி மாதிரியான ஆசிரியருக்காக நான் உளமாற ஏங்குகிறேன். அவர் போன்ற ஆசிரியர் எனக்கு கிடைத்திருந்தால் நல்லொழுக்கம் உள்ள ஆயிரம் பேரையாவது என்னால் உருவாக்கி இருக்க முடியும்.
அப்படி பட்ட ஆசிரியரின் தலையாய சீடன், அந்த வஞ்சனையில்லாத மனிதரின் மனதில் இடம்பிடித்த இன்னொரு தூய்மையான உள்ளம் பரமஹம்ச யோகானந்தர்.
இன்றைய உலகம் ஆச்சரியங்களை கண்களால் கண்டாலொழிய நம்ப மறுக்கும். இந்த புத்தகத்தை அமெரிக்காவில் உள்ள எந்த பதிப்பகத்தாரும் வெளியிட முன்வரவில்லை. காரணம், இதிலுள்ள நம்ப முடியாத சில அற்புதங்களாகும்.
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஒரு கதையில் சொல்வார், 'ரேடியோ முதன் முதலில் கண்டுபடிக்கப்பட்ட போது அதை காணும் மனிதன் அதற்குள் குட்டி மனிதன் இருந்து பாடுவதாகவே நினைப்பான். கண்ணுக்கு தெரியாத கதிர்கள் மூலம் இயங்குகிறதென்றால் நம்ப மாட்டான்'
காரணம் என்ன தெரியுமா? மனித மனம் தனக்கு இதுவரை தெரிந்த விஷயங்களோடு மட்டுமே புதியவற்றை ஒப்பிட்டு பார்க்கும்.
இரவில் அடர்ந்த மரத்தை உற்று பார்ப்பவன் தன் கற்பனைகளில் முதலாவதாக வைத்திருக்க கூடிய பேயையே உருவகப்படுத்துவான். அதை கொஞ்ச நொடிகளுக்கு நம்பியும் விடுவான். பின் மரமென்று ஆறுதல் பெறுவான்.
யோகமானது பல போலி சாமியர்களுக்கு மத்தியில் இருப்பதால் உண்மையில் நம் மனம் அதை விஞ்ஞானத்தோடு ஒப்பிட மறுக்கிறது.
விவேகானந்தரின் குரு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஐந்து நாட்களுக்கும் மேலாக சமாதி நிலையில் இருந்தார் என்பதற்கு எழுத்து ஆதாரம் இருக்கிறது. மதுரையில் பிறந்த சதாசிவர் சமாதி நிலையில் பல நாட்கள் இருந்தபோது அடித்துக் கொண்டு வந்த வெள்ளத்தினால் மணலுக்கடியில் செருகப்பட்டார் என்பது இன்றளவும் தமிழக மக்களால் பேசப்பட்டு வரக்கூடிய அற்புதமாகும். கிரி பாலா, தெரசே நோய்மன் போன்றோரின் அற்புதங்களை இன்றைய அறிவியலால் விளக்க முடியாது.
இதையெல்லாம் நேரில் காணாத சாதரண மனிதன் கேட்டவுடனே 'பொய்' என்றிடுவான். காரணம், இது அவனுக்கு புதிது. இன்றைய காலத்தில் 'நான் பத்து மணிக்கு சமாதி அடைய போகிறேன்' என்று கூறி வசூல் செய்யும் கூட்டமே அதிகமாக இருப்பதால், நமக்கு இந்த எண்ணம் வருவது இயற்கையே.
பரமஹம்ச யோகானந்தர் காளியை கண்டது கிருஷ்ணனை கண்டது இயேசுவைக் கண்டது போன்றவையும் பொய்யாக இருக்காது.
நீ எந்த வடிவத்தில் என்னை பக்தியோடு வணங்குகிறாயோ, நான் அந்த வடிவத்திலே உனக்கு உதவுவேன்
இந்த புத்தகத்தை படித்து பெரியார் மீது எனக்கு முன்பிருந்த மரியாதையை விடவும் அதிகமானதற்கு காரணம், அவரது நோக்கத்தின் பூரணத்துவம் இப்போது தான் எனக்கு புரியவருகிறது.
'ஒரு யோகியின் சுயசரிதம்' கடவுளை எப்படி தேட வேண்டும் என்று கலப்பற்ற வகையில் ஒரு மனிதரின் வாழ்க்கையாக நமக்கு தருகிறது. அது அர்சனையையோ பலியையோ நேர்த்திகடன்களையோ உண்டியலில் பணம் போட்டோ கடவுளை பற்றிய உண்மையை அறியலாம் என்று சொல்லவில்லை. அதை ஆதரிக்கவும் இல்லை.
அன்றைய தமிழக மக்கள், வீட்டில் குழந்தை ஒருபுறம் அழுது கொண்டிருக்க பாலை கடவுளின் மீது ஊற்றினார்கள். வறுமையில் இருக்கும் போது கூட 'இறைவா என் வறுமையை போக்கு' என்று உண்டியலில் பணம் போட்டார்கள். அர்சனை செய்தால் பலன் கிட்டும் என்ற பொய்யால் அன்றாட கஞ்சிக்குரிய வருமானத்தை அதில் இழந்தார்கள்.
இதையெல்லாம் பொறுக்காத பெரியார் 'கடவுள் இல்லை என்ற முழக்கத்தால் இவற்றை சரி செய்துவிடலாம் என்று நினைத்தார்'
கடவுளின் பேரில் ஏமாற்றும் பலர் அழிந்தார்கள். இந்தியாவில் எங்கும் பரவிக்கிடக்கும் சாதிய தீண்டாமை தமிழ்நாட்டில் குறைவு தான். இறைவனுக்கென செய்யப்பட்ட வீண் செலவுகள் தடுக்கப்பட்டது. காரணம், பெரியார்.
கலைஞரும் தன் சுயசரிதமான 'நெஞ்சிக்கு நீதி'யில் சொல்லி இருப்பார், 'உண்டிக்கு இல்லையானாலும் திருப்பதி உண்டியலுக்காக என் வீட்டில் பணம் சேர்க்கப்படும்' என்று.
ஒரு யோகியின் சுயசரிதமும் இதைத் தான் சொல்கிறது.
நீங்கள் கடவுளுக்கு எதுவும் கொடுக்க வேண்டாம், உங்களுக்கு கொடுக்கபட்டவைகளுக்காக நன்றி சொல்லுங்கள் போதும்
பெரியார் சொன்னபடி கடவுள் கோயில்களிலோ அர்சனைகளிலோ உயிர்பலியிலோ உண்டியல் பணத்திலோ இல்லை. துன்பப்படுவோர்களுக்கு உதவ வேண்டும் என்ற எல்லோரது மனத்திலும் இறைவன் இருக்கிறார்.
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே
இறைவனுக்கு பச்சிலையே போதும் என்கிறார் திருமூலர். பச்சிலைக்கு பணம் வேண்டியதில்லை.
கிரியோ யோகத்தின் வாயிலாக அந்த இறைவனின் உணர்வை நாம் பெறலாம் என்கிறார் ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி. இயற்கை உடனான பிணைப்பே கிரியாவின் நோக்கமாகும்.
'ஏகம் ஏவா திதியம்' என்ற பாபாவின் மந்திரத்திலே 'கடவுள் ஒருவரே'என்று உறுதிபட சொல்கிறார்கள். அவர் கிருஷ்ணன் தான் என்று ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை.
மகா அவதார் பாபாஜி சொன்ன கிரியா யோகம் பகவத் கீதையில் வரும் தியான யோகத்தின் அம்சமே ஆகும்.
கிருஷ்ணர் அதில் ஓர் இடத்தில்,
அர்ஜூனா! இப்போது நான் உனக்கு போதித்தது மிகவும் ரகசியமானது. இதை புரிந்து கொள்பவன் என்னை அறிந்து கொள்வான்
என்று சொல்வார். பாபாஜியும் அவரை தொடர்ந்தோர்களும் அந்த தியான யோக மகிமையை புரிந்து கொண்டவர்களாவர். இன்றளவும் கிரியா யோகத்தை நீங்கள் புத்தகத்தின் வாயிலாக படித்து அறிந்து கொள்ள முடியாது. குரு சீடன் உறவு முறை மூலமே கிரியா பயிற்றுவிக்க பட வேண்டும் என்று வகுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் 'என்னை' என்று சொல்லும் இடமெல்லாம் அது இயற்கையே குறிக்கும். ஆணவ வார்த்தை அல்ல.
மனிதனின் ஆத்மாவை சுத்தம் செய்வதற்காக எழுந்த இந்த புத்தகத்தில் துளியும் பொய்யில்லை என்பது எனது கருத்து. என் மனம் கவர்ந்த ஸ்ரீ யுக்தேஷ்வரின் அருள் இந்த புத்தகத்திற்கு முழுவதுமாக கிடைத்துள்ளது.
பரமஹம்ச யோகானந்தரும் எத்தனை உயர்ந்த பண்பு கொண்டவர் என்ற நமது ஐயப்பாடுகளை அன்றே அமெரிக்க மக்கள் தமது எழுத்துகள் வாயிலாக கூறியுள்ளார்கள். அவற்றை நான் இங்கே குறிப்பிடவில்லை.
இந்த புத்தகம் உங்களை நல்வழியில் அழைத்துச் செல்லும் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
இயேசு சொன்னபடி, சத்தியவான் இந்நூலின் சத்தத்தை கேட்கட்டும்
-ஈசதாசன்